டும் டும் டும் கல்யாணம். 8 J.K. SIVAN
அரசு அலுவலகங்கள் சேவை மையங்கள் என்று எங்கே போனாலும் ஏதாவது ஒரு பெரிய படிவம் பூர்த்தி பண்ணும்போது கேள்வி பதில் காகிதம் நிரப்பவேண்டும். உன்பெயர், முழு பெயர், முதல், கடைசி பெயர் எல்லாம் கேட்கும். மதம்/religion : என்று கேட்கும் இடத்தில் ''ஹிந்து''/Hindu என்று எழுதிவிட்டால் மட்டும் நாம் ஹிந்துக்களாகி விடுகிறோமா ?
எத்தனை பேருக்கும் நம்மில் ''ஹிந்து'' என்றால் என்ன என்று புரியும். ஹிந்து என்பது மதமே அல்ல. ஒரு கோட்பாடு. ஹிந்து சனாதன தர்மம் என்று தான் சொல்லவேண்டும். பண்டை காலம் தொட்டு நாம் பின்பற்றி வந்த கோட்பாடுகள். காலத்திற்கேற்ப கலாச்சாரத்தில் மாறுபாடு அங்குமிங்குமாக உண்டாகத்தான் செய்கிறது. ரொம்ப பெரியவர் ஒருவர் கண்ணில் ''திருடன்'' என்ற அர்த்தம் மட்டுமே பட்டது.என்ன அனுபவமோ?
நமது ஹிந்து கலாச்சாரத்தில் சில மாதங்கள் ரொம்பவும் பிஸியான கல்யாண மாதங்கள். ஒரே நாளில் ரெண்டு மூன்று கல்யாணம் என்று போக நேரிடும். ஏதாவது ஒன்றில் முதல் நாளே சாயந்திரம் தலையைக் காட்டி அழைப்புக்கு'' (ரிசப்ஷன்) சென்று யாருமே கேட்காத ''ஓசையை'' இன்னிசையாக செவிமடுத்து, போட்டோ எடுத்துக்கொண்டு, சாப்பிட்டு, தெரிந்த சில முகங்களிடம் சிரித்து விட்டு தேங்காய் விலை ஜாஸ்தியாகிவிட்டதால் சின்னூண்டு சாத்துக்குடி போட்ட பையை வாங்கிக்கொண்டு திரும்புவது.
மற்றொரு இடத்தில் முகூர்த்தம் என்று அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் காலையில் சென்று வெறும் இட்டிலி பொங்கல், பூரி, தோசை,கேசரி சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொண்டு சாப்பிடாமல் திரும்புவது. சிலதில் காலையிலேயே ஏதாவது வீட்டில் கொஞ்சம் வயிற்றை நிரப்பிக் கொண்டு அங்கே ''லேட்'' முகூர்த்தம் முடிந்து போஜனத்தை உண்டு வீடு திரும்புவது வழக்கமோ பழக்கமோ ஏதோ ஒன்று ஆகி விட்டது. நாம் சீவி சிங்காரித்து நமது சிறந்த உடையை போட்டுக்கொண்டு நம்மை அழைத்தவரை தேடி கல்யாணவீட்டில் பிடித்து பேசும்போது, அவர் முகம் ஒரு பிளாஸ்டிக் சிரிப்பை உதிர்க்கும். வாய் மெஷின் மாதிரி ''வாங்கோ.. வீட்டில் அவங்க வரவில்லையா'' என்று மெஷின் மாதிரி கேட்குமே தவிர நம்மைப்பற்றிய சிந்தனை கிடையாது. யாரோ வரவேண்டியவர், இன்னும் வராதவரைபற்றி தான் சிந்தனையும் கண்களும் மனமும் தேடும். இது வாடிக்கையானது. குற்றமாகவோ குறையாகவோ எடுத்துக் கொள்வது அறியாமை. அவரவர் கவலை அவர்களுக்கு. இந்தமாதிரி பெரிய காரியங்களில் ஈடுபடுபவர்கள் ''அடுத்து என்ன, எது, எப்படி?'' யிலேயே மன உளைச்சல் கொண்டவர்கள். பொறுப்பு வந்துவிட்டால் சிரிப்பு எப்படி வரும்?
நமது கல்யாணங்களில் தாலி கட்டி முடிந்தவுடன், பெண்ணின் சகோதரன் வலது புறம் அமர்ந்து வடக்கே பார்த்து ஹோம அக்னியில் பொறியிடுவது. பெண்ணின் அம்மா பக்கத்தில் நிற்பாள். கையில் பாத்திரத்தில் பொறி. அதிலிருந்து கை நிறைய எடுத்து பெண்ணின் உள்ளங் கையில் சகோதரன் கொடுப்பான். பெண்ணின் கைக்கு கீழ் மாப்பிளை தனது கைகளால் அதை தாங்கியபடி இருப்பான். வாத்யார் மந்திரம் சொல்ல பெண் பிள்ளை இருவரும் அதை அக்னிக்கு சமர்ப்பிப்பார்கள்.
பெண் சொல்லும் மந்திரத்தின் அர்த்தம். ''அக்னி பகவானே, என் கணவன் நூறாண்டு காலம் திடகாத்திரமாக நோயின்றி வாழவேண்டும். என் குலம் தழைக்க வேண்டும். உனக்கு இந்த பொறியை அளிக்கிறேன் ''பொறி வளமையை குறிப்பது. பிறகு தான் பெண்ணிக் கரத்தை கைப்பிடித்துக் கொண்டு அக்னியை மாப்பிள்ளை வலம் வருவான்.
பிறகு தான் மாப்பிள்ளை பெண்ணின் வலது பாதத்தை கையால் தூக்கி அம்மி மீது வைப்பது. மந்திரங்கள் மீண்டும் சொல்லப்படும். பிறகு மீண்டும் பொறி அக்னியில் ஹோமகுண்டத்தில் அளிக்கப்படும். மூன்றாவது முறையாக ஹோமாக்னியை வலம் வந்து பெண்ணின் பாதத்தை மீண்டும் அம்மி மீது வைப்பது. பொறி அளிப்பது.
மாப்பிள்ளையும் பெண்ணும் மாப்பிள்ளை வீட்டுக்கு போவது தான் க்ரிஹப்ரவேசம். ரெண்டு குடும்பமும் சேர்ந்து போகும். மாப்பிள்ளை சில மந்திரங்கள் சொல்லவேண்டும். ஒரு வீட்டுக்கு மருமகள் வருவது எவ்வளவு உயர்ந்தது என்பதை உணர்த்தும் மந்திரம். பிள்ளை பெண்ணிடம் சொல்கிற மந்த்ர அர்த்தம்:
"நீ இந்த வீட்டின் ராணி. உன் மாமனார், மாமியார், நாத்தனார்கள், மற்ற உறவுகள் எல்லோருக்கும் நீ தான் எஜமானி. இந்த மந்திரம் சொல்லாமலேயோ, சொல்லி அர்த்தம் தெரியாமலேயோ கூட இப்போதும் நடைமுறையில் இதை கடைபிடிக்கும் வழக்கம் சில வீடுகளில் இருக்கிறதே. ஆனால் முக்கியமான வார்த்தை ''அன்போடு, ஆதரவோடு அவர்கள் மனங்களை கவர்வாய் '' இதெல்லாம் வேதகால சமாச்சாரங்கள்.
'பிரவேச ஹோமம் '' என்பது மாப்பிள்ளை அடுத்து செய்வது. தம்பதிகளின் நீண்ட ஆயுள், வளமை, செழிப்பு, ஆரோக்கியம், சந்ததி வேண்டி நடத்துவது.
அப்புறம் துருவ நக்ஷத்ரம் அருந்ததி நக்ஷரம் பார்ப்பது. மாப்பிள்ளை பார்த்து பெண்ணுக்கு காட்டுவது. மந்திரங்கள் சொல்லிக்கொண்டே தான். சும்மா இல்லை. துருவன் மன உறுதி, விடாமுயற்சிக்காக. தர்ம மார்க்கத்தில் உறுதியாக இருப்போம் என்று மனதில் கொள்வதற்கு. வசிஷ்ட ரிஷி மனைவி அருந்ததி உதாரண பதிவிரதை. பத்தினி. அவளை முன்னோடியாக அடையாளம் காட்டுவதற்கு. நான் ஏற்னகவே சொல்லியது போல் இந்த சடங்குகள் சில குடும்ப வழக்கங்களில் முன்னே பின்னே இருக்கும்.
No comments:
Post a Comment