கொஞ்சம் புத்திமதி J.K. SIVAN
தாத்தா சார், உங்களைப்பார்த்து ரொம்பநாளாச்சு. பேசலாம் என்று வந்தேன் என்கிறார் மார்க்கண்டேயன்
''என்ன பேசுவது. நிறைய பேசியிருக்கிறோமே'' என்றேன்
''இன்று அனைத்து மாணவர்கள் கூட்டம் கூட்டியிருக்கிறோம் . அவர்களுக்கு அறிவுரை வழங்க சில விஷயங்கள் சொல்லுங்கள். எழுதிக்கொள்கிறேன்.
சரி சொல்கிறேன். எது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல. எனக்கும் சேர்த்து நானே சொல்கிறேன்.
++
எத்தனை நாளைக்கு எட்டு மணிக்கு எழுந்திருப்பது. சூரியன் உனக்காக உதிப்பதை பார்க்க பழகு. உலகுக்கு ஒளிகொடுக்கிறான், உனக்கும் சேர்த்து தானே. வணங்கு. தனியாக வணங்கு. கூட்டம் வேண்டாம். அடிக்கடி வணங்கு. சூரியனுக்கு உன்னை அப்போது தான் தெரியும். நீ பேசினால் புரிந்து கொள்வான்.
அவன் சரியில்லை, இவன் சரியில்லை எவனையும் குறை கூறாதே, பழிக்காதே. கண்ணாடியில் உன்னை முதலில் பார்த்துக் கொள் . நீயும் அவனே தான். அறியாமை, கோபம், பொறாமை, பேராசை இதெல்லாம் ஆத்மாவை தொலைத்தவனிடம் தான் காண்பது. உன் ஆத்மாவை ஜாக்கிரதையாக தேடி பிடித்து அடிக்கடி தடவிக் கொடு. தொலைத்தவர்களுக்கு ஆத்மா சீக்கிரமே கிடைக்கட்டும் என்று பிரார்த்தனை செய்.
''உன்னைத்'' தேடு. நீயேதான் தேடவேண்டும். நீ போவதற்கு இன்னொருவன் நடக்கமுடியாது. உன் வழி உனக்கு தான் தெரியவேண்டும். உன் கூட வேண்டுமானால் எவனாவது நடக்கட்டும். உனக்காக எவனும் நடக்கமுடியாதே .
''ஐயோ இவன் எதற்கு எங்கிருந்து இப்போது இங்கே வந்தான்'' என்று விருந்தாளியை வரவேற்காதே . ''வாங்கோ சார்'' என்று முகமலர்ந்து வரவேற்று ஏதாவது சாப்பிட கொடு. மனம் விட்டு சிரித்து பேசு.
''நன்றாயிருக்கிறதே, உபயோகப்படுமே '' என்று பிறர் பொருள் மேல் ஆசை வேண்டாம். நீ சம்பாதிக்காதது, உழைத்து பெறாதது, உனக்கு எவரும் கொடுக்காதது, என்றும் உனதல்ல.
இந்த பூமியில் தோன்றும் ஒவ்வொரு புல்லும் கூட கிருஷ்ணன் படைத்தது. நீ எதிர்பார்க்கும் மதிப்பு மரியாதை அதற்கும் உண்டு.
மற்றவர் சொல்வதை கவனி. எண்ணங்கள், வார்த்தைகள், விருப்பங்கள் வெளிவரட்டும். உனக்கு அதை குறைகூற, திருத்த, உரிமை இல்லை.
யாரையும் தப்பாக பேசாதே. இப்படி எல்லோரும் தீய சக்திகளை வெளியே அனுப்பிக்கொண்டிருந்தால் உலகமே தீய சக்திகளால் நிரம்பிவிடும். எவரும் தப்ப முடியாது.
தப்பு பண்ணாதவன் யார்? எல்லா தப்புக்கும் மன்னிப்பு உண்டு.
கெட்ட எண்ணங்கள் மனதை, உடலை, ஆர்வத்தை பாழ் படித்து நோயாளியாக்கி விடும். நல்லதே நினைப்போம், செய்வோம், சொல்வோம்.
இந்த பூமியை உண்டாக்கியதே நமக்காக, நாம் அதன் அங்கம். நம் குடும்பத்தில் அது இருக்கிறது.
குழந்தைகள் நம் எதிர்காலத்தின் விதைகள். அவற்றை ஜாக்கிரதையாக ல் அன்பு எனும் நீர் வார்த்து இதயத்தில் நல்ல எண்ணங்களை வளர்க்க பாடுபடு. உனக்கு நல்ல பலன் கிடைக்கும். .
சுவற்றில் அடித்த பந்து போல், நீ பிறர் மனதை புண் படுத்தினால், இன்னும் அதிகமாகவே உன் மனம் புண்படும்படி நேரும் .
பொய் வேண்டாம். உலகத்தில் பொய் பேசி சாதித்தவன் எவனும் இல்லை. எல்லாம் டெம்பரரி லாபத்துக்கு தான்.
எப்போதும் சம நிலையில் இரு. முயற்சி செய். வெற்றி பெறுவாய். மனம், உடல், எண்ணம், நோக்கம், இதயம் எல்லாம் வலுப்படும்.
நீ ஒரு களிமண். எப்படி வேண்டுமானாலும் உருவம் பெறலாம். நீ எப்படி இருக்கவேண்டும் என்று நீயே முடிவு செய். உன் சொல்லுக்கும், செயலுக்கும் நீயே காரணம்..
தனிமையில் சிந்திக்க பழகு. மற்றவர் பொருள் எதையும் தொடாதே.
உனக்கு நீயே உண்மையானவனாக இரு. அப்போது தான் நீ உன்னையே நம்பலாம். மற்றவர்களுக்கு வாத்தியாராக இருக்கலாம்.
உன் நம்பிக்கை உன்னோடு மட்டும். மற்றவர் மீது திணிக்காதே.
முடிந்த அளவு பிறர்க்கு தான தர்மங்கள் செய். விளம்பரம் வேண்டாம். மனதிருப்திக்கு.
வாழ்க்கையில் ரெண்டு விஷயம் வெற்றியையும் சந்தோஷத்தையும் தரும்.
1. எல்லாவற்றையும் இழந்தபின் நீ எப்படி சமாளிக்கிறாய் என்பது.
2. எல்லாமே உன் வசம் வந்தபின் நீ எப்படி நடந்துகொள்கிறாய் என்பது.
சில குறிப்புகள்:
உலகத்தில் நீ பிடிக்க வேண்டிய அருமையான இடம். மற்றவர் மனதில்
உனக்கு சிறந்த பாதுகாப்பு : உன்னை மற்றவர் '' நீ நல்லா இருக்கோணும்'' என்று வாழ்த்துவது.
பதவிசாக நடந்து எல்லோரையும் வெல்லலாம்.
சூரியனை பார்த்து நடக்கிறவனுக்கு நிழல் எங்கே தெரியும்?
சுப்பிரமணிக்கு காது கேட்காது. ''ஏன் எவனைப்பார்த்தாலும் பேசாமல் ஊமையாக இருக்கிறான்'' என்பார்
வாழ்க்கை வாழ்வதற்கே. எப்படி வாழ்வது என்பது தான் ரகசியம். சிலவற்றை தான் மேலே சொன்னேன். சொல்லிக்கொண்டே போகலாம்.
No comments:
Post a Comment