குழலுக்கு ஒரு நூறு வயது கணபதி
J.K. SIVAN
நன்றாக பிசைந்த மிருதுவான களிமண் எந்த உருவத்தையும் செய்ய வளைந்து கொடுக்கும். இப்படிப்பட்ட களிமண்ணால் உலகிலேயே அதிகமாக செய்யப்படும் ஒரு கடவுள் உருவம் தெரியுமா என்றால் குழந்தைகள் கூட ''பிள்ளையார்'' என்று சொல்லிவிடும். பிள்ளையார் சதுர்த்தி அன்று விற்கப்படும் களிமண் பிள்ளையாரின் ''உயர்ந்த விலை'' இதற்கு சாட்சி.
இந்த பிள்ளையார் ஒருவரைத்தான் ஹிந்துக்கள் செல்லமாக, உரிமையோடு பல ரூபங்களில் செய்து அழகு பார்க்கிறார்கள். துப்பாக்கி கணபதி, ஸ்கூட்டர் கணபதி, ராக்கெட் கணபதி, கிரிக்கெட் கணபதி, சங்கீத வித்துவான் கணபதி. இந்த கடைசியாக சொன்ன சங்கீத கணபதியை, தபலா கணபதி,மிருதங்க, நாதஸ்வர, கணபதிகளோடு நான் பார்த்து வியந்த ஒரு கணபதி தான் புல்லாங்குழல் கணபதி.
புல்லாங்குழல் என்றால் ''புல்லாங்குழல் கொண்டு வருவான்'' என்று கிருஷ்ணனைத்தான் மனதில் நினைப்போம். கணபதி புல்லாங்குழல் வாசிப்பது ஒரு கற்பனை சித்திரம், பொம்மை என்று எடுத்துக் கொள்பவர்களே, கொஞ்சம் நில்லுங்கள். உண்மையாகவேல் ''ப்ளூட்'' கணபதி என்று ஒரு மேதை இருந்திருக்கிறார். அற்புதமான புல்லாங்குழல் வித்வான்.
அற்புதமான கலைஞானம் கொண்ட காலஞ்சென்ற புல்லாங்குழல் வித்துவான் K .R. கணபதி ''கலை மாமணி'' பட்டம் பெற்றவர். அஷ்டஸஹஸ்ரம் ஈன்ற அரும்பெரும் செல்வங்களில் முக்கியமான ஒரு ரத்தினம்.
கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் ஜில்லா கூத்துர் கிராமத்தில் ஜூலை 3, 1918ல் பிறந்தவர். நடுத்தர ப்ராமண குடும்பங்களில் ஏதேனும் கலைத் திறமை இருந்தால் அதை மூலதனமாக கொண்டு பிழைக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் அப்போது உண்டு. தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரன் கணபதிக்கு புல்லாங்குழல் வாசிக்க பயிற்சி அளித்தான். குடும்ப ஏழ்மை ஆதார வசதிகள் பெறுவதற்கு கூட தடையாக இருந்த நிலையில், இளம் வயதில் தந்தையை இழந்த கணபதிக்கு ஆதரவு வெளியே பெரம்பலூர் நாதஸ்வர வித்துவான் அங்கப்ப பிள்ளை ரூபத்தில் கிடைத்தது. வறுமை அவரது வற்றாத சங்கீத தாகத்தை, அதுவும் புல்லாங்குழல் வாசிக்கும் ஆர்வத்தில் குறுக்கிடவில்லை. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பது மட்டும் பழமொழி இல்லையே. புகழ்ச்சி அடைவார் என்றும் நிரூபித்தவர் KRG .
டிவி, அதிகமான சபாக்கள், வீடியோ, ஆடியோ இல்லாத காலத்தில் ரேடியோ வைத்துக்கொண்டிருந்தவர்கள் வசதியானவர்கள் என்று கருதப்பட்டார்கள். AIR எனும் அகில இந்திய ரேடியோ நிகழ்ச்சிகள் ஒன்றுதான் எல்லோருக்கும் பொதுவாக பொழுதுபோக்கு. அதில் கர்னாடக சங்கீதம், திரை இசை சங்கீதம் ஒலி பரப்புவது பல இல்லங்களில் மகிழ்வோடு வரவேற்கப்பட்டது.. KRG 1943ல் AIR புல்லாங்குழல் வித்துவானாக பணியில் அமர்ந்தார். 1979ல் ஒய்வு பெரும் வரை நிலைய மூத்த கலைஞர். ஒய்வு பெற்றவரை விடவில்லை திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சங்கீத நடன கல்லூரி, 1980 முதல் 1984 வரை சங்கீத பேராசிரியர். தமிழக அரசு இப்படிப்பட்ட கலை மேதையை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுமா. 1980ல் ''கலை மாமணி'' விருது தந்து பெருமை பெற்றது. பல மேடைகளில் ஸ்ரீ KRG குழல் ஒலித்து ஆனந்த வெள்ளத்தில் ரசிகர் திளைத்தனர். மந்திராலயத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மடம் ஸ்ரீ KRG யை அழைத்து ''பால முரளி'' என்று கிருஷ்ணனாக பார்த்து பட்டம் அளித்தது. எத்தனையோ பட்டங்கள் அவரை தேடி வந்தன. ''நாதக்கனல்'' சங்கீத சேவா நிரத'' பட்டங்கள் உடனே நினைவுக்கு வரும் சில விருதுகள்.
அநேக புல்லாங்குழல் விதவான்களாக அவரது சீடர்கள் உருவாகி கானக்குழல் எங்கும் ஒலிக்கிறது. எல்லோராலும் விரும்பப்பட்ட அவரது குழல் ஒலியைப்போலவே ஒரு இனிய மனிதர் ஸ்ரீ KRG . குழந்தை மனம் கொண்ட வெகுளி. புன்னகையோடு என்னை வரவேற்று பேசியதெல்லாம் நினைவுக்கு வருகிறது.
மயிலாப்பூர் பஜார் ரோடு போகும் போதெல் லாம் KRG தனது இல்லத்தில், மாடியில் தரையில் அமர்ந்து வாசிப்பது கண் முன் நிற்கிறது.
சூரியன் தோன்ற கால தாமதம் ஆனாலும் KRG குறித்த நேரத்தில் தவறாமல் சூரிய நமஸ்காரம், பிராணாயாமம் செய்வது நிற்காது.
பளிச்சென்று பதில் சொல்வதில் அவரது உலக ஞானம், ஆங்கிலம் மற்றும் பல மாநில மொழிகளில் திறமை வெளிப்படும்.
கிடைத்த நேரத்தில் ஹோமியோபதி மருத்துவம் பயின்று பலருக்கு மருத்துவ சேவை செய்தவர் KRG . ''செவிக்கு மட்டும் விருந்து அல்ல உடலுக்கும் மருந்து இந்தா''என்று பல சூர்ணங்கள், குளிகைகள், மாத்திரைகள் செயது தருபவர். சுறுசுறுப்பின் மறுபெயர் KRG.
கேரம், செஸ் ஆகிய விளையாட்டுகள் ஈடுபாடு உண்டு. நிபுணர் என்று சொல்லலாம். தஞ்சாவூர் மண், காவிரி ஆற்றுநீருக்கே உரித்தான ஹாஸ்யம், நகைச்சுவை உணர்வு பேச்சில் தெரியும். முணுக் கென்று கோபம் வந்தாலும் அந்த கணமே மறைந்துவிடும். அவரது சிஷ்யர்களில் பலர் இன்று பிரபல புல்லாங்குழல் வித்துவான்கள். கே.ஆர். ஜி. ப்ளூட் மாலி என்னும் மேதை T.R மஹாலிங்கம் சமகாலத்தவர். சிறந்த நண்பர் என்றால் போதுமே
முடிக்கும் முன்பு எழுந்து வணக்கத்தோடு மரியாதையோடு பெருமையோடு கை கூப்பி நான் அறிவிப்பது ஸ்ரீ KRG எனது நெருங்கிய உறவினர். என்றும் நினைவில் நிற்பவர். அன்னியோன்னியமாக என்னோடு பழகிய மறக்கமுடியாதவர்.
நேற்று அவரது நூற்றாண்டை அவரது சீடர்கள் மற்றும் சங்கீத கலைஞர்கள் பலர் மைலாப்பூரில், ஸ்ரீ தியாகராஜ விதவாத சமாஜத்தில் கே. ஆர். கணபதி அவர்களின் உருவப்படம் திறந்து வைத்து மரியாதை செலுத்தி அவரை நினைவுகூர்ந்து போற்றினர் என்று முகநூலில் இன்று படித்தவுடன் ஒரு சிறந்த கலைமாமணியின் நினைவு வந்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
FACE BOOK NEWS SHARED BY KALASUNDAR RAMAN.
Glimpses of the Birth Centenary Celebration of my father (late) ‘KALAIMAMANI’ SRI. K.R. GANAPATHI, on 3rd July 2018, at Sri Thyagaraja Vidwat Samajam, Mylapore, Chennai. It was a great memorable event. Senior flutist Prapancham Sri. S. Balachandran was honoured with the title, ‘ Kuzhal Isai Mamani’ and an aspiring young talent Master R.S. Adhvaith was presented the ‘ Young Flutist Award’.
No comments:
Post a Comment