யாத்ரா விபரம் J.K. SIVAN
நின்ற, அமர்ந்த, சயன கோல பெருமாள்கள்
8.7.18 ஞாயிறன்று நாங்கள் உத்திரமேரூர் அடைந்தபோது நல்ல வெய்யில் . உச்சி வேளை நெருங்கி ஆலயம் சார்த்திவிடுவார்களோ என்று ஓடினோம். வீற்றிருந்து, நின்றிருந்த, சயனித்திருந்த பெருமாளைத் தவிர தூணில் சாய்ந்திருந்த ஒரு பெருமாள் முகத்தில் புன்னகை. பட்டாச்சாரியார் தான் அது. வேறு யாருமே இல்லை. எங்களை வரவேற்று கீழே நின்ற கோல பெருமாளை தரிசிக்கவைத்தார். படிமேல் அவரால் ஒவ்வொருக்காகவும் ஏற முடியாது. பூட்டிய கதவுக்குள்ளே மற்ற பெருமாள்களை நீங்களே படியேறி மேலே சென்று பாருங்கள் என்றுசொல்லியபடி, படியில் அமர்ந்துவிட்டார்
அமைதியான கிராம சூழலில் உத்திரமேரூர் பழம்பெருமைகளை சுமந்து நிற்கிறது. முக்கியமான ஒரு திவ்யதேசம். சென்னையிலிருந்து 85 கிமீ. தூரம். கோவிலைச் சுற்றி நெரிசல் அதிகமாகி விட்டது. சுந்தர வரத பெருமாள், ஆனந்தவல்லி இருவருமே பல்லவர் காலத்தவர்கள். அப்புறம் சோழர்கள், பாண்டியர்கள், சம்புவரையர்கள் ,ராயர்கள்,நாயக்கர்கள் எல்லோரும் வேறு சேர்ந்து புத்துப்பித்து இன்று அரசாங்கம் கையில் சரியான பராமரிப்பு இன்றி நிற்கும் ஆலயம்.
ஐந்து நிலை ராஜகோபுரம். அருகே குளம். கம்பி கட்டி ''மஹா ஜனங்கள்'' அசுத்தப்படுத்தாமல் இருக்கிறது. இங்கு விசேஷம் மூன்று சந்நிதி ஒன்றன்மேல் ஒன்றாக. அர்ஜுனன் நகுல சஹாதேவனுக்கு தரிசனம் தந்தவர் சுந்தரவரதர் என்றால் அவர் யுகம் என்ன என்று புரியும். வடகலை வழிபாடு சம்ப்ரதாயம். சுந்தரவரதரைத் தவிர அச்சுத வரதர், அநிருத்த வரதர், கல்யாண வரதர்களும் அருள் பாலிக்கிறார்கள். இந்த ஆலயம் வெள்ளை விஷ்ணுகிரஹம் என்ற பெயர் பெற்றது. வெள்ளைமுர்த்தி எம்பிரான், வெள்ளைமுர்த்தி ஆழ்வார்,
ராஜேந்திரசோழ விண்ணகர ஆழவார், சொக்கபெருமாள் என்றெல்லாம் பெருமாள் பேர் சம்பாதித்தவர்.
ரெண்டாம் நந்திவர்ம பல்லவன் இந்த கிராமத்தை வேத வைஷ்ணவ பிராமணர்களுக்கு தானமாக கொடுத்த இடம் இது. உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம் என்று கல்வெட்டில் தான் அந்த பெயர் இப்போது நிற்கிறது. ஆகம சாஸ்திரப்படி, அந்தக்கால சிற்பி தக்ஷகன், அரசன் சொல்படி காஞ்சிபுரம் வைகுண்டபெருமாள் கோவில் மாதிரி அமைத்த ஆலயம். ஆயிரம் வருஷம் கடந்த ஆலயம்.
சோழர்கள் இங்கே தான் உள்ளூர் தலைவர்களை தேர்ந்தெடுக்க அவர்கள் பெயர்களை ஓலை நறுக்கில் எழுதி குடத்தில் போட்டு குலுக்கி பெயர்களை வாசித்த குடவோலை தேர்தல் முறையை அனுஷ்டித்ததாக செப்பேடுகள், கல்வெட்டுகள் சொல்கிறது. பின்னால் பாண்டியர் ஆட்சியில் இது கண்டகோபால சதுர்வேதி மங்கலமாயிற்று. கிருஷ்ணதேவராயர் ஆட்சியில் இந்த ஆலயத்திற்கு மான்யம் கிடைத்தது.
நல்லவேளை வெள்ளைக்காரர்களும் பிரெஞ்சுக்கார்களுக்கும் அருகே வந்தவாசியில் நடந்த போரின் போது பெருமாள் கோவிலுக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை. அவர் மஹாபாரதப் போரையே பார்த்தவர் நடத்தியவர் இல்லையா?
அடித்தளத்தில், முதலில் நின்றகோல பெருமாள் சதுர்புஜங்க , நாலு கை பெருமாள். சங்கு சக்ரம் ரெண்டு கையில், ஒருகை அபயஹஸ்தம், இன்னொரு கை தொடையில். (கடி ஹஸ்தம்). நின்றகோலம். சுந்தரவரதர்.
ரெண்டு புறமும் ஒருவர் மட்டும் ஏறி இறங்க சின்ன மாடிப்படிகள் , உயரப்படிகள். நாம் கஷ்டப்பட்டு படியேறியதற்கு அவர் சௌகர்யமாக வைகுண்டவரதராக வீற்றிருக்கிறார். ஸ்ரீ தேவி, பூதேவி ரெண்டு பக்கமும். அர்ஜுனன், கிருஷ்ணன் யோகநரசிம்மரையும் இங்கே தரிசிக்கலாம்.
அடுத்து மேலே ஏறினால் ஆனந்தமாக அனந்தசயன கோலத்தில் அனந்தபத்மநாபனை தரிசிக்கலாம்.பூதேவி மார்க்கேண்டயன், ப்ரம்மா, சிவன் எல்லோருமே கூட இருக்கிறார்கள்.இங்கே மேலே விமானம் விசேஷமானது. பத்ம கோஷ்ட அஷ்டாங்க விமானம் என்று பெயர். விஷ்ணுவின் பல உருவங்களை மேலே சிலை வடித்திருக்கிறார் ராஜாவின் சிற்பி. கோபுரத்தில் தட்சிணாமூர்த்தியும் இருப்பது ஆச்சர்யம்.
ஆலயத்தின் மேற்கே உள்ள குளம் வைரமேக தடாகம் என்று கல்வெட்டுகள் கூறுகிறது.
No comments:
Post a Comment