ஐந்தாம் வேதம் J.K. SIVAN
46. மாம்பழ குழந்தை
செய்திகள் எந்த காலத்திலும் பரவுவதில் கொஞ்சமும் வேகத்தை குறைத்துக் கொண்டதில்லை. எவ்வளவு சீக்கிரம் எல்லோரையும் அடையுமோ அவ்வளவு வேகமாக பரவியது.
துவாரகையில் யுதிஷ்டிரன் அனுப்பிய தூதுவன் கிருஷ்ணன் அரண்மனையில் கிருஷ்ணனைச் சந்தித்தான். சேதி அறிந்த கிருஷ்ணன் உடனே இந்திரபிரஸ்தம் விரைந்தான். அத்தை குந்தியை வணங்கிவிட்டு பாண்டவர்களோடு பேச உட்கார்ந்தான். நண்பனைக் கண்டதில் அர்ஜுனனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஓடி வந்து அணைத்துக் கொண்டான்.
''கிருஷ்ணா, ராஜசூய யாகம் நடத்துவது எளிதல்ல. உனக்கே தெரியும். மிகவும் சக்தி வாய்ந்த எல்லா ராஜாக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பைப் பெற்ற ஒருவனால் தான் அது நிறைவேறும் எனவே தான் .உன்னைக் கண்டு உன் ஆலோசனையின் படி நடப்பதென்று நாங்கள் தீர்மானித்தோம்.
''யுதிஷ்டிரா , இதிலென்ன உனக்கு சந்தேகம். நீ எல்லா விதத்திலும் ராஜசூய யாகம் நடத்த யோக்யதாம்சம் கொண்டவன். ஆனால்.....
''கிருஷ்ணா என்ன ஆனால் என்று ஏதோ சிந்திக்கிறாய்? என்றான் யுதிஷ்டிரன்.
ஒருவனால் மட்டுமே இடர் ஏற்படலாம். அவன் சாதாரணமானவன் அல்ல. மிக சக்தி வாய்ந்தவன்.
மதக நாட்டு அரசன் ஜராசந்தன். அசுர பலம் வாய்ந்தவன். ஏனைய அரசர்களை தன் பிடியில் வைத்திருப்பவன். அவன் இரு பெண்களைத் தான் கம்சன் மணந்தான். கம்சனை நான் கொன்றதிலிருந்து ஜராசந்தன் என்னை எதிரியாகவே பார்ப்பவன். அவனை வெல்வது முடியாத காரியம்.
சிசுபாலன் என்கிற அரசனும் அவனுடன் சேர்ந்து விட்டான். இருவரின் பலமும் சேர்ந்து மற்ற ராஜாக்களை சக்தியற்றவர்களாக அவர்களுக்கு அடிமையாக்கிவிட்டிருக்கிறது. போஜர்களும் அவனை அண்டி தான் வாழ்கிறார்கள். அங்கு ருக்மி என்பவன் சிசுபாலன் நண்பன்.
எனவே அந்த கூட்டம் ஒன்று சேர்ந்து மேலும் பலமடைந்து விட்டது. எஞ்சிய யாதவர்களைக் காப்பாற்ற நாங்கள் மதுராவை விட்டு துவாரகைக்கு சென்றோம் .ரைவத பர்வதங்களுக்கு அப்பால் குசஸ்தாலியில் ஒரு கோட்டை கட்டிக்கொண்டோம்.
நான் எதற்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் ஜராசந்தன் இருக்கும் வரை, யுதிஷ்டிரா, உன் ராஜசூய யாக கனவு பலிதமாகாது. நூறு அரசர்களின் தலையை யாகத்தில் பலியிட்டு மேலும் பலம் பெற ஜராசந்தன் மும்முரமாக இருக்கிறான். அவனால் சிறைபட்ட 86 அரசர்களை உயிர் தப்ப வைக்க வேண்டியது முதலில் அத்யாவசியம். இன்னும் 14 அரசர்களை அவன் சிறைபிடித்தால் யாகம் தொடங்கிவிடுவான். பின்னர் அவன் ஒரு அழிக்கமுடியாத சக்தி என்பதை நினைவு கொள்' என்று சொல்லி நிறுத்தினான் கிருஷ்ணன்.
''கிருஷ்ணா நீ சொல்வது புரிகிறது. ஜராசந்தனின் பலத்தை நீ மிகவும் கவனத்தோடு எடைபோடுவதிலிருந்து என்னால் அவன் சக்தியை அறிந்துகொள்ளமுடிகிறது. நீயோ, பலராமனோ, பீமனோ, அர்ஜுனனோ கொல்ல முடியாத பலசாலியா அவன்?''
பீமன் குறிக்கிட்டு, ''கிருஷ்ணனின் சமயோசிதம், என்னுடைய பலம், அர்ஜுனனின் வீரம் இதால் மகத தேச அரசன் ஜராசந்தனை முடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன் '' என்றான்.
விரக்தியுடன் யுதிஷ்டிரன் தலை அசைத்தான். ' கிருஷ்ணன் சொல்வதைக் கேட்டவுடன் நமது தந்தை பாண்டுவின் கனவு, இந்த 'ராஜசூய யாகம் நிறைவேறாது என்று தான் எனக்கு தோன்றுகிறது.''
''அண்ணா, தங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வது என் கடமை. நான் வீரனென்று பெயர் பெற்று என்ன பயன். என் வில்லின் சக்தியால் அவனைக் கொன்று உங்களுக்கு ராஜசூய யாகத்தில் ராஜாதி ராஜன், சக்கரவர்த்தி என்ற பெருமை பெறுவதற்கு என் உயிரைப் பணயம் வைத்தாலாவது பாடு படுவேன்'' என்று அர்ஜுனன் சபதமிட்டான்.
''அர்ஜுனா , நீ சொல்வதை கேட்பதற்கு தான் சந்தோஷம் தருகிறது. ஜராசந்தன் படை வலிமை முன்பு உனது படைபலம் போதாது. தெரிந்து ஒரு வலிய சக்தியிடம் மோதி தோற்கக் கூடாது. வேறு வழியில் தான் இதை எதிர்கொள்ள வேண்டும். எதிரி ஜராசந்தனைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் மோதுவது மடமை.'' என்றான் கிருஷ்ணன்.
''ஜராசந்தனைப் பற்றி அப்படி என்ன இருக்கிறது தெரிந்துகொள்ள'' என்றான் யுதிஷ்டிரன்
''ஜராசந்தன் யார், அவன் சக்தி, பலம் என்ன, ஏன் எங்களால் அவன் இன்னும் கொல்லப் படவில்லை என்று சொல்கிறேன் கேள் என்றான் கிருஷ்ணன் :
மகதநாட்டு அரசன் வ்ரிஹத்ரதன். காசி ராஜனின் பெண்கள் இரட்டையரை மணந்தான். இருவரையும் பாரபட்சமின்றி அன்போடு நடத்துவதாக வாக்களித்தான். சகல பலமும் அதிகாரமும் இருந்தும் அவனுக்கு ஒரு குழந்தை இல்லை. அந்த தேசத்துக்கு கௌதமர் பரம்பரையைச் சேர்ந்த சந்தகௌசிகர் என்ற ரிஷி வந்து ஒரு மாமரத்தின் அடியில் தங்கியிருக்கிறார் என்று அறிந்தான். இரு மனைவியரோடு அவரை சென்று தரிசித்தான். தன் குறையை சொன்னான்.
முனிவர் கண் மூடி மந்திரம் உச்சாடனம் செய்து த்யானித்தார். ''சொத்'' என்று அந்த மாமரத்தின் மேலிருந்து ஒரு முழு பழம் எந்த அணிலும், பறவையும் கடித்தோ, கொத்தியோ குறையில்லாமல் , முழுசாக தங்க நிறத்தில் அவர் மடியில் விழுந்தது.
''அரசே இனி கவலை விடு. இந்த பழத்தின் மூலம் இணையற்ற பலமும் சக்தியும் கொண்ட ஒரு மகன் உனக்கு பிறப்பான்'' என்று அந்த பழத்தை ராஜாவிடம் கொடுத்தார்..
ராஜாவும் பழத்தை இருபாகமாக்கி சரி சமமாக இரு மனைவியருக்கும் அளித்து அவர்களும் கருவுற்று ஒவ்வொருத்தியும் பாதி தலை பாதி உடம்போடு குழந்தை பெற்றாள். இந்த அரை குறைப் பிரசவ குழந்தைகளை தாதிகள் துணியில் சுற்றி காட்டில் எறிந்துவிட்டனர். அந்த காட்டில் நரமாமிசம் உண்ணும் ஒரு ராக்ஷசி ஜரா என்பவள் கண்ணில் இந்த இரு பாதி குழந்தைகள் பட்டு அவள் அவற்றை உண்ண இரு பாதியையும் ஒன்றாக சேர்த்து கட்டினாள் . அந்த மாமிச பிண்டங்களுக்கு உயிர் இருந்ததால் அவை ஒரு முழு குழந்தையாக மாறிவிட்டது. கனமான அந்த குழந்தையை அவளால் தூக்கிச் செல்ல முடியவில்லை. அது ஒரு பலத்த கர்ஜனை செய்தது. அரண்மனையில் இந்த குரல் கேட்டதும் ஓடி வந்தார்கள். ஜரா குழந்தையை அரசனிடம் ''இது உன் குழந்தை என்று சொல்லி'' கொடுத்தாள். அவனும் மகிழ்ந்து ''ஜராவினால் ஒன்றுசேர்க்கப்பட்ட'''என்ற பொருள் படும் ஜராசந்தன் என்ற பெயரை சூட்டினான்.
சந்த கௌசிக ரிஷி மீண்டும் ஒருமுறை மகத தேசம் வந்தபோது ராஜா நன்றியோடு அவரைச்சென்று தரிசித்தான். ''தங்கள் அருளால் எனக்கு ஒரு பிள்ளை பிறந்தான். அவன் எதிர்காலம் பற்றி கூறவேண்டும் '' என்று கேட்டான்.
''உன் மகன் எவரும் வெல்லமுடியாத பலம் கொண்டவன். அவன் எல்லா அரசர்களையும் வென்று சிறைபிடிக்கபோகிறான். அவனது சக்தி ருத்ரன் சக்தி போன்றது. வினோதமான பலசாலி.'' என்று கூறி விடைபெற்றார்.
ராஜா பல ஆண்டுகள் சென்று ஜராசந்தனிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு வானப்ரஸ்தம் சென்றான். ஜராசந்தன் பல அரசர்களை கொன்று வென்று மிகவும் பலம் பொருந்திய ஒரு சக்தியாக மாறிவிட்டான். அவனது இரு பெண்களை கம்சனுக்கு மணமுடித்தான். மதுரா அவன் வசம் வந்தது. நான் கம்சனை வதம் செய்ததில் ஜராசந்தன் என் முதல் எதிரியானான்.'' என்று முடித்தான் கிருஷ்ணன்
அமைதியாக எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு கணம் யோசித்த கிருஷ்ணன் தொடர்ந்தான். கிருஷ்ணன் முகத்தில் ஒரு க்ஷண காலம் கோபம் உறுதி தோன்றியது.
''யுதிஷ்டிரா, ஒன்று நிச்சயமாக தெரிகிறது. ஜராசந்தன் முடியும் நேரம் வந்துவிட்டது. அவனை போரில் யாராலும் வெல்ல முடியாது. என் மனதில் ஒரு திட்டம் உள்ளது. நான், பீமனுடனும் அர்ஜுனனுடனும் ஜராசந்தனை நேரில் சந்திக்க செல்லப் போகிறேன். உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால் பீமனையும் அர்ஜுனனையும் என்னோடு அனுப்பு''
''அச்சுதா, கோவிந்தா, கேசவா என்ன சொல்கிறாய் நீ. எங்களை வாழ்விக்க வந்த தெய்வமே. நீ சொல்லி நான் தட்டுவதா? நீ போடும் திட்டத்தில் ஜராசந்தன் மாய்ந்தான், எனக்கு ராஜசூய யாகம் வெற்றிதான் என்று தோன்றிவிட்டதே'' என்ன வேண்டுமோ ஆணையிடு நான் செய்கிறேன்'' என்றான் யுதிஷ்டிரன்.
இதைத் தொடர்ந்து மூன்று சனாதன பிராமணர்கள் சூரிய, சந்திர, அக்னி ஸ்வரூபமாக பிரகாசத்துடன் மகத தேசத்தை நோக்கி நடந்தார்கள்.
கேட்டாயா ஜனமேஜயா என்று முடித்தார் வைசம்பாயனர்.
மகரிஷி எனக்கு ஒரு ஆசை, முடிவில்லாமல் நீங்கள் இந்த மஹாபாரத நிகழ்வுகளை சொல்லிக்கொண்டே போகவேண்டும் என்றான் ஜனமேஜயன்.
No comments:
Post a Comment