Tuesday, July 31, 2018

BHADRACHALA RAMADAS




        கடன் தீர்த்த  ராமன் - J.K. SIVAN 








மற்றவர் பற்றி கவலை இல்லை. நமது நம்பிக்கையை இகழ்வதோ அவமதிப்பதோ, அலட்சியப்படுத்துவதோ  நடக்கட்டும்.  அதைப்பற்றி ஏன் நினைக்கவேண்டும்.  தெருவில் சில மிருகங்கள் சதா ஊளையிடத்தான் செய்யும். திருப்பி நாமுமா ஊளையிடுகிறோம். பொருட்படுத்தவேண்டாம்.  என்றாவது  யாரையாவது கேவலப் படுத்தி இருக்கிறோமா, இல்லையே! 

நாம் வணங்கும் ராமர் வெள்ளைக்காரர்களுக்கு , முஸ்லிம்களுக்கு கூட  நேரில் வந்து காட்சி தந்திருக்கிறார்.  சரித்திரமே இருக்கிறது.

கோபன்னா  ராம பக்தர்.  அவருடைய மாமா  மத்தன்னா.  கோல்கொண்டா சுல்தான் அப்துல் ஹசன் தானா ஷாவுக்கு  மந்திரி. கோபன்னா மாமாவின் செல்வாக்கால் சுல்தானின் கஜானாவிலிருந்து பணம் எடுத்து  சிதைந்து போயிருந்த பத்ராச்சலம் ராமர் கோவிலை புதுப்பித்தார்.  விஷயமறிந்த தானா ஷா கொதித்தான். உடனே ஆணை இட்டான்.


''கோவில் கட்ட என் பணம் கிடையாது .எனவே  பணத்தை உடனே கட்டு இல்லாவிட்டால் பன்னிரெண்டு வருஷம் ஜெயில் தண்டனை''. நல்லவேளை கோபன்னாவின் தலை தப்பியது. ஆனால் சுல்தானின் கோல்கொண்டா சிறையில் கோபன்னா வாடினார். ராமனையே நினைந்து உருகி பாடினார்.   

கோபன்னாவின் குரல்  கோதண்ட ராமனுக்கு கேட்காமலா போகும்?

ஒருநாள் காலை  தானா ஷாவின் அரண்மனை வாசலில் இருவர்  நின்றனர். ஒருவர் கையில் பெரிய மூட்டை ஒன்று. வாசல் காவலர்கள் சுல்தானின்  அனுமதி வாங்கி உள்ளே அனுப்பினார்கள்.

''யார்  நீங்கள் ? என்ன விஷயமாக என்னை பார்க்க வந்தீர்கள்?''

''நாங்கள் கோபன்னாவின் பணியாளர்கள்'' 
''ஓ அப்படியா.  என்ன விஷயமாக வந்தீர்கள்?
''அவர் உங்களுக்கு பணம் திருப்பி தரவேண்டுமாம். அதை வட்டியோடு சேர்த்து கொண்டு வந்திருக்கிறோம். சரி பார்த்து பெற்றுக்கொண்டு அவரை உடனே சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்.

''அப்படியா?  என் கஜானாவிற்கு சேரவேண்டிய பணம் வந்து சேர்ந்துவிட்டால் எனக்கு கோபன்னாவை விடுதலை செய்வதில் தயக்கம் இல்லை. எங்கே  பணம்?

ஒரு பெரிய  பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அதில் பையிலிருந்த தங்க மோஹராக்களை வந்த இருவரும் கொட்டினார்கள். அளந்துகொள்ளுங்கள், எண்ணிக் கொள்ளுங்கள்'' என்கிறார்கள்.

ராஜாவின் ஆட்கள்  மொத்த பணத்தை  எண்ணினார்கள்.  வந்த இருவரும் உட்காரக் கூட இல்லை. நின்று கொண்டே இருந்தார்கள்.  எண்ணினதில் முஸ்லீம் ராஜாவுக்குச்  சேர வேண்டிய தொகையை விட அதிகமாகவே ரொக்கம் இருந்தது.  சுல்தானுக்கு பரம சந்தோஷம்.

''சரி,  கோபன்னாவை விடுதலை செய்யுங்கள் நாங்கள் வருகிறோம்'' -  வந்த வீரர்கள் இருவரும் புறப்பட்டு விட்டார்கள்.

சிறையில் வாடி ராமனை வேண்டி  உருகிக்கொண்டிருந்த கோபன்னாவின் முன்னால்  சுல்தானின் ஆட்கள்.

''வாருங்கள் எங்களோடு. சுல்தான் உங்களை அழைத்து வர கட்டளை இட்டிருக்கிறார்.

''ஓஹோ  எனக்கு  சிரச்சேதமா?  அதற்கு தான் தான்  அழைப்பா?  எதுவானால் என்ன. எல்லாம் ராமனின் சித்தம்.''
சுல்தான் முன்னே நின்றார் கோபன்னா '

சுல்தான் முக மலர்ச்சியாக இருந்தான். ''கோபன்னா, நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்தர் என்பது தெரியாமல் உங்களை அவமானப் படுத்தி விட்டேன்.  எனக்கு சேரவேண்டிய பணம் எல்லாம் அதிகமாகவே திரும்ப தந்து விட்டீர்கள். நீங்கள் தாராளமாக இனி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். உங்களை விடுதலை செய்தாகிவிட்டது. இனி நீங்கள் என் விருந்தாளி''.

கோபன்னாவுக்கு புரியவில்லை. 

 'சுல்தான்,   நானா? செல்வந்தனா?  என்னுடைய ஆட்கள் உங்களுக்கு சேரவேண்டிய பணத்தை தந்தார்களா?  யார் அவர்கள்?, எனக்கு அப்படி  யாருமே கிடையாதே, என்னிடம் செல்வமே இல்லையே? -  குரல் தழுதழுக்க  தட்டு தடுமாறி  கேட்டார் கோபன்னா.

''என்ன சொல்கிறீர்கள் கோபன்னா.  இரண்டு  வீரர்கள்  ஆஜானுபாகுவாக  பொன்னிற சரீரத்தோடு, காதில் குண்டலம், ஜடாமகுடம் தரித்து, கையில்  நீண்ட வில் வைத்துக் கொண்டு இங்கே என்னை சந்தித்தார்களே, அதில் கொஞ்சம் பெரியவன் நீல நிறத்தில் இருந்தான். மற்றவன் பளபளக்கும் பொன்னிறமாக இருந்தான். இளையவன் தான்  கையில் தங்க மோஹராக்கள் கொண்ட பை  இருந்தது.

''சுல்தான்   சுல்தான்.....என்ன சொல்கிறீர்கள்.  எனக்காக  பணம் கட்டிய  அவர்கள் யார் ?
''என்ன கோபண்ணா  உங்களது  பணியாளர்கள் என்கிறார்கள் தெரியவில்லை என்கிறீர்களே. நான் அவர்கள் பெயரைக் கேட்டேனே.''

கோபன்னாவுக்கு  உடல் நடுங்கியது.  ''சுல்தான்  யாரும் எனக்கு அப்படி இல்லையே.  என்ன பெயர் சொன்னார்கள் ? ஸ்ரீ ராமா  இது என்ன சோதனை 
''கொஞ்சம் இருங்கள்  என்  சேனாபதி அருகில் இருந்தார் அவர் நினைவு வைத்திருப்பவர்.  சேனாபதி கைகாட்டிக்கொண்டு அருகே வந்தான்.  வந்தவர்கள்  என்ன பெயர் சொன்னார்கள் என்று சுல்தான் கேட்க  சேனாபதி கணீர் என்று பதில் சொன்னான்.
' நீல நிறமாக கொஞ்சம் பெரியவராக இருந்தவர் 'ராமோஜி, மற்றவர்  லக்ஷ்மோஜி''  என்று சொன்னதாக  ஞாபகம்.  கோபன்னா சிலையானார்.இரு கைகளும் சிரத்தின் மேல் சென்றது. கண்களில் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் வழிந்தது.  அவரை அவ்வாறு நிற்கவைத்து விட்டு சில விஷயங்கள் தெரிந்து கொள்வோம். 

பத்ராசலம், கம்மம் ஜில்லாவில் ஆந்திராவில்  கோதாவரி நதிக்கரையில் உள்ள தண்டகாரண்ய  பிரதேசம். வனவாசத்தின் போது இங்கேதான்   ராமர்  லக்ஷ்மணர் சீதை,   லக்ஷ்மணன் கட்டிய ஒரு பர்ணசாலையில் வசித்தார்கள்.  அப்போது  தான் ராவணன் வந்து சீதையை கடத்தி சென்றான்.

பக்த பத்ரர் என்று ஒரு ரிஷி. ராமனின் தர்சனம் பெற த்ரேதா யுகத்தில்  தவம் இருந்த மலை அது எனவே,  அதற்கு பத்ராசலம் என்று பெயர்.                                              
                                           
கிட்டத்தட்ட   நானூறு வருஷங்களுக்கு முன்பு இங்கே ஒரு ராமர் கோவில் கட்டப் பட்டது. ராமர் சீதா சிலைகள் ஸ்வயம்பு.  பொக்கல தம்மக்கா  என்ற  ராம பக்தை ஒருவள் ஒரு இரவு கனவில் ''பத்ரகிரி மலையில் சில விக்ரஹங்கள் புதையுண்டு உள்ளன. அவற்றை வெளியே எடுத்து வேண்டியதை செய் '' என்று உத்தரவு பெற்றாள் .

 மறுநாள் விடிந்ததும் அவள் ஓடித்  தேடி அவற்றை  கண்டுபிடித்து ஒரு கூரை வேய்ந்து சிறிய கோவில் ஒன்றை ஸ்தாபித்தாள்.  காட்டைத்  திருத்தி வழி செய்து தினம் அங்கு சென்று   பூஜை செய்து வந்தாள் .

எங்கே ராமரை சிலையாக அவள் வழிபட்டாளோ , அங்கேதான் ராமர் சீதா, லக்ஷ்மணனோடு த்ரேதா யுகத்தில் வாசம் செய்தனர். அங்கே தான் பர்ணசாலை கட்டப்பட்டது.  பத்ராசலத்லிருந்து  35 கிமீ தூரத்தில் இந்த பர்ணசாலை இருக்கும் இடத்தை த்ரேதா யுகத்தில்  தேர்ந்தெடுத்தவர் அகஸ்தியர்.  ரெண்டு கி.மீ தூரத்தில் ஜடாயு பாகா என்கிற இடத்தில் தான் ஜடாயு ராவணனோடு சண்டையிட்டு சிறகு வெட்டப் பட்டு குற்றுயிரோடு  ராமனுக்கு காத்திருந்த இடம். ஜடாயு சொல்லி தான் ராமனுக்கு ராவண சந்நியாசி சீதையை கடத்தியது தெரிந்தது.

தும்முகூடெம்  என்று ஒரு இடம்.  இங்கே தான்  பதினாலாயிரம் ராக்ஷஸர்களை கர தூஷணர்க
ளோடு ராம லக்ஷ்மணர்கள் கொன்றார்கள்.  அந்த ராக்ஷஸர்களின்  மலை போன்ற சாம்பலில்  உருவானது இந்த தும்முகூடம்.  இங்கே ராமனை  ஆத்ம ராமன் என்று வழிபடுகிறோம்.

ஐந்து கி.மீ தூரத்தில்  சில வெந்நீர்  ஊற்றுக்கள் இருக்கிறது. குண்டாலா  கிராமம்  என்று அதற்குப் பெயர்.  குளிர் காலத்தில் ப்ரம்மா விஷ்ணு மஹேஸ்வரர்கள்  சூடாக ஸ்நானம் செய்த வெந்நீர் ஊற்றுகள்.

மீண்டும் சுல்தான் அரண்மனையில்  கோபன்னாவிடம் செல்வோம்.


சுல்தான் முன்பு கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய  இரு கைகளை தலைக்கு மேலே தூக்கி  வணங்கியவாறு சிலையாக நின்ற  கோபன்னா  தனக்காக பணம் கொண்டு வந்து கடனைத்  தீர்த்தவர்கள்  ராம லக்ஷ்மணர்களே  என்று புரிந்து கொள்ள  வெகு நேரமாக வில்லை. 

தானா ஷாவும் அவர் வழிபட்ட  தெய்வமே  தனக்கு முன் காட்சியளித்தவர்கள் என்று  புரிந்து கொண்டு ஆச்சர்யப்பட்டான்.  அவன் கோபன்னாவை பல்லக்கில் ஏற்றி  பத்ராசலம் அனுப்ப,   அவர் அங்கேயே  தங்கி ''ராமதாசனாக'' சேவை செய்து  வாழ்ந்தார். ராமர் கொடுத்த தங்க மோஹராக்கள் சில இன்னும் அங்கே இருக்கிறதாம். கண்ணாடி பெட்டகத்தில் சில காசுகள் பார்த்தேன். 

பத்ராசல  ராமதாஸ்  தெலுங்கு  பாடல்கள் மனதை உருக்கக்கூடியவை. தெலுங்கு தெரியவேண்டும் என்பது தேவையில்லை.  பக்தி பாவம் ஒன்றே போதும்.  பாலமுரளி கிருஷ்ணா குரலில் நிறைய கேட்டு அனுபவித்திருக்கிறேன். ஒரு சில பாடல்களை கற்றுக்கொண்டும்  காமா சோமா என்று  பாடுவேன். please click the following link to enjoy Balamuralikrishna's Bhava poorva rendering of Baktha Badrachala Ramadas krithi ''Ye Theeruga nanu.."''https://youtu.be/2EUysga8pMQhttps://youtu.be/2EUysga8pMQ

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...