Tuesday, July 31, 2018

ARUPATHTHU MOOVAR







அறுபத்து மூவர்   J.K. SIVAN 
ஆனாய  நாயனார் 


   ''அலைமலிந்த புனல் ஆனாயற் கடியேன்'' 

சாம வேதம் என்றால் என்ன என்று எடுத்துரைத்த ஸ்தலம், ஆலயம் ஒன்று இருக்கிறது.  அரசாங்கமோ,  மற்றும் தனவான்களோ கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால்  என்ன. நாமே ஒன்று சேர்ந்து எழுப்புவோம் என்று சில பக்தர்களின் முயற்சியால் அந்த ஆலயம் உருவானதா, உருவாகிறதா?.   இப்படி தேனீ போல் உழைத்து கோவிலை வளரச்செய்யும்  இரு நபர்கள் பெயர்கள் : ஸ்ரீ  R. Chandrasekar, 37/2, Third Main Road, Gandhinagar, Adyar, Chennai-600020. (Ph: 24416336) and Kittu Josyar, Thirumangalam, Lalgudi-621703. (Ph: 2541020). 

திருச்சி  லால்குடி  பெருவழியில்  3 கி.மீ.  வடக்கே உள்ள சிவன் கோவில் அது. ராஜகோபுரம் தலை தூக்கிவிட்டது.  அந்த கிராமத்தின் பெயர்  திருமங்கலம், நல்ல பெயர்.  மழ நாடு. சிவன் அங்கே சாமவேதீஸ்வரர்.  எண்ணற்ற பக்தர்கள் மஹான்கள் தரிசித்த ஆலயம். ரிஷி  சாய் முனி  சாமவேதத்தை விளக்கி பதம் உரைத்த ஊர். கோவிலில் உள்ள கல்வெட்டில் பரசுராமேஸ்வரம் என்று இதற்கு பெயர் என்று தெரிகிறது.  பரசுராமனின் பாவங்கள் விலகிய இடம்.  லக்ஷ்மி  சிவனை உபாசித்த  ஸ்தலம். பலாமரம் ஸ்தல விருக்ஷம். சிற்றாறுகள் பொழில்கள் சூழ்ந்த இயற்கை வளம் மிக்க அமைதியான கிராமம். மூன்று பிராஹாரங்கள். வசந்த வாகன மண்டபங்கள்.  200  ஏக்கரா நிலம் கொண்ட ஆலயம்.  மரத்தேர் செப்பம் செய்தாகிவிட்டதா? அப்பர் சேக்கிழார் ஆகியோர் தரிசித்த சிவன்.   இனிமேல் தான் விஷயத்துக்கு வருகிறேன்.  இது சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக கோவிலாக இருக்க இன்னொரு முக்கிய காரணம் இங்கே ஒரு நாயனார் பிறந்து வாழ்ந்தார்.  யாதவ குலத்தவரான ஆனாய நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். 

பலவிஷயங்களில்  ஆனாயர்  கிருஷ்ணனை போலவே இருக்கிறார்.  யாதவர். பசுக்களை மேய்ப்பவர். புல்லாங்குழலில் இனிய  மதுர கானம் புரிந்தவர். அசையும்  அசையா சகல ஜீவன்களையும்  ஜீவநாதத்தால் கவர்ந்த கலியுக கிருஷ்ணன். பட்டை பட்டையாக திருநீறணிந்து ருத்ராக்ஷமாலைகளோடு காணும்  சிவ பக்தர்.

விடிகாலை விடிந்தவுடனேயே  பசுக்கள், கன்றுகள்  ரெடியாக  நாயனாருக்கு காத்திருக்கும்.  அவருடன் மேய்ச்சல் காடுகளுக்கு சென்று  பொழுதுசாய்ந்து  அஸ்தமன நேரத்தில் அவற்றோடு திரும்புவார். அதுவரை அவரது நேரம்  சிவனை  நினைந்து பாடுவதிலேயே கழிந்து விடும். 

வழக்கமான  ஒரு கொன்றை மரம் அவரிடம் ஒரு புல்லாங்குழல் இணைபிரியாமல் இடுப்பிலே இருக்கும். அதில் கான வெள்ளம் காட்டை நிரப்பும்.  காந்தத்தால் கவரப்பட்ட  இரும்பு துகள்களைப் போல  பக்ஷிகள், மிருகங்கள், சகல ஜீவராசிகளும்  மயங்கி அவரருகில் வந்து மெய்ம்மறந்து நிற்கும்.  இசையின்பத்தில் மூழ்கும்.

இப்படியே  நாட்கள் நகர்ந்தது. இசையும் தொடர்ந்தது. ஒரு நாள்  பஞ்சாக்ஷரம் எனும் ஐந்தெழுதது மந்திரத்தை அழகாக  சிவநாம சுகத்தில் புல்லாங்குழல் ஒலித்தது.  சகல ஜீவராசிகளும் மயங்கி சுகானுபவம் பெற்றன.  நீர் குடிக்க மறந்த,  உண்ண  மறந்து நின்றன.  எதிரி என்ற நினைப்பே இல்லாமல் அருகருகே  புலியும் மானும்  தலையசைத்து  ரசித்தன.பயமே இல்லாமல் பாம்பின் நடனத்துக்கு தவளை தாளம் போட்டது.  நேரம்  வந்துவிட்டது  ஆனாயருக்கு,  என்பதால்,  சிவனே உமாசகிதம்  அவரை அணுகி  அணைத்து  கைலாசம் கூட்டி சென்றான்.

இந்த நாயனாரை  வேணுகோபாலன் மாதிரி சிலை வடித்து  கோயிலில் வழிபடுகிறார்கள் சிவபக்தர்கள் என்பதால்  இவரை  ஆனந்த கிருஷ்ணனா  ஆனாயநாயனாரா என்று  சட்டென்று அடையாளம் காணமுடியாது. தூய பக்திக்கு, இறைஅன்பை  நாதோபாஸனை மூலம் பெற்றவர்  ஆனாய நாயனார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...