Sunday, July 8, 2018

nataraja paththu

நடராஜ பத்து 7 -- J.K. SIVAN

                     எதை நினைத்து அழுவேன்?

நமக்கு எப்போது அழுகை வருகிறது? ஏதோ தாங்கமுடியாத துக்கம், உடல் வலி, எதிர்பார்த்து ஏமாற்றம், போன்ற சில மன அழுத்தங்கள் உண்டாகும்போது. அவை தரும் வருத்தத்தால். இது மட்டும் பதில் என்று சொன்னால் பாதி மார்க் தான். ஏதாவது தப்பு கிப்பு பண்ணிவிட்டு, நம் குறையை உணர்ந்து அதற்காக பின்னால் வருந்தும்போது வருகிறதே ஒரு அழுகை அது தான் என்று சொன்னால் கொஞ்சம் மதிப்பும் மார்க்கும் அதிகம்.

ஒரு தூய பக்தரின் குமுறலை கேட்போமா?

''என்னைப் போய் பெற்றார்களே அருமையான சற்குணம் பொருந்திய என் தாய் தந்தையர். அதை நினைத்து அழுவேனா?

அறிவே கொஞ்சமும் இல்லாமல் அவதிப்படுகிறேனே அதற்காக ஒரு மூலையில் அமர்ந்து அழுவேனா?

அடே பிரம்ம தேவனே,   எதற்காக வேலை மெனக்கெட்டு என்னைப்  படைத்தாய் என்று அழுவேனா?

நிறைவேறாத ஆசைகள்  ஒன்றா இரண்டா,  எத்தனையோ  என்னிடம், என் நெஞ்சின் அடிவாரத்தில் இருக்கிறதே, அதற்காக உருகி அழுவேனா?

என் போறாத காலம், நான் செய்த  தீவினை, என்று தலையில் அடித்துக்கொண்டு அழுவேனா?

எதுவும் நடக்காதபடி என்னை அலைக்கழிக்கும் நான் செய்த பாப கர்ம வினையை உணர்ந்து அழுவதா, அது என்னை விட்டு விலகி, உன் மூலம் மோக்ஷம் கிடைக்காதா என்று  ஏங்கி அழுவேனா?

ஏன் ஏன் ஏன் நான் பிறந்தேன் என்றே நினைத்து அழுவேனா? அல்லது இவ்வளவு கெஞ்சியும் நீ வந்து அருள்புரியாதது ஏன் என்று அழுவேனா?

என் வறுமை, என் உடல் உபாதையில் வருந்தி அழுவேனா?

ஐயோ,   இதுபோல் இன்னும் எத்தனை பிறவி வரப்போகிறது என்ற பயத்தில் அழுவேனா?
எனக்கு தெரியவிலையே. நீயே வந்து சொல்லேன்.

ஆடும் சிதம்பரேசா.. வா வந்து சொல்லப்பா. என்னப்பா, பொன்னப்பா.

இப்படி எல்லாம் நினைத்து அழும் பக்குவம் எனக்கு இனி இன்னும் வரவில்லை.  ஒரு அற்புத சிவ பக்தர் இவ்வாறு  அருமையாக நமக்கும் அழ தோன்றும் வகையில்  கனிந்து  பாடலாய் வடித்திருக்கிறார். நடராஜ பத்து.  பத்தே பத்து பதிகம்.  இனி அவர் இவ்வாறு வருந்தும் கெஞ்சும்   பாடலை சுவை குன்றாமல் அவர் வார்த்தைகளிலேயே படித்து மகிழ்வோம்.

இது நடராஜ பத்தில் 7வது பதிகம். இன்னும் மூன்று  தான் இருக்கிறது இது நிறைவு பெற. ஒரு நண்பர்  இதை புத்தகமாக போட முன் வந்திருக்கிறார்.  செய்வோம். இலவசமாக அளிப்போம்.


''அன்னை தந்தைகள் எனை ஈன்றதர்க்கு அழுவனோ, அறிவிலாததற்கு அழுவனோ
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோ
முன்பிறப்பென்ன வினை செய்தேன் என்றழுவனோ என் மூட அறிவுக்கு அழுவனோ
முன்னில் என் வினை வந்து மூளும் என்றழுவனோ முத்தி வருமென்று
உணர்வனோ
தன்னை நொந்தழுவனோ உன்னைநொந்தழுவனோ தவமென்னஎன்றழு வனோ
தையலர்க்கு அழுவனோ மெய்வளர்க்க அழுவனோ தரித்திர திசைக்கழுவனோ இன்னுமென்ன பிறவி வருமோ என்றழுவனோ எல்லாம் உரைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.''

நேற்று நான் ஒரு சிறு க்ஷேத்ராடனம் சென்றேன். பல புராதன சிவன் கோவில்களை தரிசிக்கும் பாக்யம் கிடைத்தது. அதைப்பற்றி ஒவ்வொன்றாக வழக்கம் போல் ''யாத்ரா விபரம்'' என்று எழுதும் முன் ஒரு கோவிலின் படம் மட்டும் இணைக்கிறேன். இது வேதபுரீஸ்வர் ஆலயம்,  செய்யாறில் இருக்கிறது. புராண பெயர் திருவோத்தூர்,  திருவத்திபுரம் என்று பெயர்பலகையில் காண்கிறது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...