ஐந்தாம் வேதம் J.K. SIVAN
45 பாண்டுவின் ஆசை
பிரதாப் சந்திர ராய் ஒரு அசகாய சூரர் என்பது உங்களுக்கு தெரியாவிட்டால் பரவாயில்லை. எனக்கு தெரிந்துவிட்டதே. அதால் உங்களுக்கு தெரிந்தமாதிரிதானே. நான் தான் எது எனக்கு தெரிந்தாலும் அதை உங்களுக்கு அவ்வப்போது தூக்கத்திலும் எழுப்பி அறிவிக்கிறேனே.
பி.சி. ராய் 1842ல் பர்த்வான் என்ற ஊரில் பிறந்து, கங்கைக் கரையில் பக்தர்கள் உடைக்கும் தேங்காயை சேகரித்து விற்று ஒரு அச்சு இயந்திரம் வாங்கி தானே புத்தங்கங்கள் எழுதி பிரசுரித்து, மகா பாரதம் லக்ஷக்கணக்கான ஸ்லோகங்களை படித்து வங்காள மொழியில் 1869ல் எழுதி அதை பாபு கிஷோரி மோகன் கங்குலியிடம் ஆங்கில மொழிபெயர்க்க சொல்லி 1876ல் புத்தகம் வெளிவந்து, அது பின்னர் எப்படியெல்லாமோ சரித்திரம் படைத்து இன்று உங்களுக்கு என் மூலம் ஐந்தாம் வேதம் குட்டி கதைகளாக வரவேண்டும் என்பது ஸ்ரீ கிருஷ்ணன் சங்கல்பம்.
லக்ஷக்கணக்கான ஸமஸ்க்ரித சுலோகங்களால் ஆன மகா பாரதத்தை படித்துவிட்டு வங்காள மொழியில் எழுதி கங்குலி என்பவர் ஆங்கிலத்தில் எழுதியதை தேர்ந்தெடுத்து நான் பொறுமையுடன் படித்து, அன்னம் போல், பாலை மட்டும் எடுத்து, நான் மாத்திரம் குடிக்காமல் உங்களுக்கும் தருகிறேனே. நீங்கள் சுவைத்து மகிழ்ந்தால் எனக்கும் அது சந்தோஷம் தானே. இதுவரை நான் எழுதிய மகாபாரத கட்டுரைகள் ஆதிபர்வம் என்ற முதல் பாகத்தில் சாரங்க பறவைகள் கதையோடு முடிந்து இனி சபா பர்வம் என்னும் இரண்டாம் பாகத்தில் நுழைகிறோம்.
காண்டவ வன தகனத்திற்கு பிறகு அசுர சிற்பி மயன் அர்ஜுனனை சந்திக்கிறான்.
''அர்ஜுனா, என்னை அக்நியிடமிருந்து காப்பாற்றின உனக்கு என்ன கைம்மாறு செய்வேன்?''
''நண்பர்களாகவே இருப்போம் . அதற்கு ஈடு எதுவும் இல்லை மயா''
''இல்லை நண்பா உனக்கு நான் ஏதாவது செய்தே தீரவேண்டும் என்கிற ஆவல் என்னுள் எழுந்து விட்டது''
''எனக்கு ஒன்றும் தோன்றவில்லை மயா. இதோ பார் என் நண்பன் கிருஷ்ணன் இருக்கிறான். அவனை கேள். அவனுக்கு ஏதாவது நீ செய்தால் எனக்கு அதைக்காட்டிலும் பெரு மகிழ்ச்சி ஒன்றுமில்லை''
கிருஷ்ணன் ஒரு கணம் யோசித்து ''மயா, உன் மனநிலை எனக்கு புரிகிறது. நீ ஒன்று செய். இதோ இந்த காண்டவ வனத்தில் ஒரு அழகான ஒரு கண்ணைப்பறிக்கும் மாளிகை உருவாக்கு. அதில் உன் சகல திறமையும் வெளிப்படவேண்டும். இதுவரை எவரும் காணாத அளவு அதில் உன் கை வண்ணம் நான் பார்க்கவேண்டும். அதை யுதிஷ்டிரனுக்கு நீ பரிசாக கொடு.''
கிருஷ்ணனால் ஊக்குவிக்கப்பட்ட மயன் கிருஷ்ணனின் விருப்பப்படியே ஒரு அழகிய மாளிகையை, ஏன் நகரத்தையே உருவாக்கினான் என்று சொல்லலாம். காண்டவ வனத்தில் கிருஷ்ணன் சில நாள் பாண்டவர்களோடு சேர்ந்து இருந்து தங்கி துவாரகைக்கு புறப்பட்டான்.
கிருஷ்ணன் தேரில் அமர்ந்தான். தாருகன் தேரைச் செலுத்த அனைத்து பாண்டவர்களும் கிருஷ்ணனின் தேர் ஒரு புள்ளியாக மறையும் வரை நன்றிக் கண்ணீரோடு பார்த்துவிட்டு அரண்மனை திரும்பினர்.
மாளிகை கட்டிய மயனும் விடைபெற்றான். அவனை வாழ்த்தி நிறைய பரிசுகள் கொடுத்தார்கள் பாண்டவர்கள். அப்போது மயன்,
நான் கைலாச பர்வதத்துக்கு வடக்கே, மைனாக மலைக்கு செல்கிறேன். அங்கு பிந்து என்கிற ஒரு பெரிய ஏரி உள்ளது. தானவர்கள் அங்கு செய்த யாக பலனாக நிறைய பொருள்கள் உண்டாகி அவற்றை விருஷபர்வன் மாளிகையில் வைத்துள்ளது. அவற்றுடன் வந்து உங்களுக்கு ஒரு பெரிய மாளிகையை உண்டாக்குவேன்.நான் சொன்ன விருஷ பர்வனின் பொருள்களில் நூறாயிரம் கதாயுதங்கள் ஒன்று சேர்த்த கனத்துடன் ஒரு கதை இருக்கிறது. அதை பீமனுக்கும், பெரிய சங்கு ஒன்று உள்ளது. அதற்கு தேவதத்தம் என்று பெயர். வருணன் அளித்தது. அதை யுதிஷ்டிரனுக்கும் கொண்டுவருவேன்.
மயன் அவ்வாறே ஒரு ஆஸ்தான மண்டபத்தையும் அழகாக கட்டி பாண்டவர்களை மகிழ்வித்தான். அரசவையில் யுதிஷ்டிரன் அமர்ந்து இருக்கும்போது ஒருநாள் மகரிஷி நாரதர் வந்தார்.சர்வ ஞானமும் கொண்ட நாராயணனின் ஸ்ரேஷ்ட பக்தரை எப்படி உபசரித்து வரவேற்க வேண்டுமோ ஒடி வந்து எதிர் கொண்டழைத்து யுதிஷ்டிரன் அவரை வணங்கினான். மற்ற பாண்டவர்களும் நாரத மகாரிஷியை வணங்கி கை கட்டி நின்றனர்.
நாரதர் யுதிஷ்டிரனுக்கு ஆசி வழங்கிவிட்டு, பாண்டவர்களை சந்தித்ததில் திருப்தி அடைந்ததை அறிவித்தார்.
யுதிஷ்டிரா , உனக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒரு நல்ல அரசன்,குடி படைகளிடம் அன்பு, தார்மீக குணம், அவர்களுக்கு தக்க பாதுகாப்பு நீதி, அளித்து, அவர்கள் கல்வி, ஒழுக்கம், தெய்வ பக்தி இவற்றை பெறுவதில் உதவுவது அவனது கடமை. நிறைய தான தர்மங்கள் செய்து வருகிறாயா?
'தங்கள் அறிவுரைகளின் படி தான் ஆட்சி செய்துவருகிறேன் மகரிஷி. தாங்கள் திரிலோக சஞ்சாரி யாயிற்றே. இம்மாதிரி ஆட்சி முறை நடத்துகிற ஆலோசனை மண்டபம் கொண்ட மன்னர்களின் அரசவை பற்றி எனக்கு அறிவுரை கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்றான் யுதிஷ்டிரன்.
''சொல்கிறேன் யுதிஷ்டிரா. இந்திரன் சபை கூட இப்படித்தான் இருக்கும். ரிஷிகள், முநீஸ்வரர்கள், திக் பாலகர்கள், அக்னி, வருணன், சோமன் முதலானோர் கூடியது. கந்தர்வர்கள், அப்சரஸ்கள் , வித்யாதரர்கள், எங்கும் காணப் படுவர். யமன் மற்றும், வருணன், குபேரன் ஆகியோர் சபைகளையும் பார்த்திருக்கிறேன். அங்கே ஹரிச்ச்சந்த்ரனையும் பார்த்த ஞாபகம்'' என்கிறார் நாரதர்.
''மகரிஷி எனக்கு ஹரிச்சந்திரன் பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும் ''
''ஹரிச்சந்திரன் ஒரு மகாராஜா. தர்மிஷ்டன். சத்யவான். ஒரு முறை அனைத்து ராஜாக்களையும் அழைத்து ஒரு ராஜசூய யாகம் பண்ணினான். அனைத்து ராஜாக்களும் அவனுமாக நிறைய பொன்னும் பொருளும் பிராமணர்கள் மற்றும் எல்லோருக்கும் அவரவர் எதிர்பார்த்ததிற்கு மேல் ஐந்து மடங்காக வாரி வழங்கினான். இந்திரனுக்கு சமானமாக பெயரும் புகழும் பெற்றான். சொல்ல மறந்துவிட்டேனே? உன் தந்தை பாண்டு வையும் பார்த்தேன். அவர் ஹரிச்சந்திரன் புகழ் அறிந்தவர். அவருடைய ஒரு ஆசை. அவர் மகனான நீ ஹரிச்சந்திரன் போல் ஒரு ராஜசுய யாகம் பண்ணவேண்டுமாம்.யாக பலன் அடைந்து நீ ராஜாதி ராஜனாக புகழ் பெற வேண்டுமாம். உன்னைபார்த்தால் அவர் விருப்பத்தை உன்னிடம் சொல்ல சொன்னார். '' நான் வருகிறேன் அப்பா நீயும் உன் சகோதரர்களும் க்ஷேமமாக இருங்கள் ''
நாரதர் சென்றதும் யுதிஷ்டிரன் தன் சகோதரர்களோடும் மந்திரி பிரதானிகளோடும் ராஜசூய யாகம் நடத்துவது பற்றி ஆலோசித்தான்.கிருஷ்ணனை கேட்காமல் முடிவெடுக்க மாட்டானே? கிருஷ்ணனிடம் செய்தி சொல்லி அபிப்ராயம் பெற ஒரு தூதுவனை அனுப்பினான்.
No comments:
Post a Comment