Sunday, July 15, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்.                                ஜே.கே. சிவன்

                   

48    கிருஷ்ணனுக்கு எதிர்ப்பு


அந்த காலம் பாரத தேசம்  பல நாடுகளாக, குட்டி குட்டி தேசங்களாக இருந்தது. எத்தனையோ ராஜாக்கள், சிலர் நண்பர்கள், பலர் எதிரிகள் என்று.  அவர்கள்  அத்தனைபேரும் ஏகமனதாக ஒப்புக்கொண்டால் தான் ஒரு ராஜா சக்ரவர்த்தியாகி முடியும். இதை தெரிவிப்பது, அறிவிப்பது தான்  ராஜ சூய யாகம். ஆதரவை சிலர் நேரில், சிலர் தூதுவர் மூலம், சிலர் செயதி மூலம், சிலர் போரிட்டு தோற்று ஒப்புக்கொண்டு தெரிவிப்பார்கள்...ஆகவே எல்லோரையும் சந்திக்க அவர்கள் ஆதரவை பெற, எதிர்ப்பை சமாளிக்க, பாண்டவர்கள் ஆளுக்கொரு பக்கம் படைகளோடு சென்றார்கள்.   

திக் விஜயம் சென்ற சகாதேவன் தெற்கே இருந்த நாடுகளின் அரசர்களை சந்தித்தான். அவர்கள் யுதிஷ்டிரனின் ராஜசூய யாகத்திற்கு ஆதரவுடன் தங்களது காணிக்கைகள், கப்பம், ஆகியவற்றை அளித்தனர். எதிர்த்த தந்தவக்ரனை சஹாதேவன் வென்றான். போஜர்கள் யுத்தம் புரிந்து பீஷ்மகன் தோற்றான். கோசலமும் அடி பணிந்தது. நகுலனும் அவ்வாறே சென்ற இடமெல்லாம் வென்று அநேக அரசர்களின் ஆதரவும் திறையும் பெற்று வெற்றியோடு சென்றான்.

மேற்கே பெரும்படையுடன் நகுலன் வரவை அறிந்த யாதவர்களும், வாசுதேவனும் மகிழ்ந்து அவனுக்கு வரவேற்பளித்து யுதிஷ்டிரனுக்கு சிறந்த பரிசுகளை தந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். யவனர்கள் சகர்கள், மற்றும் அநேக மேலை நாடுகளும் யுதிஷ்டிரனுக்கு பணிந்தன. நகுலன் திரட்டிய செல்வத்தை 10000 ஒட்டகங்கள் சுமந்து வந்தன என்றால் யோசித்துக் கொள்ளவும். எல்லோரும் இந்த்ரப்ரஸ்தம் திரும்பினார்கள்.

இனி ராஜசூயிக பர்வம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா.

கிருஷ்ணன் இந்த்ரப்ரஸ்தத்தில் யுதிஷ்டிரனின் ராஜசூய யாகத்தில் கலந்து கொள்ள தேரில் வந்தான். பாண்டவர்கள் சகல மரியாதைகளோடு வரவேற்றார்கள். யுதிஷ்டிரன் சகோதரர்கள் புடைசூழ வாசலில் நின்று அணைத்து வரவேற்றான்.

''கிருஷ்ணா,  நீ தான் இந்த ராஜசூய யாகத்தை பொறுப்பேற்று நடத்திவைக்க வேண்டும்'' என்று வணங்கினான். அர்ஜுனன் வரும் அனைவருக்கும் உணவு ஏற்பாடுகள் செய்ய நியமிக்கப் பட்டான். பீமன் தேவையான பொருள்களை சேகரித்தான். சஹாதேவன் அனைத்து அரசர்களுக்கும் அழைப்பு விடுக்க, நகுலன் சகல பிராமணர்கள், மற்ற வர்ணத்தாரையும் வரவழைக்க யாகம் தௌம்யர், போன்ற ரிஷிகளால் தயாராகியது.

வேத விற்பன்னர்கள் நாலா திசையிலிருந்து வந்தனர். வாத்யங்கள் முழங்கின. ராஜ குலத்தினர் விருந்தினர்கள் அழைப்பேற்று கடலென திரண்டனர். நகுலன் தானே ஹஸ்தினாபுரம் சென்று பீஷ்மர், துரோணர் விதுரர், கிருபர், திருதராஷ்டிரன் மற்றும் ஏனையோரையும் அழைத்தான். 

துரியோதனன் சகோதரர்கள் சகுனி புடை சூழ வந்தான். சல்லியன், சிசுபாலன், ஜயத்ரதன், கர்ணன் அனைவருமே அங்கு இருந்தனர். 

கிருஷ்ணன் வேத பிராமணர்களின் பாதங்களை அலம்பிக்கொண்டு இருந்தான்.  வேத வியாசர் இதை எழுதுகிறார் நான் அல்ல.  இதை படிக்கும்போது எந்த அளவிற்கு பகவான் பக்தர்களையும் வேதத்தையும் மதிப்பவன் என்று புரிபடும் .

இந்த்ரப்ரஸ்தம் ஜே ஜே என்று ராஜாக்களாலும், ரிஷிகளாலும், பிராமணர்களாலும் வியாபாரிகளாலும் வாகனாதிகளாலும் நிரம்பி வழிந்தது. ரிஷிகளிடையே நாரதரும் காணப்பட்டார். பிரம்மாவின் சபையில் நாரதருக்கு தான் முன்பு ஒருமுறை கேட்டது 
நினைவுக்கு வந்தது. 

''ஹரி  பூமியில் துவாபர யுகத்தில் அவதாரம் செய்து மற்ற சில தேவர்களும் பூலகத்தில் அவரோடு மனிதர்களாக பிறந்து வதம் செய்யவேண்டியவர்களை அழிக்கப்போகிறார் என்று''   ஒஹோ.  நான்  கேள்விப்பட்டது   துவங்கிவிட்டதோ? இந்த அவதாரம் புது மாதிரி. இதில் ஒருவரை ஒருவர் தமக்குள்ளேயே எதிர்த்து எல்லோருமே அழியப்போகிறார்கள் என அறிந்தேனே? எல்லாம் அந்த பரமனின் செயல்.'' நாரதர் ஹரே நாராயணா'' என்கிறார் 

பீஷ்மர் எழுந்து கர்ஜித்தார்.

''யுதிஷ்டிரா,    இந்த மாபெரும் சபையில் வந்திருப்போரில் எவருக்கு தகுதி அதிக முள்ளதோ அவருக்கு முதலில் அர்க்கியம் கொடுத்து நீ  கெளரவிக்கவேண்டும்' 

''தாத்தா, இந்த மூவுலகிலும் உங்களுக்கீடானவர் வேறு ஒருவர் உண்டா? முதல் அர்க்கியம் தங்களுக்கே என்பது தான்  ஞாயம். என் மனதில்  அப்படித்தான் எண்ணம்''   என்றான் யுதிஷ்டிரன்.

''என்ன பேசுகிறாய் நீ,   யுதிஷ்டிரா? விருஷ்ணி குலத்தோன்றல் மாவீரன், சர்வஞன், காருண்ய மூர்த்தி கிருஷ்ணனை அருகில் வைத்துக்கொண்டா இப்படி சொல்வாய்? அவனே முதல் அர்க்கியம் பெற்றுக்கொள்ள எல்லா யோக்யதாம்சமும் உடையவன்''

பாண்டவர்கள் பீஷ்மர் அறிவுரைப்படி ஏற்று சகாதேவன் கிருஷ்ணனுக்கு முதல் அர்க்கியம் வழங்கி கௌரவித்தான்.

சேடி தேசத்து அரசன் சிசுபாலன் கிருஷ்ணனின் உறவினன் என்றாலும் கிருஷ்ணனை எப்போதும் வெறுப்பவன். இந்த முடிவு அவனை கோபமூட்டியது. பீஷ்மரையும் யுதிஷ்டிரனையும் எதிர்த்தது மன்றி மேலும் கிருஷ்ணனையும் அவதூறாகப் பேசினான்.

''யுதிஷ்டிரா,  நீ சிறுவன் ஒன்றுமறியாமல் ஏதோ தவறு செய்துவிட்டாய். இந்த கிழவனும் சிந்திக்கத் தெரியாமல் தவறான நபரை உனக்கு அடையாளம் காட்டி விட்டான். கிருஷ்ணன் இந்த மரியாதைக்கு ஏற்ற அரசனா? இந்த மாபெரும் சபையில் எண்ணற்ற சிறந்த அரசர்கள் இருக்கையில் இந்த கிருஷ்ணன் எந்த விதத்தில் உயர்ந்தவன். அரசனே இல்லாத அவனுக்கு முதல் கௌரவமா? இதோ அவன் தந்தை வசுதேவன் இருக்கிறானே அவனை கெளரவித்தாலும் வயதில் மூத்தவன் ஒரு அரசன் என்று கொஞ்சமாவது ஒப்புக்கொள்ளலாம். பீஷ்மன், துரோணன், கிருபன், அஸ்வத்தாமன், துருபதன். எல்லோரையும் விட்டாய். ராஜாதி ராஜன் துரியோதன் இருக்கிறான். அதி தீர கர்ணன் இருக்கிறான். கிருஷ்ணனை கௌரவிப்பதன் மூலம் எல்லா அரசர்களையும் இங்கு  நீ வேண்டுமென்றே, கேவலப்படுத்தி விட்டாய். கிருஷ்ணனுக்கு அந்தஸ்தைக் கொடுத்து எங்களை இழிவு செய்துவிட்டாய் . ஜராசந்தனை நேர்மையற்ற முறையில் கொல்ல காரணமானவன் கிருஷ்ணன். தவறான செய்கை செய்து விட்டாய் யுதிஷ்டிரா''.

''சரி அது  போகட்டும்.  இதோ  கிருஷ்ணா உன்னையே கேட்கிறேன். நீ எப்படி இதை ஏற்றுக்கொண்டாய். நீ அரசனா? எந்த விதத்தில் முதன்மையானவன்? ''

சிசுபாலன் எல்லோரையும் சீண்டி விட்டு யாகத்தை நிறுத்த முயன்றான்.    அதிர்ச்சி அடைந்த யுதிஷ்டிரன் சேடி தேச அரசன் சிசுபாலனை நிறுத்தினான் .

'நீங்கள் செய்தது பெரும் பாபம். பீஷமரை அவமதிப்பது தவறு. இது அவர் முடிவு. எல்லா அரசர்களும் மௌனமாக ஏற்றுக்கொண்ட போது நீங்கள் ஒருவர் இப்படி கூறுவது தர்மமாகாது. உங்களுக்கு கிருஷ்ணனை தெரியவில்லை. புரியவில்லை.  பீஷ்மர்  சகலமும் அறிந்தவர். ஞானி.  மூன்று உலகமும் வணங்கும் கிருஷ்ணனை ஏனோ நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. எல்லோரையும் பாரபட்சமின்றி மதிப்பிட்டு கிருஷ்ணனே முதல் மரியாதைக்கு உகந்தவன் என்று ஏகோபித்து முடிவாகிவிட்டபோது  நீங்கள் மட்டும் தனி ஒருவனாக கிருஷ்ணனை எதிர்ப்பது சரியாகாது. தர்ம ஞாயம் இல்லாதது. '' யுதிஷ்டிரன் கோபமின்றி இவரு சிசுபாலனுக்கு பதிலுரைத்தான்.

பீஷ்மன் குறுக்கிட்டு ''சிசுபாலா, எதோ சிறுபிள்ளைத்தனமாக பேசிவிட்டாய் .எங்கும் எப்போதும் கிருஷ்ணனை இழித்து பேசும் வழக்கம் கொண்டவன் நீ. அதை இங்கும் காட்டிவிட்டாய் . உலகறிந்த எல்லோரும் உணரும் உண்மையை மனசாட்சிக்கு விரோதமாக மாற்றிப் பேசுவதை இனியாவது விடு''என்றார்.

''கிருஷ்ணனை நான் அறிவேன் என்று எழுந்து சொன்ன நாரதர், கிருஷ்ணனை உண்மையில் அறியாதார் இருந்தும் இறந்தவராவார்'' என்றார்.

இதை தொடர்ந்து சஹாதேவன் கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை கொடுத்து வணங்கும் சடங்கை முடித்தான். சிசுபாலன் இதை ஏற்கவில்லை. அவன் கோபம் அதிகம் கொண்டு ''என்னால் இந்த கிருஷ்ணன் கௌரவிக்கப் படுவதை ஏற்க முடியாது இனியும் பேசாமல் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. எழுந்திருங்கள் எல்லோரும். இந்த கிருஷ்ணனையும் அவனை மதிக்கும் பாண்டவர்களையும் இங்கேயே யுத்தத்தில் எதிர்ப்போம். ராஜசூய யாகத்தை தடுப்போம்.'' என்றான்.

சிசுபாலனின் நண்பர்கள் கூட்டம் அதை ஆமோதிக்க நிலைமை கலவரம் அடையும் போல் இருப்பதை கிருஷ்ணன் கவனித்தான்.

"தாத்தா இந்த சிசுபாலன் தனது சகாக்களுடன் இந்த யாகத்தை தடை செய்யும் எண்ணத்தோடு தான் வந்துள்ளான்.மேற்கொண்டு என்ன செய்வது என்று பீஷ்மரைக் கேட்டான் யுதிஷ்டிரன்.

''யுதிஷ்டிரா அமைதி கொள். சிங்கத்தை ஒரு நாய் கூட்டம் வெல்லமுடியாது. கிருஷ்ணன் வ்ரிஷ்ணி குல சிம்மம். நாய்கள் குலைத்து என்ன செய்யமுடியும்? என்றார் பீஷ்மர்.

''ஏ அறிவு மங்கிய கிழமே, என்ன தைர்யம் இருந்தால் இங்குள்ள அரசர்களை அவமதித்து பேசுவாய். வெட்கமாயில்லை உனக்கு. குருடனுக்கு குருடன் வழிகாட்டுவது போல் இந்த கௌரவ வம்சத்துக்கு நீ வழிகாட்டி. ஏனோ கிருஷ்ணனை உயர்த்தி போற்றுகிறாய். உனது நாவை நூறு கூறாக பிளக்க வேண்டும். ஒரு மாடு கன்று மேய்ப்பவனை அரசர்கள் மத்தியில் முதல்வன் என்கிறாய். முதுமையினால் மதி மங்கி விட்டவனே.
நீ அம்பைக்கு செய்த துரோகம் உனக்கு மறந்து போயிருக்கலாம். உலகம் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறது. '' என்றான் சிசுபாலன். மேலும் தொடர்ந்தான்:

ஜராசந்தன் கிருஷ்ணனோடு போரிட ஏன் விரும்பவில்லை. இவன் க்ஷத்ரியன் இல்லை. இணையற்றவன் என்று தானே. நீ இந்த பாண்டவ ஈனக் கூட்டத்துக்கு பிதாமகன். நேர்மை நீதி பற்றி பேசுகிறாய்.

பீமனால் பொறுக்க முடியவில்லை. கோபம் தலைக்கேறியது. பற்களை நறநற என்று கடித்தான். பீஷ்மர் இதை கவனித்து அவனை அடக்கினார்.

அப்போது தான் பீஷ்மர் ஒரு ரகசியத்தைப்போட்டு  உடைத்தார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...