நாலணா காசு -- J.K. SIVAN
நமது நாட்டை வெள்ளைக்காரர்களோ முஸ்லிம்களோ பல காலம் ஆண்டார்கள் என்றால் அதற்கு காரணம் நாம் பள்ளிக்கூடத்தில் படித்த ஒரு கிழவன் கதை தான்.
மரண படுக்கையில் இருந்த ஒரு கிழவன் அவனது ஐந்து ஆறு பிள்ளைகளை ஒன்றாக கூப்பிட்டு அவர்களிடம் ஒரு கட்டு சுள்ளிகளை கொடுத்து உடைக்க சொன்னான். எவராலும் சுள்ளிக்கட்டை ரெண்டாக உடைக்கமுடியவில்லை. பிறகு கட்டை அவிழ்த்து ஒவ்வொரு சுள்ளியாகி கொடுத்தவுடன் எல்லோரும் உடைத்தார்கள். நீதி: ஒற்றுமையாக இருந்தால் எவரும் நம்மை வெல்ல முடியாது.
அநேக சக்திவாய்ந்த ராஜாக்கள் தேர்ந்த படைகளோடு இருந்தபோதிலும் ஒற்றுமை ஒருவரோடு ஒருவர் எதிரிகளாக வாழ்ந்ததால் வெளியே இருந்த வந்தவனுக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் வெல்வது சுலபமாகியது.
வடக்கே எப்படியோ, தெற்கே அநேக ராஜாக்கள் தத்தம் ராஜ்யத்தை பொறுப்போடு தர்மத் தோடு ஆண்டு தெய்வபக்தி மிக்கவர்களாக திகழ்ந்தார்கள்.
அப்போதெல்லாம் காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் கடல் மார்க்கமாக படகு வசதி உண்டு. ராமேஸ்வரம் ராமநாதபுரம் ராஜ்யத்தின் பகுதி. அதன் ராஜா விஜயரகுநாத சேதுபதி. ராமேஸ்வரம் சேது விற்கும் அதிகாரம் கொண்ட தலைவன் என்று உணர்த்த சேதுபதி என்ற பட்டப்பெயர் ராமநாதபுரம் ராஜாக்களுக்கு உண்டு.
சேதுபதி வம்ச ராஜ ரகுநாத கிழவன். பேரே அது தான். அவன் ரெண்டாவது மகன் விஜயரகுநாத சேதுபதி.(1710-1720) அடுத்த ராஜா.
வெள்ளைக்காரர்கள் தெற்கே எங்கும் ஊடுருவி பரவிக்கொண்டே வந்த காலம். ரெண்டாக பிரிந்து ஒரு சிலர் நாட்டை பிடித்து தங்கள் ராஜ்யத்தை விஸ்தரிக்க, மற்றவர்கள் மக்களிடையே ஊடுருவி தமது கிருத்துவ மதத்தை இங்கே பரப்பினார்கள். வடுகநாத தேவன் கிழவனின் சக்திவாய்ந்த மூத்த மகன். அவன் தனது அதிகாரத்தை தம்பி விஜயரகுநாதனுக்கு கொடுத்தான்.
விஜயரகுநாத சேதுபதிக்கு ரெண்டு பெண்கள். சிவகாமி நாச்சியார், ராஜேஸ்வரி நாச்சியார் என்று. ரெண்டு பெண்களுமே தண்டபாணி தேவர் என்ற ஒருவனை காதலித்து ராஜா அவர்களுக்கு அவனை மணமுடித்தார். தனது ராஜ்யத்தில் ஒரு பகுதியை அவனுக்கு அளித்து ராஜாவாக்கினார் .
நான் மேலே சொன்னேனே ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு படகு சவாரி என்று . அதற்கு காசு வாங்காமலே பக்தர்களை ஏற்றி சொல்ல சேதுபதி ஒரு ஆணை பிறப்பித்திருந்தார். இப்போது அந்த ராமேஸ்வரம் பகுதி தண்டபாணி தேவர் ஆளுமைக்கு வந்ததால் அவன் யோசித்து, ''எதற்கு இவர்களை வெறுமனே ஏற்றிக்கொண்டு செல்லவேண்டும். தலா நாலு அணா கொடுத்து படகில் ஏறட்டும். அந்த பணத்தை ராமேஸ்வரம் கோவில் அபிவிருத்திக்கு செலவு செய்யலாம் என்று ஆணையை மாற்றினான். நாலு அணாவா? ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு படகில் செல்ல? ரொம்ப ஜாஸ்தி. நம்மால் கொடுக்க முடியாதே என்று பலர் படகில் ஏறி காசி போவதை தவிர்த்தனர். ராஜா நீங்கள் இலவசமாக படகு சவாரி அனுமதித்தீர்கள் அங்கே புதிய ராஜா நாலணா கேட்கிறாரே எங்கே போவது?'' என்று ஒரு யாத்ரீகன் சேதுபதியிடம் முறையிட்டுவிட்டான். கோபம் தீயாகி சேதுபதி தண்டபாணி தேவனை கைது செய்து விசாரித்து அது உண்மை என அறிந்தார்.
''தண்டபாணி தேவா, உன்னை நம்பி ரெண்டு பொண்ணை கட்டிக்கொடுத்தேன். நீ இப்பிடி செஞ்சுட்டியே. ராஜ துரோகம் செய்தா கூட உன்னை போனால் போவுது என்று விட்டிருப்பேன். நீ சிவனுக்கு துரோகம் செஞ்சிட்டியே. பெரிய பழியை என் மேல் சுமத்திட்டியே. உனக்கு மன்னிப்பே கிடையாது. உடனே சிரச்சேதம் செய்ய, மரண தண்டனை விதிக்கிறேன்''
விஷயம் காற்றில் பரவி ரெண்டு பெண்களும் சேதுபதியிடம் மன்னிப்பு கேட்டு உயிர்ப்பிச்சை பெற பயணித்தார்கள். வழியிலேயே தண்டனை நிறைவேற்றப்பட்டு தண்டபாணி மரணமடைந்த செய்தி கேட்டு இரு மனைவிகளும் தீக்குளிக்க முடிவெடுத்தனர்.
அக்கா சிவகாமி நாச்சியார் தீக்குளித்த இடம் அக்காமடம் . தங்கை ராஜலக்ஷ்மி நாச்சியார் தீக்குளித்த இடம் தங்கச்சி மடம்
ராமேஸ்வரம் போகும்போதெல்லாம் இந்த ரெண்டு சகோதரிகள் கணவன் இறந்தான் எனக் கேட்டு உயிர்விட்ட பண்பும், அவர்களது அன்புக் கணவன் தண்டபாணி தேவன் ராமேஸ்வரம் ஆலய மேம்பாட்டுக்காக விதித்த நாலணா வரி, சிவ பக்தர்களை கஷ்டப்படுத்தக்கூடாது என்றும் மகள்கள் விதவையாவார்கள் என்று தெரிந்தும் மருமகனை தண்டித்த தர்ம ராஜா சேதுபதி ஞாபகமும் வரட்டும்.
நல்ல மனிதர்கள் வாழ்ந்த, இன்றும் சிலர் வாழும், நாடு நமது தேசம்.
No comments:
Post a Comment