அறுபத்து மூவர் -- J.K. SIVAN
அரிவாட்டாய நாயனார்
மாவடு மஹாதேவனுக்கே
நமக்கு ஸ்திரபுத்தி என்பதே கிடையாது. எண்ணங்கள் அலை அலையாக நம்மையே ஆட்டிப் படைக்கின்றன. இதை அறிந்து தான் நமது முன்னோர்கள் தென்னகத்தில் திருதண்டலை ச்சேரி எனும் கிராமத்தில் ஒரு ஈஸ்வரனை வழிபட்டிருக்கிறார்கள். அங்கே சிவனின் பெயர் :ஸ்திரபுத்தீஸ்வரர், அழகிய தமிழில் நீள் நெறி நாதர். அம்பாள் :ஞானாம்பிகை.ஞானம் இருந்தால் தானே ஸ்திரபுத்தி பலிக்கும். ஆலய ஸ்தல விருக்ஷம் :குருந்தை. தீர்த்தம் :ஓமக தீர்த்தம் (ஞானசித்தி விநாயகர், கோயிலின் எதிரில் நீராடல் சிறப்புடையது). இங்கு ஏற்கனவே வழிபட்டோர்:வியாக்ரபாதர், பதஞ்சலி, சம்பந்தர் ஆகியோர்.
கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில். சிதிலமடைந்து பிற்காலத்தில் தேவகோட்டை ராம. அருஅரு. இராமநாதன் செட்டியார் அவர்கள் இப்போதுள்ள கற்கோயிலைக் கட்டியுள்ளார். கோயில் கற்றளி; விமானங்கள் சுதை வேலைபாடுடையவை.
'தண்டலைச்சேரி ' என்று பெயருள்ள இந்த க்ஷேத்திரம் தமிழ் நாடு திருத்துறைப்பூண்டியிலிருந்து 3-கி. மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பேருந்து வழியில் வருவோர் கோயில் வாயிலில் இறங்கலாம். இத்தலத்திற்கு பக்கத்தில் 'மணலி ' புகைவண்டி நிலையம் உள்ளது.
இந்த ஊரின் முக்கிய சிறப்பு இதன் அருகே இன்னொரு கிராமம் கணமங்கலம்'. 'கணமங்கலத்திடல்' என்றும், 'கண்ணந்தங்குடி' என்றும் அதற்கு பெயர்கள் உண்டு. கணமங்கலத்தில் திருக்கோயில் இல்லை என்பதால் ஒரு சிவ பக்தர் தினந்தோறும் கணமங்கலத்திலிருந்து தண்டலைநீள்நெறித் திருக்கோயிலுக்கு பொடிநடையாக வயல் வெளியில் நடந்து செல்வது வழக்கம் .
அடுத்த கேள்வி, யார் அந்த சிவபக்தர்?
தாயனார் என்று ஒரு வேளாளர். உழைத்து உயர்ந்த செல்வந்தர். கணமங்கலத்தில் இல்லறத்தை சிவன்பால் பக்தியோடு, அடியார்க்கு தம்மாலான சேவை செயது வாழ்ந்தவர். பக்கத்தில் இருந்த தண்டலைச்சேரி நீள் நெறி ஆலயத்தின் ஸ்திரபுத்தி நாதர் பரமசிவனுக்குச் செந்நெல்லரிசியும் செங்கீரையும் மாவடுவும் தினந்தோறுங் கொண்டுபோய், நைவேத்யம் செய்துவிட்டு வந்த பிறகு தான் உண்பார்.
காலச்சக்கரத்தில் மேலே உள்ளவர்கள் கீழேயும் கீழ் தட்டுக்காரர்கள் மேலே உயர்வதும் வழக்கம் தானே. செல்வம் எல்லாம் கரைந்து தாயனார் ஏழையானார் . அதற்காக அவர் மனம் சோரவில்லை. தான் எத்தனையோ பேருக்கு வயலில் வேலை கொடுத்தவர் கூலிக்கு நெல் அறுப்பவராகி, தான் கூலி யாகப் பெற்ற செந்நெலெல்லாம் சுவாமிக்குத் திருவமுது செய்வித்து, கார் நெல்லைக்கொண்டு ஜீவனம் நடத்தினார்.
இவரது பக்தியை மெச்சி மகிழ்ந்த பரமேஸ்வரன் இவரைப்பற்றி உலகறியவேண்டும் என சங்கல்பித்தான்.
ஆகவே, ஆச்சர்யமாக கணமங்கலத்தில் எல்லா வயல்களிலும் நெல்லெல்லாம் செந்நெல்லாகிவிட்டது.
தாயனாருக்கு பரம சந்தோஷம். ''அடடா எங்கும் என் அப்பன் சிவனுக்கு நான் அர்ப்பணிக்கும் செந்நெல்லாகவே விளைகிறதே'' என மகிழ்ந்து, நாள்தோறும் வயல்களுக்குப் போய் நெல்லறுத்து, கூலியில் செந்நெல் பெற்று, சுவாமிக்கு ஆராதித்தார்.
கணமங்கலத்தில் தாயனார் வீட்டு நிலத்திலும் செந்நெல் விளைந்ததால் அதை இறைவனுக்கே அளித்து விட்டு அவர் கார் அரிசி வாங்கி உண்டு வாழ்ந்தவருக்கு எங்கும் கார் அரிசியும் கிடைக்கவில்லை. எல்லாமே இறைவனுக்கான செந்நெல். எனவே அவர் மனைவி கீரைகளை சமைத்து அதில் உயிர் வாழ்ந்தார்.
சிவனின் சோதனை தொடர்ந்தது. தோட்டத்தில் அனைத்து கீரைகளும் வாடின . அவர் உண்டு வாழ்ந்த கீரையும் கிடைக்கவில்லையே. கீரை தான் வாடினதே தவிர தாயனார் மனம் வாடவில்லை.
வாயு பக்ஷணம், நீராகாரம் இதில் உயிர் வாழ்ந்தார். பசியோ தாக்கமோ அவருக்கு ஒரு பொருட்டாக இல்லை. சரியான ஆகாரம் இன்றி உடல் வற்றியது. நடை தளர்ந்தது கண் மங்கியது. அப்போதும் சிவகைங்கர்யம் விடாமல் நடந்தது.
ஒருநாள் செந்நெல், கீரைகள், மாவடு எல்லாம் எடுத்துக்கொண்டு மெதுவாக முடியாமல் ஸ்திரபுத்தீஸ்வரர் கோவிலுக்கு நடந்தார். மனைவி அவரைப் பிடித்து நடத்திச் சென்றாள். கால் தள்ளாடியது.
பசி மயக்கத்தில் கீழே விழுந்தார் தாயனார் . கையில் கொண்டு சென்ற செந்நெல், கீரை, மாவடு எல்லாம் கீழே சேற்றில் விழுந்து சிதறியது.
''பரம சிவா, உனக்கு உணவு இல்லாமல் மஹா பாவி நான் இப்படி செய்துவிட்டேனே'' என்று கதறினார் தாயனார் .
ஒரு முடிவுக்கு வந்தார். இடுப்பில் கதிர் அறுக்கும் கூறிய அரிவாள் இருந்தது நினைவுக்கு வந்து அதை எடுத்து தனது கழுத்தை அரிந்து கொள்ள முயற்சித்தார்.
ஒரு நீண்ட கரம் தோன்றி தாயனார் கையை தடுத்தது. மாவடு ''கடக் கடக்'' என்று கடிபடும் சப்தம் கேட்டது. குனித்தபுருவமும் குவளை செவ்வாயும், பவளம் போல் மேனியில் பால் வெந்நீரும், பணித்த சதையுமாக பரமேஸ்வரன் அவர் முன் தோன்றினான்.
ஆனந்தத்தில் தன்னை மறந்தார் தாயனார் . அவரை அவர் மனைவியோடு, தன்னருகே கைலாசத்தில் சிவன் அழைத்துக் கொண்டான்.
தாயனார் அறுபத்து மூன்று சிவனடியார்களின், நாயன்மார்களில் ஒருவர். அரிவாளால் தனது கழுத்தை அறுத்து உயிர்த்தியாகம் செய்ய துணிந்ததால் ''அரிவாள் தாயனார்'' என்று பெயர் அது தமிழில் அரிவாட்டாயனார் என்று எழுதப்படுகிறது.
சிவன் தாயனாருக்கு காட்சி கொடுத்த கணமங்கலம் ஒரு முக்திஸ்தலம். (கணமங்கலத்திற்கும்
தண்டலைநீள்நெறிக்கும் இடையில் உள்ள வயல் வெளியில் தான் ஸ்திரபுத்தீஸ்வரர் நாயனாருக்குக் காட்சிக் கொடுத்தருளினார்.
கணமங்கலத்தில் (கண்ணத்தங்குடி) உள்ள ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் அரிவாட்டாய நாயனாரின் சமாதி உள்ளது. அதற்கான கல்வெட்டு ஒன்றும் அங்கே உள்ளது.
விநாயகரை வணங்கி உட்செல்லும்போது, மேற்புறத்தில் இருமருங்கும் அரிவாட்டாய நாயனார் - அவர் மனைவி அரிசியும் மாவடுவும் கொட்டுவது இறைவனின் திருக்கரம் வெளிப்பட்டு நாயனாரைத் தடுப்பது, நாயனாருக்கும் அவர்தம் மனைவியாருக்கும் இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தருவது முதலியவை சிற்பங்களாக கல்லில் வடிக்கப்பட்டுள்ளது.
அரிவாட்டாய நாயனார் குருபூசை தை மாதம் திருவாதிரை அன்று அறுப்புத் திருவிழாவாகப் பெரிய விழாவாக முறைப்படி நடத்தப்பெறுகிறது.
சிவனின் பூரணஅனுக்ரஹத்தால் அன்பர்களின் பெரு முயற்சியால் கண்ணத்தங்குடியில் (2009) அரிவாட்டாய நாயனாருக்குத் திருவுருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
தாவில்கண மங்கலத்துள் வேளான் டொன்மைத் தாயனார் நாயனார் தமக்கே செந்நெற்றூவரிசி யெனவிளைவ தவையே யாகத் துறந்துணவு வடுவரிசி துளங்கு கீரை
யாவினினைந் துடன் கொணர்வார் கமரிற் சிந்த வழிந்தரிவாள் கொண்டூட்டி யரியா முன்னே மாவடுவி னொலியுமரன் கரமுந் தோன்றி வாள்விலக்கி யமரர்தொழ வைத்த வன்றே.
No comments:
Post a Comment