Friday, July 27, 2018

DHEEKSHITHAR



 ''சிவே   பாஹி...!''   -  J.K. SIVAN 
இன்றைக்கு  ஏறக்குறைய  இரு நூற்றைம்பது வருஷத்துக்கு முன்பு  ஒரு அற்புத  ஸ்ரீ வித்யா உபாஸக கர்நாட சங்கீத வீணா  வித்வான்  சகல சாஸ்திரங்களும் அறிந்த ஞானி,  அத்வைத  வேதாந்தி  நூற்றுக்கணக்கான கீர்த்தனைகளை நமக்கு தந்தவர் ஒருவர் பெயர் சொல்ல முடியுமா?  முடியும்.  ஒருவர் தான் அவர்.  ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர்.  புரந்தரதாசர், ஜெயதேவர், தியாகராஜர், பத்ராசல ராமதாஸ், அன்னமாச்சார்யார்  வரிசையில் தீக்ஷிதர் பிரதான இடம் வகிப்பவர்.

ராமஸ்வாமி தீக்ஷிதர், சுப்பம்மா தம்பதிகளுக்கு புத்ர பாக்யம் வேண்டும் என்று ஸ்ரீ வைத்தீஸ்வரன் கோவிலில் சென்று வேண்டி விரதமிருந்து பிறந்த குழந்தைக்கு  அந்த முருகன் பெயரை முத்துக்குமாரசுவாமி என்று  வைத்து வளர்த்தனர். திருவாரூரில் பிறந்தவர். 

எல்லா  பிள்ளைகளையும் போல சமஸ்க்ரிதம்,  வேதம் கற்றார். அப்பா  ராமஸ்வாமி தீக்ஷிதர் சங்கீதம் கற்பித்தார். இளம் வயதில் சிதம்பர நாத யோகி என்பவரோடு வடநாடு  யாத்திரைகள் சென்று அவரிடம்  வேதாந்தம், சங்கீதம் ஆகியவைகளையும்  கற்றார். 

காசியில்  இருக்கும்போது  யோகி   ''முத்துசாமி இந்தா இனி இது உனக்கு. இதில் வாசி'' என்று ஒரு வீணையை கொடுத்தவர்  விரைவில் மறைந்தார்.  காசி  வாரணாசி ஹனுமான் காட்  எனும் இடத்தில் சிதம்பரநாத யோகி சமாதி இன்னும் இருக்கிறது.
வீணை பயின்று வித்வானானார்.

ஒருமுறை   குருவின் ஆணைப்படி  திருத்தணி  முருகன் தரிசனத்துக்கு சென்றார்.  தியானத்தில் இருக்கும்போது ஒரு  வயதான கிழவர் வந்தார்.  

''அப்பனே  உன் வாயை திற''  . அந்த முதியவர் குரலில் ஒரு  சொல்லொணா  சக்தி இருந்தது.  இயந்திரம் போல் முத்துசாமி வாயை திறந்தார்.  

''இதை சாப்பிடு''    கிழவர்  முத்துசாமியின் திறந்த வாயில் ஒரு கற்கண்டை திணித்தார்.  அடுத்த கணம் முதியவர் நின்ற இடத்தில் திருத்தணி முருகன் நின்றான்.  முதல்  கீர்த்தனை  '' ஸ்ரீ  நாதாதி  குருகுஹோ''  என்ற மாயாமாளவ கௌள  ராகத்தில் அங்கே பிறந்தது.  அங்கிருந்து  கஞ்சி, திருவண்ணாமலை, சிதம்பரம், திருப்பதி, காளஹஸ்தி எல்லாம் சென்று திருவாரூர் திரும்பினார். 

தீக்ஷிதர்  ஒரு சிறந்த ஸ்ரீ வித்யா உபாசகர். ஸ்ரீவித்யாவின் மேல்  நாற்பது  கிருதிகள் பண்ணி இருக்கிறார். கமலாம்பா நவாவரண கிருதிகள்,  நீலோத்பலாம்பா க்ரிதிகள்,  அபயாம்பா கிருதிகள், குரு கிருதிகள் என்று அவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 
எனக்கு விதேக முக்தியை  கொடு அம்மா என்று நாயகி ராகத்தில், ''மமக விதேஹ முக்தி சதனம்'' அருமையான ஒரு க்ரிதி. 
அம்பாள் அருளினாள் .  ஜீவன்முக்தராகி விட்டார்.   ஜீவன் முக்தன் உலகத்தில் வாழ்ந்தாலும் உலகத்தோடு ஒட்டாதவன்.
ஸ்ரீவித்யா உபாஸக ஜீவன்முக்தன்  'ஸ்வ ஸ்வரூப பிராப்தி''  எனும்  ஞானம் பெற்று  அம்பாளோடு ஐக்யமானவன்.




தீக்ஷிதர்  வீணை வித்வான். சங்கீதமும் பாடுபவர்.  கர்நாடக சங்கீத  லக்ஷிய  லக்ஷணங்கள் கற்றவர். வேங்கட மஹியின்  மேள கர்த்தா ராக கிருதிகளை கற்று தேர்ந்தவர். காசியில் ஏழு வருஷம். வடக்கத்திய  த்ருபத சங்கீதம் கற்றவர். வெள்ளைக்காரர்களின் மேலை நாட்டு சங்கீதமும் அறிந்தவர். அவருடைய கீர்த்தனைகள் சோபிக்க இதெல்லாமும் காரணம்.
சமஸ்க்ரித நிபுணர்.   சப்த அலங்காரங்களில் கவனம். வாசகங்களை பக்தி பூர்வமாக  அற்புதமாக கோர்த்து மிளிரச் செய்தவர்.
இதைத் தவிர  ஜோதிஷ,  ஆயுர்வேத, சில்ப, ஆகம  சாஸ்திரங்கள் அறிந்தவர்.  உலக பிடிப்பு  அணுகாமல் யாத்ரீகனாக பல ஆலயங்கள் சென்று  அநேக  கிருதிகள் இயற்றியவர்.  அத்வைதி. வேதாந்தி. தந்த்ர யந்த்ர பூஜைகளில் நாட்டம் கொண்டவர்.
இப்படிப்பட்ட ஒரு கவிஞரை காணமுடியுமா?  தீக்ஷிதர் கீர்த்தனைகள் காலத்தால் அழியாததற்கு இதெல்லாமும் காரணம். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்.

தீக்ஷிதரின்  479 கீர்த்தனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 193 ராகங்கள் அதில் உள்ளன. 74   ஆலயங்கள் சென்று  150க்கும் மேற்பட்ட  தெய்வங்கள் மீது  பாடியவர். தேவி உபாசகர் அல்லவா  175க்கு மேல்  அம்பாள் மேல் கீர்த்தனைகள். அவரது கீர்த்தனைகளில்  குருகுஹ  என்று வருவது அவரது முத்ரை .  (என் இதய குகையில் வசிக்கும் கார்த்திகேயா)  என முருகன் மேல் ''குரு குஹ '' என்று வரும். 

தீக்ஷிதரின் அப்பா  ராமஸ்வாமி தீக்ஷிதர்  ஒரு பெரிய  ராகமாலிகா கீர்த்தனை இயற்றியவர். 108 ராகங்கள்!!  விஸ்தாரமாக பாடினால் ரெண்டுநாள் மூன்று நாள் படுத்துக்கொண்டு நடுவில் போய் சாப்பிட்டுவிட்டு வந்து கூட  கேட்கலாமோ!

தீக்ஷிதரின்  ஆறு சரணங்கள் கொண்ட அற்புத கீர்த்தனை  ''பூர்ண சந்திர பிம்ப வதனே''  திருவாரூர்  கமலாம்பா மீது பாடப்பட்டது.  
வாழ்க்கையில் அது  அறுபதாவது  தீபாவளி.    அன்று  பூஜைகள் முடித்து  ''பிள்ளைகளா  இங்கே வாருங்கோ  என்று சிஷ்யர்களை கூப்பிட்டார்,   நான் சொல்லிக்கொடுத்தேனே  ''மீனாட்சி மேமுதம் ''  பாடுங்கோ. கமக க்ரியா ராகத்தில் தாளம் தப்பாமல் சிஷ்யர்கள் சுஸ்வரமாகி பாடினதை ரசித்து தலையாடிக்கொண்டிருந்தார்.  

அந்த இடம், அற்புதமான இடம் வந்தது.....  ''மீன லோசநி , பாச மோசனி ''.... அவரது அம்பாள் எதிரே நின்றாள்.  '' ஆஹா கருணாசாகரி  அவள்,  அழகான  அங்கயற்கண்ணாள்,  பந்த பாசம் அகற்றி நிரந்தரமாக தன்னிடம் சேர்த்துக் கொள்பவள்...  
முத்து சாமி தீக்ஷிதரின்  கைகள்  உயர்ந்தன. கண்கள் மூடி இருந்தன.  ''சிவே  பாஹி ''  என்று  அடிவயிற்றிலிருந்து அம்பாளை போற்றினார்.  சப்தம் அவர் பிராணனோடு  காற்றில் கலந்தது.  அம்பாளை அடைந்தார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...