ஐந்தாம் வேதம். J.K. SIVAN
47 மூன்று பிராமணர்களும் ஒரு மல் யுத்தமும்
''வைசம்பாயன மகரிஷி, தங்களது பாரத நிகழ்வுகள் என்னை பரம சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது. நீங்கள் சொல்லும் விதம் மேலும் மேலும் என்ன நடந்தது என்று கேட்க வைக்கிறதே. அர்ஜுனன், பீமன் கிருஷ்ணன் ஆகியோர் ஜராசந்தனை சந்தித்தார்களா? கிருஷ்ணனின் மனதில் என்ன திட்டம்? -- ஜனமேஜன் மிகவும் ஆவலாக கேட்டான்.
''சொல்கிறேன் கேள் அரசே'' -- வைசம்பாயனர் தொடர்கிறார்:
மூன்று பிராமணர்களும் நடந்து சென்றார்கள், வழியில் கண்டகி நதி மற்றும் , சரயு, கோசலநாடு மிதிலா எல்லாம் கடந்து கிழக்கே வெகுதூரம் நடந்தார்கள். கங்கை குறுக்கே வந்தது. அதையும் கடந்து மகத நாடு வந்து சேர்ந்தார்கள்.
'பார்த்தா, பார்த்தாயா மகத நாட்டின் செழிப்பை?'' என்றான் கிருஷ்ணன். கௌதமர் காலத்தில் அங்க வங்க அரசர்கள் எல்லோரும் இங்கு குழுமி இருந்தனர். இதெல்லாம் போதாதென்று ஜராசந்தன் மற்ற அரசர்களின் தேசங்கள் மீது கண்ணை வைக்கிறான். போகட்டும், பாவம், அவன் தான் இன்று தனது கடைசி நாளை அனுபவிக்கப்போகிறானே '' என பெருமூச்சு விட்டான் கிருஷ்ணன்.
அன்று ஜராசந்தனுடைய அரசவையில் பிராமணர்கள் சில அப சகுனங்களை கண்டனர். அவற்றை உடனே ஜராசந்தனுக்கு தெரிவித்தனர். ஜராசந்தன் கிலேசமுற்றான்.
அன்று மாலை அவனது பாதுகாவலன் ஜராசந்தனிடம் '' மஹாராஜா, யாரோ மூன்று வெளி ஊர் பிராமணர்கள் உங்களை காண விருப்பம் தெரிவிக்கிறார்கள். என்ன பதில் சொல்லவேண்டும்?'' என்றான்.
''வரச்சொல் ''
மூவரும் தன் முன்னே தோன்றியதும் ஜராசந்தன் எழுந்து அவர்களை உபசரித்தான்.
கிருஷ்ண '' பிராமணன்'', ''அரசே, இந்த இரு பிராமணர்களும் இன்று நள்ளிரவு வரை மௌன விரதம் கொண்டிருக்கிறார்கள் பேச மாட்டார்கள். பிறகு தான் உன்னோடு பேசுவார்கள்'' என்றான். நள்ளிரவு வந்தது. ஜராசந்தன் அவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு தானே வந்தான்.
பார்ப்பதற்கு பிராமணர்களாக இருந்தும் அவர்களிடம் க்ஷத்ரியத் தன்மை இருந்ததை ஜராசந்தன் கவனித்தான்.
''நீங்கள் யார், என்ன வேண்டி இங்கு வந்தீர்கள்'' என்று கேட்டான்?
''அரசே ச்னாதக பிராமணர்கள் மற்ற க்ஷத்ரிய, வைஸ்ய தர்மங்களும் அனுசரிப்பவர்கள். இங்கு அவர்கள் க்ஷத்ரிய தர்மத்தை அனுஷ்டிக்க வந்துள்ளார்கள். அவர்களை விழுந்து வணங்க தேவையில்லை. உன்னிடம் சில விஷயங்களை சரி செய்ய இவர்கள் வந்துள்ளனர். இங்கு பல க்ஷத்ரியர்களை நீ அடைத்து சிறை செய்து வைத்திருப்பது க்ஷத்ரிய தர்மத்துக்கு விரோதமானது.அவர்களை யாகத்தில் ருத்ரனுக்கு பலி கொடுக்க முயற்சிப்பது தவறு. அதை தட்டிக் கேட்க வந்திருக்கும் நாங்கள் மூவரும் பிராமணர்கள் அல்ல. க்ஷத்ரியர்களே. நான் ஹ்ருஷிகேசன், இவர்கள் இருவரும் பாண்டு புத்ரர்கள், அர்ஜுனன், பீமன். உடனே அந்த அரசர்களை விடுவித்தால் உனக்கு நல்லது ''
''கிருஷ்ணா நீ சொல்வது தப்பு. இந்த அரசர்களை யுத்தத்தில் வென்று, அவர்கள் என்னிடம் தோற்று சிறைபட்டிருக்கிறார்கள். இதுவும் க்ஷத்ரிய தர்மம் தான். இவர்களை விடுதலை செய்ய முடியாது. உங்களோடும் தனித்தனியாகவோ, சேர்ந்தோ நான் யுத்தம் புரிந்து உங்களையும் தோற்கடித்து இங்கேயே இப்போதே சிறைபடுத்துவேன். யாகத்தில் பலி கொடுக்க நீங்களும் வேண்டும். நீங்கள் தயாரா?'' என்றான் ஜராசந்தன்.
''உன் சவாலை ஏற்கிறோம். எங்களில் யாருடன் நீ யுத்தம் செய்ய விரும்புகிறாய்'' என்று கிருஷ்ணன் கேட்க ஜராசந்தனின் பார்வை பீமனின் மீது சென்றது.
'' இவன் பார்ப்பதற்கு வாட்ட சட்டமாக இருக்கிறான். மற்ற இருவர் எனக்கு சரியான ஜோடி இல்லை. எனவே இந்த பீமசேனனோடு மல்யுத்தம் புரிகிறேன். முதலில் அவனைக் கொல்கிறேன். பிறகு நீங்கள்'
ஜராசந்தன் தன்னை யுத்தத்துக்கு தயார் செய்துகொண்டு பீமனை நெருங்கினான். ''நீ தான் எனக்கு கொஞ்சமாவது சமமாக தோன்றுகிறாய். வா என்னோடு யுத்தம் செய்ய. நமது பலத்தை பரிட்சித்து பார்த்துவிடுவோம்'' என்று மல்யுத்தத்துக்கு அழைத்தான்.
அவர்களது யுத்தம் இரு பலம் கொண்ட மத யானைகள் பிளிறிக்கொண்டு மோதினதை போல் இருந்தது .
இருவரின் மல்யுத்தத்தில் பிரதானமான ப்ரிஷ்ட பங்க யுத்தத்தில் வீறிட்ட சப்தங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கினார், வீசி எறிந்தார்கள், மேலே சுற்றி கீழே அடித்து தள்ளினார்கள். பார்ப்பவர்கள் கதிகலங்கினார்கள். பேச்சின்றி சிலை போல் நின்றார்கள். இரவு பகலாக வெற்றி தோல்வியின்றி யுத்தம் தொடர்ந்தது.
முடிவில் ஜராசந்தனை தனது முழங்கால் மீது வைத்து அவன் முதுகை இரண்டாக பிளந்து அவன் எலும்புகள் முறிக்கப்பட்டு அவன் வலியினால் பயங்கர கூச்சலுடன் மாண்டான்.
(நான் இதுவரை படித்து கேள்விப்பட்ட விஷயம் ஒன்று முக்யமாக இங்கு காணோம். ஜராசந்தனை இரு கூராக பிளந்து அவனை கால் மாடு தலைமாடாக பிரித்து போடும் வரை அவனுக்கு உயிர் இருந்து கொண்டே இருந்தது என்று தான் கேள்விப்பட்டோம். ஆனால் லக்ஷம் ஸ்லோகங்களை படித்து எழுதிய பி.சி. ராய் 19ம் நூற்றாண்டிலேயே ஏன் இதை சொல்லவில்லை? எப்படி மாண்டாலென்ன. ஜராசந்தன் இனி பாரதத்தில் பங்கேற்க முடியாது. கதையில் வரமாட்டான். கிருஷ்ணன் பீமனுக்கு ரகசியத்தை சொல்லிகொடுத்து ஒரு புல்லை எடுத்து இரண்டாக வெட்டி ஜாடை காட்டி அதனால் பீமன் ஜராசந்தனை கொன்றதாக கிருஷ்ணனுக்கு இதனால் சேரும் புகழ் எழுதியவருக்கோ சொன்னவருக்கோ படித்தவருக்கோ அல்லது கிருஷ்ணனுக்கோ போகட்டும். அதனால் கிருஷ்ணனுக்கு அபவாதம் நம்மால் வேண்டாம் .).
பீமனும் அர்ஜுனனும் ஜராசந்தனால் சிறை பிடிக்கப்பட்டு மரணத்தை எதிர்பார்த்திருந்த 86 அரசர்களையும் விடுவித்து அவர்களால் போற்றப் பட்டனர். பிறகு வெற்றி வீரர்களாக கிருஷ்ணன் ஜராசந்தனின் தேவலோக குதிரைகள் பூட்டப்பட்ட தேரை ஒட்ட, ( இங்கும் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் தான் தேரோட்டினான்!!) மூவரும் ஜராசந்தனின் தலை நகரமான கிரிவ்ரஜத்திலிருந்து திரும்பினார்கள்.
ஜராசந்தன் சிறையிலிருந்து விடுபட்ட அரசர்கள் அனைவரும் கிருஷ்ணனிடமிருந்து யுதிஷ்டிரன் நடத்தப்போகும் ராஜசூய யாகத்தை பற்றி அறிந்து மகிழ்ந்து தங்களது ஒத்துழைப்பை தர வாக்களித்தனர். ஜராசந்தனின் மகன் சகாதேவன் கிருஷ்ணனை வணங்கி ஆசியோடு மகத தேச அரசனானான்.
இந்த்ரப்ரஸ்தம் அடைந்த மூவருக்கும் யுதிஷ்டிரன் மகத்தான வரவேற்பு கொடுத்து இனி ராஜசூய யாகத்தில் தன்னை எதிர்க்க எவரும் இல்லை என்று பெருமூச்சு விட்டான். ஏற்பாடுகள் நடந்தன. கிருஷ்ணன் அவர்களிடமிருந்து விடை பெற்று துவாரகை திரும்பினான்.
சில காலத்திற்குப் பிறகு அர்ஜுனன், பீமன், நகுலன் சகாதேவன் ஆகியோர் நான்கு திசைகளுக்கும் ஆயுதங்களோடு சென்று திக்விஜயம் செய்து ராஜசூய யாகத்திற்கு மற்ற அரசர்களின் ஆதரவு, திறை, பொருள் பெறச் சென்றனர்.
அர்ஜுனன் திக்விஜயத்தில் பல அரசர்களை வென்று அவர்களிடம் கப்பம் பெற்று அவர்களை நட்புறவாக்கிக் கொண்டான். பகதத்தன் அர்ஜுனனை எதிர்த்து போரிட்டு ஏழு நாள் யுத்தம் நடந்து கடைசியில் அர்ஜுனனிடம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு அர்ஜுனனின் நண்பனாகிறான்.
அதைத் தொடர்ந்து எண்ணற்ற தேசங்களுக்கு சென்று அரசர்களை வென்று வெற்றி வீரனாக அர்ஜுனன் திகழ்ந்தான்.
இதையெல்லாம் கொள்ளை கொள்ளையாக நிறைய பேர்கள், ஊர்களோடு திக் விஜய பர்வம் சொல்கிறது. அர்ஜுனன் மானஸ ஏரி வரை சென்றுவிட்டான். அங்கு கந்தர்வர்களோடு போர் புரிவது கடினம். கந்தர்வர்கள் யுதிஷ்டிரனை சக்ரவர்த்தியாக ஏற்றுக்கொண்டபிறகு எதற்கு யுத்தம் என்று அர்ஜுனன் அவர்களோடு யுத்தம் புரியாமல் அவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டதும் வெற்றியோடு நாடு திரும்புகிறான்.
கிழக்கு நோக்கி சென்ற பீமன் எதிர்ப்புகளை நிர்மூலமாக்கி வெற்றி சூடினான். சேடி தேசத்தில் சிசுபாலனை நெருங்குகிறான். அவன் பீமனை வரவேற்று உபசரிக்கிறான்.
''ஜனமேஜயா மேற்கொண்டு என்ன நடந்தது என்று சொல்கிறேன் கேள்''. என்று நிறுத்தினார் வைசம்பாயனர். நாமும் கேட்க காத்திருப்போம்.
No comments:
Post a Comment