நடராஜ பத்து 9 - J.K. SIVAN
ஒரே வழி
பரமேஸ்வரா, நான் நன்றாக புரிந்து கொண்டு விட்டேன். ஞானம் வந்து விட்டது என்று கூட என்னால் மார் தட்டி சொல்லமுடியும்.
எப்படி என்கிறாயா? கேள்:
இந்த உலக வாழ்க்கையை ஒரு கணம் நன்றாக சிந்தித்தேன். என் மனதில் என்ன தோன்றியது தெரியுமா?
எனக்கு தாய் என்று ஒருவள், தந்தை என்று ஒருவன், கூடப்பிறந்ததுகள், உற்றார் உறவினர், மலை மலையாக செல்வம் குவிந்து எங்கு பார்க்கினும் நிறைந்து -- இதெல்லாம் இருப்பதால் என்ன பயன் ?
எனக்கு முன்னே எத்தனை ராஜாதி ராஜன்கள், சக்ரவர்த்திகள் இந்த பூமியை ஆள்வதற்கு ரத்தம் சிந்தி சண்டை போட்டு ஜெயித்து ஆண்டார்களே, எங்கே அவர்கள்? எங்கே போனார்கள்?
எல்லாம் கற்றவன் என்று பெயர் பெற்றோ , என்னைச் சுற்றி அநேக எடுபிடிகள், சிஷ்ய கோடிகள் இருந்தோ என்ன பயன்?
உடலை வருத்தி, பல வருஷங்கள் முயன்று அலைந்து கற்ற பல சித்து வித்தைகள், பல நாட்கள் தூக்கமின்றி விழித்து கடைபிடித்த விரதங்கள்- இவற்றால் என்ன பயன்?
ஒன்றா இரண்டா, ஊரெல்லாம் சென்று எண்ணற்ற நதிகளில் மூழ்கி புண்ய ஸ்நானம் செய்தேனே -- அதாலாவது பயன் ஏதாவது உண்டா?
இதோ எமன் ஆளை அனுப்பி விட்டானே, ஓலை எனக்கு வந்து விட்டதே, நான் கிளம்ப வேண்டுமே, நான் போகாமல் தடுக்க மேலே சொன்ன ஏதாவது ஒன்று உதவுமா?
எங்கோ ஒரு ரேஷன் கடை கூட்டத்தில் உளுத்தம்பருப்பு, அதுவும் ஒரு கிலோவுக்காக, உபயோகமான நேரத்தை வீணடித்து கடைசியில் ''தீர்ந்து விட்டது. இன்று போய் நாளை வாராய்'' கேட்டு வந்தபோது அங்கே நான் கண்ட அனைத்து தலைகளில் ஏதாவது ஒன்று எனக்கு தெரிந்ததா, சொந்தமா, பந்தமா? அது போல் தான் எல்லாமே, ஒட்டாத உறவு, பந்தம், சொந்தம் , சொத்து, சுதந்திரம் எல்லாமே.
என் காதில் பட்டினத்தார் ஒலிக்கிறாரே நீங்களும் கேட்டு தெளிவு பெறுங்கள்:
''ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற
பேரும் சதமல்ல, பெண்டிர் சதமல்ல, பிள்ளைகளும்
சீரும் சதமல்ல செல்வம் சதமல்ல தேசத்திலே
யாரும் சதமல்ல நின் தாள் (ஒன்றே ) சதம் கச்சி ஏகம்பனே
உன்னருளால் உன் தாளை வேண்டி அடைய வேண்டியது மட்டும் தான் நான் செய்யவேண்டியது.
திருநீலகண்டா, சிதம்பரேசா , நீ என்னவேண்டுமானால் செய்து கொண்டிரு, யார் மீதோ, எதன் மீதோ உன் மனம் இருந்த போதிலும், தயவு செய்து உன் கடைவிழிப் பார்வையை மட்டுமாவது என் மீது வையேன். நான் தான் கெட்டியாக 'சிக்' கென உன்னிரு பொற்பாதங்களை பிடித்துக் கொண்டிருக்கிறேனே. வேறொன்றும் உதவாது எனக்கு. உன் கடைக்கண் பார்வை ஒன்றே போதுமே...
'தாயார் இருந்தென்ன தந்தையும் இருந்தென்ன தன் பிறவி உறவுகோடி
தனமலை குவித்தென்ன கனபெயர் எடுத்தென்ன தாரணியை ஆண்டுமென்ன
சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன சீடர்கள் இருந்தும் என்ன,
சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன, நதிகளெல்லாம்
ஓயாது மூழ்கினும் என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ
இதுவெல்லாம் சந்தை உறவென்று தான் உன்னிரு பாதம் பிடித்தேன்.
யார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.''
மேலே சொன்னது நடராஜ பத்தில் ஒன்பதாவது பதிகம். அடுத்த பதிவோடு நடராஜ பத்து நிறைவு பெறுகிறது.
No comments:
Post a Comment