Thursday, July 12, 2018

BLACK KRISHNA



கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
J.K. SIVAN

கோபியர்கள் அதி புண்யசாலிகள். க்ரிஷ்ணனோடு சேர்ந்து அவன் காலத்தில் வாழ்ந்ததே ஒரு மோக்ஷம். இருப்பதே. அவனை நேரில் பார்த்தும், பேசியும், அவனோடு விளையாடியும் மகிழ்ந்தவர்கள். யாருக்கு கிடைக்கும் இந்த பாக்யம்?

ஒவ்வொருநாளும் அவர்கள் பிருந்தாவனத்தில் கண்ணனோடு வாழ்ந்த நாட்கள் பொன்னாள் . ஒருநாள் கோபி ஓருத்தி எப்படியோ கிருஷ்ணனின் முகத்தை இறுக்கி பிடித்துகொண்டு காதில் ஏதோ ரகசியம் சொல்வதுபோல் அவன் கன்னத்தில் நிறைய முத்தமிட்டுவிட்டாள் . அவளது நீண்ட நாளைய ஆவல், ''அப்பாடா இன்று நிறைவேறியது'' .

ஒருவள் கிருஷ்ணனின் பீதாம்பரத்தை இழுத்து அவனைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு அருகே இருந்த கரும்பு தோட்டத்தில் தொபுகடீர் என்று அவனோடு சேர்ந்து வீழ்ந்தாள்.

ராதையும் கிருஷ்ணனும் நிஜமும் நிழலுமாகவே தோன்றினாலும், நிலவும் குளுமையும் போல் இணை பிரியாமலே நமக்கு காண்கிறார்கள். ராதையை நினைக்காமல் கண்ணனை எண்ண முடியவில்லை. ராதா இருந்தாளா, என்பதே கேள்வி இல்லை. கிருஷ்ணன் இருந்தான் என்றால் ராதை இருந்தாள் என்பதே விடை.

பிருந்தாவனத்தில் உடலும் உயிரும் கண்ணனே. அவர்கள் வாழ்க்கையே அவனைச் சுற்றியே அமைந்திருந்தது. கோபியர் அவனோடு சேர்ந்து விளையாடினர். அவன் குழல் நாதத்தில் மயங்கினர். அன்பை எவ்வளவு அவன்மீது கொட்டினார்களோ பலமடங்கு அவனிடமிருந்து அதை பெற்ற பாக்யசாலிகள்.

கோபியரில் தலை சிறந்தவளாக திகழ்ந்தவள் ராதா. அவளது குரல் கண்ணன் குழலைபோன்று இனிமையானது என்று கூட சொல்லும் அளவுக்கு காந்த சக்தி கொண்டது. கண்ணன் குழல் ஒலி உலகையே தன்னுள் அடக்கும் சக்தி வாய்ந்தது. அதில் மயங்கிய அனைத்து கோபியரும் கண்ணனை தங்கள் இதயத்தில் பிணைத்துக் கொண்டதோடு அல்லாமல் அவனைத் தங்களுக்கே என்று ஒவ்வொருவரும் சொந்தம் கொண்டாடினர். அவனையே மணாளனாக கருதினார்கள். அதில் முதலாவது ராதா. கிருஷ்ணன் தனது பிரேமையை அவளுக்கே அளித்தான். அவனிலும் 10 வருஷங்கள் ராதா மூத்தவள் என்பது அங்கு வித்யாசமாக படவே இல்லை.

பிரேமைக்கு வயசோ, வித்தியாசமோ, மதமோ, மொழியோ எந்த பேதமும் கிடையாதே. இருமனம் ஒன்றாய் கலந்தபின்னாலே எது வரும் குறுக்கே?

மனித காதலோடு தெய்வீக பிரேமையை ஒப்பிட்டு எடை போடவே கூடாது. தவறான சிந்தனைக்கு அது அடி கோலும். புத்தியை பேதலிக்க வைத்துவிடும்.நமக்கு ஒரு பழக்கம். நாம் அறிந்தது, நமக்குதெரிந்ததை வைத்துக்கொண்டு எல்லாவற்றையும், எடை போடுவோம். அளப்போம். அதனால் தான் துரியோதனனுக்கு யாரைப் பார்த்தாலும் கெட்டவர்களாகவே, நயவஞ்சகர்களாகவே தெரிந்தது. நமக்கு தெரியாதது நிறையவே இருக்கிறது என்ற எண்ணம் மனதில் பதிந்தால் கிருஷ்ணன் ராதை புனித பிரேமை புரியும்.

ஏதோ ஒரு சினிமாவிலே யாரோ சொல்வானே ''அது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது.''

ராதாவின் தூய காதல் கண்ணனைக் கட்டிப்போட்டிருந்தது. எல்லா கோப கோபியரும் கண்ணனை விரும்பினாலும் அவனது அன்பில் பங்கேற்றவர்களாக இருந்தும் ராதை எப்போதுமே தனி இடம் பெற்றிருந்தாள் . கண்ணனின் எண்ண பிரதிபலிப்பு அவள். இளம் வயதில் கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் ராதையோடு சேர்ந்து விளையாடினான். அவள் அவனைவிட பத்து வயது பெரியவள் ஆனாலும் அவனோடு ஜோடியாக விளையாடினாள்.

ஒருநாள் கிருஷ்ணன் தேம்பி தேம்பி அழுதான்.

''எண்டா கிருஷ்ணா அழறே, உனக்கு என்ன ஆச்சு? என்று பதறினாள் யசோதை. சாப்பிட மறுத்தான். எவ்வளவோ சொல்லியும் முடியாது என்று தலை அசைத்தான். கெஞ்சிக் கூத்தாடி ஏன் அவன் அழுகிறான் என்று மெதுவாக கண்டுபிடித்தாள் யசோதை.

''ராதா மட்டும் அழகாக சிவப்பா இருக்கிறாளே ?''

''அப்படி ஒண்ணும் இல்லைடா அசடே. நீ தானடா கிருஷ்ணா அழகு'' என்றாள் யசோதை அவனைக் கட்டிக்கொண்டு.
''நான் அழகு என்று யார் உன்னிடம் சொன்னது? ராதாவை விடவா?. அவள் தான் சிகப்பாக இருக்கிறாள். நான் கறுப்பாக தானே இருக்கேன்?''

''சிவப்பா இருந்தா தான் அழகு என்பதே தப்பு. கருப்பா மினுமினுன்னு இருக்கிற கண்ணைப் பறிக்கிற கிருஷ்ணா, உன்னைவிட யாருமே அழகு கிடையாதுடா. கருப்பு இல்லாம வெளுப்பு இல்லை. இரவு இல்லாம பகல் இல்லை. இருண்ட பிரபஞ்சம் இல்லாமல் சூரியனோ நக்ஷத்திரங்களோ இல்லை. ''

ஒரு பிரசங்கமே செய்துவிட்டாள் யசோதை.

ஒ அப்படியா. அப்போ கருப்பு தான் அழகு என்கிறாயா அம்மா ?''

''ஆமாம் ஆமாம் ''

''சரி, உன்னையும் அந்த ராதாவையும் கருப்பா பண்ணிவிடுகிறேன்;; என்று கண்ணன் யசோதை, ராதையின் முகம் கை எல்லாம் கருப்பு, நீல, வண்ணம் பூசினான். மற்ற கோபியர்க்கும் கூட பூசினான்.
இதை வடக்கே கிராமிய ஓவியமாக பல இடங்களில் வீடுகளில், சுவர்களில் வரைந்திருக்கிறார்கள். '

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...