Wednesday, July 18, 2018

TALK WITH HANDS


           கை  பேசியது ....!  J.K. SIVAN 

ஓடும் ரயிலில் ஏறாதே என்று பல ஆயிரம் முறை சொன்னாலும் சிலர் கேட்பதே இல்லை. தம்பு ஏறினபோதும் நான் ''வேண்டாம் ஏறாதே, அடுத்த ரயிலில் வா. ஐந்து நிமிஷத்தில் வரும். நில் '' . பழவந்தாங்கல் ரயில்வே நிலையத்தில் (நங்கநல்லூருக்கு அது தான் அருகே உள்ள ரயில் நிலையம்) மின்சார ரயில் கர்ணன் கடூரமாக கத்திக்கொண்டு வேகம் எடுத்தது. தம்பு தோளில்  ஒரு பையோடு கூடவே ஓடிவந்தான். கம்பியை பிடித்து விட்டான்.  காலை தூக்கி வண்டியில் ஏறமுயற்சித்தான். கூடவே ஓடிவந்தான். இன்னும் சில வினாடிகளில் ரயில் ஸ்டேஷனை கடந்துவிட்டால் போடமுடியாது. தம்புவோ கம்பியை கெட்டி யாக பிடித்துக்கொண்டதுடன் அவனை உள்ளே இழுத்தோம். அவனால் வரமுடியவில்லை. எங்களாலும் அவனை உள்ளே இழுக்கமுடியவில்லை. திடீரென்று எனக்குள் ஒரு சக்தி தோன்றி அருகே இருந்த ஆபத்து சங்கிலியை பிடித்து இழுத்தேன். ரயில் நின்று விட்டது. ஓடி வந்த தம்பு இதை எதிர்பாராமல் தூக்கி எறியப்பட்டு விழுந்தான். என் கையை பிடித்து ரயிலுக்கு அவனுக்கும் இடையே நசுக்கிக்கொண்டிருந்தான். என் கையும் விடுபட்டது. செருப்பு ஒரு பக்கம். பை  ஒருபக்கம், முகத்தில், தோளில் , இடுப்பில், காலில் சிராய்ப்பு, பலத்த அடி . வண்டியில் இருந்த அனைவரும் அவனை திட்டினார்கள். பேந்த பேந்த விழித்தான். காது நிறைய வசவுகள், சில  கெட்ட வார்த்தைகளும் உள்ளடக்கம்.

இப்போது தான் தெரிந்தது என் வலது கை நடுவிரலும் அவனால் அடிபட்டு அப்பம் போல் வீங்கி இருந்தது.  நேரமாகிவிட்டதால் எழும்பூர் சென்று ரயில் பிடித்து மறுநாள் காலை மாயூரத்தில் ஒரு டாக்டரிடம் XRAY  எடுத்து மருந்து வாங்கிக்கொண்டேன். ரெண்டு நாளில் சென்னை வந்து எங்கள் குடும்ப டாக்டர் பார்த்து சில மருந்துகள் கொடுத்து, கட்டு போட்டு, இன்னும் அந்த விரல் சரியாகவில்லை.

இது நடந்து  பல வருஷங்கள் ஓடிவிட்டது.  இன்றும் தொட்டால் வலிக்கிறது.

என் கைகளை  இன்று உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன்.  அவை பேசின.

''என்னோடு நீ  80 வருஷங்களாக இருக்கிறாய் இல்லையா?

''ஆம்  முதலில்  அனா ஆவன்னா எழுத உபயோகப்பட்டதுமுதல், உன்னால் தான் நான் என்னை சிங்காரித்துக்  கொண்டேன், அழுக்கு தேய்த்து குளித்தேன், சாப்பிட்டேன், ட்ராயிங்க் போட்டேன், காரம் போர்டு  டேபிள் டென்னிஸ்  ஆடி  மகிழ்ந்தேன். சண்டை போட்டேன், நீச்சல் அடித்தேன். கயிற்றில் தொங்கி ஊஞ்சல் ஆடினேன். சைக்கிள் ஓட்டினேன், ஸ்கூட்டர் இன்னும் ஓட்டுகிறேன். என் மனைவிக்கு தாலி கட்டினேன், என் குழந்தைகளை தூக்கினேன், பள்ளிக்கூடம் அழைத்து சென்றேன், டிரஸ் போட்டு விட்டேன்,  போட்டோ எல்லாம் எடுத்திருக்
கிறேன்,  என் தாய் தந்தை முப்பாட்டன்மாருக்கு பித்ருக்கடன் செயகிறேன். காலை மாலை  என் தெய்வக்கடன் செயகிறேன். சமையல் செய்திருக்கிறேன், காபி டீ  இன்னும் போடுகிறேன்.  டைப் இன்னும் அடிக்கிறேன். அப்போது சம்பாதித்தேன். இப்போது ஆத்ம திருப்தி தருகிறது.

''கை  சிரித்தது. நீ என்னிடம் எதிர்பார்த்தது எல்லாம் செய்தேன் அல்லவா?''.என்னைக்கண்டால் பிடிக்கிறதா?

''முன்பு எல்லாம் நீ மெத்து மெத்து என்று இருப்பாய், கை குலுக்கும் போது கெட்டியாக உறுதியாக இருந்தாய். இப்போது எவ்வளவு சுருங்கி விட்டாய். எலும்பாக இருக்கிறாயே. எவ்வளவு வேலை எனக்காக செய்திருக்கிறாய்?

கை  சிரித்தது.     

''ஏன் சிரிக்கிறாய் சொல்?''

''நீ யாரையாவது அடிக்கும்போது நீ விரும்பியபடி உதவினேன், ஆனால் உன்னை யாராவது தாக்கும்போது, நான் உன்னைக் கேட்காமலேயே மற்ற கைகளை தடுத்தேன்.  அதை நினைத்தேன். இன்னொன்றும் நினைத்தேன். சிரிப்பு வந்தது ? 

''என்ன சொல்?''

சிறுவயதில் நீ கோபால் ராவ் வீட்டு கொய்யாமரத்தில் ஏறி பழங்கள் திருட சுவர் ஏறி குதிக்க உதவினேன், பழம்  பறித்தேன். இல்லை திருடினேன்  அது நான்செய்த தவறு. இன்னும்  நிறைய தவறுகள் உனக்காக செய்தேன் .

''கைகளே ... நிறுத்துங்கள் , நான் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளை நிறையவே தான். எனக்கே தெரியும். அதையெல்லாம் லிஸ்ட் போட்டு சொல்லி என் மன அமைதி கெடவேண்டாம். அதையெல்லாம் மறந்து மறைத்து விட்டேன். அதற்கெல்லாமும் நீங்கள் தான் உதவினீர்கள். இப்போதும் உங்கள் உதவி தேவை.

என்ன சொல்லப்பா?

நான் உங்களை தவறாக உபயோகித்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாக, யாராவது துன்பத்திலிருந்தால், கவலையிலிருந்தால், அவர்களை அணைத்து  தட்டிக்கொடுத்து, தலை தடவி, ஆறுதல் அளிக்க உதவுங்கள், எங்கே கோயில் கோபுரம்  பார்த்தாலும், பெரியவர்களை சந்தித்தாலும் நீங்கள் இரண்டுபேரும் சேர்ந்து உயர்த்தி கூப்பி நான்  வணங்க உதவுங்கள்.
 அவ்வளவு தானா?  என்றன கைகள்.

கடைசியாக  ... கடைசிவரை, என்னால் இயன்ற வரை உழைக்க உதவுங்கள், இருப்பதை கொடுக்கமுடிந்ததை பிறருக்கு கொடுக்க  உதவுங்கள். எல்லோரும்  வாழவேண்டும் என்று வாழ்த்த, வணங்க  நீங்கள் ஒத்துழையுங்கள் அது போதும்.


 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...