Tuesday, July 31, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்   J.K. SIVAN 

                          51   விதியை யார்  வெல்லுவார் ?

ஒருவரைப் போல் மற்றவர் இல்லை.  ஒவ்வொருவர் வாழ்க்கையும் அதே போல்  வித்தியாசமானது.  ஒவ்வொருவர் வாழ்க்கையையும் விதி தான் மாற்றி அமைக்கிறது.  இதை புரிந்து கொண்டவர்கள் அமைதியாக அதை  ஏற்றுக் கொண்டு இறைவனிடம்  பக்தியோடு வேண்டிக்கொண்டு வாழ்கிறார்கள். 


விதி எப்படி நடத்துகிறதோ அப்படியே தான் அனுபவிக்கவேண்டும்.  மாற்றியமைக்க முடியாது.  திருதராசலத்திறன் இட்ட கட்டளையின் படி விதுரன் நேராக இந்திரப்பிரஸ்தம் சென்றான்.  யுதிஷ்டிரனிடம்  திருதராஷ்ட்ரனின்  அழைப்பு பற்றி பேசினான்.
ஜாடையாக  சூதாட்டம் நிகழ வாய்ப்பு பற்றியும் எச்சரித்தான்.

''ஐயோ  என்  தாத்தாமார்களே, உங்களுக்கு ஏன் இந்த சோதனை?   வைசம்பாயன மகரிஷி.  பிறகு என்ன நடந்தது.  சூதாட்ட சூழ்ச்சி. அதன் விளைவு. எங்கு நடந்தது, யார் யார் எல்லாம் இருந்தார்கள்  என்பது பற்றி அறிய ஆவலாக உள்ளது. சொல்லுங்கள்'' என்றான்  ஜனமேஜயன்.

 '' சொல்கிறேன் கேளப்பா''  என்று தொடர்ந்தார் வைசம்பாயன ரிஷி.  

திருதராஷ்ட்ரன் துரியோதனனை தனியே அழைத்து  புத்திமதி சொன்னான்.  உனக்கென்ன  குறை வைத்தேன். சகலமும் இருந்தும் நீ ஏன்  மற்றவனைப் பார்த்து பொறாமைப் படவேண்டும்?.   சூதாட்டம் வேண்டாம்.  அந்த  எண்ணத்தை  நிறுத்து. அதால் அழிவு நேரலாம்''   என்று  எச்சரித்தான். ஒரு தந்தையின் கடமையை செய்யத் தவறவில்லை.

''அப்பா,  எவன்  ஒருவன்  எதிரியின்  வளர்ச்சியைக் கண்டு  துன்பமோ பொறாமையோ  அடையவில்லையோ அவனுக்கு  பாதுகாப்பு கிடையாது.  மயன் கட்டிய அந்த அதிசய மாளிகையில் தரை தண்ணீராக, தண்ணீர்  தரையாக  தெரிந்து  நான் பட்ட அவமானத்தையும், கதவை கண்ணாடி என்றும் கண்ணாடியை  கதவு என்றும் தெரியாமல்  நான் தலையில் முட்டி மோதி, விழுந்ததை எல்லாம்,   திரௌபதி முதலாக  அத்தனை பாண்டவர்களும்  கண்டு   சிரித்து  என் மனம் புண் பட்டதையும்,   வேலைக்காரர்கள் கொடுத்த  துணியை நான்  உடுத்து  நீரிலிருந்து வெளியேறியதும்  என் உயிர் இருக்கும் வரை மறக்க முடியாது.''

 'துரியோதனா,  வரும் பரிசுகளை  நீ  வாங்கி வை''  என்று பொறுப்பை என்னிடம் கொடுத்தான் யுதிஷ்டிரன்.  அப்பப்பா. ஆயிரமாயிரம், யானைகள், குதிரைகள்,  பசுக்கள், மலை மலையாக  வைரங்கள், தங்க  ஆபரணங்கள், ஆயிரம் பதினாயிரம், வீராதி வீரர்கள்,  எண்ணற்ற  ஆயுதங்கள்,  கணக்கற்ற  அழகான  பணிப் பெண்கள்,   வித விதமான  தங்கத்தில் வேய்ந்த வைர வைடூர்ய   கிரீடங்கள், ஆடைகள், வரிசை வரிசையாக தேர்கள்,  என்னால்  பார்க்க கூட முடியாத  அளவுக்கு  எங்கும் நிறைந்திருந்ததை எப்படி  மறப்பேன்.

 எங்கும்  வேத பிராமணர்கள்  கை நிறைய மூட்டை மூட்டையாக  பரிசு பொருட்கள், தானங்கள் பெற்றுக்கொண்டு   போவதை பார்த்தேன். ஆயிரம் ஆயிரம் மக்களுக்கு  விமரிசையாக  அன்ன தானம் நடைபெற்றது. அபிஷேகம்  நடத்தி வைத்தது  வியாசர் நாரதர்  போன்ற ரிஷிகள்.  பரசுராமன் வாழ்த்தினான். கிருஷ்ணனே  வெண் சங்கினால்  புண்ய தீர்த்தங்கள் நிரப்பி  யுதிஷ்டி ரனுக்கு அபிஷேகம் செய்வித்தான்.  இதையெல்லாம்  பார்த்து  என்னால்  தாங்க முடியவில்லை,  கண் இருண்டது,  மனம் வெதும்பியது. தலை சுற்றியது''    புலம்பினான் துரியோதனன்.

திருதராஷ்ட்ரன்  மகனைத் தடவிக் கொடுத்து  ''என்  அருமை மகனே,  நீ அவர்களைப்  பார்த்து  பொறாமை படும் நிலையில் நான் உன்னை வைக்கவில்லையே. உனக்கு என்ன குறை இங்கே?    எதற்கு  உன் மனத்தை  வருத்திக் கொள்கிறாய்.  வேண்டாததை எல்லாம்  நினைக்காதே  விடு.  உடனே  வேத பிராமணர்களை  அழைத்து  சப்ததந்து என்ற யாகத்தை நடத்து.  நீயும்  வேண்டியதைப் பெறலாமே'' என்றான்.

''அப்பா, உங்களுக்கு  நான் சொல்லவேண்டியதில்லை.  ஒரு அரசன்  மற்றவன் அவனை விட பலசாலியாக இருப்பதை அனுமதிக்க மாட்டான். மேலும்  அதிருப்தியில் தான் ஒருவன் செழிக்க முடியும். மேலும் மேலும் அடைய வேண்டும் என்ற ஒரு வேகம் தான் ஒருவனை  உயர்த்தும்.  திருப்தி, போதும்,  என்ற மனம் அவனை இருந்த இடத்திலேயே தான் அழுத்திவிடும்.  ஒன்று நான் பாண்டவர்களின் செல்வத்தை பெற வேண்டும். அல்லது செத்து ஒழிய வேண்டும். வேறு வழியே இல்லை' என்றான் துரியோதனன். .

"துரியோதனா , பாண்டவர்களின் செல்வத்தை உனதாக்குக்கிறேன் பார்''  என்றான் சகுனி. 

''திருதராஷ்டிரா  நீ  உடனே யுதிஷ்டிரனை இங்கு வரவழைக்க வேண்டும்.'' என்று சகுனி குறுக்கிட்டான்.

 ''என் சகோதரன் விதுரனை ஒரு வார்த்தை கேட்கவேண்டும். அவன் எனக்கு  எப்போதுமே  நல்லதை தான் சொல்பவன்''

''அப்பா  திரும்பவும் பழையபடியே தான்  பேசுகிறீர்கள்.  விதுரன் பாண்டவ நேசன். நமக்கு எதிராகவே செய்பவன்.

 "துரியோதனா, இதால்  ஒன்று  யுத்தம் வரும். வந்தால்  பாண்டவர்களின் சக்தியை  உன்னால்  தாங்கமுடியாது.  குல நாசம்  ஏற்படும்.  அல்லது  அவர்கள் வழிக்கு போகாதே. இந்த சூதாட்டம் வேண்டாம்''என்றான்  திருதராஷ்டிரன்.

"அப்பா  இந்த  சதுரங்கம் சொக்கட்டான்  எல்லாம்  பழைய  விளையாட்டுகள் தான். முன்னோர்  தான் கண்டு பிடித்தார்கள்.  நானாக  உண்டாக்கவில்லை. சகுனி மாமா  சொல்படி நட. ''

"அப்பா,  விதி உன்னை நடத்துகிறது.என் வார்த்தைக்கு இனி மதிப்பேது''  இந்த  சம்வாதம் நடந்த பின்னரே  திருதராஷ்டிரன்  விதுரனை அழைத்து  இந்த்ரப்ரஸ்தம் அனுப்பினான்.

இந்த்ரப்ரஸ்தத்தில் விதுரனை மரியாதைகளோடு  உபசரித்து வணங்கி  பாண்டவர்கள்  அவன் வந்த சேதியை அறிந்தனர்.

 ''யுதிஷ்டிரா,  திருதராஷ்டிரன் ஒரு புது மாளிகை  கட்டியிருக்கிறான். அது  உனது மாளிகையைப் பார்த்து அதைப்போலவோ  இன்னும்  அழகாகவோ  இருக்கிறதா என்று  நீ  உன் சகோதரர்களோடு  வந்து பார்க்கவேண்டுமாம். உனக்கு பிடித்த சொக்கட்டான் விளையாட்டுக்கும்  ஏற்பாடு  செய்திருக்கிறானாம்.  நீ  தட்டாமல் என்னோடு வரவேண்டும்  என்று  உன்னிடம்  சொல்ல சொன்னான்.'' என்றான் விதுரன்.

''விதுரரே,  நீங்கள் அறியாதது இல்லை.  சூதாட்டத்தில் பணயம் வைத்து ஆடுவது வழக்கம்.  வெற்றி தோல்வி உண்டாகும்போது  கோபம் சண்டை கூட  வரும்.  இது எதற்காக?  அவசியம் இல்லை என்று  எனக்குப் படுகிறது. நீங்கள்  என்ன சொல்கிறீர்களோ அதன்படி நடக்கிறேன். ''

''யுதிஷ்டிரா  நான்  இப்போது ஒரு  தூதுவன்.  இந்த சூதாட்டத்தில்  சில கை தேர்ந்த  சூதாடிகளும் இருப்பார்கள். நீ தான்  முடிவெடுக்க வேண்டும்.''

''யார்  யார் இருக்கிறார்கள்.  துரியோதனன்  சகோதரர்களைத் தவிர?''.

''எனக்குத் தெரிந்து  காந்தார தேச  மன்னன் சகுனி,  மற்றும் சித்ரசேனன். சத்ய வ்ரதன் , புருமித்ரன் , ஜெயன் ஆகியோரும் இருப்பார்கள் என்று தெரிகிறது.  அவர்களில் சகுனி  கை தேர்ந்த சூதாட்டக்காரன்.''

 ''எனக்கு  இதில் விருப்பமில்லை  என்றாலும் என்னை  அழைத்து  போட்டியிட்டால்  நான்  மறுக்க முடியாது.''

முடிவில்  மறுநாள் சகோதரர்களோடு  யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரம் பயணமானான்.

அங்கே  பீஷ்மர் துரோணர், கிருபர்  அனைவரையும் வணங்கி, திருதரஷ்ட்ரனை வணங்கி  இரவு தங்கினர். மறுநாள்  சபா மண்டபத்தில்  போட்டி  தயாராகியது.   போட்டிக்கான விதிகள்  புரிந்து கொள்ளப்பட்டன.  பணயம் வைத்தவர்  தோற்றால் அதை இழப்பார். அதிருஷ்டம் இருப்பவர்  வெற்றி பெறுவார்.  எதிராளியின் பணயம் அவரைச் சேரும்.

"யுதிஷ்டிரா  விளையாட்டில் வெற்றி பெற  போட்டியிடுபவர்கள் எல்லாருமே விழைவர்.  அவரவர்  விளையாடுவதை பொறுத்து வெற்றி அமைகிறது. இதில் என்ன  தவறு.  வெற்றியும் தோல்வியும் சமமாக எடுத்துக்கொள்ளவேண்டும். அவ்வளவே. நீ  விளையாட்டு தெரிந்தவன் வெற்றி பெறலாமே.'' என்றான் சகுனி.

 " சரி மாமா.  போட்டி  ஆரம்பமாகட்டும். நான் யாரோடு விளையாட வேண்டும்.  என்ன  பணயம் வைக்க வேண்டும். ?''

''யுதிஷ்டிரா  எனக்காக  என் மாமன்  சகுனி உன்னோடு  விளையாடுவான்.  நான்  என்னிடம் உள்ள  அனைத்து ஆபரணங்களையும்   பணயமாக வைக்கிறேன்.'' என்றான் துரியோதனன்.

 ''ஒருவனுக்காக  மற்றொருவன் போட்டியில் கலந்து கொள்வது  சரியல்ல. என்றாலும்  நான் ஒப்புக்கொள்கிறேன்'' என்றான்  யுதிஷ்டிரன்.

விதி சிரித்தது.  விதியை யார்  வெல்லுவார் ?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...