குதம்பை சித்தர் - J.K. SIVAN
எந்த உயிர்க்கும் இரைதரும் ஈசனைச்
சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய்
சந்ததம் வாழ்த்தடியோ.
எல்லா உயிர்களுக்கும் அன்றாடம் மூன்று வேளை உணவு அளிக்கிற சிவனை கையெடுத்து கும்பிடு
காணக்கிடையாத கற்பாந்த கல்பத்தை
நாணாமல் ஏத்தடியே குதம்பாய்
நாணமற் ஏத்தடியே.
எண்ணற்ற காலமாக தோன்றி அருளும் மாமணி சிவனை சந்தோஷமாக ஓடிவந்து போற்று
அணுவாய் பல்அண்டமாய் ஆனசிற்சோதியைத்
துணிவாய்நீ போற்றடியோ குதம்பாய்
துணிவாய்நீ போற்றடியோ.
அவன் யாரென்றா கேட்கிறாய்? அணுவுக்குள் அணுவானவன். கண்ணால் காண முடியாத சிறு இரவும் கண்ணால் அழிக்கமுடியாத பேருருவாக அகண்ட ஜோதியானவனும் அவனே.
மாணிக்கக் குன்றிற்கு மாசற்ற சோதிக்குக்
காணிக்கை நன்மனமே குதம்பாய்
காணிக்கை நன்மனமே.
இப்படிப்பட்ட மஹா தெய்வமான சிவனுக்கு மாணிக்க மலைக்கு அன்பெனும் மலைக்கு பரிசுத்த ஜோதிஸ்வரூபத்துக்கு என்ன காணிக்கை கொடுப்பது என்று யோசித்து முடிவில் என் மனமே உனக்கு தக்க காணிக்கை என்று அளிப்பாய்.
தேவருஞ் சித்தருந் தேடு முதல்வர்
மூவரும் ஆவாரடி குதம்பாய்
மூவரும் ஆவாரடி.
ஒன்றாக பலவாக தோற்றம் அளிக்கும் அவன் மூன்றாக பிரிந்து படைத்தல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில் புரிந்து நம்மை அருள்பவன். அவனை மறக்கலாமா? நினைவில் அவனன்றி வேறொன்றும் வேண்டாமே.
சத்தாகிச் சித்தாகித் தாபர சங்கமாய்
வித்தாகும் வத்துவடி குதம்பாய்
வித்தாகும் வத்துவடி.
சகல எண்ணம் , செயல், பொருள் அனைத்திற்கும் சாரம், ஆதாரம் அவன். அவன் எண்ணத்தில் ஞானமாக அருள்பவன். அண்ட சரா சரத்தில் சகல ஜீவனாக மூலாதார விதையாக வளர்பவன் அவனை, சிவனை போற்று
இன்னும் குதம்பை சித்தரை கேட்கலாம்.
No comments:
Post a Comment