' ராம நாடகம்'' J.K. SIVAN
இது இதுவரை நீங்கள் கேட்காத, படிக்காத, அறிந்திராத, கதைகளில் ஒன்றாக இருந்தால் பரம சந்தோஷம். தெரிந்தவர்கள் மறுபடியும் புரிந்து கொள்ளலாம். கிருஷ்ணனுக்கு கோபம் வராது!
கிருஷ்ணனும் பலராமனும் துவாரகையில் அரசர்களாக ஆட்சி பாரத்தை செவ்வனே ஏற்று நடத்தி வருகிறார்கள். பெரிய ராஜா ராஜா பலராமன். சின்ன ராஜா கிருஷ்ணனைத் தேடி மக்கள் அன்றாடம் வெள்ளமாக மக்கள் வந்து தங்கள் குறைகள், தேவைகள், ஆலோசனைகள், அனைத்துக்கும் சொல்வது பலராமனுக்கு ஆச்சர்யமாக இருந்தது மட்டுமல்லாமல் கொஞ்சம் மனத்தில் "நம்மைத் தானே அரசன் என்ற முறையில் நாடவேண்டும்" என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இந்த எண்ணமும் எதிர்பார்ப்பும் வளர்ந்து கொண்டு வந்தது. இதை கிருஷ்ணன் கவனித்து விட்டான். பொறுமையாக பலராமனாக இதை வெளிப்படுத்த தக்க சமயத்திற்காக காத்திருந்தான். ஒருநாள் பேச்சோடு பேச்சாக பலராமன்
" கிருஷ்ணா, ராஜ்ய பாரங்களில் அதி முக்யமான வேலைகளை உன்னிடம் ஒப்படைக்கலாமென்று நினைக்கிறேன். அதற்கு உன் நேரம் அதிகம் செலவழியும் என்று தோன்றுகிறது. இந்த அன்றாட மக்கள் குறை தீர்ப்பு போன்ற வேலைகளை குறைத்துக் கொள்வது உனக்கு உதவுமே”!
" ஆம், அண்ணா, எனக்கும் அத்தகைய எண்ணம் ரொம்ப நாளாகவே இருந்து வருகிறது. நான் நிறைய பிரயாணம் செய்யவேண்டும். மற்ற அரசர்களை எல்லாம் சந்தித்து செய்ய வேண்டிய வேலைகள் நின்று போய் இருக்கின்றதே!. நாளை முதல் மக்களை நீங்களே சந்தித்து அவர்கள் தேவையைப் பூர்த்திசெய்வது நல்லது என்றே எனக்கு தோன்றுகிறது.தண்டோரா போட்டு மக்களுக்கு செய்தி சொல்ல ஏற்பாடு செய்கிறேன்" என்றான் கிருஷ்ணன்.
அதே நேரத்தில் கிருஷ்ணனுக்கு , கருடன் போக்கும் கொஞ்ச நாளாக சரியில்லை என்று தோன்றியது. கருடன் இப்போதெல்லாம் யாரையும் மதிப்பதில்லை. தானே இன்றியமையாதவன். அரக்கர்களை எல்லாம் அழிப்பதில்
தன்னை விட சிறந்த வீரன் இல்லை. கிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக தானே என்ற மனப்பால் நிறைய குடித்துக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் நாரதர் கிருஷ்ணனைக் காண துவாரகை வந்தபோது கருடன் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. கிருஷ்ணன் தானே நேரில் அங்கு வந்தபோது காத்திருந்த நாரதரை உள்ளே அழைத்துச் செல்கிறான்.
''நாரத முனிவரே, எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்யவேண்டும்'.
"கட்டளை இடுங்கள் பிரபோ"
"கதலிவனம் சென்று அங்கு ஹனுமானைக் கண்டு இங்கே அழைத்து வாருங்கள்"
நாரதர் கதலிவனம் சென்ற போது ஹனுமான் வழக்கம்போல் கண் மூடி "ராம ராம ராம" என்று ஜெபத்தில் இருந்தார். கண் திறந்தபோது எதிரே நாரதரிஷி நிற்பதை கண்டார். ஆனந்தித்தார்.
''வாருங்கள் திரிலோக சஞ்சாரி நாரதரே. ரொம்ப நாளாயிற்று தங்களை பார்த்து''
"வானர ஸ்ரேஷ்டரே நான் உங்களை பார்க்க வந்ததே ஒரு காரியமாகத்தான். கிருஷ்ணன் தங்களை அழைத்து வர சொன்னார்"
"யார் கிருஷ்ணன்"
"கிருஷ்ணன் தான் ராமனாக இருந்தவர்"
ஹனுமான் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. மீண்டும் ராம ஜெபத்தில் ஆழ்ந்துவிட்டார். வெகுநேரமாக காத்திருந்தும் ஹனுமான் தியானம் கலையவில்லை. நாரதர் திரும்பிச் சென்றார்.
"எங்கே ஹனுமான்? அழைத்து வரவில்லையா" என்று கிருஷ்ணன் கேட்டபோது நாரதர் நடந்ததை சொன்னார். கிருஷ்ணன் சிரித்தான்.
"மீண்டும் சென்று ராமர் அழைத்தார் என்று சொல்லுங்கள். அப்போது தான் வருவார்"
மறுபடியும் எதிரில் நாரதர் நிற்பதை கண்ட ஹனுமான் விழியை உயர்த்தி “என்ன” என்று ஜாடையாக கேட்க "உங்களை ராமர் அழைத்தார்" என்ற அடுத்த கணமே கை கூப்பி "ராம ராம" ஜபத்துடன் நாரதன் பின்னாலேயே நடந்தார் ஹனுமான்.
துவாரகை நந்தவனத்தில் ஹனுமனை விட்டு விட்டு நாரதர் மறைந்தார்.
“ராம ராம” ஜெபத்தில் கண் மூடி நின்ற ஹனுமான் கண் விழித்து பார்த்தபோது தான் ஏதோ ஒரு வனத்தில் இருப்பதை கண்டபோது அவருக்கு லங்காவில் ராவணன் அரண்மனை நந்தவனம் நினைவில் வர கோபத்தோடு ''இன்னுமா அந்த நந்தவனம் பச்சை பசேலென்று இருக்கிறது'' என்று துவாரகா நந்தவனத்தை அழித்து தீமூட்ட தொடங்கினார்.
யாரோ ஒரு வானரன் கிருஷ்ணனின் அரண்மனை நந்தவனத்தை அழிக்கிறான் என்ற விஷயம் முதலில் கருடனுக்கு தெரிந்து அவன் கோபமுடன் ஹனுமானோடு மோதி எதிர்கொள்ள முடியாமல் காயமுற்று தோல்வியோடு திரும்பினான். வீரர்கள் அனைவரும் படுகாய முற்று வீழ்வதைக்கண்ட பலராமன் தானே ஹனுமனை எதிர்த்து அவனைப் பிடிக்க முயற்சித்து பலராமனின் "பலம்" வாயுபுத்திரன் முன் செல்ல வில்லை. வாலால் சுருட்டி தூரே எறிந்தான் ஹனுமான்.
"ஆஞ்சநேயா'' என்ற பழக்கமான குரல் திடீரென்று கேட்டது.
ஆச்சர்யத்துடன் நின்ற ஹனுமான் கண்கள் எதிரே நின்ற ராமனை நோக்கின. சீதையுடன் ராமன் தன் முன்னே நிற்பதைக் கண்ட ஹனுமான் "என் தெய்வமே உங்களைக் காண என் கண் பாக்கியம் செய்திருக்கிறது" என்று கீழே விழுந்து வணங்கினான்.
No comments:
Post a Comment