காத்திட வா கேசவா: J.K. SIVAN
நீங்கள் இருப்பது ஒரு ராஜ சபை:
''உஷ். சப்தம் போடாதீர்கள். நாம் இப்போது ஒரு ஓரமாக நிற்பது கௌரவ வம்ச மகாராஜா துர்யோதனனின் அரண்மனையில் அவனது ராஜ சபை. துச்சாதனன் பார்த்தால் கோபித்துக்கொண்டு நமது ஆடையைக் கழட்டிவிட்டால் என்ன செய்வது?
துரியோதனன் சபையை வர்ணிக்கிறேன்.
கன்னங் கரேலென்று, அகண்ட மாக. மாட்சி மிகுந்ததாக, நல்ல சுவை உள்ள நீரைக் கொண்ட யமுனை யெனும் திரு நதியின் கரையில் திகழ்ந்த ஹஸ்தினாபுரம் என்கிற மணிநகரில், நமது ராஜாதி ராஜனின் உயர்ந்த புகழை அவனது வானளாவ உயர்ந்து பறக்கும் பாம்புக் கொடி பறை சாற்றுகிறது. கொடி அருகில் போகவேண்டாம். விஷம் கக்கும் பாம்பு, எஜமானனைப் போலவே.
அவன் பெயர் துரியோதனன், (அசட்டு) தைரியசாலி. எவர்க்கும் முடி பணியாதவன், ஆயிரம் யானை பலம் கொண்டவன் ' என்றந்தகால கவிஞர் பிரான் பெரிய ஞானி வேத வியாச முனிவரே சொல்லியிருக்கிறாரே. சொந்த பந்தமானாலும் எதிரியாக நினைத்துவிட்டால் அவ்வளவு தான். அவர்களுக்கு கொடிய தீ மாதிரி அழிப்பவன் .
தந்தை திருதராஷ்டிரன் சொல் நெறிப்படியே இந்த துரியோதனன் ராஜாவாகி அரசாட்சி செய்து கொண்டிருந்தான். அவன் சபையில் வேத சாஸ்திர விற்பன்னர்கள் பெரியோர் பலர் வீற்றிருந்தனர். அவன் சபையை காலத்தால் அழியாத புகழ் கொண்ட அந்த பீஷ்மன், தர்ம ஞாயம் முற்றும் அறிந்தவன், அலங்கரித்தான். தனுர் வேதம் அறிந்த இரு பிரபல அந்தணர்கள் துரோணர், கிருபர் இருந்தனர் அச்சபையில். நீதி நெறி உணர்ந்த விதுரன் மற்றும் இனி வேறுபல அமைச்சரும் இருந்தார்களே. நல்லது இருந்தால் கெட்டதும் இருக்கவேண்டாமா? பொய்யும் துரோக சிந்தனையும், அராஜகமும் கொண்ட அந்த துரியோதன ராஜாவின் 99 தம்பியரும், தவறான எண்ணங்கள் கொண்ட அதர்ம வழி நடக்கும் தாயமாமன் சகுனியும் கூட ஒரு புறமிருந் தார்கள்.
தர்மவான், நீதி அறிந்த ஒழுக்க சீலன் வான் புகழ் கொண்ட தயாளன், தானத்தில் சிறந்த உயர் மானமும், வீரமும் மதியுமுள்ளவனான தெய்வத்துக்கு சமமான கர்ணனும் உடனிருந்தான். பாரதியின் அந்த பாஞ்சாலி சபத பாடலை பாருங்கள்:
துரியோதனன் சபை
கன்னங் கரியது வாய் -- அகல்
காட்சிய தாய்மிகு மாட்சிய தாய்
துன்னற் கினியது வாய் -- நல்ல
சுவைதரும் நீருடை யமுனையெனும்
வன்னத் திருநதி யின் -- பொன்
மருங்கிடைத் திகழ்ந்தஅம் மணிநகரில்,
மன்னவர் தங்கோ மான் -- புகழ்
வாளர வக்கொடி யுயர்த்துநின் றான்.15
துரியோ தனப்பெய ரான், -- நெஞ்சத்
துணிவுடை யான், முடி பணிவறி யான்,
‘கரியோ ராயிரத் தின் -- வலி
காட்டிடு வான்’ என்றக் கவிஞர்பி ரான்
பெரியோன் வேதமுனி -- அன்று
பேசிடும் படிதிகழ் தோள்வலி யோன்,
உரியோர் தாமெனினும் -- பகைக்
குரியோர் தமக்குவெந் தீயனை யான்,16
தந்தைசொல் நெறிப்படி யே, -- இந்தத்
தடந்தோள் மன்னவன் அரசிருந் தான்.
மந்திர முணர்பெரி யோர் -- பலர்
வாய்த்திருந் தார் அவன் சபைதனிலே,
அந்தமில் புகழுடை யான், -- அந்த
ஆரிய வீட்டுமன், அறம் அறிந் தோன்.
வந்தனை பெறுங்குர வோர் -- பழ
மறைக்குல மறவர்கள் இருவரொ டே, 17
மெய்ந்நெறி யுணர்விது ரன் -- இனி
வேறுபல் அமைச்சரும் விளங்கிநின் றார்;
பொய்ந்நெறித் தம்பிய ரும் -- அந்தப்
புலைநடைச் சகுனியும் புறமிருந்தார்;
மைந்நெறி வான்கொடை யான், -- உயர்
மானமும் வீரமும் மதியுமு ளோன்,
உய்ந்நெறி யறியா தான் -- இறைக்கு
உயிர்நிகர் கன்னனும் உடனிருந் தான்
No comments:
Post a Comment