Wednesday, June 27, 2018

MAHRISHI RAMANA



பகவான்  ரமண மகரிஷி:
'ஒரு  தெலுங்கு பக்தை சொல்கிறாள்''- 4    J.K. SIVAN 
சூரி நாகம்மா : 

எப்படியும்  ஒரு  வருஷம் இருக்கலாம்.  ஒருநாள்   ராமச்சந்திர ராவ்  என்ற ஒரு  ஆயுர்வேத டாக்டர் வந்திருந்தார் . ரொம்ப பேருக்கு அவரை பிடிக்கும். நல்ல கை ராசி டாக்டர் என்று பேர்.  பகவானின் எண்ணற்ற பக்தர்களில் அவரும் ஒருவர்.  பகவானை தரிசித்தவர் மெதுவாக அவர் எதிரில் வணங்கி நின்று  ''சுவாமி  உங்கள் உடல் நல  ஆரோக்கியத்துக்கு  சில மூலிகைகள்  மருந்துகள் பெயர்,   அளவு ,  எழுதிக்கொண்டு வந்திருக்கிறேன். இவை கிடைத்தவுடன்  மருந்து தயார் செய்துவிடுவேன்.''  என்று  சுவாமியிடம்  ஒரு நீள  பட்டியலை பவ்யமாக  நீட்டினார். 

நல்ல பிள்ளையாக  பகவான் அந்த பட்டியலை பொறுமையாக படித்துவிட்டு,  ''நல்ல சக்தி வாய்ந்த மூலிகைகள். அது சரி,   யாருக்கு இதெல்லாம்?''

'''பகவானின் உடல் நலம் பெற''

''ஓ  அப்படியா, ரொம்ப பெரிய  பட்டியலாக இருக்கிறதே.  இதெல்லாம் வாங்க பத்து ரூபாய்க்கு மேல்  தேவைப்படும் போல இருக்கே!  யாரிடம் கேட்பது?

அருகில் இருந்தவர்  ஆஸ்ரமத்தை சுற்றிலும் நோக்கினார்.    ''சுவாமி  இந்த   ஆஸ்ரமம் யாருடையது?''
''ஓ  இந்த  ஆஸ்ரமம் இருக்கே  என்கிறாயா. என்னிடம் என்ன இருக்கிறது? ஒரு ஓட்டைக் காலணா வேண்டுமானால் கூட ஆஸ்ரம  சர்வாதிகாரியை தான் கேட்கவேண்டும். இவ்வளவு பெரிய  மூலிகை ஜாபிதாவுக்கு எப்படி கேட்கமுடியும்.   எனக்கு ஏதோ கொஞ்சம்  ஆகாரம் அளிக்கிறார்கள்.போஜன கூடத்தில் மணி அடித்தால் போய் எல்லோருடனும் அமர்ந்து சாப்பிடுவதோடு சரி. லேட்டாக போனால்  எனக்கு சாப்பாடு கூட கிடைக்காது. நான் எப்படியும் கடைசியாக தான் போய் நிற்பேன். சாப்பிடுவேன். 

ராவ்  நடுங்கினார்.  கையெடுத்து கும்பிட்டார் ''பகவானே,  நான் உங்களிடம் அந்த மூலிகை பட்டியலை தான் காட்டினேன்.பணம் கேட்கவில்லை. நானே  அந்த  மூலிகைகளை மருந்துகளை சேகரிக்கிறேன். வெகு சீக்கிரத்தில் மருந்து தயாரிக்கிறேன் ''  என்கிறார் 

'அப்படியா,  நீயே   தேவையான  மருந்து மூலிகைகளை தேடி சேகரித்துக் கொள்வாயா?  அந்த மருந்து எனக்கு நல்லது செய்யும் என்றால் இங்கு எல்லோருக்குமே  கூட நல்லது தானே செய்யும். எனக்கும் இங்கு இருக்கும் எல்லோருக்கும் கூட  தர முடியுமா?என்று கேட்டார்  அந்த டாக்டரிடம் பகவான் 

அதற்குள் ஆஸ்ரமத்தில் ஒருவர்  ''எங்களுக்கு எதற்கு  சுவாமி மருந்து?''  என்கிறார் 

''ஓஹோ  காலையிலிருந்து இரவு வரை உழைக்கும் உங்களுக்கு மருந்து தேவையில்லை என்றால்  பேசாமல்  உட்கார்ந்து கொண்டு சாப்பிடும் எனக்கு எதற்கு மருந்து?  எனக்கு அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்'' என்றார் பகவான்.

ஒருதடவை இதே போல் தான்   டாக்டர் ஸ்ரீனிவாச ராவ்  பகவானிடம்  ''இங்கிலிஷ் மருந்துகள் சாப்பிட்டால் தெம்பாக இருக்கும் என்றபோது 

''நீங்கள் வசதிக்காரர்.  உங்களால் அந்த மருந்துகள் அடைய முடியும். எனக்கு  விலை உயர்ந்த மருந்துகள் எப்படி கிடைக்கும்.  நான் ஒரு கோவணாண்டி  சந்நியாசி  அல்லவா?''

'' பகவான் எதையுமே  வேண்டாமென்று நிராகரித்துவிடுகிறீர்கள்.  வேண்டும் என்று சுவாமி நினைத்தால் அதெல்லாம் வந்து சேராதா? மருந்து வேண்டாம் என்றால்  பால், பாதம், பழ வகைகள்....இவை ஏதாவது...""

''நீங்கள் சொல்வது ரொம்ப சரி. நான் தரித்திர நாராயணன். என்னால் அவைகளை பெற இயலாது. நான் ஒற்றைக்கட்டையா, பெரிய குடும்பஸ்தன். இங்கு எல்லோருக்கும் எப்படி  நீ சொல்வதெல்லாம் கிடைக்கும்?'' என்கிறார் பகவான்.

ஆஸ்ரமத்தில்  யார் எதை கொண்டு வந்து கொடுத்தாலும் மகரிஷி அதை தொடக்கூட மாட்டார். அவைகளை எல்லோருக்கும்  விநியோகம் செய்யச் சொல்வார். தனக்கு கிடைக்காவிட்டாலும் கவலைப் படமாட்டார். தனக்கு மட்டும் கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு இல்லையென்றால்  ரொம்ப வருத்தம் அடைவார்''
நடக்கும்போது யாராவது எதிரே வந்தால் அவர்களுக்கு முதலில் வழிவிட்டு  தான் ஓரமாக நின்று அவர்கள் கடந்த பின் தான் மேலே நகர்வார். 

ஆயிரத்தில் ஒரு பங்காவது பகவானின் அன்பு, சமரசம், தியாகம் நமக்கு இருக்குமானால் நமது வாழ்வு எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...