Saturday, June 2, 2018

THINK FOR A MINUTE



ஒரு நிமிஷம் யோசிப்போம் -- J.K. SIVAN

''சுந்தர கோதண்டம்'' னு ஏனோ எதற்கோ என் தோப்பனார் எனக்கு பேர் வச்சுட்டார். சுந்தர குண்டு ன்னு தான் எல்லாருமே என்னை பத்தி பின்னாலே பேசறா''. --- வருத்தப்பட்டார் அந்த மாமா. சற்று கணிசமான தொந்தி உடையவர்.

''இதுக்கு எதுக்கு வருத்தமோ கவலையோ? யார் எப்படி வேணா கூப்பிட்டுட்டு போகட்டுமே. பேசட்டும். அதனாலே என்ன? நமக்கு கண் எதிரேயே, பார்த்தசாரதியை பாச்சு, அனந்தாச்சாரியை அந்து, தர்மராஜனை தம்மு என்பது தான் லோகத்தில் வழக்கமாயிட்டுதே''

எதனாலே இப்படி?

காரணம்னு எதுவும் இல்லை. ஈஸி லைஃப். சுலபமா இருக்கு வாய்க்கு என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

வாழ்க்கைக்குன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா தாத்தா ஸார்?

''என்னைக்கேட்டா ஒரு ஒம்பது சின்ன விஷயம் சொல்வேன். அதாலே வாழ்க்கை துளியாவது மேம்படும் என்பேன்''

என்ன தாத்தா சார் அந்த ஒம்பது? சொல்லுங்களேன்.

1. பிறக்கிறவன் ஒவ்வொருத்தனும் பிறந்தவுடனே இப்படி எல்லாம் நடக்கணும் னு பிரிஜ், டிவி, AC மெஷினுக்கு எல்லாம் உபயோகப்படுத்த மேனுவல் ஏதாவது கூடவே கொண்டுவறானா? அது தேவையில்லை. அவரவர் வாழ்க்கையை அவரவர் விரும்பியபடியே அமைத்துக்கொள்ள வழி இருக்கிறது. அதில் முக்கிய விஷயம் தானும் நிம்மதி அடைந்து மற்றவர் களையும் நிம்மதியாக வாழ விடவேண்டும் என்பது தான். வாழ்க்கையின் விதி முறைகள் நேரத்திற்கேற்றவாறு, இடம், காலத்திற்கேற்றவாறு அன்றாடம் மாறுபவை. நிறைய பேசுகிறோமே. பேச்சிலே பிறரை வதைக்கிறோமே. ஒரு நிமிஷம் யோசிப்போம் ...... எத்தனை பேரால் பேசவே முடியவில்லை !!

2. ''என்ன சமையல் நீ பண்ணி இருக்கே. கொழம்பிலே உப்பு அதிகம், துவையல் காரம், ரசம் படு தண்ணி. சே என்னிக்கு தான் உருப்படியா சமைப்பியோ''

-- ஒரு நிமிஷம் கையை வாய்க்கு கொண்டு போகும் முன்பு யோசிப்போம்.......

ஒரு பருக்கை சோறு கூட இல்லாமல் இப்போது எங்கேயோ எத்தனை ஜீவன்கள் பசியால் வாடுகிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது நாம்.எத்தனை மடங்கு பாக்கியசாலிகள். கொஞ்சம் கூடவோ குறைவோ உப்பு, புளி யா முக்கியம்?..!!''

3.'' ராஜி, உன்னை கோவிச்சுண்டுட்டேன். அடிக்கடி கோபம் வருதுடி''

''இது என்ன புதுசா? எங்கப்பன் கடன்காரன், என்னிக்கு கோவிந்தப்ப நாயக்கன் தெரு சத்திரத்திலே என்னை இந்த குடும்பத்திலே கழுத்தை பிடிச்சு தள்ளினானோ அன்னிலேருந்து முப்பது வருஷமா நான் என்ன ஸ்வர்கத்திலேயா இருக்கேன். தோலே தடிச்சிப் போச்சு, காது புளிச்சுப் போச்சு''.

கணவன் மனைவி எலியும் பூனையும், கீரியும் பாம்புமாக நிறைய இருக்கிறார்கள். இருந்தாலும் இவர்கள் எல்லாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் தெரியுமா? ..ஆமாம். அடிச்சதுக்கொண்ணு பிடிச்சதுக்கொண்ணு பட்டு புடவையும் வாங்கி கொள்கிறார்களே...ஒரு நாளும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மனம் இடம் கொடுக்காது.

ஒரு நிமிஷம் யோசிப்போம்.....

எவ்வளவு ஆண்கள் வயது 45- 50ஐ நெருங்கியும் இன்னும் ஒரு பெண் கிடைக்கவில்லை..பணம் கொட்ட தயார். ''தாலி இங்கே, தங்கம்மா எங்கே?'' என்று அலைகிறார்கள்.

எத்தனை பெண்கள் அவர்கள் வீட்டு முதியவர்கள் பாஷையில் '' குதிராக'' வளர்ந்தும், இன்னும் சரியான ''வரன்'' கிடைக்கவில்லை. பெண்களுக்கு பிள்ளைகள் பிடிக்கவில்லை. எதிர்பார்ப்பு அதிகம். பிள்ளைகள் பிடித்தால் அவர்கள் குடும்பம் பிடிக்கவில்லை. கணவன் ஒரு அடிமையாக வரத்தயாரா?''..

''சார், எந்த பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லே. நல்ல பெண்ணாக, ஏழையாக இருந்தால் கூட பரவாயில்லே. ஜாதகம் எல்லாம் ஒன்றுமே வேண்டாம். ஒரு வயசு ரெண்டு வயசு கூட இருந்தாலும் என் மருமானுக்கு என் செலவில் பண்ணிக்கிறேன். ரொம்ப அழகு எல்லாம் வேண்டாம் சார். சுமாரான குடும்பப்பெண்ணாக இருந்தாலே போதும்.''-- இவ்வளவு இறங்கி வந்து கூட பெண் கிடைக்கவில்லை!! ஏன்?

இப்படி பெண்ணோ பிள்ளையோ கிடைக்காமல்,,,,,,,, கிடைத்த பெண்ணோ பிள்ளையோ அயோக்கிய சிகாமணியாக இருந்து கோர்ட்டில் கல்யாணம் முடிந்த கையோடு விவாக ரத்து கேஸ் நடக்கும் ஜோடிகளாக இருக்கும்போது .........நிறைய பெண்களும் ஆண்களும் தனியாக படுக்கையில் கண்ணீர் வடிய தூக்கம் இழந்து கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட துர்பாக்கிய பெற்றோரை பற்றி சொல்ல வார்த்தை இல்லை. இதெல்லாம் பார்க்கும்போது நாம் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள்.
4. '' சே என்ன தேசம் இது. நேர்மையில்லை. நீதியில்லை. எவனைப் பாத்தாலும் பணம் கொள்ளை அடிக்கிறான். சொந்தக் காரனை, புள்ளையை, பொண்ணை, கொண்டு பதவியில் நுழைகிறான். லஞ்சம் ஊழல்.. எல்லோரையும் சகட்டு மேனிக்கு திட்டுகிறோம். குறைகூறுகிறோம். வாஸ்தவம்.''

ஒரு நிமிஷம் யோசிப்போம்.....

எத்தனைபேர் இன்று தங்கள் கனவு நிறைவேறாமலே இன்று காலை கண் திறக்கவில்லை, மூச்சு விட மறந்து
விட்டார்கள்..
நாம் எவ்வளவோ பாக்கியசாலிகள். இனி நல்லநாள் வந்தாலும் அவர்கள் நம்மைப் போல் பார்க்க முடியாதே. நாம் பாக்கியசாலிகள் அல்லவா.

5. '' வீடு இன்னும் உயர வாசல் படி வைத்திருக்க வேண்டும். ஜன்னலை அளவு பெரிசாக வை என்று சொன்னேன். மேலப்பக்கம் அப்துல் ஜபார் வீட்டு வாசலைப் பார்த்து கதவு வேண்டாம் என்று முட்டிக்கொண்டேன். நாலு தென்னை மரத்தில் ரெண்டை வெட்டு என்று சொன்னேன். தொப் தொப் என்று தேங்காய் கண்ணாடி கதவு மேல் விழுகிறது. சனி. கார் ஷெட் அஸ்பெஸ்டாஸ் வேண்டாம் பச்சையோ நீல மோ அக்ரிலிக் ஷீட் போடு.'' நான் சொல்லி யார் கேக்கறா?'' கட்டின வீட்டை வாஸ்துவுக்காக அர்த்தமில்லாமல் எத்தனை மேலும் மேலும் காசை கொட்டி அமைதி இழக்கிறார்கள்.

ஒரு நிமிஷம் யோசிப்போம்....

எத்தனை குடும்பங்கள் கொட்டும் மழையிலும் குளிரிலும் கொதிக்கும் வெயிலிலும் தெருவில் கிழிசல் துணிக்கு மாற்று துணி இல்லாமல், பிவிசி பேன்னர்கள் அடியே பூச்சி பொட்டு கொசுக்கடியில், சிலது தலைக்கு மேலே கூரையே இல்லாமலேயே வாழ்கின்றன. நாம் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள்.! சென்னை பீச் ஸ்டேஷன் இறங்கி காலார எதிரே தெருக்கள், சந்துகளில் நடந்து பாருங்கள். கண்ணில் ரத்தம் வரும்.

6. ''என்ன பண்றாங்க இவங்க. . சேப்பு லயிட் எப்போ பச்சைக்கு வரும். காத்திருந்து போர் அடிக்குது. ஆபிஸ்லிருந்து வீடுபோக கார்லே எவ்வளவு நாழி....? தன்னைப் பற்றியே, தனது வண்டியைப் பற்றியே கவலைப்படும் படித்த முட்டாள்கள்...சார் கொஞ்சம் நில்லுங்கோ.

ஒரு நிமிஷம் யோசிப்போம்.....

''நமக்கு பகவான் கிருஷ்ணன் புண்யத்திலே ஒரு வேலை, வீடு, கார் எல்லாம் இருக்கே. இந்த நிமிஷம் எத்தனைபேர் எந்த வேலையானாலும் பரவாயில்லே. குறைச்ச சம்பளமானாக்கூட மேனேஜ் பண்ணிக்கிறோம், குடும்பத்திலே ஒருவேளை சாப்பாடாவாது வயிறார .கிடைக்குமே. வேலை கிடைக்கவில்லை. லஞ்சம் கொடுக்க கூட கடன் வாங்க தயார்...காரோ, ரெண்டுச்ச க்ரமோ, இல்லாமல் ஆறு ஏழு கி.மீ. நடக்கிறார்கள்... நாம் எவ்வளவு பாக்கியவான்கள்.

7. ''எல்லோரையும் குறை நொட்டு நொசுக்கு சொல்றியே'' ---

ஒரு நிமிஷம் யோசிப்போம்...

நீ என்ன யோக்யனா. எல்லாம் சரியாத்தான் பண்றவனா?. தப்பே என்னன்னு தெரியாதவனா?. செய்யறது எல்லாமே பெர்பெக்டா?.....இப்படி ஒரு கணம் யோசித்தால் பேச்சு குறையும். .


8. வாழ்க்கையே வெறுத்துப் போகிறமாதிரி எண்ணங்கள் வேண்டாம். உன் முகம் சோகத்தில், அதிருப்தியில் ஏமாற்றத்தில் வாடுகிறதா?

..ஒரு நிமிஷம் யோசிப்போம்....

''ஆஹா என்னால் நினைத்தால் என்னால் உடனே சிரிக்க கூட முடிகிறதே.... ஏன் என்றால் நான் உயிரோடு இருக்கிறேனே
.கடவுளே உனக்கு நான் வாழும் ஒவ்வொரு நாளும் நன்றி.

9 கடோசியாக ஒன்று சொல்வேன்..'' ஒவ்வொருநாளும் ஐந்து பக்கம் பார்''.
''என்னய்யா உளர்றே, மொத்தமே நாலு பக்கம் தானே அய்யா? ஐந்து பக்கம் எப்படி பார்க்கிறது?

ஒரு நிமிஷம் யோசிப்போம்.அந்த ஐந்து பக்கம் என்னென்ன?

1 .எதிரே, முன்னாலே: ..எங்கே, எதுக்கு, ஏன், போகவேண்டும் என்று ஒரு திட்டம் வகுத்துக் கொண்டு நகர்வோம்.

2 பின்னாலே : ... எங்கேயிருந்து, எப்படி, எப்போது வந்தவன் நீ ..அதை ஞாபகப் படுத்திக் கொள் . செய்த பழைய தவறுகள் இனி நெருங்காமல் பார்த்துக் கொள் .

3. கீழே : எந்த உயிரையும் காலின் கீழே மிதித்து கொல்லாதே. உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்து பார்த்து நிம்மதி நாடு.. எவரையும் மிதித்து நசுக்கி முன்னேற்றம் வேண்டாம்.

4. அக்கம் பக்கம் : யாராவது இருக்கிறார்களா நமக்கு உதவ, அல்லது நம் உதவியை நாடி, தேடி..ஓடிப்போய் செய்வோமா?



5. மேலே: ''டேய் , நீ என்னவெல்லாம் செய்கிறாய், சொல்கிறாய். நான் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்'' என்று மேலே கிருஷ்ணன் என்று ஒருவன் இருக்கிறான்.. அது தெரியுமா? .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...