Wednesday, June 6, 2018

KABIR DAS



நள்ளிரவில் ஞானம் - J.K SIVAN

நான் எந்த மதம் பற்றியதாக இருந்தாலும் நல்ல விஷயங்கள் மனதை தொட்டால் அதை உங்களிடம் பங்குகொள்ளும் ஒரு கெட்ட பழக்கம் உள்ளவன். பெரும்பாலும் நமது ஹிந்து சனாதன தர்மத்திலேயே பல பிறவிகளுக்கு தேவையான நல்ல விஷயங்கள் இருக்கிறதே. ஹிந்து அல்லாத ஒரு சில முஸ்லீம்களும் பூர்வ ஜென்ம வாசனையாக ஹிந்து தெய்வங்கள் மீது ஈர்ப்பு கொண்டது நமது நூல்களில் சரித்திரமாக விளங்குகிறது. அப்படி ஒரு முஸ்லீம் தான் கபீர் தாசர். கிருஷ்ண பக்தர். அவரைப்பற்றி கேள்விப்பட்டு நிறைய சாதுக்கள் அவரை சந்தித்ததுண்டு.

ஒரு நள்ளிரவு. எல்லோரும் நன்றாக தூங்கும்போது வாசல் கதைவை யாரோ தட்ட, விளக்கேற்றி கதவு திறந்த கபீர் தாஸ் சில சாதுக்களைக் கண்டு பரம சந்தோஷப்பட்டார்.

''அட என்ன பாக்கியம், நமது வீட்டைத் தேடி வைஷ்ணவர்கள் வந்திருக்கிறார்களே''​ ​. அவரும் அவர் மனைவியும் வந்தவர்களை உபசரித்து அவர்கள் காலில் விழுந்து வணங்கினர்.

கபீர் வசித்தது ஒரு பழைய ஒட்டு வீடு. எந்நேரமும் விழுந்து விடுவேன் என்று பயமுறுத்தும் கூரையும் பழைய காரை பெயர்ந்த சுவர்களும். எங்கு நோக்கினும் தரித்திரம் தனது ரூபத்தைக் காட்டியது. உணவுப் பொருள்களே வீட்டில் கிடையாது. அவர்களே பாதிநேரம் பட்டினி. குழந்தைகளோ கிழிசல் துணியோடு, கிழிந்த பாயில் பசியோடு தூங்கிக் கொண்டிருந்தன. கபீர் அந்த குழந்தைகளை தரையில் உருட்டிவிட்டு கிழிசல் பாயை உருவி வந்த சாதுக்கள் அமர்வதற்கு போட்டார்.

''நீ ஏதாவது இவர்களுக்கு ஆகாரம் தயார் செய்'' என்று மனைவியிடம் கபீர் சொன்னபோது அவள்

''வீட்டில் மணி அரிசி கூட இல்லையே என்ன செய்வது? நமது வறுமை நிலையை அறிந்த அண்டை அசலில் யாரும் நமக்கு எதையும் கடனாக கூட தருவதில்லையே'' என்று அழுதாள். கபீர் திகைத்து நின்றபோது அவள் நான் ஏதாவது ஏற்பாடு செயகிறேன் என்று வெளியே கிளம்பினாள். விடுவிடுவென்று மழையை லக்ஷியம் பண்ணாமல் அந்த நள்ளிரவு நேரத்திலும் கடைத்தெருவுக்கு நடந்தாள். வந்த சாதுக்களுக்கு உணவளிக்க முடியாவிட்டால் பெரும் பாபம் என்று கருதினாள்.

​அதிர்ஷ்டவசமாக அந்த நள்ளிரவிலும் ஒரு கடைக்காரன் கடையிலே தூங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பினாள்.

''ஐயா, எங்கள் வீட்டுக்கு சில வைஷ்ணவ புனித யாத்ரை சென்ற பக்தர்கள் சாதுக்கள் வந்திருக்கிறார்கள்.பசியோடு வந்த அவர்களுக்கு ஏதாவது ஆகாரம் சமைக்க வேண்டும். கொஞ்சம் அரிசி பருப்பு எண்ணெய் வேண்டும். நீங்கள் சொல்லும் விலையை கொடுத்துவிடுவோம். இப்போது பொருள்களை கொடுத்து உதவ வேண்டும்''

''பெண்ணே நீ யார்?

''இஸ்லாம் மதத்தில் பிறந்தாலும் சிறந்த வைஷ்ணவர் கபீர் தாசர் என் கணவர். கொஞ்சம் சீக்ரம் பொருள்களைத் தருகிறீர்களா? அவர்கள் பசியாற வேண்டுமே''

அழகாக இருந்த கபீர் மனைவி மேல் தவறான எண்ணம் விழுந்து விட்டது கடைக்காரனுக்கு.

''என் ஆசையைப் பூர்த்தி செய்தால் உனக்கு நீ கேட்கும் பொருள்களை மட்டும் அல்ல உனக்கு நல்ல ஆடைகள் அணிகலங்களும் கிடைக்கும். இஷ்டமில்லையென்றால் இங்கிருந்து போய்விடு'

''பகவானே, இதுவும் உன் சோதனையா. நான் எப்படி வெறுங்கையோடு வீட்டுக்கு செல்வேன்.எங்கே இந்நேரம் எனக்கு உணவுப் பொருள்கள் கிடைக்கும்.வந்தவர்கள் பசியோடு திரும்பிச் செல்வார்களே. அந்த பாபத்தை எங்கே கொண்டு செல்வேன்? இப்போதுள்ள நிலையில் எப்படியும் எனக்கு ஒரு பாபம் நிச்சயம்.''

காட்டில் ரிஷிகளின் மனைவிகள் அவர்கள் சொல்லையும் மீறி கிருஷ்ணனுக்கு உணவு கொண்டு செல்லவில்லையா? சந்தர்ப்பம் சூழ்நிலை என்னை விரட்டினால் வேறு என்ன வழி? இறைவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு சாஸ்திரம் சம்ப்ரதாயம்​, மானம்​,​ கற்பு எல்லாம் துறக்கிறேன். என் சீதா தேவி என்னைப் புரிந்துகொண்டு காப்பாற்றுவாள்'' என்று ஒரு கணம் யோசித்த கபீர் மனைவி தைரியமாக பேசினாள்:

''ஐயா, முதலில் எனக்கு உணவுப் பொருள்களை​ கொடுங்கள்.​ ​.விரைவில் வீடு சென்று விருந்தாளிகளாக வந்த வைஷ்ணவ சாதுக்களுக்கு உணவு

தயாரித்து பரிமாறிவிட்டு அதிதி போஜனம் முடிந்ததும் சத்தியமாக நான் உங்களிடம் திரும்ப வருவேன்.இப்போதே அவர்கள் களைத்து உறங்கியிருப்பார்கள். சொன்ன வார்த்தை மீற மாட்டேன் இது சத்தியம்''

கடைக்காரனுக்கு அவள் பேச்சில் நம்பிக்கை இல்லை. வெறும் டயலாக் என்று சந்தேகித்தான். இருப்பினும் ''நீ​ ​கடவுள் மேல் சத்தியம் செய் நான் நம்புகிறேன் என்றான்.

கணமும் யோசிக்காமல் அவள் ''என்​ ​கிருஷ்ணன் மேல் ஆணை. நான் சொல்வது சத்தியம்'' என்றாள் கபீர் மனைவி..

உணவுப்பொருள்கள் பெற்றாள். ஓடினாள். காத்திருந்த வைஷ்ணவர்கள் வசம் அவற்றை ஒப்புவித்தாள். அவர்கள் தங்கள் உணவை தாங்களே தயார் செய்து கொண்டார்கள்.​ ​கபீரும் அவர் மனைவியும் அவர்களுக்கு வேண்டிய பாத்திரங்கள் கொடுத்து உதவ தேவையான உணவை அவர்கள் தயார் செய்து வயிறார உண்டார்கள். ​ ​கபீர் மனைவி கணவனைத் தனியே கூப்பிட்டாள்.​ ​விவரங்கள் சொன்னாள் . அழுதாள்.

'நீங்கள் இவர்களை உபசரியுங்கள்.அவர்களை திருப்திப்படுத்துங்கள். நான் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்.உங்கள் அனுமதியுடன் எனக்கு விடை கொடுங்கள் என்றதும் கபீர் மிகவும் வருந்தினார்.​ அவள் நிலையை புரிந்து கொண்டு.

''நானும் வருகிறேன் அம்மா. அந்த கடைக்காரன் பாக்யவான். அவனால் அல்லவோ இந்த வைஷ்ணவர்கள் பசி ஆறியது.அவனது செய்கைக்கு நாம் எவ்விதத்தில் கைம்மாறு செய்ய போகிறோம். அழியும் உன் உடலை அவனுக்கு அளிப்பதன் மூலம் ஒரு சிறந்த புண்யத்தை நாம் பெற்றோமே.இந்த வறுமை நிலையில் இதைத் தவிர நம்மால் செய்ய முடிந்ததென்ன? நானே உன்னை என் தோளில் சுமந்து செல்கிறேன்​ தாயே''

​''​வெளியே கனத்த மழை.காரிருள் இன்னும் விலகவில்லை.நீ எப்படியம்மா மீண்டும் தனியே செல்ல முடியும்​?'' என்று ​ மனைவியை தோளில் சுமந்து கபீர் இருளில் நடந்தார்.இருவர் மனமும் ஸ்ரீ ராமா கிருஷ்ணா என்றே உச்சரித்துக்கொண்டிருந்தது. கடையை நெருங்கியபோது கடைக்காரன் அவளுக்காக காத்திருந்தது தெரிந்தது.'

'அவள் எங்கே வரப்போகிறாள்​ ஏமாற்றுக்காரி'' என்று மனம் கொதித்துக்கொண்டிருந்தவனுக்கு அவளைப் பார்த்ததும் அவன் தன்னையே நம்பவில்லை.''நீ நல்லவள். சொன்ன சொல் தவறாதவள். இந்த கொட்டும் மழையிலும் உன் கால்களில் சேறு தண்ணீர் எல்லாம் படாமல் எப்படி வந்தாய்?

''என் கணவர் என்னைத்​ தோளில் தூக்கிக் கொண்டு வந்தார்​. ஐயா நீங்கள் கொடுத்த பொருட்களால் சிறந்த வைஷ்ணவர்கள் பசியாறி அவர்கள் மனமார அளித்த ஆசிகள் உங்களையே சேரும்.அவர்கள் பசி தீர்த்த புண்யம் உங்களது. இனி இந்த என் உடல் உங்களுடையது.நீங்கள் என்ன​ ​வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். எல்லாம் என் கிருஷ்ணன், ஸ்ரீ ராமன் செயல்''

எவ்வளவு் கெட்ட எண்ணம் கொண்டவனானாலும் கடைக்காரன் மனதில் எண்ணச்சுழல்.​ ​

''அடடா, என்ன தவறு செய்தேன் நான். எண்ணற்ற பிறவி எடுத்து கடைசியில் இந்த மனிதப் பிறவி வாய்த்தும் என் மனம் ஏன் தவறான பாதையில் சென்றது. கபீர் உலகையே துறந்தவர். ஒரு ஞானி. அவர் மனைவியின் மனம் துன்புறச் செய்து விட்டேனே. ஒரு துளசிச் செடியை கோடாலி கொண்டு வெட்டினேனே. ஒரு கங்கையை புனிதமிழக்க திட்டமிட்டேனே.​ ​''அம்மா​​ நீ முதலில் என் தாய்.​ ​நான் வேறு மனிதன் இப்போது​'' என்றான் கடைக்காரன். ​​அவளை வணங்கினான். ​'​என் சொற்களை மனதில் இருந்து அப்புறப்படுத்துங்கள். ஏதோ அறியாமல் செய்த பிழை அது. என்னை உங்கள் மகனாக ஏற்று மன்னியுங்கள் தாயே​'' ​ அவன் கைகள் அவள் பாதங்களைத்தொட்டு வணங்கிய போது அவன் கண்ணீர் அவள் பாதத்தை நனைத்தது.''

மனம் திருந்தி வருந்தினால் அதுவே தவறு செய்ததுக்கேல்லாம் பிராயச்சித்தம்.​ வெளியே மழை ஒரு பாட்டம் பெய்து அவன் அவன் கடையில் இருந்த அழுக்கை போல், அவன் மனத்திலும் இருந்த மாசு, அழுக்கு, தூசி தும்பு எல்லாம் பக்தி மழையில் விலகியது.​ கபீர் தம்பதிகளை காலில் விழுந்து வணங்கினான்.''சுவாமி என்னை மன்னியுங்கள்''

''என் மகனே''​ என்று அவனை வாரி அணைத்துக் கொண்டார் கபீர் தாசர். தூயவர்களின் பார்வை பட்டாலே தீமைகள் தீய எண்ணங்கள் நம்மை விட்டு நீங்கும் இல்லையா?



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...