ஐந்தாம் வேதம் J.K. SIVAN
39 வியாசரின் விளக்கம்
ஊரெல்லாம் துருபதன் மகள் திரௌபதி ஸ்வயம்வரம் பற்றிய பேச்சாக இருந்தது. அர்ஜுனன் வீரம் சாகசம் பற்றி வாய் வலிக்க சொல்லிக்கொண்டிருந்தார்கள்; எல்லோருக்கும் பாண்டவர்கள் என்றால் எப்போதும் பிடிக்கும். அதுவும் பீமன் அர்ஜுனன் என்றால் கேட்கவே வேண்டாம்; ஆனால் துருபதன் மனதில் ஒரு துக்கம், கிலேசம். அவனை வாட்டிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தான் வேத வியாசர் அங்கே வந்தார்;
''துருபதா, என்னோடு வா'' என்று அழைத்துச் சென்ற வியாசர் அவனிடம் சொன்னார்:
''தேவர்களும் ரிஷிகளும் நைமிசாரண்யத்தில் ஒரு முறை கூடி ஒரு பெரும் யாகம் நடந்தது. யாகத்தில் விவஸ்வான் மகன் யமன் பல உயிர்களை மாய்த்தான். ஆனால் ஒரு மனிதனின் உயிரையும் பறிக்கவில்லை. எனவே மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.தேவர்கள் பிரமனிடம் சென்று இதுபற்றி கூறி மரணமற்ற தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் வித்யாசமின்றி அல்லவோ இதனால் போய் விடும்''என்று தம் கவலையை வெளிப்படுத்த, பிரமன் ''யமனின் யாகம் முடிந்தவுடன் நிலைமை பழையபடி ஆகும் கவலை வேண்டாம்'' என்றார்.
அப்போது தான் பார்த்தனர். அருகே பாகீரதி நதியில் சில சிறு தங்கத் தாமரை மொட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக மிதந்து சென் றுகொண்டிருந்ததை. தேவர் தலைவன் இந்திரன் நதியோரமாக நடந்தே போய் அது எங்கிருந்து மிதந்து வந்தது என்று ஆராய்ந்தபோது ஒரு தேவலோக அழகி ஒருவள் அழுதுகொண்டே அந்த நதியின் உற்பத்தி ஸ்தானத்தில் ஸ்நானம் செய்து கொண்டிருப்பதை பார்த்தான். அவள் கண்ணீர் சொட்டுக்கள் ஒவ்வொன்றும் தான் தங்கத் தாமரையாக நதியில் மிதந்து வந்தன. அதிசயித்துப் போன இந்திரன் அவள் அருகில் சென்றான்.
''யாரம்மா நீ, ஏன் அழுகிறாய்?''
வியாசர் இந்த கதையை தொடர்ந்து துருபதனிடம் சொல்கிறார்.
''தேவர்களின் தலைவனே, உனக்கு என்னைப் பற்றி தெரியலாம். இருப்பினும் என் பின்னே வா உனக்கே தெரியும் என் துயரம் எதற்கு என்று?'' அவள் நடக்க பின் தொடர்ந்தான் இந்திரன்.
இமய பனிமலையின் சிகரத்தில் ஒரு சிம்மாசனத்தில் சுந்தர ரூபனாக ஒருவனைக் கண்டு இந்திரன் அலட்சியமாக இருந்தான்.அருகில் நின்ற இந்திரனை அந்த சுந்தரரூபன் பார்த்த பார்வையிலேயே இந்திரன் சிலையானான். அந்த சுந்தரரூபன் ஈசானன். அழுதுகொண்டிருந்த பெண் இந்திரனைத் தொட்டாள் . கல்லாக மாறிய இந்திரன் ஒரு பாதாள குகையில் சென்று விழுந்தான். உள்ளே பார்த்த இந்திரன் நடுங்கினான். அவனைப்போலவே எத்தனையோ பேர் உள்ளே சிலையாக.
''இந்திரா, வானுலக தேவர் தலைவன் பதவி வகிக்கும் நீ மமதை கொண்டலைவது தவறு. அவர்களைப் போல் நீயும் வருந்தி சில காலம் இருந்து திருந்தி, மனிதனாகப் பிறந்து தவறு இன்றி வாழ்ந்து தேவலோகம் மீண்டும் செல்வாய். மற்ற தேவர்களும் இந்திரர்களும் சிவனை வேண்டி விடுதலை தேடினர். வெகுகாலம் தண்டனை அனுபவித்தார்கள். சிவனது அருளால் பூமியில் அவர்கள் ஐவர் அங்கு ஒரு தாயின் புத்ரர்களாக அவதரித்து மோக்ஷம் அடையும் வரை காத்திருப்பது முடிவாயிற்று. தீய மனிதர்களோடு மோதி உங்கள் சக்தியை பிரயோகித்து அவர்களை அழித்து இந்திரலோகம் திரும்புவீர்கள் ''
அவர்களும் ஈசானனுக்கு வாக்களித்தார்கள். ''நாங்கள் பிறக்கும்போது நாங்களாகவே இல்லாமல் எங்கள் சக்தி அம்சம் கொண்ட மனிதர்களாகவே பிறக்கிறோம்.''
சிவன் அவர்கள் விருப்பத்திற்கு இணங்கினார் . அந்த அழகிய பெண்ணை அவர்கள் மனைவியாக படைத்தார். பாதாள குகையில் இருந்த ஐந்து இந்திரர்களும் அந்த பெண்ணும் சிவனோடு சேர்ந்து நாராயணனை அணுகி அவர் ஒப்புதலும் பெற்றனர்.
நாராயணன் தானே இருவராக அவர்களோடு பிறப்பதாக கூறினார் . அவர்களே கிருஷ்ணனும் பலராமனும். அந்த பெண்ணுக்கும் சிவன் அவள் தவத்தில் மகிழ்ந்து அவள் வேண்டிய நல்ல சிறந்த குணங்களை உடைய கணவன் கிடைக்க அருளினார். அவள் ஒரு கணவன் கேட்க அவளுக்கு ஐந்து கணவன்களை அளித்தார்.
''நான் நல்ல குணங்கள் கொண்ட ஒரு கணவனை அல்லவோ வேண்டினேன்?''
''ஆமாம் பெண்ணே, என்னென்ன குணங்கள் கொண்ட கணவன் வேண்டும் என்று ஐந்து குணாதிசயங்களை கோரி அவ்வாறுள்ள கணவன் வேண்டும் என்று தனித்தனியாக ஐந்து முறை கேட்டதால் உனக்கு ஐந்து கணவர்களை நீ கேட்ட குணங்களோடு அடைவாய்'' என்றார் சிவனார்.
''துருபதா, உன் பெண் திரௌபதி தான் அந்தப் பெண். மகாலக்ஷ்மி உன் பெண்ணாக அவதரித்தவள். சிவனிடம் பெற்ற வரத்தின் பயனாக அவளுக்கு பாண்டவர்கள் ஐவரும் கணவன்மார்கள். நான் சொன்னது இறைவனால் விதிக்கப்பட்ட முடிவு. நீ மாற்றி ஏதாவது செய்வதானால் நீயே உன் விருப்பப்படி செய்துகொள்ளலாம் '' என்று வியாசர் கூறியபோது துருபதன் வியாசரை வணங்கி என்ன கேட்டான்?
No comments:
Post a Comment