கவி காளமேகம் J.K. SIVAN
பாம்பும் நல்லெண்ணையும் ஒன்று
தமிழ்ப்புலவர்கள் , கவிஞர்கள் பேர் பட்டியலில் தனித்து ஜொலிக்கும் ஒரு பெயர் காளமேகம். அவர் வாழ்க்கை பற்றி முன்னமே நிறைய
சொல்லி இருக்கிறேன். இருந்தாலும் ஒரு வரி மீண்டும் ஞாபகப்படுத்தட்டும்.
சொல்லி இருக்கிறேன். இருந்தாலும் ஒரு வரி மீண்டும் ஞாபகப்படுத்தட்டும்.
வரதன் ஒரு வைஷ்ணவன். சமையல் காரன். திருவானைக்கா கோவிலில் ஒரு சைவப்பெண் மேல் காதல் கொண்டு அவளது சிவபக்தியால் கவரப்பட்டு சைவனாகிறான். அவளை சந்திக்க திருவானைக்கா ஆலயமண்டபத்தில் காத்திருந்தவன் அப்படியே தூங்கிவிட்டான். அந்தமண்டபத்தில் வெகுநாளாக சரஸ்வதியை வேண்டி தவமிருந்த ஒரு பிராமணன் இருந்தான். இரவு சரஸ்வதி ப்ரத்யக்ஷமாகி பிராம்மணன் வாயில் தனது எச்சில் தாம்பூலம் அளிக்க முன்வருகையில் அவன் மறுக்க, சரஸ்வதி நன்றாக தூங்கிக்கொண்டிருந்த வரதனை எழுப்பி அவன் வாயில் தாம்பூலம் தருகிறாள். கனவில் தனது காதலி தான் வாயில் தாம்பூலம் அளிக்கிறாள் என்று அரைத்தூக்கத்தில் வரதன் சந்தோஷமாக அதை நாவில் பெற்றுக்கொள்கிறான். கலைமகள் அருளினால் காதலிக்கு காலத்திருந்த வரதன் காலமெல்லாம் நமக்கு கவி காளமேகமானான். மற்றவை புத்தகங்கள், படங்களில் காண்க.
காளமேகம் சிலேடை எனும் இரு பொருள் தரும் கவிகள் இயற்றுவதில் மன்னன். மாடலுக்கு (மாதிரிக்கு) ஒரு சில இங்கே பார்ப்போமா? இது முதலாவது.
நல்ல பாம்பும் நல்ல எண்ணையும் நல்ல என்ற பேரைப் பெற்றவை அல்லவா. அவற்றுக்குள் உள்ள பொருத்தம் என்ன ?
ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டை
பற்றின் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது .
அந்த காலத்தில் நல்ல பாம்பை வளர்ப்பவன் குடத்தில் தான் அவற்றை தூக்கி வருவான். அப்புறம் ஓலைக் கூடை அதன் வீடாயிற்று. நல்ல பாம்பு படமெடுத்து ஆடிய பின்னர் பாம்பாட்டியின் குடத்தில் அடைந்துகொள்ளும்.
எள்ளை நன்றாக செக்கு இயந்திரத்தில் ஆட்டி அரைத்தபின்னால் எள் எண்ணையாகி குடத்தை நிரப்பும்.
படமெடுத்து ஆடும்போதே 'உச்' என்று இரையும்.
பாம்பு படமெடுத்தாடும்போது உஸ் என்று சீறி சப்தம் போடும். எண்ணையாகும்போது செக்கு மரத்தில் எள் நசுங்கி அதே சப்தம் போடும்.
பாம்பு குடத்தில் இருந்தபோது திறந்தாள் புஸ் என்று தலை தூக்கி முகம் காட்டும். நல்ல எண்ணெய் குடத்தை திறந்து பார்த்தால் நமது அழகிய எண்ணெய் வழியும் முகம் எண்ணையில் துல்லியமாக தெரியும்.
பாம்பாட்டி பாம்பு படுக்க மண்ணால் ஒரு மண்டை ஓடு போன்ற துளையிட்ட ஓடு வைத்திருப்பான். அதில் போய் சுருண்டு ஒளிந்து சப்தம் செய்யும். நல்ல எண்ணையை சுட சுட காய்ச்சி சனிக்கிழமை அன்று காலை அம்மா பிடித்து இழுத்து உட்கார்த்தி தலையில் தேய்த்த பொது பரபர வென்று அரிப்பது போல் இருக்கும்.
நாக்கை பாம்பு வெளியே நீட்டினால் பார்க்கும்போது அது நுனியில் இரண்டாக பிளந்தது போல் இருக்கும். (பிண்ணாக்கு: பிளந்த நாக்கு) பிளவுபட்ட நாக்கு. எள்ளை நன்றாக செக்குமர குழவி நசுக்கி எண்ணெய் ஆட்டி கடைசியில் வெறும் எள்ளு சக்கை பிண்ணாக்காக வெளியே தள்ளப்படும்.
இந்த விதமாக நல்ல எண்ணையை யும் நல்ல பாம்பையும் ஒரே வார்த்தையில் எளிதில் புரியும்படி நிறைய காசு வாங்கிக்கொண்டு எந்த ஹோட்டலிலாவது குடித்துக்கொண்டே யாராவது உலக மஹா கவிஞன் நாலு வார்த்தை எழுதுவானா என்று எனக்கு தெரியாது. உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்.
No comments:
Post a Comment