Thursday, June 28, 2018

AINDHAAM VEDHAM


ஐந்தாம் வேதம் J.K. SIVAN
43 காட்டுத் தீ

ஜனமேஜயன் திறந்த வாய் மூடாமல் வைசம்பாயனர் தனது முன்னோர்கள் பாண்டவர்களை பற்றி கூறுவதை கேட்டுக்கொண்டிருந்தான். இரவு வெகுநேரம் அவர்களை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தான். மீண்டும் எப்போது பொழுது புலரும், எப்போது வைசம்பாயனர் மறுபடியும் தொடர்வார் என்ற ஆர்வத்திலேயே அவன் பொழுது போனது. நாமும் அவனோடு சேர்ந்து கேட்போம்.

அபிமன்யு பிறந்ததை பாண்டவர்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள். யுதிஷ்டிரன் ஆயிரக்கணக்கான பசுக்களையும் திரவியங்களையும் பொன்னையும் பிராமணர்களுக்கு தானமாக கொடுத்தான். துவாரகையில் கிருஷ்ணன், பலராமன் குடும்பத்தில் எல்லோருக்குமே அபிமன்யு செல்லப் பிள்ளையாயிற்றே. சுபத்ரையின் செல்வன் அல்லவா?

அழகில், வீர்யத்தில், கம்பீரத்தில், மாமன் கிருஷ்ணனைப் போலவே இருந்தான். வெகு சீக்கிரத்தில் தந்தை அர்ஜுனனிடம் வில்வித்தை பயிற்சி மிக நன்றாகப் பயின்றான்.

இப்படி சந்தோஷமாக காலம் செல்ல ஒரு நாள் கிருஷ்ணனும் அர்ஜுனனும் தனியே ஒரு கானகத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு பிராமணன் அவர்களை நெருங்கி வணங்கி நின்றான்.

''யாரப்பா நீ என்ன வேண்டும் உனக்கு?'' என்றான் அர்ஜுனன்

''மஹாராஜாக்களே, நீங்கள் தான் என் பசியைப் போக்கவேண்டும்'' என்று வேண்டினான் அந்த பிராமணன் .

''நீ யார் என்றே சொல்லவில்லையே, உனக்கு என்ன உணவு வேண்டுமோ கேள் அதை அளிக்கிறோம் '' என்று அர்ஜுனன் சொல்ல,

''நான் அக்னி'' எனக்கு அதோ தெரியும் காண்டவ வனம் வேண்டும். அதை நான் எரிக்கமுடியாமல் இந்திரன் தடுத்துக் கொண்டிருக் கிறான். ஏனேனில்அந்த கானகத்தில் அவன் நண்பன் தக்ஷகன் என்கிற ஒரு நாக ராஜன் வாழ்கிறான். எப்படியாவது எனக்கு வேண்டிய உணவை அளிக்கிறேன் என்று சொல்லிய நீங்கள் அந்த காண்டவ வனத்தை நான் அழித்து கபளீகரம் பண்ண உதவ வேண்டும்''

''வைசம்பாயன ரிஷியே, என்ன காரணத்தால் அக்னி காண்டவ வனத்தை தீக்கிரையாக்க விரும்பினான்?'' என்று ஜனமேஜயன் குறுக்கே ஒரு கேள்வி கேட்கிறான்? எனவே ஒரு புது கதை ஆரம்பிக்கிறது:

ச்வேதகி என்று ஒரு ராஜா. அந்த கால மற்ற ராஜாக்களைப் போல அவனும் ஒரு பெரிய யாகம் பண்ணி அதிக சக்தி பெற முயன்று நிறைய பிராமணர்களை அணுகினான். அவர்கள் அவனை மதிக்கவில்லை. அவன் அவர்களிடம் நிறை தான தர்மங்கள் தருவதாக வாக்களித்தும் அவர்கள் அந்த யாகத்தை நிறைவேற்றி தர முன் வரவில்லை. பக்தியிலோ, தகுதியிலோ குறைந்தவனா நான், என்ன காரணத்தால் நீங்கள் எனக்கு உதவ தயங்குகிறீர்கள்? என்று கேட்ட ச்வேதகி நீங்கள் உதவாவிட்டால் நான் மற்ற தேசங்களுக்கு சென்று அங்குள்ள பிராமணர்களையாவது கெஞ்சி இந்த யாகத்தை நிறைவேற்றுவேன்.''

''அரசே, எங்களால் இதை நிறைவேற்ற இயலவில்லை, அரசே நீங்கள் ருத்ரனிடம் செல்லுங்கள் அவர் உதவுவார்'' என்றனர் அந்தணர்கள்.

ச்வேதகி கைலாசம் சென்றான். கடுந்தவம் இருந்தான். பரமேஸ்வரன் அவன் முன் தோன்றி, ''பக்தா உன் தவத்தை மெச்சுகிறேன்.உனக்கு என்ன வேண்டும் சொல்'' என கேட்க,

''பரமேஸ்வரா, தாங்கள் என் யாகம் சிறப்பாக நடைபெற உதவ வேண்டும்''

ச்வேதகி, நான் யாகத்தில் உதவி செய்பவன் அல்ல. உன் தவத்தை மெச்சி அதற்காக உனக்கு உதவ முன் வருகிறேன். அனால் ஒரு நிபந்தனை. பன்னிரண்டு வருஷங்கள் அந்த யாகத்தில் ஒரு வினாடியும் வீணாகாமல் நீ பூரண பிரம்மச்சரியம் அனுஷ்டித்து உன் யாகத்தீயில் நெய் வார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்படிச் செய்தால் நீ கேட்கும் உதவி உனக்குண்டு''.

ச்வேதகி அவ்வாறே செய்து பரமசிவன் திருப்தி அடைந்தான். ''ச்வேதகி நான் உனக்கு வந்து உதவ இயலாது என்று சொன்னேன். இருப்பினும் எனக்கு ஈடான ஒரு பிராமண ரிஷி இருக்கிறார் அவரை நீ சென்று உதவி கேட்டால் அவர் உனக்கு உதவுவார்.

''அந்த ரிஷி யார் சுவாமி?
''அவர் பெயர் துர்வாசர் ''.

யாகத்திற்கு சகல ஏற்பாடுகளும் செய்து ச்வேதகி ருத்ரனிடம் மீண்டும் சென்றான். சிவன் துர்வாசரை கூப்பிட்டு ச்வேதகியின் யாகத்தை நடத்திக் கொடுக்க கட்டளையிட்டு யாகம் இனிது வெற்றிகரமாக முடிந்து எண்ணற்ற பிராமணர்கள் திருப்தியாக தானங்கள் பெற்று சென்றனர்.

இதற்கிடையே, அக்னி பன்னிரண்டு வருஷங்கள் ச்வேதகியின் இடைவிடா யாகத்தீயில் வார்க்கப்பட்ட நெய்யைப் பருகி மகிழ்ந்தான். எனவே திருப்தியோடு புத்தொளி பெற்று திகழ்ந்தான். நிறைய ஹோமாக்னி நெய்யை உண்ட அவனுக்கு யாகம் முடிந்ததும் மீண்டும் பழைய நிலையை அடைய முடியவில்லை. மேலும் அக்னி அதிக பசி கொண்டவன் ஆனான். வேறு வழியின்றி பிரம்மாவிடம் சென்று தனது பசியை தீர்க்க வேண்டியபோது. நீ காண்டவ வனம் சென்று அதை அழித்து உன் பசியை தீர்த்துக்கொள் என்றார் பிரம்மா.

அக்னி காண்டவ வனம் சென்றான். அது எரியத் தொடங்கியது. அக்னியின் நண்பன் வாயு அவனுக்கு உதவ அக்னி பெரிதாகி வனத்தை கபளீகரம் பண்ணத் துவங்கினான். காட்டில் வாழ்ந்த ஜீவராசிகள் அனைத்துமாக சேர்ந்து அக்னியின் முயற்சியை தடை செய்ய அக்னி வாடினான். தக்ஷகன் என்ற நாகராஜன் இந்திரனுக்கு வேண்டியவன். ஆதலால் வருணன் அவனுக்கு உதவ அக்னியின் எண்ணம் நிறைவேற தடங்கல் இருந்தது.

பசி தீராத அக்னி மீண்டும் பிரம்மாவை நாட, '' இந்திரனால் உன் முயற்சியில் தோல்வி காண்கிறாய். உனக்கு ஒரே வழி, இப்போது அந்த காண்டவ வனத்தில் நர நாராயணர்கள் அர்ஜுனனும் கிருஷ்ணனும் இருக்கிறார்கள். அவர்கள் உதவியால் தான் உன் காண்டவ வன பசி தீர வாய்ப்பு. உடனே செல்'' என்றார் பிரம்மா.அக்னி ஓடினான் கிருஷ்ணனிடம்.

AINDHAM VEDHAM IN TWO PARTS FOR CHILDREN IN TAMIL AVAILABLE AS DONOR COPIES.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...