Saturday, June 23, 2018

WEDDING RITUAL


டும் டும் டும் கல்யாணம் J.K.SIVAN கல்யாணம் ஆயிரம் கால பயிர். ஒரு வம்சம் விருத்தியாக ஆதார காரணம். பெண்களுக்கு மரியாதை செலுத்தினால் அது பகவானுக்கு சந்தோஷம் தருகிறது. அவமதிபவன் செய்யும் எந்த பூஜை வழிபாடும் கடவுள் ஏற்கமாட்டார் என்கிறது மனுஸ்ம்ரிதி. (3.56) கணவன் மனைவிக்குள் பரஸ்பர அன்பு, நேசம் மரியாதை இருந்தால் தான் சந்தோஷமும் வாழ்வில் நலமும் பெறமுடியும் (மனுஸ்ம்ரிதி 3.60). காலம் மாறிப்போச்சு. கல்யாணம் என்பது கண்டிஷன்கள் நிரம்பிய ஒரு கட்டாயம். அதில் பெண் பக்கம் கை ஓங்கியிருக்கிறது. எல்லாம் டிமாண்ட் சப்ளை விவகாரமாக போய்விட்டது. பணம் பிரதானமாக போய் குணம் கல்தா கொடுக்கப்பட்டுவிட்டது. கல்யாணத்தில் அதிக பலன் அடைபவர்கள் சமையல், மண்டப வியாபாரிகள், அடுத்தது வைதீகத்தை வியாபாரமாக கையாள்பவர்கள். உபவிளைவு பலன் பெறுவோர் கருப்பு கோட்டு வக்கீல்கள், நீதி மன்றங்கள். ஏமாந்த சோணகிரிகள் அப்பாக்கள் அம்மாக்கள். புராண கதை ஒன்று சுருக்கி சொல்கிறேன் சோமன் என்கிற தேவன் சூரியா என்ற பெண்ணை மணக்க அவள் தகப்பன் ஸவிதாவிடம் அஸ்வினி தேவர்கள அனுப்பி, அவரும் சரி என்று சொல்லி, சோமன் சூர்யா வீடு செல்ல அவனை தக்க உபச்சாரத்தோடு வரவேற்கிறார்கள். அக்னி தேவன் சாட்சியாக சூர்யா சோமன் மனைவியாகிறாள். இன்றும் நமது கல்யாணங்களில் அக்னி சாட்சியாக இருக்கிறது. வர ப்ரேஷணம் என்று பெண்வீட்டில் ரெண்டு பேர் போய் மந்திரங்களை உச்சாடனம் செயது வரன் இருப்பதை சொல்லி பெண் கேட்டு ஒப்புதல் பெறுவது, கடைசியில் இப்போது ''வியாபார'' விதிகளை பேசும் நிகழ்ச்சியாகிவிட்டது. கன்னிகையை தானம் செய்வது தான் கல்யாணம். அப்போது சொல்லும் மந்திரம் ''மஹாவிஷ்ணுவால் , இப்படிப்பட்ட சிறந்த கன்யாதானம் செய்யும் வர்கம், பத்து தலைமுறை, ப்ரம்மலோகத்தில் ஆனந்தம் பெறும் என்று சொல்கிறது. பெண்ணின் தகப்பன் மாப்பிள்ளையை மஹாவிஷ்ணுவாக வரித்து அவன் காலில் நமஸ்காரம் செய்வது வழக்கம். தானம் செய்வதால் பண்ணிவைக்கும் பிராமணனுக்கு மற்றவர்களுக்கு தக்ஷிணை கொடுத்து அவர்களை மகிழ்விப்பான். இப்போது வண்டி முன்னாலும் குதிரை பின்னாலுமாகி விட்டது. பிள்ளையை சில பெற்றோர்கள் இப்போது ஒரேயடியாக தானம் கொடுத்துவிடுவதாக அல்லவோ மாறிவிட்டது. கீதை பேராசை நரகத்தின் ஒரு வாசல் என்கிறது. புண்யத்துக்கு கொடுப்பது தானம். தேவைகளை பூர்த்தி செய்ய அல்ல ஆதி சங்கரர் ப்ரஹதாரண்யக உபநிஷத் உபாக்யானத்தில் ''யஜ்னம் " செய்பவன் எஜமானன். யஜ்னத்தை சாஸ்த்ரோக்தமாக செயது கொடுத்த ப்ராமணர்களுக்கு மனம் விரும்பி அளிப்பது தக்ஷிணை. கேட்டு பெறுவது அல்ல என்கிறார். நம்பிக்கை தான் இதற்கு அடிப்படை. கல்யாணம் செய்பவர்கள் வைதிக பிராமணர்களுக்கு திருப்தியாக தனக்கு தோன்றியதை மனமுவந்து அளிக்கவேண்டும். பெறுபவர்களுக்கு ''கேட்டு பெறாமல்'' பெறவேண்டும். மற்ற செலவுகளை குறைத்துக்கொண்டு கொஞ்சம் தாராளமாகவே வைதிகர்களுக்கு தக்ஷிணை தானம் தரவேண்டும். கல்யாண மந்த்ரங்கள் திருமண வாழ்க்கைக்கு பலம் அளிப்பவை. வம்ச அபிவிருத்தியை வளர்ப்பவை . கல்யாணத்திற்கு வந்தவர்கள் வாழ்வையும் வளமாக்குபவை. பெற்றோர்களே திருமணம் உங்கள் செல்வங்களின் எதிர்காலம், அவர்களது சந்ததியின் நோயற்ற வாழ்வை, குறைவற்ற செல்வத்தை, தெய்வ நம்பிக்கையை வளர்ச்சி செ ய்வது. குலப்பெருமை தருவது. நம்பிக்கையோடு மந்திரங்களை புரிந்துகொண்டு செயல்படுங்கள். டாம்பீக செலவு வேண்டாம். குலதெய்வ கோவிலிலோ அந்த ஊரிலோ கொண்டாடுங்கள். உற்றார் பெற்றோர் மட்டும் நெருக்கமானவர்கள் போதும். வயிறு நிரம்ப சாத்வீக உணவு அளியுங்கள். ஏழை எளியோர்க்கு அன்னதானம் அளியுங்கள். பணத்தை வீணாக்காதீர்கள். கல்யாணத்திற்கு நீங்கள் அழைத்த அனைவரின் பெரும்பாலோர் உங்களைப்பற்றியோ, மணப்பெண் பிள்ளை பற்றியோ நினைப்பதே இல்லை, உணவு, கச்சேரி, தமது அலங்காரம், எவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு ஏதோ மொய் எழுதிவிட்டு நண்பர்கள் தெரிந்தவர்களோடு கொஞ்சம் பேசிவிட்டு செல்பவர்கள் தான். கல்யாண மந்த்ரங்களை செவி குளிர கேட்கவேண்டும். பேசவே கூடாது. சோமன் சூர்யா கல்யாணத்தில் வரதட்சிணை பணமாகவோ பொருளாகவோ கார் டிவி, நிலமாகவோ கேட்கவும் இல்லை, கொடுக்கவோ இல்லை. மனமுவந்த ஆசீர்வாதம் தான் வரனுக்கு தக்ஷிணை. கல்யாணத்துக்கு முந்தைய நாள் கணபதிக்கு பூஜை. பெண் பிள்ளை வீட்டார் அருகே உள்ள கோவிலுக்கு சென்று சுவாமி தர்சனம் செய்து திரும்புவது தான் ஜான்வாசம். ஜானு என்றால் முட்டி. இடுப்பில் துண்டு அல்லது வேஷ்டி முட்டி வரை உடுத்துவது. இப்படி உடுத்துவது தான் பின்னால் கல்யாணம் ஆனவுடன் பஞ்சகச்சம் கட்டிக்கொள்வது. டை, கோட்டு ,சூட்டு இல்லை. அது வெள்ளைக்காரனுக்கு அடிமையாக வேலை செய்யும்போது உடுத்துவது. விரதம் என்பது சமாவர்த்தனம். பிள்ளையாண்டான் படிப்பை குருவிடம் முடித்துவிட்டு திருமணம் செய்து கொள்ளும்போது முதலில் அங்குரார்ப்பணம் என்று ஐந்து பாலிகைகளில் (பிரம்மன்,இந்திரன், வருணன்,அக்னி, சோமன்) தானியங்களை ஜலத்தில் போட்டு முளைவிடச்செய்வது. கல்யாணம் முடியும்வரை அது வைத்திருந்து பிறகு குளத்திலோ ஆற்றிலோ அந்தக் காலத்தில் ஜலத்தில் விடுவது. தேவர்களை திருப்தி படுத்துவது இது. நாந்தி அல்லது அப்யுதய ச்ராத்தம். முன்னோர்களை திருப்தி படுத்தி அவர்கள் ஆசி பெற. அபியுதய என்பது தர்ம அர்த்த காம மூன்று புருஷார்த்தங்களை குறிக்கும். வால்மீகி தசரதன் ராமன் சீதா கால்யாணத்திற்கு நாந்தி பண்ணி இந்த புருஷார்த்தங்களை வேண்டினான் என்கிறார் (பலகாண்டம் சர்கம் 72,ஸ்லோகம் 19) இன்னும் மேலே தெரிந்து கொள்வோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...