பழங்கதை கொஞ்சம் J.K. SIVAN
எனக்கு ஐந்தோ ஆறோ வயது.
சொக்கலிங்கம் என்னுடைய ஹீரோ. எப்போ வருவான் என்று காத்திருப்போம். அவனுக்கு 12 - 13 வயசானாலும் எட்டு ஒன்பது வயது பையனைப் போல் தான் இருப்பான். எண்ணெய் காணாத தலை. எப்போதும் ஒரு தொளதொளா காக்கி நிஜார். அதற்கு பொருத்தமில்லாத ஒரு கலர் அரைக்கை சட்டை. பட்டன் இல்லாமல் ரெண்டு safety pin போட்டு மூடி இருப்பான். தாயற்ற சிறுவன். தந்தை ஒரு அச்சகத்தில் அச்சு கோர்ப்பவர். அவருக்கு உதவியாக அவனும் வேலைக்கு போவதால் பள்ளிக்கு போவதை நிறுத்திக்கொண்டான். அவனுக்கு ஆறு ரூபாய் சம்பளம்.
சொக்கலிங்கம் கற்பனை வளம் மிருந்தவன். பேய்க் கதைகள் சொன்னால் மெய் சிலிர்க்கும். பேய்க்கு தரையில் கால் பாவாது என்று சொல்வான். நான் பேய்களை பார்த்து சண்டை போட்டிருக்கிறேன் என்பான். அவன் சொல்வதை கேட்டு திகில் கொண்டு, பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களை பார்க்கும்போதே கால் தரையில் ஊன்றி இருக்கிறதா என்று பார்க்க தோன்றும். வேண்டுமென்றே தனது காலை தரையில் வைக்காமல் தூக்கி வைத்துக்கொண்டு என் கால்களை பாருங்கள் தரையில் படியவே படியாது என்பான். அலறுவோம். திகில் மன்னன் சொக்கலிங்கம். கரெண்ட் இல்லாத காலம். காற்றில் மரங்கள் இருட்டில் அசையும் போது ஏற்படும் சப்தத்துக்கு பேயின் சப்தங்கள் அது என்று எதையோ சொல்வான். தனக்கு பேய் பாஷை தெரியும் என்பான். நம்பியிருக்கிறேன். சாயந்திரம் முடிந்து இரவு வந்துவிட்டால் எதுவும் பேயாக தோன்றும்படியாக எங்களை மாற்றிவிட்டவன் சொக்கலிங்கம்.
கோடம்பாக்கத்தில் ஒரு புத்தக பிரஸ் ஒன்றில் பைண்டிங் வேலை செய்வான். காலைவேளைகளில் மோரும் கொடுக்காப் பளிக் காயும் விற்பான். அவனிடம் கதைகள் கேட்டால் மரங்கள், நிழல்கள் எல்லாம் பேயாக தோன்றும். காற்று சத்தம் பேயின் ஓலமாக கேட்கும். இரவு தூக்கம் பாதிக்கும். யாராவது அருகில் இருந்தால் தான் படுப்போம். தனியாக படுப்பது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று.
வீட்டில் ஏதாவது ஒரு வேஷ்டியோ நீளமான துண்டோ கிடைத்தால் அதை தலைக்கு மேலே இரு கைகளிலும் பிடித்துக்கொண்டு வேகமாக ஓடும்போது அது நீளமாக குடைபோல் காற்றில் விரியும். இது ஒருவிளையாட்டு. வேகமாக ஓடினால் தான் காற்றில் அது நீளமாக தலைக்குமேலே விரியும்.
கைகளை ஸ்டீரிங் வீலாக வளைத்து வளைத்து அசைத்து வாயில் கார் சப்தம், ஹாரன் சப்தம் ஒலித்துக்கொண்டு என்னோடு ஓடும் நண்பர்கள் இருந்தார்கள். வீட்டில் எதாவது சாமான் வாங்கி வா என்று கடைக்கு அனுப்ப மாட்டார்களா என்று காத்திருப்பேன். உத்தரவு கிடைத்தால் என் கார் ஹாரன் அடித்துக்கொண்டே வேகமாக சத்தம் போட்டுக்கொண்டு ஓடும். சாமானோடு திரும்ப வந்து வீட்டில் எங்காவது ஒரு மூலையில் கார் நிற்கும். என் சட்டையைப் பிடித்துக்கொண்டு பின்னால் ஓடி வருபவன் தான் காரில் என்னோடு சக பிரயாணி. ரமணன் தான் அது எப்போதும்.
யார் வீட்டிலாவது ஊஞ்சலில் (அனேக வீடுகளில் அப்போதெல்லாம் ஊஞ்சல் இருந்தது) உட்கார்ந்து ரயில் மாதிரி சப்தம் செய்து ஸ்டேஷன்கள் நிறைய கடந்து அங்கங்கே பிரயாணிகள் மூட்டை முடிச்சோடு இறங்கி ஏறி விளையாடியது மீண்டும் இனி நடக்கப்போவதில்லை. இதில் என்ன வேடிக்கை என்றால், ரயில் ஓட்டுபவன், பெஞ்சில் நடுவில் அல்லது ஒரு ஓரத்தில் இருந்து ரயில் என்ஜின் மாதிரி கத்திக்கொண்டு சைதாப்பேட்டை, அதை அடுத்து மாயவரம், என்று மனம் போன படி எல்லாம் ஊர் பேர் சொல்வான். அவனுக்கு எது எங்கே இருக்கிறது என்று தெரியாது. பேர் மட்டும் கேட்டிருப்பான். ஒருவன் டிக்கெட் கொடுப்பான். ஓசிப்பயணம் கிடையாது.
இரும்பு வளையங்கள் கொண்டு வந்து அவற்றை இயக்க கம்பிகளின் முனையில் U மாதிரி வளைத்து U வில் வளையத்தை வேகமாக தள்ளி வண்டி விடுவோம். இதில் ரேஸ் உண்டு. ஜெயித்தவனுக்கு எத்தனை தீப்பெட்டி லேபில் என்று கணக்கு உண்டு. ' மேச்சஸ்' matches என்று பெயர் அந்த லேபிலுக்கு. இதிலும் ஜான் பாஷா நிபுணன். அவன் சக்கரம் கீழே சாயவே சாயாது . வேகமாக ஓட்டிக்கொண்டே ஓடுவான். சில பேர் சிகரெட் பாக்கேட்களின் அட்டைகளை வெட்டி நிறைய சேர்த்து வைத்திருப்போம். என்னிடம் இருந்தவைக்கு பாசிங்க்ஷோ, வில்ஸ், சார்மினார் என்றெல்லாம் பல பெயர்கள் உண்டு.கோபால கிருஷ்ணன் எங்கள் வீட்டிற்கு மூன்றாவது வீடு. பிள்ளையார் கோவிலுக்கு பின்னால் இருந்த கோவில் அர்ச்சகர் ராமமூர்த்தி சாஸ்திரிகள் பையன். நிறைய சிகரெட் பாக்கெட்டுகளின் பேர் ஒப்பிப்பான். இது அவன் அப்பா காதில் பட்டதில்லை. விழுந்திருந்தால் தோலை உறித்திருப்பார். ,
பம்பரம் சாட்டை ஒரு காலத்தில் போட்டி நடக்கும். குண்டு பம்பரங்களில் ஆணி கூறாக கீழே நீட்டி இருக்கும். சாட்டை என்ற கயிற்றை பம்பரத்தின் வயிற்றில் சுற்றி இழுத்து விடுவான். அந்த சுழற்சியில் பம்பரம் கீழே விழுந்து சுற்றும். அதை கையில் ஏந்துவது ஒரு கலை. கையால் அதை சுற்றும்போது ஏந்தி அடுத்தவனின் சுழலும் பம்பரத்தை அது தாக்கி. அந்த மற்றவன் பம்பரம் செத்து விழும். அதை ஒரு வட்டத்தில் வைத்து மற்ற பம்பர தாரிகள் அதன் மீது தங்கள் பம்பரத்தை சுழற்றி குத்து வார்கள். அது ரணகளப்படும் . அதன் சொந்தக்காரன் கண்களில் ரத்தம் சொட்டும். கையை உயர்த்தி பம்பரத்தை கயிற்றிலிருந்து விடுவித்து குறி பார்த்து அந்த அப்பாவி பம்பரத்தை குத்தி குதறுவது ஒரு வீர விளையாட்டு.
பெண்கள் தாயக்கட்டை, பல்லாங்குழி, ஸ்கிப்பிங், மண்ணில் பள்ளம் தோண்டி புளியங்கொட்டையை புதைத்து மேடுறுத்தி, இரு கைகவிரல்களை கோர்த்துக்கொண்டு ஏதாவது ஒரு இடத்தில் தொபீர் என்று வைக்கவேண்டும். அந்த பகுதியில் புளியங்கொட்டை கிடைக்கா விட்டால் மீண்டும் தேடல். இதை மிகவும் சுவாரசியமாக விளையாடுவார்கள். ஏரோப்ளேன் என்று பாண்டி ஆட்டம். ஒரு மரத்தடியில் நடக்கும்.நவநீதம் என்னை நிறைய தோற்கடித்திருக்கிறாள்.
வீட்டிலோ பள்ளியிலோ விசேஷம் என்றால் பெண்கள் இடுப்பில் ஒட்டியாணம் கட்டிக்கொண்டு கும்மி அடிப்பது விநோதமாக இருக்கும். நடுவில் கூடையை வைத்து சுற்றி சுற்றி வந்து கைகோர்த்து கை தட்டி பாடிக்கொண்டு ஆடுவார்கள். '' பச்சை மலை பவழ மலை எங்கள் மலை அம்மே '' .எல்லா பெண்களுமே பூ தொடுப்பார்கள். தலை நிறைய பூ வைத்திருப்பார்கள்.
''உட்கார்ந்தால் பிடிப்பாயா, நின்றால் பிடிப்பாயா'' என்று அகப்பட்டுக்கொண்ட ஒருவனை பிடித்து ஆப்ஷன் கேட்டு அவனைத் திணற அடிப்போம். நின்றால் பிடிப்பேன் என்று சொன்னால் எல்லோரும் நிற்பார்கள். யாரையாவது பிடிக்க வருவதற்குள் எல்லோரும் அமர்ந்து விடுவார்கள். . அதேபோல் உட்கார்ந்தவனைப் பிடிக்க வரும் முன்பு அவன் சட்டென்று எழுந்து விடுவான்.
இப்போதெல்லாம் உட்காரவும் முடியவில்லை, நிற்கவும் முடியவில்லையே. எழுந்திருப்பதே பெரிய விளையாட்டு.
தெருக்கூத்து சில தினங்கள் பனைமரத் தோப்பில் நடக்கும். ஐந்து ஆறு மணிக்கே கூட்டம் சேர ஆரம்பித்து விடும். இருட்டிய பிறகு, தீவட்டி வெளிச்சத்தில் அல்லது வசதி உள்ள இடங்களில் பெட்ரோமாக்ஸ் விளக்கொளியிலும் கூட தெருக் கூத்து நடைபெறும். அனைவருமே ஆண்கள் தான்.. பெண்கள் வேஷம் போட்டுக்கொண்டு ஆடுவார்கள் பாடுவார்கள். ஜெயராமன் என்ற எங்கள் வீட்டுக்கு துணி வெளுப்பவன் தான் கிருஷ்ணன். முன் பற்கள் மூன்று இல்லை. ஐந்தடி உயரத்தோடு முதுகு கொஞ்சம் கூனி இருக்கும். ரெண்டு கழுதைகளுக்கு சொந்தக்காரன். முன் வழுக்கை தலைக்கு பின் புறம் கழுத்து வரை சுருள் சுருளாக மஞ்சள் நிற முடி. , சூம்பிய சுருங்கிய முகத்தில் நிறைய பச்சையும் நீலமும் சாயம் பூசிக்கொண்டு, தலையில் ஜரிகை கிரீடம் வைத்துக்கொண்டு, முழுக்கை சட்டையின் மேலே அங்கங்கே கை, கழுத்து மார்பு எல்லாம் மறைக்க எல்லா வித நிறத்திலும் பட்டை பட்டையாக மணிகள் கோர்த்த அட்டை மாலை, கவசம் அணிந்து, காதை சுற்றி ஒரு குண்டலம் மாட்டிக்கொண்டு கையில் ஒரு மூங்கில் குச்சி (அது தான் புல்லாங்குழல்) கீச்சு குரலில் பாடிக்கொண்டே சுற்றி சுற்றி வருவான். கழுத்தில் காகிதப்பூ மாலைகள் நிறைய அணிந்திருப்பான். சட்டையை உள்ளே விட்டு வேஷ்டியை இடுப்பில் வரிந்து முடிந்து கீழ்ப் பாஸ் கட்டிக்கொண்டு இருப்பான்.
இது தான் அந்த கிருஷ்ணன் தரித்த பீதாம்பரம். ஒவ்வொரு காட்சியில் இடைவெளியில் பனை மரத்தடியில் பீடி குடிப்பான். கிட்டேயே வரமுடியாத துர்கந்தம். ஜெயராமன் நிறைய நாட்டுப் பாடல்கள் மனப்பாடம் பண்ணியவன். எல்லா பாட்டையும் ஒரே ராகத்தில் தான் பாடுவான். அல்லி அர்ஜுனா, சுபத்ரா கல்யாணம், நல்ல தங்காள், பழையனூர் நீலி, அண்ணன்மார் கதை, எல்லாம் தெருக்கூத்தாக போடுவார்கள். இரவெல்லாம் நடக்கும். நிறைய பேர் அசையாமல் உட்கார்ந்து பார்த்து கூடவே பாடி, ஆடி கைதட்டுவார்கள். பெண்கள் அழுவார்கள். ஜெயராமன் மற்றவர்களுக்கு டயலாக் சொல்லிக் கொடுப்பான். அவர்களுக்கு படிக்க தெரியாது. எனவே வாயால் சொல்லி மனப்பாடம் செய்வார்கள்.
No comments:
Post a Comment