என் கோடம்பாக்கம் வேறு J.K. SIVAN
நம்மில் அநேகருக்கு நாம் என்றுமே அந்த காலத்தில் பட்டாம்பூச்சியாக துள்ளித்திருந்த ஐந்து ஆறு வயது குழந்தையாக கவலையென்றால் என்னவென்றே தெரியாத குழந்தையாக இருந்திருக்க கூடாது என்று தோன்றுமே. எனக்கு தோன்றும் அடிக்கடி.
நாங்கள் அப்போது வடபழனி என்கிற சென்னையில் ஒரு கிராமத்தில் இருந்தோம். அது கிராமமா இப்போது? அப்பப்பா. உலகத்தில் ஹாலிவூட் ரேஞ்சுக்கு போய்விட்ட மிகப்பிரபலான திரைப்பட தொழில் நகரம். உலகமறிந்த கோடம்பாக்கம்.
அப்போதுதான் மெதுவாக ஸ்டுடியோக்கள் வடபழனியை ஒட்டி வளர ஆரம்பித்தன. Aைவு தெரிந்து என் மனதில் குடியிருக்கும் என் பால்ய வயது காலங்களை அங்கு தான் கழித்தேன். இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஜப்பானிய தாக்குதல் தெற்கே சென்னையில் எந்நேரமும் இருக்கலாம் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் நடுங்கிக் கொண்டி ருந்த நேரம். அமைதியாக இருந்த சென்னை நகரம் நடுங்கியது. ஏற்கனவே முதல் யுத்த சமயத்தில் எம்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பல் வீசிய ஒரு குண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் பொருத்தப்பட்ட கலங்கரை விளக்கத்தை குறி பார்த்து வீசப்பட்டு தவறி அது அந்த நீதிமன்றத்தின் பாதத்தில் விழுந்து வணங்கியது. வெள்ளையர்கள் கட்டிய காவல் மதில் சுவர் உடைந்தது. அது விழுந்த இடம் இன்றும் பார்க்க முடிகிறது. இது போதுமே நமது குடும்பங்களுக்கு. திருவல்லிக்கேணி, மைலாப்பூர் பக்கத்தில் வாழ்ந்த மக்கள் எந்நேரமும் யுத்த பயத்தில் தாங்கள் குடும்பத்தோடு மறைவோம் என அஞ்சி வீடு வாசல் எல்லாம் விட்டு தெற்கே ஓடினார்கள். எங்கள் குடும்பம் வடபழனி முருகனை அண்டியது.
அங்கே ஒட்டு மொத்தமாக பிள்ளைமார் குடும்பங்கள் அப்போது வடபழனி ஆண்டவன் கோவில் அருகே சிறப்பாக வாழ்ந்துவந்தது. பத்மநாப பிள்ளை ஸ்ரோத்ரியதார். கிராம முன்சிப். அவரது உறவினர்கள் அடுத்தடுத்து தனித்தனி பங்களா போன்ற பெரிய பழைய கால வீடுகளில் வாழ்ந்திருந்தார்கள். ஒரு பெரிய மச்சு வீடு ரங்கநாதம் பிள்ளையுடையது. அதை கைகோர்த்துக்கொண்டு சிறு ஒட்டு வீடு அதற்கு போனஸ். சிறிதாக நீளமாக இருந்தது. அதை தான் எங்களுக்கு வாடகைக்கு விட்டார்.
மண் தரை. தெருவெல்லாம் பெருக்கி ஜலம் தெளிப்பார்கள். வாசலில் மகிழ மரம். ரங்கநாதம்பிள்ளைக்கு ஒரு பெண். நவநீதம். இளம்பிள்ளை வாதத்தால் சூம்பிய கால் கிட்டத்தட்ட என் வயது. சற்று காலை விந்தி நடப்பாள். என்னோடு பாண்டி விளையாடுவாள். தலையில் மண் ஓட்டுச் சில்லை ''பில்லை''என்ற பெயரில் தாங்கிக்கொண்டு மேலே பார்த்துக் கொண்டு ''ரைட்டா ரைட்டா'' கேட்டுக்கொண்டு ''ராங்'' காக கோட்டை மிதித்து அவுட் ஆன நேரங்கள் அதிகம். நவநீதம் ஸ்கிப்பிங் கயிற்றில் ஆடும்போது அவள் எதிரே நின்று கொண்டு நானும் கயிற்றை சரியான நேரத்தில் தாண்டவேண்டும். கயிற்றில் கால் பட்டு அவளிடம் நிறைய திட்டு வாங்கியது நினைவிலிருக்கிறது.
ரங்கநாதம் பிள்ளைக்கு ரெண்டு பையன்கள். அவர்களில் ஒருவன் ஜம்பு. சிவப்பாக இருப்பான். என் சகோதரன் ஜம்புவைப்போல் இருந்து என் அண்ணன் செய்த விஷமங்களுக்கு தன் சட்டைபோடாத உடம்பில் முதுகில் என் அம்மாவிடம் அரை வாங்கிக்கொண்டு ஓடியவன். பெரிய கொல்லைப் புறம். நிறைய மரங்கள். விளையாட இது போதாதா. அதன் பின்னால் பனை மரங்கள் தோப்பாக இருக்கும். சில தினங்களில் அதன் மீதேறி கள் இறங்குவதை வேடிக்கை பார்த்திருக்கிறேன். எவனோ வழியாட்டாக அவர்கள் வைத்திருந்த கள் சட்டிகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் கள்ளை என் அண்ணா எட்டு வயது ஜம்புவிடம் கொடுத்து அவன் ஏதோ பால் என்று குடித்துவிட்டு மயங்கி விழ வீடு கலகலத்து போய் டாக்டர்கோபால மேனனிடம் அவனை தூக்கிச் சென்றார்கள். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு ஜம்பு கண்ணை திறந்தான். டாக்டர் கோபால மேனன் சிரித்த முகம். மீசையில்லாத சிரிக்கும் T.S.பாலையா. இவரைப்பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுத நிறைய விஷயம் இருக்கிறது.
பத்மநாப பிள்ளை வீடு எதிர் வரிசை எங்கள் வீட்டுக்கு நேரே. பலராம பிள்ளை வீடு அடுத்தது. அதற்கு அடுத்தது கர்ண பிள்ளை வீடு, ஜெர்மன் தலைவர் கெய்சர் வில்லியம் படம் பார்க்கும்போதெல்லாம் சட்டைஇல்லாமல் கர்ண பிள்ளையாக மனதில் தோன்றுவார். கருப்பு கெய்சர் வில்லியம். எப்போதும் சிரித்த முகம் என்ராலும் மீசை பயமுறுத்தும். பார்க்க பயமாக இருந்தாலும் அவர் வாங்கி கொடுக்கும் வேர்க்கடலை, மிக்ஸர், பால்கோவா, லாலா கடை நொக்கல் 80+ல் இன்னும் சுவைக்கிறது. லாலா கடை என்றால் ஏதோ பெரிய கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடை என்று நினைத்து ஏமாற வேண்டாம். அழுக்கு தலைப்பாகை அல்லது தொப்பியோடு ஒரு வட இந்தியன் அவனுக்கு தெரிந்த கொச கொசவென்று ஒரு இனம் புரியாத பஞ்ச கச்சம், மொட்டை கழுத்து பழுப்பேறிய ஜிப்பா. செருப்பில்லா பாதங்கள். வாய் நிறைய வெற்றிலை (பான்) ததும்பி வழிய, ஒரு நாலு சக்கர கை வண்டியை தள்ளிக்கொண்டு வருவான். வண்டியின் கீழே ஒரு மணி தொங்கும். கயிற்றால் அதை ஓசைப்படுத்திக் கொண்டு வரும்போது வண்டியில் சில கண்ணாடி சீசாக்களில் ஓமப்பொடி, வறுத்த வேர்க்கடலை, காலணா அளவில் பால்கோவா, நொக்கல் (காராசேவ் வெள்ளையாக சர்க்கரை பாகில் ஊறினது...) எதற்கு நோக்கல் என்று அதற்கு இந்த பெயர் என்று வேத வியாசரைத்தான் கேட்க வேண்டும்.தெருவின் தெற்கு முனையில் வடபழனி ஆண்டவர் கோவில். வடக்கே சிறிய குளம். அதை தாண்டி பாண்டுரங்கன் கோவில் வரும். தெருவை ஒட்டி பெருமாள் கோவில். அதைச் சுற்றி சென்றால் நான் படித்த சுப்ரமணிய அய்யர் பள்ளிக் கூடம்.
No comments:
Post a Comment