Thursday, June 21, 2018

VAISHNAVA ACHARYAS


வைணவ  ஆச்சார்யர்கள்  J.K. SIVAN 

     
                                                                 யாமுனாச்சார்யார்  -  3

சபையிலிருந்த அனைவரும்  இந்த சிறுவன் யார், இவ்வளவு சாமர்த்தியமாக கேள்விகள் எழுப்பி  மாபெரும்  புகழ் வாய்ந்த பாண்டியனின் பட்டத்து  புலவனை திணற அடிக்கிறான் என்று  வியந்தனர்.  ஆர்வம் மேலிட்டது.  எல்லோரையும் ஒருமுறை எழுந்து நின்று பார்த்துவிட்டு  யாமுனாச்சார்யார் கோலாஹலனை நோக்கி

 'அடடா, எவ்வளவு பெரிய பண்டிதன், கெட்டிக் காரர் . உம்மால்  முதல்  விஷயத்தையே மறுக்க முடியவில்லையோ.  சரி. ரெண்டாவது  கேளிவியோ விஷயமோ  அதையாவது உம்மால்  வெற்றிகரமாக மறுத்து நிரூபிக்கமுடியுமே என்று பார்க்கட்டுமா? .

''இதோ அரசவையில் நமக்கு முன்னாள் அமர்ந்திருக்கும் இந்த பாண்டிய  மன்னன் நேர்மையானவன், நீதி மான், தர்மிஷ்டன், யோக்யன்'' அவன்  அப்படி  இல்லை என்று உம்மால் மறுக்க முடிந்தால் பதில் வரட்டும் ''

இதை கேட்டது  ஓஹோ  ஆஹா  என்று  சபையில் கூச்சல் எழும்பியது.  கோலாஹலனால் தனது காதுகளையே நம்பமுடியவில்லை.  என்ன கேட்டுவிட்ட்டான் இந்த சிறு பயல்.   பண்டிதன் நடுங்கினான். தலை சுற்றியது. முகம் வெளிறியது.  முகம் உடம்பு வியர்த்தது. துடைத்துக்கொண்டான். வாயிலிருந்து  வார்த்தை வரவில்லை.  ராஜா நீதிமான், தர்மவான் யோக்கியன் எல்லை என்று சொல்லமுடியுமா, நிரூபிக்க முடியுமா?''   எல்லோரும் அவனது அவஸ்தையை பார்த்து ரசித்தனர்.

பலத்த  கை தட்டல் எழுந்தது.   எல்லோரையும் கை அமர்த்தி யாமுனாச்சார்யர்  மூன்றாவது கடைசி கேள்வியை எழுப்பினார்.

''பாவம். போகட்டும் பண்டிதரே, உமது   இக்கட்டான நிலை புரிகிறது. சரி இந்த  மூன்றாவது விஷயத்தையாவது மறுத்து என்னை வென்று விட ஒரு சிறந்த  வாய்ப்பு தருகிறேன். கேளும்:

''இந்த ராஜாவின் அருகில் அமர்ந்திருக்கும் ராணி  சதி சாவித்திரி போல் ஒரு பதி விரதை. கற்புக்கரசி,  அது சரியில்லை, அவள் அப்படியல்ல  என்று உம்மால் நிரூபிக்க முடியுமா,  அப்படி  உம்மால் முடிந்தால் நான் தோற்றேன் என்று ஒப்புக்கொள்கிறேன்'' என்கிறார் யாமுனாச்சார்யர்.

பண்டிதன் விழித்தான். கண்களில் ஜலம். இந்த சிறுவனிடம் வகையாக மாட்டிக்கொண்டேனே. எப்படி அவன் சொல்வதை என்னால் மறுக்க முடியும். மறுத்தால் என் உயிர் தப்புமா?

கோலாஹலனை நோக்கி  ஏளனமாக  எல்லோரும்  பார்ப்பது அவனுக்கு ஒரு புறம் அவமானம், மற்றொருபுறம் ஆத்திரம் கிளப்பி விட்டது.  வெறி பிடித்தவன் போல் கையை உதறிக்கொண்டு அவன் கத்தினான்   'ஏ முட்டாளே, எவ்வாறு ஒரு ராஜாவின் பிரஜையாக இருக்கும் நான் என் அரசன் ஒரு அதர்மன், நீதியற்றவன், என்றோ அவன் மனைவி கற்பில்லாதவள் என்றோ கூற முடியும். உனது  குதர்க்கமான குறும்பு பேச்சுக்கு  மறுப்பில்லை என்பதால் நான் தோற்றவனா ? நீ சொன்னவைகளை நீயே மறுக்கமுடியுமானால் நீ தப்புவாய் இல்லையேல் உனக்கு இந்த ஸ்தலத்திலேயே  மரணம் என்பதை நினைவில் வை.'' என்றான்.

சபையோர் இதை எதிர்த்தனர்.  குரல்கள் எழும்பின.   பண்டிதர்  உம்மால்  போட்டிக்கு ஒப்புக்கொண்டு சரியான பதிலை அளிக்க முடியாவிட்டால்  நீங்கள்  ஒப்புக்கொண்டபடி  யாமுனாச்சார்யன்  விடுத்த கேள்விகளுக்க்கான விஷயங்களை  மறுக்க முடியவில்லை என்றால் நீங்கள்  போட்டியில் தோற்றது உறுதியாகும்''  என்றனர்.

''சபையோர்களே, பாண்டிய மன்னரே, நான் கேட்ட  மூன்று கேள்விகளும்  குதர்க்கமானவையோ, விஷமத்தனமோ இல்லை.  சாஸ்திரத்தில் மேற்கோள் காட்டி நிரூபிக்க முடியவை நானே எனது வாக்கியங்களை மறுத்து  நிரூபிக்கிறேன்  கேளுங்கள் :

எல்லோரும் யாமுனாசார்யாரை திறந்த வாய் மூடாமல் சிலையாக அமர்ந்து கேட்டார்கள்.எப்படி இந்த சிறுவன் முக்க முடியாதவற்றை மறுக்கப் போகிறான்?

''முதலாவதாக, மனு சம்ஹிதையில் ஒரு பிள்ளையை மட்டும் பெற்றவள் மலடி என்று வருகிறது. ஒரே பிள்ளையாக பிறந்த பண்டிதரே, நீங்கள் சாஸ்திரப் பிரகாரம் ஒரு மலடியின் மகன்.

ரெண்டாவதாக, அதே மனு சம்ஹிதை பிரகாரம், ஒரு அரசன் தனது பிரஜைகளிடமிருந்து ஆறில் ஒரு பங்கு வரி வசூல் செய்தும், ஆறில் ஒரு பங்கு புண்யமும் பெற்று, அவர்களின் அநீதி, அநியாயம், நேர்மையின்மை, தீய செயல்கள் அவற்றிலும் ஆறில் ஒரு பங்குக்கு சொந்தக்காரன் என்று வருகிறது. கலியுகத்தில் அதெல்லாம் அதிகமாகி விட்டதால், ராஜாவின் பங்கு நிறையவே சேர்ந்து விட்டது. எனவே ராஜா அநீதிமான், அதர்மன், தீங்கு செய்தவன்,

மூன்றாவதாக, அதே மனு சம்ஹிதையில் வருகிற விஷயம் என்னவென்றால், அரசன் அக்னி, வாயு, வருணன், சந்திரன், யமன்,குபேரன் இந்திரன் சூரியனுக்கு சமம் ராஜா உண்மையில் எட்டு ஆசாமி. . எனவே ராணி ஒருவனுக்கு மட்டும் மனைவி அல்ல. எட்டு பேருக்கு சொந்தமானவள். எப்படி ஒருவனுக்கே மாலையிட்ட மங்கை என்று சொல்ல முடியும்?''

பலத்த ஆரவாரத்திற்கிடையே பாண்டியன் ''கோலாஹலா  நீ யாமுனாச்சார்யரை  இந்த சபையில் நுழையும்போது என்ன சொல்லாய் ''நீர் என்ன எம்மை ஆளவந்தவரா?'' என்று ஏளனமாக கேட்டீர்.  அது உண்மையாகி விட்டது.  யாமுனாச்சார்யர்  இந்த நாட்டின் பாதி பகுதிக்கு இனி அரசர், உம்மையும் சேர்த்து எல்லோரையும் ஆளவந்தவர், இனி அவர் ஆளவந்தார் என்றே அழைக்கப்படுவார் '' என்று பாண்டியன் அறிவித்தான்.

பாண்டியன் ஓடி வந்து ஆளவந்தாரை அணைத்துக்கொண்டான். ''சூரியன் போல் ஒளிவீசி வந்த இளைஞரே, நீரே வென்றீர். உமக்கு மரண தண்டனை என்று சொன்ன இந்த பண்டிதனுக்கு நீங்கள் என்ன தண்டனை அளிக்கிறீர்களோ சொல்லுங்கள்,  நான் அதை நிறைவேற்றுகிறேன்.'' என்றான்.

ஆளவந்தார் பாண்டிய மன்னனானார். பண்டிதனை மன்னித்தார். எல்லோருமே சுபிக்ஷமாக வாழ்ந்தார்கள்.ராஜாவாக என்ன செய்தார் ? என்பதை மேலே சொல்கிறேன்.

(''எந்தையே ராமானுஜா '' என்ற எங்களது  ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவை சங்கம்  வெளியிட்ட நன்கொடை நூலில்  இது போன்ற ருசிகர சம்பவங்கள் ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கையை சுற்றி அமைந்திருப்பதை அறியலாம்.)

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...