Friday, June 15, 2018

AINDHAM VEDHAM




ஐந்தாம் வேதம் J.K. SIVAN
40. ஒரு முக்கிய ஆலோசனை கூட்டம்

தனது மனதிலிருந்த கவலைகளை, ஏமாற்றத்தை எல்லாம் துருபதன் வியாசரிடம் கொட்டிவிட்டான்.
அவரும் இதெல்லாம் தெய்வ சங்கல்பம் நீ எதிலும் சம்பந்தமில்லாதவன். நடப்பதை ஏற்று நட. என்கிறார். உன் மகள் திரௌபதி ஐவரின் மனைவி ஆக சிவபெருமானால் ஆசிர்வதிக்கப்பட்டவள். நீ என்ன சொல்வதற்கு இருக்கிறது இதில் உனக்கோ யுதிஷ்டிரனுக்கோ மற்ற பாண்டவர்களுக்கோ மாற்றம் செய்ய வழியில்லை.

''மகரிஷி, எனக்கு இதெல்லாம் தெரியாத நேரத்தில் நான் சொன்னவை எல்லாம் என் மனதில் தோன்றியவை. ஆகவே மகேஸ்வரன் வார்த்தையை மீறி எதையும் செய்யும் அருகதை எனக்கில்லை'' என்றான் துருபதன்.

வியாசர் யுதிஷ்டிரனை நோக்கி '' ய;யுதிஷ்டிரா, தெய்வ சங்கல்பத்தின் படி முதலில் நீ திரௌபதியை கரம் பிடித்து மனைவியாக்கிக் கொள்வாய். உன்னைத் தொடர்ந்து உன் சகோதரர்களும் அவ்வாறே அவளை ஏற்றுக்கொள்ளட்டும்`' என்றார். துருபதன் சகல ஏற்பாடுகளையும் செய்தான். திருமணம் கோலாகலமாக நடத்தினான். தௌம்யர் முன்னின்று சடங்குகளை நிறைவேற்றினார்.

துவாரகையிலிருந்து கிருஷ்ணன் பாண்டவர்கள் திருமணத்துக்கு நிறைய பரிசுகள், ஆடைகள், பொன் பொருள், யானை, குதிரை இன்னும் பல பல எண்ணற்றவைகளை அனுப்பினான்.

ஊர் உலகமெல்லாம் பாண்டவர்கள் உயிரோடு தான் இருக்கிறார்கள். திரௌபதியை ஸ்வயம்வரத்தில் வீர சாகசம் செய்து வென்றவன் அர்ஜுனனே என்றும் துருபதன் பாண்டவர்களோடு இணைந்து நெருங்கிய உறவினனாகிவிட்டான் என்றும் செய்தி பரவிய போது அஸ்தினாபுரத்திலும் அது எல்லோர் காதிலும் விழுந்தது. துரியோதனன் விட்ட மூச்சில் அனல் எரிந்தது.

விதுரன் திருதராஷ்டிரனுக்கு பாண்டவர்கள் உயிரோடு இருப்பது, அவர்கள் திருமணம், துருபதன் உறவு எல்லாம் எடுத்துச் சொன்ன போது பார்வையற்ற அந்த மன்னன் முதலில் மகிழ்ந்தான். விதுரன் சென்றபிறகு துரியோதனன் தந்தையை அணுகினான் .

''தந்தையே நான் கேள்விப்படும் செய்தி எனக்கு அதிர்ச்சியையும் மனக்கிலேசமும் தான் தருகிறது.''

''இதைச் சொல்கிறாய் துரியோதனா நீ?''

''உங்களுக்கு ஒன்றுமே தெரியாது, புரியாது. என்னையும் என் சகோதரர்களையும் துன்புறுத்த, அழிக்க எங்களுடனே வளர்ந்த அந்த பாண்டவர்களை தான் சொல்கிறேன். அவர்களால் எனக்கு தீராத துன்பம் தான் விளையும். ஒவ்வொரு காரியமும் அவர்கள் செய்து வருவது, பாண்டவர்கள் பலம் பெறுவது என்றுமே நமக்கு ஆபத்து தான் '' என தன் எண்ணத்தை வெளிப்படுத்தினான் துரியோதனன்..

''என் மகனே துரியோதனா, உன் எண்ணத்தை நான் மதிக்கிறேன். விதுரன் எதிரில் என் உண்மையான உணர்ச்சியை நான் காட்ட விரும்பவில்லை. நீயும் கர்ணனும் என்ன செய்யப்போகிறீர்கள்?''

''தந்தையே, எப்படியாவது துருபதனையோ, த்ரௌபதியையோ பாண்டவர்களுக்குள் வேற்றுமையோ, பொறாமையோ வளர்த்து, அவர்கள் பலத்தை குறைக்கவேண்டும். எப்படியாவது பீமனை அழிக்கவேண்டும். அவன் இறந்தால், பாண்டவர்கள் பாதி பலம் இழந்தவர்கள். அர்ஜுனனை கர்ணன் எளிதில் வெல்வான். நமது ஒற்றர்களைக் கொண்டு இதை நிறைவேற்ற முயற்சிப்பேன். முடிந்தால் மீண்டும் பாண்டவர்களை இங்கு அழைத்து அவர்களை ஒழிக்க ஏதேனும் திட்டம் தீட்ட முயல்வேன். இந்த முறை வெற்றிகரமாக அதை முடிப்பேன்.''

கர்ணன் குறுக்கிட்டான்.

''நண்பா, இதுவரை நீ சொன்னது நடக்காது. பாண்டவர்கள் ஒற்றுமையை யாருமே குலைக்க முடியாது. துருபதனையும் அவர்களிடமிருந்து இனி பிரிக்க இயலாது. இளம் வயதிலேயே உன் திட்டங்கள் அவர்களை அழிக்க உதவாதபோது இப்போது அவர்கள் வளர்ந்து மேலும் பலம் பெற்றவர்கள். நேரடியாக அவர்கள் மீது மோதி அவர்களைக் கொன்று தான் நீ நிம்மதி பெற முடியும்.அதற்கு நான் உறுதுணையாக உன்னோடு இருக்கிறேன் . வ்ருஷ்ணி குல, யாதவ குல வீரர்கள், சேனைகள், கிருஷ்ணன் பலராமன் பாண்டவர்களின் துணைக்கு தான் உதவுவார்கள் என்பதையும் நினைவில் கொள். என்னைக்கேட்டால், ஒரு பெரும் சேனையோடு சென்று துருபதன் மேல் படையெடுத்து அவனையும் பாண்டவர்களையும் கொல்வது ஒன்றே தான் வழி. '' என்றான் கர்ணன்.

திருதராஷ்டிரன் கர்ணன் பேச்சு கேட்டு மகிழ்ந்தான்.

'' துரியோதனா, நீ பீஷ்மர், துரோணர், விதுரன் எல்லோரையும் எதற்கும் கலந்து ஆலோசித்து முடிவெடு''

சபை கூடியது. பீஷ்மர் எடுத்தவுடனே ''திருதராஷ்டிரா, இதைக் கேள். என்னால் பாண்டவர்களை கொல்ல முடியாது. குந்தியின் பிள்ளைகளும் காந்தாரியின் பிள்ளைகளும் எனக்கு ஒன்றே. அவர்கள் எல்லோருடைய பாதுகாப்பும் தான் என் லட்சியம். ' என்று உறுதியாக சொன்னார். யுத்தம் செய்வதை தவிர்த்து அவர்களுக்கு பாதி ராஜ்யம் கொடுத்து சுமுகமாக வாழுங்கள்'' துரியோதனா, நீ நல்ல பேர் எடு, அது ஒன்றே ஒருவனைக் காக்கும் சக்தி. குருவம்சத்தின் பெயரைக் காப்பாற்று. அது உன்னைக் காக்கும்''. சொத்தில் அவர்களுக்கும் சம பங்கு இருப்பதை மறவாதே. என்றார் பீஷ்மர்.

துரோணர் எழுந்தார். ''திருதராஷ்டிரா, எங்களைக் கூப்பிட்டு ஆலோசனை கேட்பதால் சொல்கிறேன். நான் பீஷ்மர் சொன்னதை கேட்டேன். அதுவே நியாயமானது. அவர் சொன்னது தான் என் எண்ணமும் ஆலோசனையும். எனவே துச்சாதனன் படையோடு சென்று துருபதனையும் பாண்டவர்களையும் கௌரவித்து, தக்க பரிசுகளை பாண்டவர்களுக்கு அளித்து, அவர்களை இங்கு வரவழைக்கவேண்டும். அவர்களுக்கு தக்க மரியாதைகளோடு இந்த ராஜ்யத்தை அவர்கள் ஆள அதிகாரம் வழங்கவேண்டும். இது தான் சரி என்று எனக்கும் படுகிறது''.

இதெல்லாம் கேட்ட கர்ணன் படு கோபமாக எழுந்தான். '' உங்கள் செல்வத்திலும் சுகபோகத்திலும் வாழும் இந்த பீஷ்மரும் துரோணரும் உங்களுக்கு எதிராக செயல்படுவதும் அறிவுரை வழங்குவதும் ஏற்கத்தக்கதில்லை. தீய எண்ணத்தை மனதில் கொண்டு ஞாயம் சொல்வது போல் நடப்பது துரோகம்.

அம்புவிச்சன் என்று ஒரு ராஜா இப்படித்தான் மகா கர்ணி என்ற தனது மந்திரியை நம்பினான். அந்த மந்திரி நன்றியுடைவன் போல் நடித்து, மகத நாட்டின் அரசாட்சியையே தனதாக்கிகொண்டான் என்று ஒரு கதை உண்டு.

துரோணர் பொறுப்பாரா? ''கர்ணா, உன்னுள்ளே பாண்டவர்களிடம் இருக்கும் பொறாமை, வெறுப்பு தான் உன்னை எங்கள் பேச்சில், போக்கில் தவறு காணச் செய்கிறது. உன் கெடுமதி உன் பேச்சிலேயே தெரிகிறது. குருவம்ச நலனுக்கு நாங்கள் சொன்னதை எதிர்த்து செயல்பட்டால் இந்த வம்சம் அழிவதை யாராலும் தடுக்க முடியாது''. என்கிறார் கோபமாக.

விதுரன் எழுந்தான். ''சகோதரா திருதராஷ்டிரா, , பீஷ்ம துரோணர்கள் அனுபவம் வயது இரண்டிலும் மூத்தவர்கள். இந்த வம்ச விளக்குகள். பாண்டவர்கள் கௌரவர்கள் இருவரையுமே வித்தியாசமின்றி வளர்த்தவர்கள். அவர்கள் பேச்சை நீ கேட்டால் நன்மை உண்டு. பாண்டவர்களுக்கு இந்த நாட்டை ஆள்வதற்கு உன் மக்களை விட உரிமை அதிகம் என்று உனக்கே தெரியும். எனவே அனுபவஸ்தர்கள் உன் நலம் விரும்பிகள் சொல்வதைக் கேட்டு நடப்பாயாக. பாண்டவர்களை நட்போடு உன்னோடு சேர்த்துக்கொள்வது அதிக பலத்தை உனக்கு அளிக்கும். கிருஷ்ணன் அவர்களுக்கு உதவியாக இருக்கும் பக்ஷத்தில் வெற்றி யாருக்கு என நீ அறிவாய். சகுனி, துரியோதனன், கர்ணன் ஏதோ அறியாமையினால், இள வயது தரும் ஆர்வக்கோளாறில் சொல்வதை செவி மடுக்காதே''

திருதராஷ்ட்ரன் உண்மை உணர்ந்தான். ''விதுரா நீ சொல்வது தான் சரி. எல்லோரும் உரைத்தவாறு என் மக்கள் பாண்டவர்களை நீயே சென்று இங்கு அழைத்துவா. விதுரன் துருபதனின் பாஞ்சால தேசத்துக்கு பாண்டவர்களை அழைத்துவர சென்றான்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...