Saturday, June 16, 2018

FATHER'S DAY


 ''இவரு தான்  எங்கப்பா''  J.K. SIVAN
இதை  அப்பா தின ஸ்பெஷல் கட்டுரை என்று எடுத்துக் கொள்வீர்களா?

 அப்பாக்கள்  தினம்  கொண்டாடப்பட்டு   எத்தனையோ   அப்பாக்களுக்கு  நிறைய செய்திகள் பறக்கிறது.  வாட்ஸாப் முகநூல்,   இப்போது  ஈமெயில் கொஞ்சம் குறைந்து விட்டது.  இன்ஸ்டாகிராம், மெஸ்சேஞ்ஜர் துளைக்கிறது. 


நிறைய  அப்பாக்களுக்கு  தங்களுக்கு  இப்படியெல்லாம்  செய்தி வாழ்த்து வந்தது கூட  தெரியாது.
அவர்களிடம்  ஸ்மார்ட் தொலைபேசி இல்லை.   கையில்  இருந்தாலும் எப்படி உபயோகிப்பது என்பது சொல்லிக்கொடுத்தாலும்  புரியாது.  மஞ்சள்  LG  பையில் அது கூப்பிடும்.   யாரோ எங்கேயோ வைத்திருக்கும் போன் அடிக்கிறது என்று நினைப்பவர்.    ''வாட்சாப்'' என்றால்  ''நான்  என்ன  செய்தேன்  ஏன் என்னை என்னவெல்லாமோ சொல்லி  திட்டுகிறாய்?''  என்று  கேட்கும் அப்பாக்களும் உண்டு.

வாழ்த்தும்  நன்றிகூறுதலும்  வெறும்  எழுத்தில் இல்லை.  அப்போதெல்லாம் நாங்கள்   நேரிலே காலிலே   விழுந்து வணங்கினோம். தந்தைகள்  முகத்தில் மலர்ச்சி கண்களில் பாசம் எல்லாம்  நிறையவே  தெரிந்தது.

''தீர்காயுசா  இரு ''.   வார்த்தை  வெறும்  உதட்டிலிருந்து  வராமல்  நெஞ்சத்தின் அடிவாரத்திலிருந்து பீரிட்டு வெளியே வந்தது.  கைகள்  தடவிக்கொடுத்ததில் அது  புரிந்தது.

ஒருவருக்கு   தனது  அப்பாவைப் பற்றி சொல்லவேண்டும் என்கிற  ஆசையில் எப்படி சொல்கிறார் பாருங்கள் 

''பிறக்கும்போது  நான்  பூமிக்கு தான் அனுப்பப் பட்டேன்.  என்  தம்பிகள் புதன் க்ரஹத்தில்  இருக்கிறார்கள்.  நாங்கள்  சாதாரணர்கள் அல்ல.  எங்கள் சுற்றத்தார்,இனத்தவர்கள்   எல்லோரையும்  இந்த  பிரபஞ்சத்தில்  எந்த இடத்திலும் பார்க்கலாம். அவ்வளவு விரிந்து பரந்தது  எங்கள்  வம்சம். இனம், எல்லாமே  என்று வைத்துக்கொள்ளுங்களேன் .

இந்த மாதிரி எல்லா இடத்திலேயும் கொடி கட்டி பறப்பவர்  எங்க  அப்பா. தலைவர்.  அவரைப்பற்றி  கொஞ்சம் விளக்கமாக சொன்னால் தான் உங்களுக்கு புரியும். துட்டுக்கு, சொத்துக்கு  எல்லாம்  பஞ்சமே இல்லை  அவருக்கு.    அவரைப்போல  பொன்னும்  பொருளும் சேர்த்து வைக்க  இன்னொரு  ஆசாமி  பிறக்கணும்.  அதனாலே  படிப்பில்லை என்று எண்ணவேண்டாம். அவருக்குத்தெரியாத விஷயம், கதை,  கவிதை வேறு யாருக்குமே  தெரியாது.  பார்க்கறதுக்கு,  அவரைப் புரிந்துகொள்வதற்கு  ஒரு மாதிரி,   ஒரு வேளை  கொஞ்சம்  ''லூஸ்'' என்று  சில பேர்களை  சொல்வீர்களே  அது போல  தோன்றலாம்.    ஆனால்  நீங்கதான்  அது.   அவரில்லை.

எல்லோருக்கும் உதவுகிற  மனசு அவருக்கு. எல்லோருக்கும்  நிறைய  தாராளமாக வாரி வீசுவார்.  நல்லது எது என்று எடுத்து சொல்வார்,  சில சமயம்  அவருடைய செய்கை  ''ஏன்  இப்படி  படுத்துகிறார்,  சோதனை பண்ணுகிறாரே''  என்று கூட   நினைக்க வைக்கும்..

அவருடைய  பேர் சொல்லலியே  இன்னும். காரணம் என்னவென்றால்  அவருக்கு  என்று  ஒரு பேர்  தனியா கிடையாது.  எல்லோருமே  அவரை  தங்களிஷ்படியே  கூப்பிடுவாங்க.   சாமி  என்பாங்க,  ஈசா,  கிருஷ்ணா  என்று எப்படி  எல்லாமோ  கூட  கூப்புடுவாங்க.

ஒரு வேடிக்கை.   சில  பேர்  இது தான் அவரு, இல்லை அவர் வேறே, என்று  அவர் பேரைப்பற்றி  சண்டை கூட போடுறதை பார்த்திருக்கிறேன். இன்னும் போட்டுக்கிட்டு தானே  இருக்காங்க. 

''இவரு பிரம்மா தான்.  இல்லை  யாரு சொன்னது அப்படி,? அவரு  சிவன்,  அட போங்கய்யா,  ரெண்டுமே  இல்லை,  அவரு விஷ்ணு இது தெரியாதா ?'' என்று  சண்டை கூட  வரும்.   யாருமே  அவரை சரியாக பார்க்காத போதே  இத்தனை  சண்டையா?  அதுவும் இன்னுமா ?

ரொம்ப  தெரிந்தமாதிரி  ஒரு சிலர்  ''தேவர்  அவரு '' என்பார்கள்.
''அதெப்படிங்க.  அவரு  வீர மறவர் ஆச்சுதே''
''எங்களுக்கு தெரிஞ்சு அவர்  மாடு கன்னு  மேய்க்கிற  இடையர்  தானுங்களே''
''உங்களுக்கு  ஏதோ விவரம் தெரியலே  போலிருக்கு.  அவரை  ஐயமாரு,   பார்ப்பாருங்களெல்லாம்  கூட  எப்போவுமே   கையெடுத்து கும்பிட்டு  தண்டம் பண்றாங்க. ஏனோ  நீங்க  அது தெரியாமல் பேசறீங்க''
''வியாபாரிங்க செட்டிமார்  கூட  பழகறதைப்    பார்த்திருக்கிறேனே ''

பார்க்கறதுக்கு கருப்பா இருந்தா  அதுக்காக  இத்தனை பேச்சா? . கலர்  எப்படி இருந்தா  என்னய்யா? பத்தரை மாத்து, சொக்கத் தங்கம் மாதிரி ஜொலிக்கிற  பெண்கள்  அவரை சுத்துவாங்களே.

எதுவுமே  தனக்கு  தேவை இல்லாதது  மாதிரி   நடந்துக்குவார்.   பொய், பில்லி,  சூனியம் சாஸ்திரம்  என்று  அவர்கிட்ட சில்லறை வித்தை காட்டி ஏமாத்த முடியாது.  போங்கடா''  என்று  சிரிப்பார்.

இவ்வளவு  வசதி,  துட்டு, சொத்து, பெரிய இடத்து சகவாசம்  எல்லாம் இருந்தா கூட  அவரு கிட்ட  ஒரு அருமையான  குணம்  என்ன என்று கேட்டால், ஏழைகளைகூட  தன்னோடு  சேர்த்துக்கொண்டு  நல்லா பழகுவார். நிறைய  செல்வம் இருக்கிற மாதிரி பாவ்லா காட்டிக் கொண்டு, 
  நான் தான்  பெரியவன்  என்று கர்வத்தோடு  யாராவது நெருங்கினா எங்க  அப்பா கோவத்தை பார்க்கணுமே. அப்பப்பா, இப்படி கூட சீறுவாரா?  என்று  இருக்கும்.

''ஏழை பாழைங்க,  கஷ்டபட்டாலும் நாங்க  எப்படியோ  சமாளிப்போம்'' என்று  தைரியமா இருந்தா  அவங்களை  அவருக்கு ரொம்ப பிடிக்கும்.  வாரி  வழங்குவார் எங்கப்பா.  ஆனா  எப்போ  எப்படி  நடந்துக்குவாருன்னு  தெரியாதுன்னு  முன்னமேயே  சொல்லிட்டேனே.

இன்னாடா  இது,   நேற்று பார்க்கும்போது  ஒரு மாதிரியா இருந்தார்,  பேசினார்,  இப்போ கொஞ்சம் வேறு மாதிரியிருக்காரே என்று தோணும்.  அது சந்தர்ப்பத்திற்கேற்ப  என்று  எங்கப்பாவை  நல்லா  புரிந்தவர் களுக்கு தான்  தெரியும் .

எங்கே வேணுமானாலும் நான் இருப்பேன்  என்கிற ஸ்வபாவம்  கொண்டவரு எங்கப்பா.    மாளிகையும் ஒண்ணு  தான். மண் குடிசையும் ஒண்ணு  தான். எங்கேயுமே  சந்தோஷம் தான் அவருக்கு. அவரைச் சுத்தி  இருக்கிறவங்க  பாடுவாங்க, கதை சொல்வாங்க. ஆடுவாங்க,   சும்மா பாத்துக்கிட்டு,சுகமா கேட்டுக்கிட்டே இருப்பாரு.

சும்மா  சொல்லக்கூடாது. எங்கப்பா  என்னிக்காவது ஒரு நாள்  கூட  ஓஹோன்னு  ரொம்ப  சந்தோஷமாகவோ, வானமே  இடிஞ்சு போனமாதிரி சோகமாகவோ, துக்கமாகவோ இருந்து  நான் பார்த்ததேயில்லை. எப்போவுமே  சிரிச்சு கிட்டேயே தான். எல்லோர் இடமும் பாசம் நேசம்  எல்லாம் காட்டுவாரு.

எல்லோரும் நல்லா  இருக்கணும். என்னாலே  உங்களுக்கு என்ன செய்யமுடியுமோ  அந்த நல்லது செய்வேன் என்ற  நினைப்பு தான் அவருக்கு எப்போவுமே. .

''எனக்கு ஒரு  மந்திரி இருக்காருப்பா. அவரு என்ன  சொல்லிஇருக்கிறாரோ, எது நடக்கும்  என்கிறாரோ  அது படி தான் நடக்கும்.  அதைப்போய்  எப்படி  மாத்த முடியும் சொல்லுங்க''   என்பார்.

எல்லா சாஸ்திரம் வேதம் அத்துபடி,   எப்படியோ எல்லாமே தெரிந்தவர் எங்கப்பா.  அந்த வேதம்  என்ன சொல்லுது  எந்த  பாஷையிலே சொல்லுது என்று கூட  அப்பாவுக்கு   நல்லா தெரியும். நம்ம  பாஷை இல்லே  அது.  அவரு சொன்னதை நிறைய பேர் புரிந்து கொள்வதில்லை.   எல்லாரையும்  நாலா  பிரிச்சு  ஒவ்வொருத்தர் இன்னொருத்தரோடு சேர்ந்து எல்லோருமே  சந்தோஷமா வாழ  ஒரு  வசதி செய்து கொடுத்தார்.  அதை வேற மாதிரி புரிந்து கொண்டு  நாசம் பண்ணிட்டாங்களே  நம்ம  ஆளுங்க. அர்த்தம்  அனர்த்தம்  ஆயிட்டுது.  யாரு  தர்மம் ஞாயம் கல்வி கேள்வியி லே  சிறந்து  மற்றவர்க்கு அதை  கற்பித்து  நல்வழி நடத்துவாங்களோ  அவங்க தான்  உசத்தி  என்பார்.   நான் மேலே,  நீ கீழே  எல்லாம்  அங்கே  கிடையாது. தப்பு தப்பா  ஏதோ  சுவடி  ஓலை  புஸ்தகம்  என்று எதையோ படிச்சு  சப்பை கட்டு  கட்டினா  என்னத்தை சொல்ல?     இதுங்க எல்லாத்தையும்  ஒண்ணா சேர்த்து மூட்டை கட்டி  கொளுத்துங்கப்பா.  அப்போ  தான்  உருப்படுவீங்க.

அட  சொல்ல மறந்துட்டேனே.  எங்கப்பாரு  எப்படி இருப்பாரு  தெரியுங்களா?   ஜம்முன்னு  இருப்பார்.  இவரு வயசான கிழவருன்னு  யாரும்  சொல்ல முடியாது  125வயசு. பாத்தா  நம்புவீர்களா? .   யூத்  என்கிறீர்களே  அது  அவரு தான்.   யாராவது உங்களுக்கு  கல்யாணம் ஆயிடுச்சான்னு  கூட  கேப்பாங்க?   சுறு சுறுப்புலே  எறும்பு  அவரு.  ஒரு நாள்  டாக்டர்  ஊசி  மருந்து  ஆஸ்பத்திரி  ஐயோ அப்பா  எல்லாம்  கிடையாது. பயம் என்றால்  கிலோ  எவ்வளவு?   இந்த பக்கம் அந்த பக்கம்  எல்லாம்  சாய  மாட்டார் எங்கப்பா. நடு நிலை தான்.  பன்னிரண்டு மணிக்கு  கடிகாரம் முள்ளு  எப்படி நேரா நிக்கும்  அது மாதிரின்னு  வைச்சுக்குங்க.
மந்திரின்னு சொல்வாரு என்றேனே  அது செய்றதை  வேடிக்கை பாத்து சிரிப்பாரு.  அது பேரு  விதி என்பாரு.

''ரொம்ப  கஷ்டம்,  துன்பம்  என்று  யார்  அவருகிட்டே வந்தாலும் எங்கப்பா  அவரை விடவே மாட்டாருங்க.  நான் பாத்துக்கறேன்  என்று  தைரியம் சொல்லி  அன்பா  தடவிக்கொடுப்பார். எங்கிட்ட  விட்டுடு உன் கஷ்டமெல்லாம்.  நான் இருக்கேன் இல்ல  பாத்துக்கறேன்'' என்பார்.

அவரை நம்பி  '' சாமி நீதான்  எல்லாம்''   என்று கீழே கால்லே  விழுந்தவன்  கஷ்டப்பட்டதா   இதை  நான் எழுதரவரை  சரித்திரமே கிடையாது
++

ஒரு  சாதாரண  கள்ளங்கபடமற்ற மனிதன்  மாதிரி எங்கப்பாவைப் பற்றி மேலே  சொன்னது  நானா சொன்ன கற்பனை இல்லை சார்.  மஹாகவி பாரதியார்  ''கண்ணன் என் தந்தை''    என்று  அருமையாக  காலமெல்லாம் நிற்கும்  வரிகளில்   வடித்தது. அதை அப்படியே  கீழே படித்தால் மேலே நான்  சொன்னது கொஞ்சம் புரியும்.


    கண்ணன் -- என் தந்தை
[நொண்டிச்சிந்து) ''- 

ப்ரதான ரஸம் அத்புதம்
மிக் கெனை யனுப்பினாள்; -- அந்தப்
புதமண்ட லத்திலென் தம்பிகளுண்டு;
நேமித்த நெறிப்படியே -- இந்த
நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே
போமித் தரைகளிலெல்லாம் -- மனம்
போலவிருந் தாளுபவர் எங்களினத்தார்;
சாமி இவற்றினுக்கெல்லாம் -க- எங்கள்
தந்தையவன் சரிதைகள் சிறிதுரைப்பேன்.

செல்வத்திற்கோர் குறையில்லை; -- எந்தை
சேமித்து வைத்தபொன்னுக் களவொன்றில்லை;
கல்வியில் மிகச்சிறந்தோன் -- அவன்
கவிதையின் இனிமையொர் கணக்கிலில்லை;
பல்வகை மாண்பினிடையே -- கொஞ்சம்
பயித்திய மடிக்கடி தோன்றுவதுண்டு;
நல்வழி செல்லுபவரை -- மனம்
நையும்வரை சோதனைசெய் நடத்தையுண்டு.2

நாவு துணிகுவதில்லை -- உண்மை
நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே;
யாவருந் தெரிந்திடவே -- எங்கள்
ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு;
மூவகைப் பெயர்புனைந்தே -- அவன்
முகமறி யாதவர் சண்டைகள் செய்வார்;
தேவர் குலத்தவன் என்றே -- அவன்
செய்தி தெரியாதவர் சிலருரைப்பார்.

பிறந்தது மறக்குலத்தில்; -- அவன்
பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்;
சிறந்தது பார்ப்பனருள்ளே; -- சில
செட்டிமக்க ளோடுமிகப் பழக்கமுண்டு;
நிறந்தனிற் கருமைகொண்டான்; -- அவன
நேயமுறக் களிப்பது பொன்னிறப்பெண்கள்;
துறந்த நடைகளுடையான்; -- உங்கள்
சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்.4

ஏழைகளைத் தோழமைகொள்வான்; -- செல்வம்
ஏறியார் தமைக்கண்டு சீறிவிழுவான்;
தாழவருந் துன்பமதிலும் -- நெஞ்சத்
தளர்ச்சி கொள்ளாதவர்க்குச் செல்வமளிப்பான்;
நாழிகைக்கொர் புத்தியுடையான்; -- ஒரு
நாளிருந்தபடி மற்றொர் நாளினிலில்லை.
பாழிடத்தை நாடி யிருப்பான்; -- பல
பாட்டினிலும் கதையிலும் நேரமழிப்பான்.5

இன்பத்தை இனிதெனவும் -- துன்பம்
இனிதில்லை யென்றுமவன் எண்ணுவதில்லை;
அன்பு மிகவுமுடையான்; -- தெளிந்
தறிவினில் உயிர்க்குலம் ஏற்றமுறவே
வன்புகள் பலபுரிவான்; -- ஒரு
மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்;
முன்பு விதித்ததனையே -- பின்பு
முறைப்படி அறிந்துண்ண மூட்டிவிடுவான்.


வேதங்கள் கோத்துவைத்தான்; -- அந்த
வேதங்கள் மனிதர்தம் மொழியிலில்லை;
வேதங்க ளென்றுபுவியோர் -- சொல்லும்
வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை;
வேதங்க ளென்றவற்றுள்ளே -- அவன்
வேதத்திற் சிலசில கலந்ததுண்டு;
வேதங்க ளன்றியொன்றில்லை -- இந்த
மேதினி மாந்தர்சொலும் வார்த்தைகளெல்லாம்

நாலு குலங்கள் அமைத்தான்; -- அதை
நாசமுறப் புரிந்தனர் மூடமனிதர்;
சீலம் அறிவுகருமம் -- இவை
சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்;
மேலவர் கீழவரென்றே -- வெறும்
வேடத்திற் பிறப்பினில் விதிப்பனவாம்
போலிச் சுவடியையெல்லாம் -- இன்று
பொசுக்கிவிட் டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான்8

வயது முதிர்ந்துவிடினும் -- எந்தை
வாலிபக் களையென்றும் மாறுவதில்லை;
துயரில்லை, மூப்புமில்லை, -- என்றும்
சோர்வில்லை, நோயொன்று தொடுவதில்லை;
பயமில்லை, பரிவொன்றில்லை, -- எவர்
பக்கமுநின் றெதிர்ப்பக்கம் வாட்டுவதில்லை;
நயமிகத் தெரிந்தவன்காண்; -- தனி
நடுநின்று விதிச்செயல் கண்டுமகிழ்வான்.

துன்பத்தில் நொந்துவருவோர் -- தன்னைத்
தூவென் றிகழ்ந்துசொல்லி வன்புகனிவான்;
அன்பினைக் கைக்கொள் என்பான்; -- துன்பம்
அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்;

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...