Friday, June 29, 2018

RADHAKRISHNA



கோபம் அடங்கியது.... J.K SIVAN வீடு என்றால் உயரமாக மாளிகையாக பரந்து இருந்தாலும் பாரதியார் பாடியது போல் காணி நிலம் அதில் குடிசை, தென்னைகள், பசு கன்றுகள் பூஞ்சோலை, செடிகள் இருந்தாலும் ஒன்றுதான். வீடு மனதுக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. நாளெல்லாம் உழைத்து தனது குடிசைக்கு திரும்புகிறவன் அனுபவிக்கும் இன்பந் எழுத முடியாதது பிருந்தாவனத்தில் ராதையின் வீடு ரொம்ப பெரியது அல்ல. அழகிய குடில் .நிறைய கன்றுகள் பசுக்கள் சூழ்ந்து இருப்பது. சுற்றிலும் பூக்கள் செறியும் மரங்களும் மல்லி கொடிகளும் துளசி செடிகளும் நறுமணத்தைஅள்ளி வீசிக்கொண்டேயிருக்கும். காற்றுக்கும் தான் என்ன ஓரவஞ்சனை!!. எப்போதும் மந்த மாருதமாக வீசி அந்த வீட்டை சுற்றிக்கொண்டே இருக்கும். எனினும் அருகே இருந்த அனேக வீடுகளுக்கும் கூட நறுமணம் பரவ உதவும். பூசி மெழுகிய வழவழவென்ற மண் தரையில் வீட்டின் முன் வாயிலில் கோலம் ஒன்றை பெரிதாக அன்று விடியற்காலையில் ராதா போட்டுக் கொண்டிருந்தாள். பெரிய கோலம் போட்டால் கிருஷ்ணனுக்கு ரொம்ப பிடிக்கும் என்று அவளுக்கு தெரியும். இன்று எப்படியும் வந்து விடுவான். பார்க்காமல் இருக்கவே முடியாது. ரெண்டு நாளாகவே அவனைக் காணோம். முந்தாநாள் சாயந்திரம் யமுனைக்கரையில் இருவரும் பேசிக்கொண்டே இருக்கும்போது கிருஷ்ணனிடம் அவள் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கும் போது அவன் தன்னுடைய புல்லாங்குழலையே பார்த்துக்கொண்டு அதை தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தான் அல்லவா?. அப்போது தான் அவளுக்கு அவன் மேல் கோபம் வந்தது. வாயாடினாள் . எதிர்த்து பேசி கோபித்தாள் . அதெல்லாம் இப்போது கோலம் போடும்போது ஞாபகத்துக்கு வந்தாலும் மனதுக்கு இனித்தது. கை கோலம்போட்டாலும் மனதில் அவனுடைய அழகு மாறாத புது கோலமாக நின்றது. அந்த நிகழ்ச்சி மனதில் திரும்ப படமாக ஓடியது. ராதை ஏதோ கேட்டாள் . அவன் கவனிக்க வில்லை. மறுபடியும் கேட்டால். ;ஹுஹும்.. கண்ணன் கவனம் அவன் கையில் உள்ள புல்லாங்குழல் மீது. ராதைக்கு தன்னை அவன் அலட்சியம் பண்ணுகிறான் என்று கோபம். "நீ என்னை விரும்பவே இல்லை. எப்போதும் உனக்கு அந்த புல்லாங்குழல் தான் சிநேகிதி. நீ அதோடேயே இருந்துகொள். என்னை இனிமேல் பார்க்க வரவேண்டாம்" ''ராதா.... என்று ஆரம்பித்து கண்ணன் ஏதோ சொல்வதற்குள் அவள் விடுவிடுவென்று எழுந்து நடந்து விட்டாள். நேற்று முழுதும் அவனை பார்க்கவே இல்லையே தவிர அவள் மனம் பூரா அவனையே நினைத்துக் கொண்டு இருந்தது. . அவள் நாள் பூரா சாப்பிடவே இல்லை. இன்று அவனை வரவேற்கத் தான் கோலம் பெரிதாக போட்டாள். அவனுக்கு நீலம் பிடித்த நிறம்!! எனவே அவள் சேலையும் இன்று நீல நிறத்தில் இருந்தது. அவன் அவள் வீட்டுக்கு வந்தால் எப்போதும் தடவி அணைத்துக் கொஞ்சும் அந்த பொன்னிற கன்னுக்குட்டி வீட்டு வாசலிலேயே வரவேற்பாக கட்டப்பட்டு இருந்தது. மிரள மிரள விழித்துக்கொண்டு காரணம் புரியாமல் அது காத்திருந்தது. சூரியன் மெதுவாக மேலே எழும்பி விட்டான். பகல் வந்துவிட்டது இன்னும் அவன் வரவில்லை. சாயந்திரமும் ஆகிவிட்டது இன்னும் கண்ணனைக் காணோம். ஏன் வரவில்லை? சரி , அவன் வராவிட்டால் எனக்கென்ன?? நானும் அவனை இனி பார்க்கமாட்டேன், பேச மாட்டேன்" வாய் தான் முணுமுணுத்தது. ஆனால் கண்கள் அவனை தேடின. அவள் தோழியர் இருவர் வந்திருந்தனர். எப்போதும் அவளுடன் தான் நிறைய தோழியர்கள் இருப்பார்களே!. "அந்த கிருஷ்ணன் இங்கு வந்தால் அவனை வீட்டுக்குள் விடவேண்டாம். நான் சொன்னேன் என்று சொல்லுங்கள்" தொடர்ந்து உணவே இன்றி வாடினாள் ராதா. கிருஷ்ணன் வந்தான். உள்ளே நுழைய முயன்ற அவனை தோழிகள் "கிருஷ்ணா!, நீ ராதையை பார்க்க வரவேண்டாம். உன்னை உள்ளே விடாதே'' என்று ராதை சொல்லிவிட்டாள்" “அதெப்படி? நான் அவளை கண்டிப்பாக பார்த்தே தீருவேன்" அவர்களை தள்ளிவிட்டு உள்ளே செல்ல முயன்ற அவனை அவர்கள் உள்ளே விடவில்லை. என்னவெல்லாம் சொல்லியும் அவர்கள் மசிய வில்லை. கிருஷ்ணன் திரும்ப போய் விட்டான். கண்ணன் திரும்பி போன செய்தி கேட்ட ராதைக்கு அழுகை அழுகையாக வந்தது. கிஷ்ணனை அவள் தானே உள்ளே விடாதே என்றவள். “நான் ஏன் கிருஷ்ணனோடு சண்டை போட்டேன்? எதற்கு அவனை பிடிவாதமாக பார்க்க மாட்டேன்” என்று சொன்னேன். எவ்வளவு பெரிய தப்பு பண்ணிவிட்டேன். இதை தான் பெண்புத்தி பின் புத்தி என்கிறார்களோ?'' மனம் சல்லடைக்கண்ணாக துளைத்தது. விளக்கு வைக்கும் நேரம். வாசலில் ஒரு ஜோசியம் பார்க்கும் பெண் போய்க் கொண்டிருந்தாள். “அவளைக் கூப்பிடு” என்று ராதை சொல்லி தோழியர்களும் அவளை உள்ளே அனுப்பினார்கள். அழகிய அந்த ஜோசியக்காரி ராதையின் முகத்தைப் பார்த்ததுமே சொல்லி விட்டாள் "பெண்ணே உனக்கு மன நிலை சரியில்லை. உன் பிடிவாதம் தேவையற்றது. நீயே வரவழை த்துக்கொண்ட துன்பத்திற்கு நீயே தான் விடை தேட வேண்டும். காரணமற்ற கோபத்தைஎல்லாம் இனி விடு. எங்கே, உன் கையைக் காட்டு?”. ராதையின் கையை தானே அந்த ஜோசியக்காரி எடுத்து பிடித்து தடவிக் கொடுத்துவிட்டு ரேகைகளை படித்தாள். நீ விரும்பும் உன் ஜோடி உன்னை என்றும் விடாது. அந்த புண்ய புருஷன் உனக்கு மட்டுமே கிடைத்த பொக்கிஷம். அந்த மனிதன் முற்றிலும் மாறுபட்ட மனிதன். தெய்வம் என்று உன் கை சொல்கிறதே. மனதால் ஒன்று பட்ட உங்களை எந்த காலத்திலும் யாரும் பிரிக்கவே முடியாது. ராதைக்கு மயக்கம் வந்து விட்டது. அந்த ஜோசியக்காரியின் கண்ணும் அவள் தொடலும் சிரிப்பும் எங்கோ ஏற்கனவே பரிச்சயமானது போல் ராதைக்கு தோன்றவே அந்த ஜோசியக்காரியை உற்று பார்த்தாள். அவள் குரலில் வித்யாசம் இருந்தாலும் பேசும் விதம் பழகிய விதம் புரிந்து விட்டது. அப்படியே அந்த ஜோசியக்காரியை ஆலிங்கனம் செய்து கொண்டு தன் கண்ணீரால் அவள் முகத்தை நனைத்தாள். ஜோசியக்காரியும் மனமகிழ்ந்து அவளை அணைத்துக்கொண்டாள் (ன்). ஆம், அவள் இல்லை அவன் - கிருஷ்ணன் தான் ஜோசியக்காரியாக உள்ளே நுழைந்தவன். ராதையை ஒருகணம் கூட பிரியாத அந்த அதிசயப்பிறவி கிருஷ்ணனாக வந்தால் உள்ளே விடமாட்டார்கள் என ஒரு ஜோசியக்காளரியாக அவள் மனம் அறிந்து அங்கே வந்தவன். ஜோசியக்காரியை அணைத்த ராதையின் கைகள் அவள் இடுப்பில் செருகியிருந்த புல்லாங்குழலின் மீது பட்டதும் அவள் சந்தேகம் தீர்ந்தது. புல்லாங்குழலை வெளியே எடுத் தாள். "இந்த புல்லாங்குழல் மேல் கோபம் கொண்டு தானே உன்னை இரண்டுநாள் பார்க்கவில்லை, வாடி நொந்தேன். பாவம் அது ஒரு தவறும் செய்யவில்லையே, என்னுடைய மன்னிப்பு உனக்கல்ல இந்த புல்லாங்குழலுக்கே “ என்று அதை எடுத்து அணைத்து முத்தமிட்டு கண்களில் ஒற்றிக்கொண்டாள். கிருஷ்ணன் ரசித்து கொண்டே இருந்தாலும் அவன் மனம் உள்ளூர சொல்லியது: "ராதா, நீ எனக்கு எப்படியோ அப்படியே அந்த மூங்கில் புல்லாங்குழலும். எனக்கு உன்னை பார்க்கும்போது உள்ள சந்தோஷம் நீ இல்லாத நேரத்தில் நான் உன்னை நினைக்கும்போது இது, உன்னையே என் ஜீவ நாத இசையாக வெளிப்படுத்தும் என் இணை பிரியாத ஆத்மாவின் உருவம்''. .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...