சுக வாழ்க்கை ரகசியம் - J.K. SIVAN
மற்றொருவரை மகிழ்விப்பது எப்படி, சந்தோஷப்படுத்துவது எவ்வாறு? அதற்கு என்ன செய்யவேண்டும்.
இதற்கு விடை காண முதலில் நமக்கு நல்ல ஆரோக்யமான உடல் வேண்டும். எங்காவது ஒரு மூலையில் வலித்தால், எரிச்சலெடுத்தால் சந்தோஷமாகவா இருக்க முடியும்? நல்ல ஆரோக்யமான உடல் அதைப்பற்றி நம்மை நினைக்க வைப்பதில்லை. வலியெடுத்தால் தான் முதுகு, தலை, கால், கண், காது எல்லாமே தான் இருப்பதை நினைவூட்டுகிறது இல்லையா. ஆகவே உடம்பை முற்றிலும் மறக்கவேண்டுமானால் ஆரோக்யமாக இருக்கவேண்டும். அப்போது தான் நம் கவனம் இறைவன் மேலோ வேறு எதிலோ செல்லும். நாம் சந்தோஷமாக இல்லையென்றால் மற்றவர்களை எப்படி சந்தோஷமூட்டமுடியும்?
சில பேருக்கு சந்தோஷம் பேங்க் கணக்கில் பணம் இருந்தால் தான் தான் முகத்தில் தெரியும். கோடி லக்ஷம் எல்லாம் நமக்கு தேவை இல்லை. அன்றாட செலவுக்கு படி அளந்தால் போதும். கடன் வாங்கி காலம் தள்ளுவது நரகத்தில் வசிப்பது போல.
சந்தோஷத்துக்கு மற்றுமொரு இன்றியமையாத வசதி தலைக்குமேல் நமக்கென்று ஒரு கூரை. சுப்ரமணிய ராவ் வீட்டில் திருவல்லிக்கேணி ஒரு சந்தில் நான் குடியிருந்த வீட்டில் சரியாக இரவு ஒன்பது மணிக்கு மின்சார விளக்கை அணைத்து விடுவார். வாசல், உள்ளே வரும் ரேழி, முற்றம் வழியாக தான் கடைசி கட்டு என் வீடு என்கிற ரெண்டு அறைக்கு போகமுடியும். எங்கும் இருட்டாக இருக்கும். வழியில் மேடு பள்ளம், வழுக்கும், ஏதாவது இடிக்கும். கையில் ஒரு டார்ச் பையில் வைத்திருக்கவேண்டும். கரெண்ட் பொது கணக்காம். விளக்கு அதிகமாக எரிந்தால் அவருக்கு பில்லில் பங்கு அதிகமாகிவிடுமாம்.
குழாயில் ஒரு பாக்கெட் தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் ராத்திரி பாத்ரூம் போனால் தண்ணீர் கிடையாது. காலையில் கீதை வேதாந்தம் எல்லாம் பேசுவார். எனக்கென்ற தனியாக சிறிதாகவாவது ஒரு வீடு என்ற எண்ணத்தை மனதில் விதைத்தவர் ஸ்ரீ ராவ்.
எல்லோருடனும் சிரித்து பேசினாலே மகிழ்ச்சி தானாகவே வரும். யாருடனும் வீட்டில் சண்டை வேண்டாம்.
பிறரை போற்றுவோம். தூற்றவேண்டாம். குறை கண்டு பிடிக்க வேண்டாம். பொறாமை, ஒப்பிடுவது இருக்கும் கொஞ்ச நஞ்ச மகிழ்ச்சியை, சந்தோஷத்தை தின்று விடும். அவரவர் வசதி, சௌகர்யங்கள், அவரவர் உழைப்பினாலும், பூர்வ ஜென்ம புண்ய கர்மாவினாலும் தான். நாமும் நல்லதே நினைப்போம், செய்வோமே.
வம்பு வேண்டாம், அரசியல் பேச்சில் தான் மெதுவாக மோடி யிலிருந்து ஆரம்பித்து மாடி வீட்டு மாமா வரை கொண்டு செல்லும். சாப்பாடில் அதிக நாட்டம் வேண்டாம். வெளியே சென்று உண்பது மறந்து போக வேண்டும். பசியெடுத்து சாப்பிடுவது, உண்பதை விரும்பி சுவைத்து உள்ளே தள்ளுவது ரொம்ப உதவும்.
கொஞ்சம் நேரம் கிடைத்தால், ஓவியம் வரைவது, தோட்டவேலை, கைவேலை ஏதாவது செய்வது, பாடுவது , எழுதுவது ( ரெண்டும் எனக்கு பிடித்தது ) பேசுவது என்று ஏதாவது நேரத்தை சுகமாக போக்கி மகிழ்ச்சியை பெறுவோம்..
சீதாராமன் ரொம்ப நாள் சீட்டாட கூப்பிட்டு அலுத்து விட்டார்.
தினமும் உட்கார்ந்தோ, படுத்துக்கொண்டோ பத்து நிமிஷம் ஏதாவது ஒரு சிந்தனை. நான் யார், எங்கிருந்து வந்தேன், எங்கே போகிறேன், என் வாழ்க்கை பாதை, எது தப்பு, என்று யோசிக்கலாம். நான் அவ்வப்போது பழங்கதை எழுதுவது இதனால் தான்.
வீட்டிற்குள்ளேயே, கொஞ்சம் வெளியே நடக்கவேண்டும். படிகள் ஏறி இறங்கலாம். கோபம் வேண்டாம்.
கடைசியாக போகும்போது '' யார் மீதும், எதன் மீதும் குறையொன்று மில்லை மறைமூர்த்தி கண்ணா' 'என்று போவதற்கு பழகுவோம்.
No comments:
Post a Comment