விஸ்வ ரூப ஆலயம் J.K. SIVAN
கிருஷ்ணனை விஸ்வரூபனாக படத்தில் பார்த்ததுண்டு. விஸ்வரூபம் படத்தில் கிருஷ்ணனை பார்க்க சொன்னால் நான் பல பிறவிகள் புல்லாகவோ புழுவாகவோ எடுக்க வேண்டியிருக்கும். நான் சொன்ன விஸ்வரூபன் அர்ஜுனனுக்கு காட்சி கொடுத்தவன். அவ்வளவு பெரிய விஸ்வரூபனுக்கு எவ்வளவு பெரிய கோவில் கட்டவேண்டும்? கட்டி(க்கொண்டு) இருக்கிறார்கள். அகில உலக கிருஷ்ணன் உணர்வு சங்கம் (இஸ்க்கான்) ISKCON பிருந்தாவனத்தில் சந்திரோதய மந்திர் என்று ஒரு வானளாவிய கோவில் கட்டியிருக்கிறார்கள். ஜனார்த்தனன் கோவில் அனந்த ஸ்தாபன பூஜையை 16.11.2014 அன்று நமது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி துவங்கி வைத்தார். உலகத்தின் மிகப்பெரிய 700 அடி உயர இந்த 70 மாடி கிருஷ்ணன் கோவில் ஐந்து ஏக்கர் நிலத்தில் 300 கோடி ரூபாய் செலவு இதுவரை வைத்துள்ளது. வருஷமுழுதும் கோலாகல விழாக்கள் உண்டாம். கிருஷ்ணன் சம்பந்தபட்ட பேச்சு, பாட்டு, நடனம், கதை, புத்தகம், சாப்பாடு எல்லாமே இருக்கும் என்பதால் எனக்கே அங்கேயே போய் இருந்துவிடுவோமா என்ற எண்ணம் இதை எழுதும்போதே ஏற்பட்டுள்ளது. அடுத்த பாரா எழுதவேண்டுமே என்று பொறுத்துக்கொண்டு இருக்கிறேன். ஒரு முக்ய விஷயம். கோவிலைச் சுற்றி கிருஷ்ணன் காலத்திய 12 (த்வாதச வனம்) பிருந்தாவன காடுகள் செடி கொடி ,கனி பூக்களோடு குளங்கள், சிறு அருவிகளோடு 26 ஏக்கரில் அமையும். அங்கு ராக்ஷசர்களும் உண்டா என்று யாரும் சொல்லவில்லை. தேவையென்றால் நமது நாட்டில் அநேகர் இருப்பதால் பஞ்சமில்லை. கொண்டு போய் நிறுத்தலாம். டில்லி பக்கமே நிறைய கிடைக்கலாம். மொத்தம் 62 ஏக்கர் திட்டமாம். அதில் 12 ஏக்கர் நமது வாகனங்கள் நிறுத்த, ஹெலிகாப்டர் வந்து இறங்க பறக்க. இந்த திட்டத்தை தீட்டுவது நம்மவர்கள் இல்லை. இதை அழகாக வரைபடமாக்கி, நிர்மாண திட்டம் தீட்டுவது ஒரு அமெரிக்க நிறுவனம். டில்லி IIT க்கும் இதில் கொஞ்சம் பங்குண்டு. நிறைய டில்லி கம்பனிகள் மின்சார, குளிர் சாதன வேலைகளில் தலையிட்டிருக்கின்றன. 70 மாடிவரை கண்ணாடி. இந்த கோவில் படம் பார்ப்போமா? நமது வாழ்நாளில் என்றாவது ஒருநாள் இங்கே செல்ல வாய்ப்பை கிருஷ்ணன் தருவான் என்ற நம்பிக்கை இருக்கிறது.
No comments:
Post a Comment