Friday, June 29, 2018

HINDU WEDDING RITES



''டும் டும் டும் கல்யாணம் '' - 7 - J.K. SIVAN .

மீண்டும் ஒரு குறிப்பாக சொல்வது

நமது ஹிந்து சனாதன கல்யாணங்களில் சப்தபதி என்ற ஏழு அடி சத்ய பிரமாணம் மிக முக்கியமானது. கடைசி வரை வாழ்க்கையில் இதை கடைபிடித்தவர்களும் உண்டு. என் முன்னோர்களில் பலர் அவ்வாறே வாழ்ந்தவர்கள். தெய்வங்கள்.
தஞ்சாவூர் தமிழில் ''ஏழு தப்படி'' ஏழு காலடி என்று அர்த்தம். தப்பான அடி அல்ல. மாப்பிள்ளை, பெண் இருவரும் கையைபிடித்துக்கொண்டு ஹோம குண்டத்தையும் கல்யாணம் செய்து வைக்கும் வாத்தியாரையும் சுற்றி வருகிறார்கள். அவர் ஏதோ மந்திரம் சொல்கிறார். ஒவ்வொரு அடி வைக்கும்போதும் தம்பதியர் பகவானை பிரார்த்தித்துக் கொள்கிறார்கள். அதாவது வாத்தியார் சொல்லும் மந்திரத்தை 'தப்பில்லாமல்' திருப்பிச் சொல்வதின் மூலம். இந்த ஏழு அடி எடுத்து வைப்பதன் அர்த்தம் போன கட்டுரையில் விரிவாக சொன்னேன்.

சுருக்கமாக சொல்லப்போனால்: கல்யாணம் பண்ணுவதற்கு வழிமுறை:

1. முதலில் ''வது வர குண பரிக்ஷம்'' - இதன் மூலம் ஒரு பையன் பெண்ணுக்கு தகுந்தவனா அல்லது பெண்பையனுக்கு ஏற்றவளா என்று சோதிப்பதற்காகத்தான், பெரியவர்கள் சம்பந்தம் பேசுமுன் சகல விபரங்களையும் கேட்டு அறிவார்கள். பொருத்தம் பார்ப்பது இதற்காகத் தான். இதெல்லாம் அப்போது....

2.' வரப்ரசேன, வரவரித்தி கர்மா'' -- தக்கவர்களை அனுப்பி பெண் கேட்பது. பெண்வீட்டார் முதலில் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு பிள்ளை தேடுதல் வழக்கமானது. இப்போது இதற்கென சில ப்ரோக்கர்கள். அவர்களது நோக்கம் எப்படியாவது எவரையாவது ''பிடிப்பது'' தனக்கு ஆதாயம் பெறுவது.

3. ''வரி நிஸ்சயம்.'' பெண்ணையோ பிள்ளையையோ தேர்ந்தெடுத்து நிச்சயம் செய்து கொள்ளுதல்.

4. ''மண்டபகரணம்'' - ஒரு நல்ல இடமாக தேர்ந்தெடுத்து கல்யாண ஏற்பாடு இப்போது அவசியமாகி விட்டது. ஒன்றரை வருஷத்துக்கு முன்பே கல்யாண மண்டபம் தேடி பிடித்தபிறகு தான் கல்யாணம் வைத்துக் கொள்ளமுடியும். அப்போதெல்லாம் பெண் வீட்டிலேயே தெருவை மடக்கி பந்தல் போட்டு விமரிசையாக கல்யாணம் நடக்கும். ஊரில் எல்லோரும் பங்கேற்று கல்யாணம் நடக்கும். ஊர்லே கல்யாணம் மார்லே சந்தனம். இப்போது புத்தகத்தில் கதைகளில் மட்டுமே இதை படிக்கலாம். முடிந்தவர்கள் அவசியம் தங்களது குல தெய்வ ஊரிலே கல்யாணம் வைத்துக்கொள்ளலாம். சில கோவில்களில் கல்யாணம் செய்ய அனுமதி உண்டு. இடமும் இருக்கும்.

5. 'வது கிரஹ கமனம்'' : பிள்ளை பெண் வீட்டுக்கு செல்வது. அதற்கு முன் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் பரிச்சயம் இல்லை. இப்போது படித்து சந்தோஷமாக ''பேத்தல் '' என்று சொல்லி சிரிக்கலாம். தடை இல்லை.

6. 'நாந்தி ச்ராத்தம், புண்யாஹவாசனம்' - முன்னோர்கள் தேவர்கள் ஆசியை வேண்டுதல்.
ஹோமங்கள், ப்ரீதிகள் தொடர்வது..

வேதங்களில் '' தைல ஹாரித்ர லேபனம்'' என்று மஞ்சள் குங்குமம் தடவி பெண்ணை அலங்கரிப்பது பற்றி வருகிறது. ஒருவிதத்தில் மெஹந்தி, நலங்கு இது தான் இப்போது இதை குறிப்பதாக எடுத்துக் கொள்வோம்.

'மதுபர்க்கம்'' - பிள்ளையை பெண் வீட்டுக்கு அழைத்து பாலும் பழமும் கொடுப்பது. கல்யாண மண்டபத்திலேயே இது ஊஞ்சலில் இப்போது நடைபெறுகிறது. அந்த காலத்தில் 7 நாள் கல்யாணம் நடக்கும். இப்போது கல்யாணம் ஆகுமுன்பே சாயந்திரம் நிச்சயதார்த்தம், வரவேற்பு கல்யாணமாகாத ''தம்பதிகளோடு'' போட்டோ வாழ்த்து, அடுத்தநாள் காலை கல்யாணம். மத்தியானம் இடத்தை காலை பண்ணவேண்டும்.

மாப்பிள்ளையை விஷ்ணுவாக பெண்ணை லக்ஷ்மிதேவியாக பாவித்து உபசரிப்பது வேதங்களில் சொல்லப்படுகிறது.

'7. 'பரிதாபன, சம்நஹனம்'' என்பது புது வஸ்திரங்களை பெண்ணுக்கு உடுத்தி இருப்பில் தர்ப்பையை இடுப்பில் கட்டுவது. ,

8. 'ப்ரதிஸர பந்தனம்' : பெண்ணின் இடது கரத்தில், பையனின் வலது கரத்தில் காப்பு கட்டுவது.

9. ''பரஸ்பர சமிக்ஷண'' : அந்தக்காலத்தில் பெண்ணும் பிள்ளையும் நேரில் பார்த்துக்கொள்வதே கல்யாணத்தின் போது தான். தயவு செய்து சிரிக்காதீர்கள்..

10 ''ஆர்த்ராக்ஸத்ரோபனம்'' என்பது முழு நெல், அரிசியை பாலில், நெய்யில் கலந்து இருகையாலும் பெண்ணின் இரு கரத்தில் மாப்பிள்ளை கொடுப்பதும் அதேபோல் பெண் பிள்ளையின் கரங்களில் அளிப்பதும் ஒரு வழக்கம். இருவரின் சேர்ந்த கரங்களில் ஒரு தங்க காசு பெண்ணின் தந்தை அளிப்பார். இப்போது அதெல்லாம் எதிர்பார்க்க வேண்டாம்.

வாத்யார் ரெண்டு பேருக்கும் கங்காஜலம் த்ருவ தர்ப்பையால் ப்ரோக்ஷணம் செய்வார்.கங்கண தாரணம் நடைபெறும்.

11. மங்கள சூத்ர தாரணம் - இதுவே முக்கிய நிகழ்ச்சி.

12 ''உத்தரீய ப்ராந்த பந்தனம்'' : மஞ்சள் கிழங்கு பாக்கு வெற்றிலையை பிள்ளையின் அங்கவஸ்திரத்தில் முடிந்து வைத்து ரெண்டு பேர் வஸ்திரத்தையும் இணைத்து முடிச்சு போட்டுவிடுவார்கள்.

'13. 'அக்னிஸ்தாபன ஹோமம்'' : ஹோமத்தீ வளர்த்து மந்திரங்கள் சொல்வது.

14. ''பாணிக்கிரஹணம்'' : பெண்ணின் கரத்தை பிள்ளை பற்றுவது.

15. ''லாஜ ஹோமம்'' : பெண் அல்லது பெண்ணின் சகோதரனோ அக்னியில் பொரி இடுவது. இது யமனுக்கு த்ரிப்தியை அளித்து எங்களை நீண்டநாள் வாழ வையப்பா என்று வேண்டுவது. ஒரு குட்டி லஞ்சம் என்று எடுத்துக் கொள்ளவேண்டாம்.

'16. 'அக்னி பரிணாயணம்: தீயை மூன்று முறை வலம் வருவது என்று தான் வேதங்களில் சொல்வது. ஆனால் ஏழுமுறை என்பது பின்னர் வழக்கமாகிவிட்டது. அதுவே சப்தபதி.

17. அஸ்மாரோஹணம்: அம்மி மிதிப்பது. கஷ்டங்களை, துன்பங்களை எதிர்கொள்வேன் என திடம் செய்து கொள்வது

18. மூர்தபிஷேகம் : பெண்ணுக்கு அபிஷேக ப்ரோக்ஷணம்:

19. ஸூர்யோதிக்ஷணம் : சூரியனை வணங்குவது.
ஹ்ரிதயஸ்பர்ச இருவரும் நெஞ்சைத்தொட்டு உள்ளன்போடு பிரார்த்திப்பது.

இன்னும் சொல்கிறேன்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...