''ஒரு தெலுங்கு பக்தை சொல்கிறாள்''- 1
J.K. SIVAN
ஒவ்வொரு மஹான் வாழும்போதும் கூடவே யாரோ ஒரு மஹா புருஷரோ ஸ்திரீயோ அதே காலத்தை சேர்ந்தவராக அந்த மஹான் பற்றிய உண்மைகைளை, மகோன்னத விஷயங்களை எடுத்து சொல்வது நாம் செய்த பேரதிர்ஷ்டம் என்று தான் சொல்வேன். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் காலத்தில் ''எம்'' என்று தனது பெயரைக்கூட வெளியிட விரும்பாத பக்தராக இருந்த தத்துவ பேராசிரியர் மஹேந்திரநாத் சட்டர்ஜீ மூலம் பகவானின் பல அற்புதங்கள் நமக்கு தெரிகிறது. விவேகானந்தருக்கு ரோமைன் ரோலண்ட், சிஸ்டர் நிவேதிதா எழுதிவைத்தவை அற்புதமாக இருக்கிறது. ரமணர் காலத்தில் சூரி நாகம்மா என்ற தெலுங்கு பெண்மணி அவரோடு கூட ஆஸ்ரமத்தில் இருந்து அன்றாட குறிப்புகள் எடுத்து தனது சகோதரனுக்கு 273 கடிதங்களாக எழுதியிருக்கிறார். தெலுங்கில். அதில் பகவானின் கடைசி ஐந்து வருஷ வாழ்க்கையை படமாக பிடித்து எழுதியிருக்கிறார். அதில் கொஞ்சம் பார்ப்போம்.
ரமணாஸ்ரமத்தில் கண்டிப்புகள் இல்லை. இதை செய், செய்யாதே என்று கட்டளைகள் இல்லை. ஆஸ்ரமத்தின் அமைதியை காக்க ஒவ்வொருவரும் உழைத்தார்கள். ஆத்ம விசாரம், தியானம் என்று ஒவ்வொரு நாளும் தம்மை அமைதியாக அபிவிருத்தி செய்து கொண்டார்கள். அவர் காலடியிலேயே காலம் கழித்தார்கள். பகவான் யாருக்காவது ஏதாவது சொன்னால் அதை குறிப்பெடுத்துக் கொண்டார்கள்.
சூரி நாகம்மா அதிகம் படிக்காத தெலுங்கு பெண்மணி.
''முந்தா நாள் பவுர்ணமி. தீப உற்சவம். அருமையாக இருந்தது. இன்னிக்கு காலை அருணாச்சலேஸ்வரர் கிரி பிரதக்ஷணம் வந்தார். மேள தளங்களுடன், வேத மந்த்ரங்களோடு. எல்லோரும் கூடவே சுவாமி பின்னால் சென்றார்கள். ரமணாஸ்ரமம் வாசலில் சுவாமி ஊர்வலம் வரும்போது பகவான் ரமணர் எதேச்சையாக கோ சாலை போக வந்தவர் புத்தக சாலை வழியில் உள்ள திண்ணையில் உட்க்கார்ந்து விட்டார். ஸ்வாமிக்கு கற்பூர ஹாரதி ஆஸ்ரம பக்தர்கள் காட்டி பிரசாதம் பெற்று பகவானுக்கு காட்ட , துளி விபூதி எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டார். ''அப்பாக்கு பிள்ளை அடக்கம்'' என்ற வார்த்தை வெளி வந்தது. சொல்லும்போது உணர்ச்சி வசம். முகத்தில் பக்தி கலந்த ஞான பிரகாசம். பகவான் ஸ்ரீ ரமணர் அருணாச்சலேஸ்வரர் புத்ரன் அல்லவா? கணபதி முனி அடிக்கடி சொல்வார். பகவான் ஸ்கந்தன் அவதாரம் என்று. சரியாகதான் இருக்கிறது ''அப்பாக்கு பிள்ளை '' . உலகத்தில் அனைத்து ஜீவராசிகளும் ஈஸ்வரனின் பிள்ளைகள், படைப்பு, தானே.
++
நேற்று ஒரு பெங்காலி சுவாமி வந்தார். ஹ்ரிஷிகேசானந்தா என்று பெயராம். இன்று காலை 8.30மணியிலிருந்து 11மணி வரை பகவானோடு ஆன்மீகமாக பேசிக் கொண்டி ருந்தார். பகவான் கங்கா பிரவாகம் மாதிரி பேசினார். மதுரையில் தனது மரணானுபவம் ஆத்ம விசாரம் பற்றி சொல்லும்போது எல்லோரும் கற்சிலைகளாக பிரமித்து கேட்டுக்கொண்டிருந்தார்கள் . அமிர்தம் மாதிரி குரல். கண்ணில் ஒளி. நிசப்தமாக இருந்தது. யார் யாரோ கேள்விகள் கேட்டதற்கு பகவான் சன்னமான குரலில் பதிலளித்தார். பெண்கள் பகுதி தனி. பகவான் அமர்ந்திருந்த இடத்திற்கு ரொம்பவே தள்ளி இருந்தது. அதுவும் நான் கடைசியில் உட்கார்ந்துவிட்டேனா, காதில் சரியாக விழவில்லை.
''மரணத்தை நேரில் கண்டபோது என் உடல் வேறு நான் வேறு என அறிந்தேன். சகல உணர்ச்சிகளும்,அங்கத்தில் அடங்க, நான் என்ற ஆத்மா மட்டும் தனித்து சுடர் விட்டு ஒளிர்வது புரிந்தது. உடலை எரித்தாலும் அது பாதிக்கப்படாதது. நான் என்று சொல்கிறோமே உடலை அது நான் இல்லை ''. பகவான் குரல் கேட்டேன்.
என்ன செய்வது. பகவானின் முத்துக்கள் அத்தனையும் நான் சேகரிக்க வில்லை. முடிந்ததை எடுத்தேன். சொல்கிறேன்.''
''சூரி நாகம்மா'' பிடிக்கிறதா? இன்னும் எழுதுகிறேன்.
No comments:
Post a Comment