Wednesday, June 27, 2018

SILENCE

  '' மௌனத்தில் விளையாடும் மனச்சாட்சியே ''
                                J.K. SIVAN

பேசாமல் வாயை மூடிக்கொண்டிருப்பதால் எவ்வளவு பயன் என்று ஏன் யாருக்குமே தெரியவில்லை?     என் நண்பர்  கோவிந்த குருப்  எதற்கு மௌனம் என்று வெகுநாளாக கேட்டுக்கொண்டிருப்பதற்கு  பதில் சொல்கிறேன்.


முதலாவது  நாலு பேருக்கு நடுவில் ரொம்ப பேசாமல் இருந்தால் எல்லாம் தெரிந்தவர் அமைதியாக நிறைகுடமாகி தளும்பாமல் இருக்கிறார் என்று நினைப்பார்கள். ஒரு நமுட்டு சிரிப்பு போதும். எதற்கும் தலையாட்டினால் இன்னும் விசேஷம். மற்றவர்கள் நாம் அவர்கள் சொல்வதை ஆதரிப்பதாக புரிந்து கொண்டு உற்சாகமாக பேசுவார்கள்.நாம்  வேறு எதையோ நினைத்துக்கொண்டிருப்பது அவர்களுக்கு தெரியாதே.

ரெண்டாவது  முக்கிய காரணம்  நமது அறிவின்மை, அஞ்ஞானம் வெளிப்படாது. 

மூன்றாவது  வெகு முக்கிய காரணம் மௌனம்  உடம்புக்கு ரொம்ப நல்லது.  30  டெசிபல் (decibel ) காதை  டமாரமாக்கிவிடும் .  ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச்செய்யும். தலை கிறுகிறுக்கும்.  அதனால் தான் இரவில் மெதுவாக  சாதுவாக  மெல்லிசையாக  பாட்டு கேட்டு தூங்கவேண்டும். டிவியில்  ஒரு பெண் கத்துவதை,  இல்லை எல்லா சானெல்களிலும் எல்லா பெண்களும் ஆத்திரத்தோடு கத்துவதை கேட்கவேண்டாம். நடுக்கம் வரும்.
 எல்லோருக்குமே  விடிகாலை பிடிக்க காரணம் அப்போது நிலவும்  அமைதி, சப்தமின்மை. மெல்லிய பட்சிகளின் இன்பராகம். மனதிற்கு புத்துணர்ச்சி தர,   செல் தொலைபேசிக்கு பாட்டரி ரீ சார்ஜ்  போல  அமைதி, மௌனம் மனதிற்கு  அடிக்கடி தேவை. தூக்கத்தின் போது அதிகம் தேவை.

ஒரு விஷயம் தெரியுமா?.  வெளியே கேட்கும் சப்தத்தை விட,  கூச்சலை  குழப்பத்தை விட  உள்ளே  தான் அதிகம்.  அதான் சார். மனதில் ஏற்படும்  மாறி மாறிவரும்  கோபம், தாபம், ஏக்கம், பொறாமை எண்ணங்கள்  ரொம்பவே சப்தம் போடும்.  மௌனம் கொஞ்சம் கொஞ்சமாக  அவற்றை அடக்கும்.   கதவை சார்த்திவிட்டு உன் அறையில் கண்ணை மூடி  கொஞ்சம்  நிதானமாக  நீண்ட  மூச்சு உள் வாங்கி , நிறுத்தி, மெதுவாக வெளிவிட்டு.  ஒரு நாலைந்து இப்படி  போதும்.  அடிக்கடி இதை செய்தால்  மனம்  அமைதியாகிவிடும்.

வெளியே செல்லும்போது மௌனமாக இருப்பதால் உன் கவனம் நீ  செல்லும் காரியத்தில் நன்றாக  ஈடுபட வைக்கும். மௌனமாக இருப்பதால்  கிருமிகள் உள்ளே செல்ல வாய்ப்பு இல்லை அல்லவா.  அதனால் உடல் நலம் பாதிக்கப்படாது. மௌனம் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.  மனதை ஒருநிலைப்படுத்தும்.  அதனால் தான்  நாம் தியானத்தின் போது  கண்களை மூடி, கவனம் சிதறாமல், மௌனமாக  நிதானமான ஸ்வாசத்தோடு அசையாமல்  இருக்கிறோம்.  தியான மண்டபத்தில்  ''அமைதி காக்க '',  ''silence  please''   என்றெல்லாம்  எழுதி வைக்கிறார்களே  இதற்காகத்தான். 

மௌனம் மனம் மனத்தோடு பேச வைக்கும்.  கண்ணாலேயே  செய்திகள்  சொல்லும்.  ''நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்''   முடியும்   பேச இயலாதவர்கள் மிகவும்  எளிதில் சைகை  மூலம் மனக்கிடக்கையை வெளிப்படுத்துகிறார்களே.   மௌனம் இளமையைத் தரும். காரணம்.  பேச்சினால்  ஆத்திரம், கோபம், ஆங்காரம், வருத்தம், சோகம் எல்லாம் வந்து உடலை பாதிக்கிறது. நரம்புகள் தளர்ச்சி அடைகிறது. மூசசு வேகவேகமாக வெளியேறுகிறது. மூச்சு வெளியேற வெளியேற வாழ்நாள் குறையும். முதுமை வளரும்.

முன்னோர்கள்  மாதத்தில் , வாரத்தில் ஒரு  இரு நாள் மௌன விரதம் இருந்தார்கள் நன்றாக வாழ்ந்தார்கள்.
மௌனத்தால்  ஹார்மோன்கள் சீர் படுகிறது. ரத்த ஓட்டம் சீராகிறது. அது ஒன்றே போதுமே.
மௌனத்தின் போது மனஓட்டம் செயற்படுகிறது. யோசிக்க முடிகிறது. அதனால் உடல் மீது நாட்டம் போவதில்லை, உடல் வலி தெரிவதில்லை.  தூக்கம் உடலுக்கு எப்படியோ அதுபோல் மௌனம் மனதிற்கு அவசியம்.

கடைசியாக மௌனம் ரகசியங்களை வெளியே விடாமல்  பாதுகாக்கிறது.  அது எவ்வளவு வரப்பிரசாதம். ''வாயை விட்டுவிட்டு  மாட்டிக்கிட்டான்''   என்பார்களே  அந்த ஆபத்து  நேராது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...