டும் டும் கல்யாணம் 6 J.K. SIVAN
நமது ஹிந்து கலாச்சாரத்தில் சில மாதங்கள் ரொம்பவும் பிஸியான கல்யாண மாதங்கள். ஒரே நாளில் ரெண்டு மூன்று கல்யாணம். எங்கே எதற்கு போவது?. எதில் பங்கேற்று வாழ்த்தி சாப்பிடுவது? ஒன்றில் தலையைக் காட்டி அழைப்புக்கு'' (ரிசப்ஷன்) சென்று யாருமே கேட்காத இன்னிசையை காதில் வாங்கிக்கொண்டே சாப்பிட்டு, தெரிந்த சில முகங்களிடம் அர்த்தமில்லாமல் சிரித்து விட்டு பையை வாங்கிக்கொண்டு திரும்புவது. மற்றொன்றில் முகூர்த்தம் என்று அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் காலையில் வெறும் இட்டிலி பொங்கல், பூரி, தோசை,கேசரி சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொண்டு சாப்பிடாமல் திரும்புவது. சிலதில் காலையிலேயே ஏதாவது வீட்டில் கொஞ்சம் வயிற்றை நிரப்பிக் கொண்டு அங்கே முகூர்த்தம் முடிந்து போஜனத்தை உண்டு வீடு திரும்புவது வழக்கமா, பழக்கமா, ஏதோ ஒன்று ஆகி விட்டது.
நமது ஹிந்து சம்பிரதாயமே புனிதமானது. பெருமைப் படக்கூடிய ஒன்று. ஏனோ இப்போது கொஞ்சம் விசித்ரமானது. அதில் எல்லோருக்கும் ஈடுபாடு முழுவதுமாக இருக்குமா என்று யாராவது கேட்டால், சந்தேகத்துக்கு இடமே இல்லாமல் ''கிடையாது சார் '' என்று சொல்லிவிடலாம். ஏன்?
சம்ப்ரதாயம் முழுதும் யாருமே தெரிந்து கொள்ள முயல வில்லை. நமது முன்னோர்களை எடுத்துக் கொண்டால் அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்ற சம்பிரதாயங்களை மற்றவரிடமிருந்து தெரிந்து பழக்கத்தில் வைத்திருந்தார்கள். அந்த ''மற்றவர்கள்'' வேறு ''மற்றவர்களிடமிருந்து'' அறிந்த விஷயமாக அது இருந்தது. கர்ண பரம்பரை என்பது இதைத்தான். அதனால் தான் இடத்துக்கு இடம், குடும்பத்துக்கு குடும்பம் கொஞ்சம் வேறுபடும். எங்கும் முழுதும் புத்தகமாக யாரும் எழுதி வைத்துக் கொள்ளவில்லை. எனவே தான் விஷயம் அறிந்தவர்களாக காட்டிக்கொண்ட சில வைதீகர்கள் காட்டில் கொள்ளை சிரபுஞ்சி மழை. ஒவ்வொருத்தர் சொல்வதும் ஒரு விதமாக இருக்கும். அது சம்ப்ரதாயம் என்று அடித்து வேத வியாசர் மாதிரி தன்னை காட்டிக் கொள்வார்கள்.
சில சம்ப்ரதாயங்கள் அனைவராலும் கடைபிடிக்கப் படுகிறதா? என்று கேட்டால். ஏதோ வாத்தியார் சொல்கிறாரே, அதை செய்யவேண்டும். அதை எல்லாம் சொல்லிக்கொடுக்க தானே அவருக்கு சம்பாவனை'' என்று விட்டு விடுபவர்கள் தான் ஜாஸ்தி.
உண்மையில் சம்ப்ரதாயங்கள் என்ன சொல்கின்றன. எதற்காக, ஏன் எப்படி ? என்று ஊன்றி கவனித்து தேடி விஷயம் சேகரித்தால் அதன் ருசியே தனி. அதன் அர்த்தமே வேறு தான்.
இப்போதெல்லாம் கல்யாணத்தில் ஏகப்பட்ட சம்ப்ரதாயங்கள். நாந்தி. ஜாதகர்மா,நாமகர்மா, ஜானவாசம், மாப்பிள்ளை அழைப்பு, நிச்சயதார்த்தம், முஹுர்த்தம், பாணி கிரஹணம். கன்னிகா தானம், அம்மி மிதிப்பது, அருந்ததி பார்ப்பது, சப்தபதி, ஹோமம். இதெல்லாம் நடக்கிறதே. கொஞ்சமாவது அதையெல்லாம் பற்றி சிந்திக்கிறோமா. அதன் அர்த்தங்கள், காரணங்கள் புரியுமா. தெரிய வேண்டாமா?எல்லாவற்றையும் பற்றி எழுதவேண்டும் என்றால் ஒரு பெரிய தலைகாணி புத்தகம் எழுதவேண்டியிருக்கும். ஆகவே சப்தபதி என்று ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
அதை எனக்கு புரிந்தவரை தெரிந்தவரை விவரமாக சொல்லட்டுமா?
ஏழு தப்படி, என்று மாப்பிள்ளை, பெண் ஹோம குண்டத்தையும் கல்யாணம் செய்து வைக்கும் வாத்தியாரையும் சுற்றி வருகிறார்கள். அவர் ஏதோ மந்திரம் சொல்கிறார். ஒவ்வொரு அடி வைக்கும்போதும் தம்பதியர் பகவானை பிரார்த்தித்துக் கொள்கிறார்கள். அதாவது வாத்தியார் சொல்லும் மந்திரத்தை 'தப்பில்லாமல்' திருப்பிச் சொல்வதின் மூலம்.
முதல் அடி வைக்கும்போது : ''அப்பனே, எங்களுக்கு சமர்த்தியாக சுத்தமான, புஷ்டியான, ஆகாரத்தை அளிப்பாயாக. உன்னை வழிகாட்டியாக வைத்துக் கொண்டோம். நாங்கள் வாழ்க்கைப் பாதையில் முதல் அடி எடுத்து வைக்கிறோம். எங்களுக்கு நல்ல மரியாதை, கௌரவம் கிடைக்கும்படியாக நாங்கள் இருவரும் சேர்ந்து நடந்து எங்கள் உணவைப் பெற அருள் புரிவாய்.
ரெண்டாவது அடி எடுத்து வைக்கும்போது : 'சுவாமி எங்களுக்கு மன, உள்ள, உடல், ஆன்ம உறுதி அருளி நல வாழ்வு தொடங்க அருள்வாய். எங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் சந்தோஷமாக நடக்க அருள்வாய். இந்த பலத்தை அடைய நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கைப் பாதையில் அடுத்த அடி எடுத்து வைக்கிறோம். காப்பாற்று.
மூன்றாவது அடியெடுத்து வைக்கும்போது: ' எங்களது செல்வம் பெருகட்டும். வாழ்க்கை வளம் பெறட்டும்.எங்கள் வாழ்க்கைப் பாதையில் இந்த அடி எடுத்துவைக்கும்போது உன்னை வேண்டுவது எதிர் வரும் இன்ப துன்பங்களை சேர்ந்து அனுபவித்து வாழ்க்கையின் சுபிக்ஷத்தை நோக்கி நடப்போம்''.
நான்காவது அடி வைக்கும்போது: ''எங்கள் வாழ்க்கையில் இந்த அடி எடுத்து வைக்கும்போது பகவானே, உன்னருளால், எங்கள் வாழ்க்கையில் நாங்கள் சந்தோஷத்துடன் ஒருவரை ஒருவர் நேசத்தோடும் அன்போடும், பாசத்தோடும். நம்பிக்கையோடும், வாழ வேண்டும் .எங்கள் பெற்றோர், முன்னோர், மூத்தவர் ஆசி பெறவேண்டும்"
ஐந்தாவது அடி எடுத்து வைக்கிறார்கள் தம்பதியர் - அப்போது அவர்கள் வேண்டும் வரத்தின் பொருள்: ' லோகா சமஸ்தா சுகினோ பவந்து' . உலகம் யாவையும், எல்லோரும் நல்லவர்களாக, சந்தோஷத்தோடு வாழ வேண்டும். நல்ல வாரிசுகளை பெறவேண்டும. தான தர்மம் நாங்கள் இருவரும் சேர்ந்தே புரிய வேண்டும். எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும்'
ஆறாவது அடி : பகவானே, எங்களுக்கு நீண்ட சந்தோஷமான நோயற்ற வாழ்வு வாழ அருள்செய். எங்கள் இணை பிரியா வாழ்க்கை அமைதியாக நடக்கட்டும். அதற்கு இந்த அடியை நடக்கிறோம்.'
ஏழாம் அடி, சப்த பதியில் கடைசி அடி வேண்டுகோள்: தெய்வமே, எங்கள் இருவர் மனமும் கோணாமல் ஒன்றாகவே சேர்ந்து ஒருவருக்கொருவர் துணையாக, புரிதலோடு, அன்போடு, எந்த தியாகமும் புரியவேண்டும். எங்கள் இருவர் நட்பு நகமும் சதையுமாக, உயிரும் உடலுமாக பிரிக்க முடியாததாக அமைய வேண்டும்.
இந்த ஏழு வேண்டுகோள் இறைவனிடம் வைத்து கை கோர்த்து அக்னி சாட்சியாக வலம் வந்து வாழ்க்கையில் இவற்றை கடைப்பிடிக்க வாக்களிக்கிறார்கள். சத்தியத்துக்கு சான்றாக அக்னியை சாட்சியாக வைத்துக் கொண்ட சனாதன தர்மம் நமது. அப்போது புது கல்யாண மாப்பிள்ளை மனைவியிடம், ''இதோ பாரடி, இந்த ஏழடி நடந்த நாம் இனி உத்தமமான நண்பர்கள். உன் அன்பும் நட்பும் பிரியேன். நீயும் என் நிழலாக என்னோடு இணை பிரியாமல் இருப்பவள்'' என்கிறான்.'
இப்படிக் கல்யாணம் பண்ணிக்கொண்டு அனைவராலும் வாழ்த்தப்பட்டு மலர் இதழ்களில்,மங்கள அக்ஷதையில், மனமுவந்து அனைவராலும் குளிப்பாட்டப் பட்டு மணமக்கள்வாழ்வில் அடியெடுத்து வைக்கிறார்கள். ஒற்று மையான ஒழுக்கமுள்ள, ஒருவரை ஒருவர் நேசித்து இணைபிரியாத ஜோடியாக புத்ர பௌத்ராதி சந்ததியாக வாழ்ந்தது நமது முன்னோர் குடும்பங்கள்.
இதை எதிர்பார்த்து தான் இன்றும் மணமக்களை வாழ்த்தி அவ்விருவர் மீதும் மலர் மாரி பொழிகிறோம். மங்கள அக்ஷதை தூவுகிறோம்..
எத்தனை பேர் இதை தெரிந்து கொண்டோம்?. இதை தெரிந்து கொண்டு வாழவேண்டும் என்பதற்காக இதைப் படித்த பிறகு இனிமேல் யாரும் புதிதாக ஒரு பெண்ணைத்தேடி அலையவேண்டாம்.
வீட்டில் ஏற்கனவே இருக்கும் பெண்ணை இனியாவது அன்போடு நடத்துவது சாலச் சிறந்தது. அம்மணிகளுக்கும் அதே கோரிக்கை. எலி பூனைகளாக வாழ வேண்டாம். அவைகள் வீட்டில் எங்காவது இயற்கையாக ஓடிக் கொண்டிருக்கட்டுமே. அடுத்த தலைமுறைக்கு இதை எடுத்து சொல்லுங்கள்.
வாழ்க்கை ஆரம்பித்தவுடனே வாத்தியார் இருந்த இடத்தில் கருப்புக்கோட்டுக்காரர் வழக்கறிஞர் (வழக்குரைஞரா??) தக்ஷிணை பெற வர வேண்டாமே. எத்தனையோ லக்ஷங்கள் செலவழித்து வேலை மெனக்கெட்டு அலைந்து யாரையோ தேடி சம்பந்தம் செய்த்துக்கொண்டது வெறும் விளையாட்டாக, கேலியான வேடிக்கை சின்னமாக அல்லவோ மாறிவிடும்? இன்று சில தெரியாத விஷயங்களை பற்றி பேசுவோம்.
THIS BLOG REPRESENTS THE SPIRITUAL, EDUCATIONAL, HISTORICAL, NOSTALGIC RECOLLECTIONS OF J.K. SIVAN BESIDES HIS STORIES AND TRAVELLOGUES & PILGRIMAGES AND PICTURES
Wednesday, June 27, 2018
Subscribe to:
Post Comments (Atom)
About Me - YOUR FRIEND
GHANTASALA SONG
கண்டசாலா விருந்து ஒன்று. #நங்கநல்லூர்_J_K_SIVAN ''தண்ணொளி வெண்ணிலவோ'' என்ற அருமையான கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...
-
அங்க சாஸ்திரம் - சாமுத்திரிகா லக்ஷணம் J.K. SIVAN நமது உடல் ஒரு அற்புத அதிசய சுரங்...
-
நீங்கள் என்ன கோத்ரம்? நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வார்த்தையை சரியாக புரிந்து கொள்வதில்லை. சடங்குகளில், ஆல...
No comments:
Post a Comment