Tuesday, July 3, 2018

HINDU WEDDINGS



டும் டும் டும் கல்யாணம்  J.K. SIVAN


ஹிந்து குடும்பங்களில்  கல்யாணம் என்பது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டதாக இருந்த வழக்கம்  நாள் பட நாள் பட சுருங்கிப் போய் பெண்களும் பிள்ளைகளும் தாம் யாரோடு வாழவேண்டும் என்று முடிவெடுக்கும் காலம் வந்துவிட்டது.  

பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட கல்யாணங்கள் ஒருகாலத்தில் இருவரில் ஒருவர் மரணம் அடையும்வரை  தொடர்ந்தது.  கணவன் மனைவி உறவு துண்டிக்கப்படவில்லை. தற்போது  பெரியோர் நிச்சயித்ததும் தானாக தேடிக்கொண்டதும் நிலைக்குமா என்பது கேள்விக்குறி.  மன வளர்ச்சியா, தன்னம்பிக்கையா, சுய கௌரவமா, சுயநலமா  எது நிர்ணயிக்கிறது  தொடர்ந்த மண வாழ்க்கையை?  சுயநலம் அதிக மதிப்பெண் பெறுகிறது. 
                                       
பல குடும்பங்களில் அப்போது  இன்னார் பெண் இன்னார் பையனுக்கு  என்று  சிறுவயதிலேயே முடிச்சுப் போட்டார்கள்.  ராஜஸ்தான் போன்ற இடங்களில் குழந்தைகளுக்கே திருமணம் செயது வைத்தார்கள்.  ஜாதகங்கள் நிர்ணயித்தன. பெண்கள் பிள்ளைகள்  அப்பா அம்மா பார்த்து முடிவெடுத்தால் அது சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தார்கள்.  நிறைய கல்யாணங்கள் நல்ல தரகர்கள் மூலம் முடிவாயின. தொடர்ந்தன.  கொடுக்கல் வாங்கலில் தான் திருமண வியாபாரம் சீர் கெட்டது.  ''சீர்'' கேட்டு , வரதக்ஷிணை என்ற பெயரில் பிள்ளை வீட்டார் போட்ட கண்டிஷன்கள் பல பெண் வீடுகளில் ஏற்கப்பட்டன.  கல்யாணம் தடைபடாமல் தடுக்கப்பட்டன. பிறகு விஷயமே தலைகீழாக போய்விட்டது.  பெண் படிப்பு, உத்யோகம், வருமானம், ஆகியவை தலைதூக்க ஆரம்பித்ததும் காட்சி மாறிவிட்டது.  பெண்வீட்டார் போடும் நிபந்தனைகளுக்கு பிள்ளையை பெற்றோர் ஏற்கும் நிலை.  கல்யாணம் என்பது  இரு உயிர்களின் இணைப்பு என்பது மறந்து போய்விட்டது.  பணம்  குணத்தை விழுங்க ஆரம்பித்த வுடன்  மன முறிவு  மண முறிவில் கொண்டு நிற்க வைத்து விட்டது.  கோர்ட்  கேஸ்  விவாக ரத்து  அதிகமாகி விட்டது. மருமணங்கள்  சம்பிரதாயத்தை தூக்கி எறிந்துவிட்டன.  அவரவர்  தத்தம் திருமணத்தை நிச்சயிக்க தொடங்கிவிட்டார்கள். நீண்ட திருமண வாழ்க்கை ஒரு கட்டாயமாக படவில்லை.  மேலை நாட்டு கலாச்சாரம்  உள்ளே புகுந்து விட்டது.

'திருமணத்தன்று வரையிலும்  கணவன் முகம் சரியாக தெரியாத காலம் போய், கணவன் உயிரோடு தன் உயிரையும் போக்கிக்கொள்ளும் அதற்கு முந்தைய வழக்கம் எல்லாம் கால வளர்ச்சியில் மறைந்ததும் ஒருவிதத்தில் நல்லது தான்.  கேட்டதெல்லாம் கொடுத்தால் தான் பெண் கழுத்தில் தாலி ஏறும் என்ற தீமையும் அழிவதும் நல்லதே.  பெண் சொல்கிறதை பையன் கேட்கவேண்டும், பெண்வீட்டார் நிபந்தனைகள் ஏற்கப்படாவிட்டால் திருமணம் இல்லை  என்ற நிலை வந்திருப்பது  காலத்தின் கோலம். இதற்கு முக்கிய காரணம்  பெண்: பிள்ளை விகிதம் எண்ணிக்கை குறைந்ததால் என்பதும் தவறு.  எதிர்பார்ப்புகளில்  அடிப்படை கோளாறு இருப்பதால் தான். ஆணுக்கு பெண் சமம் என்பது ஞாயம்.  விட்டுக்கொடுப்பது என்பது வாழ்வில் இன்றியமையாதது. அது விட்டுப்போய்விட்டதே.  மனோபாவம் வேறுபட்டால் மண வாழ்க்கை எவ்வாறு தொடரும்? இருமனம் ஒன்றானால் தானே திருமணம் இனிக்கும்? அவசரப்பட்டு முடிந்த கல்யாணங்கள் அரைகுறையாய் முடிவதற்கு இதுவும் ஒரு காரணம்.    ஆடம்பரம், வீண் செலவு,   போலி கௌரவம், இவற்றால் பணவிரயம் தான் பலன். 

இந்திய  ஏழை நாடு என்று யார் சொன்னது?  உலகிலேயே  ஒரு வருஷத்துக்கு  55000  கோடி ரூபாய்  உணவு பாழாக்கும் ஒரு தேசம் இந்தியா  என்று உலகளவில் பேச காரணத்தில்  மேலே சொன்ன  வீண் செலவுகள் பெரும்பங்கு வகிக்கிறது.

சுப்பண்ணா கல்யாணம் ஜமாய்ச்சுட்டார். 27 அயிட்டம்...!!! யாரால் சாப்பிடமுடியும்?  யானை அலங்கரித்து, வாணவேடிக்கைகளோடு  மிகப்பெரிய கல்யாண மண்டபம். இரவைப் பகலாக்கும்  மின்சார ஒளி.   உடம்பே தெரியாத அளவு  பெண்ணுக்கு நகை, ஆபரணம்.  இதெல்லாம் பெருமையா? வெறும் டம்பம்.   உனக்கு நான் எனக்கு நீ என்று பெண்ணையும் பிள்ளையையும் இணைத்து வைப்பவைகளா?  தொங்க தொங்க தாலி யோடு பல பேரன் பேத்திகளை கொஞ்சிய பாட்டிகள் தாத்தாக்களோடு இன்றும் சந்தோஷமாக இருக்கிறார்களே. சில பண்பாடுள்ள பக்தி பரிமளிக்கும் நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்  என்று இருக்கிறார்களே.

தற்போதுள்ள நிலை மாறவேண்டும், எதிர்கால சிந்தனையோடு இரு வீட்டாரும் திருமணங்களை பற்றி யோசித்து முடிவெடுக்க வேண்டும். பெண்ணும் பிள்ளையும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் இணை பிரியோம் என்று மன ஒற்றுமையோடு இணைய வேண்டும். ஆடம்பர செலவை தவிர்க்கவேண்டும். கல்யாணம் ஆயிரம் கால பயிர் என்பது கொஞ்சமாவது புரியவேண்டும். கல்யாண நோக்கம், மந்திரங்கள் என்ன சொல்கிறது என்று அவற்றில் எதை தற்காலத்துக்கு  ஏற்றது என புரிந்து தெரிந்து  பின்பற்றவேண்டும். இன்னும் குடி முழுகிப்போகவில்லை. நேரம் இருக்கிறதே. தவறுகள் தொடரவேண்டாம். அதிகாரத்தை அன்பு வெல்லட்டும்.
 தாலி குடும்பத்தை காக்கும் வேலி  என்பது புரியட்டும். திருமணம் வம்ச விருக்ஷம்.  அவசர முடிவுகள் அது  அடியோடு சாய அனுமதிக்கக்கூடாது. கருப்பு பணம் கல்யாணத்தில் கலக்கிறதா என்றா கவலை, அதை விட முக்கியம் கருப்பு மனம் துளியும் கலந்துவிடக்கூடாதே என்பது தான். 




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...