அறுபத்துமூவர் J.K SIVAN
கண்ணப்ப நாயனார்
2.'' கலை மலிந்தசீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன்''
வயதான காலத்திலும் சிவாச்சாரியார் கொம்பு ஊன்றிக் கொண்டு வந்து மூச்சிரைக்க மலை ஏறி தான் கொண்டுவந்த நைவேத்திய பொருள்கள், அபிஷேக சாமான்கள், துவைத்து உலர்த்திய வஸ்திரம், எல்லாம் தலையில் மூட்டையாக சுமந்து காளத்தி நாதனை அடைவார்.
சிறிது நாளாக யாரோ ஒரு மஹா பாவி இப்படி காளத்தீஸ்வரன் முன்பு இறைச்சி, எலும்பு எல்லாம் கொண்டு வந்து போட்டு இந்த பகவான் சந்நிதியை புனிதமற்றதாக செயகிறானே, ஏன் எதற்காக? என்ன கோவம் இந்த சிவன் மேல்? இதையெல்லாம் நீ அப்படி சகித்துக்கொண்டு இருக்கிறாய் சிவனே? என்று வருந்தினார் .
''மூன்றுகால பூசை வில்வத்தோடு பூசை செய்யவேண்டியவன் இந்த ரத்த வாடை நெடி அடிக்கும் மாமிசங்களை அப்புறப்படுத்தும் துர்பாக்கியம் எனக்கு இந்த வயதில் ஏன்? ஏதோ நான் எப்போதோ செய்த பாவத்திற்கு தண்டனையா பரமசிவா? என்னாலேயே தாங்கமுடியவில்லையே, நீ எப்படி இதை பொறுத்துக் கொண்டி ருக்கிறாய்? இங்கே வேடுவர்கள் நடமாட்டம் அதிகம். அவர்களில் யாரோ ஒரு துஷ்டன் தான் இதை செய்துகொண்டிருக்கிறான். அவனுக்கு தக்க தண்டனை கொடு ஈஸ்வரா .''
இதற்கிடையில் திண்ணனுக்கு சிவன் மேல் ஒவ்வொரு கணமும் அன்பும் பாசமும் பக்தியாக பரிமளித்தது. ''இந்த காட்டில் தனித்து மலைமேல் இருக்கிறானே இந்த பரமசிவன் இவனுக்கு நானும் குளித்து விட்டு சாப்பிட ஏதாவது ஏற்பாடு செய்யவேண்டாம். ஒரு கையில் வில் அம்புகள், இன்னொரு கையில் நன்றாக நெருப்பில் வாட்டி சமைத்த பன்றி மாமிசம். அதை அங்கங்கு கொஞ்சம் கடித்து சுவைத்து நன்றாக வெந்து இனிக்கும் பாகத்தை சிவனுக்கு என் மனமுவந்து ஆகாரமாக கொடுப்பேன். அவனைக்குளிப்பாட்ட நீர் எப்படி எதில் கொண்டுவருவேன்? ஆஹா அதற்கு தான் வாய் இருக்கிறதே. நிறைய அதில் நீர் நிரப்பிக் கொண்டுவருகிறேன்.'' வாயில் இருக்கும் நீரை காளத்திநாதன் மேல் உமிழ்ந்து தான் கொண்டுவந்த பச்சிலைகளை பூக்களை சிவலிங்கத்தின் மேல் போட்டு, உணவாக தான் கொண்டுவந்த இறைச்சியை இலை மேல் வைத்து உபசரிப்பான். பேசுவான். பிறகு செல்வான். இப்படி தான் அவன் பூஜை நடந்து கொண்டிருந்தது.
திண்ணன் பாபியல்ல. துஷ்ட வேடன் அல்ல. உண்மையான அன்பும் பக்தியும் தன்னிடம் கொண்டவன். அவனுக்கு தெரிந்த வகையில் மனமுவந்து சிவனுக்கு தனது வழிப்பாட்டை செய்தவன். சிவாச்சார்யாருக்கு திண்ணனின் தூய பக்தியை தெரிவிக்க வேண்டாமா? பரமேஸ்வரன் ஒரு திட்டம் போட்டார்.
''சிவாச்சாரியாரே, உமது வருத்தம் அர்த்தமற்றது. எனக்கு இப்படி விசேஷமாக பூஜை செய்பவன் இந்த காட்டை சேர்ந்த வேடர் குல தலைவன் நாகன் மகன் திண்ணன். இப்போது அவன் தான் தலைவன். நாளை சாயங்காலம் இங்கே வந்து அவன் வரும்போது அவன் கண்ணில் படாமல் ஒளிந்திருந்து என்ன நடக்கிறது என்று நீங்கள் பாருங்கள். புரியும்'' என்றான் காளத்திநாதன் அவர் கனவில். சிவாச்சாரியார் திடுக்கிட்டு எழுந்தார். என்ன கனவு இது. இறைவன் கட்டளையிட்டிருக்கும்போது அப்படியே செய்வேன்'' என்று மறுநாள் சீக்கிரமே போய் காளத்தி நாதன் இருக்கும் இடத்தில் அருகே ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டார். மனது திக் திக் என்றது. என்ன நடக்கும் என்று சிவன் சொன்னார்? பகவானே!
அன்று திண்ணனுக்கு சகுனம் சரியாக படவில்லை. மனத்தில் சஞ்சலம் ஏதோ உருத்திக் கொண்டிருந்தது. சிவனுக்கு இன்று நல்ல உணவாகவே அளிப்போம் என்று சில புதிய மிருகங்களை கொன்று நெருப்பில் வாட்டி காட்டுத்தேன் நிறைய அதன் மேல் ஊற்றி, சிறிது சுவை பார்த்து. ''நன்றாக இருக்கிறது. இது சிறந்தது என்று தேர்ந்தெடுத்து ஒரு இலையில் சுற்றி எடுத்துக் கொண்டான்.'' வாய் நிறைய நீர் வழக்கம்போல் நிரப்பிக்கொண்டு மலையேறினான். இதுவரை ஐந்து பகல், ஐந்து இரவு சிவனோடு தொடர்ந்த பாசமாக நீடித்தது.
காளத்தீஸ்வரர் முன் நின்ற திண்ணன் வாயினில் இருந்து நீர் உமிழ்ந்து சிவனை அபிஷேகித்தான். இலைகள் மலர்களை லிங்கத்தின் மேல் போட்டான். அப்போது தான் அவன் ஒரு பேர் அதிர்ச்சி அடைந்தான். சிவனின் ஒரு கண்ணிலிருந்து ரத்தம் பீறிட்டது 'ஐயோ, என்ன ஆயிற்று உனக்கு என் தெய்வமே. ஏன் உனது ஒரு கண்ணில் ரத்தம் வடிகிறது? தனது இடையில் உடுத்திய துணியால் துடைத்தும் மேலும் மேலும் கண்ணிலிருந்து ஆறாக ரத்தம் பெருகியது. திண்ணனுக்கு தலை சுற்றியது. கை நடுங்கியது. கொண்டுவந்த இறைச்சி சிதறியது. துடித்தான். என்ன செய்வேன்? துடைக்க துடைக்க ரத்தம் பெருகியதே தவிர நிற்கவில்லை. தனக்கு தெரிந்த பச்சிலை மருத்துவம் செய்தான். ரத்தப்பெருக்கு நிற்கவில்லையே.
திடீரென்று திண்ணனுக்கு ஒரு யோசனை. சிவனுக்கு இனி கண் குணமாகாது. நமக்கு ல்றேந்து கண் இருக்கிறதே. ஒன்றை கொடுத்தால் என்ன? மறுகணமே துளியும் தயங்காமல் கூரான அம்பினால் ஒரு கண்ணை அகழ்ந்து ரத்தம் பெருகும் சிவனின் கண்ணில் மேல் வைத்து அப்பினான். அப்பப்பா சிவனின் வலது கண்ணில் பெருகிய ரத்தம் நின்று விட்டது. திண்ணனின் கண் அங்கே சரியாக பொருந்தியது.
மிகவும் சந்தோஷம் திண்ணனுக்கு. ஆனால் அவன் சந்தோஷம் நீடிக்கவில்லை. சிவனின் இடது கண்ணில் இப்போது ரத்தம் பீரிடத் துவங்கியது. அடாடா இது என்ன கஷ்டம்? சிவனே உனது துன்பத்தைப் போக்கினேன் என்றல்லவா சந்தோஷப்பட்டேன். இப்போது உன் இடக்கண்ணில் அதே துன்பம் நேரிட்டதே. பரவாயில்லை எனக்கு தான் வைத்தியம் தெரியுமே. என் கண் இனி உனக்கு.
சரி எனக்கு இருப்பதோ ஒரு கண். அந்த கண்ணையும் எடுத்துவிட்டால் எப்படி சிவனைப் பார்ப்பது. எப்படி சரியாக அவனது இடது கண்ணில் அதை பொருத்துவது.? அடையாளம் வேண்டும் அவ்வளவு தானே. என் கால் எதற்கு இருக்கிறது. இதற்கு உபயோகப்படட்டுமே. தனது ஒரு காலை சிவன் இடக்கண் மேல் வைத்துக்கொண்டு கைகளால் தனது இரண்டாவது கண்ணையும் அம்பினால் அகழத்தொடங்கினான் திண்ணன்.
''திண்ணா நிறுத்து உன் செயலை '' சிவனின் கட்டளை திண்ணனுக்கு கேட்டது. கேட்கவில்லை திண்ணன். மூன்றுமுறை சிவனின் கட்டளை அவனை மேலே கண்ணைத் தோண்டாமல் நிறுத்தியது. சிவன் ப்ரத்யக்ஷமானார். சிவன் அருளால் திண்ணன் இழந்த கண்ணைப் பெற்றான். திண்ணன் என்னப்பனுக்கு கண்ணைக் கொடுக்க துணிந்ததால் உலகுக்கு இனி என்றும் அவன் கண்ணப்பன். அறுபத்து நாயன்மாரில் ஒருவராக சிவன் ஆலயங்கள் அனைத்திலும் பக்தர்களால் கண்ணப்ப நாயனார் வணங்கப்படுகிறார்.
ஆதிசங்கரர் சிவானந்தலஹரி யில் 61 வது சுலோகத்தில் பகவான் மேல் பக்தன் கொள்ளும் பக்தி பற்றுக்கு உதாரணமாக கண்ணப்ப நாயனார் பற்றி கூறுகிறார்.
தன்னலம் இல்லாத பக்தர். ஆணவ மலம் அழிக்கப்படவேண்டும். ஆணவமலம் தான் கதையில் காட்டுப்பன்றி. மனிதருள் நல்லதும் கெட்டதும் உண்டு. அதுவே நாணனும் காடனும். இரண்டிலிருந்தும் விடுபடவேண்டும். அதனால் தான் திண்ணன் தனியே சிவனை அணுகினான். ஏன் காளத்தீஸ்வரன் சிவாச்சார்யரை தூர மரத்தின் பின் நில் என்று கட்டளையிட்டு திண்ணனை அருகே சேர்த்துக் கொண்டார்? பக்தி வெறும் சடங்குகளை பண்ணுவதை விட சாலச்சிறந்தது என தெளிவிக்க. மறுயோசனை இன்றி தனது கண்களை தர துணிந்த திண்ணன் செயல் உயர்ந்த ''ஆத்ம நிவேதனத்தை'' தன்னலமற்ற சரணாகதியை குறிக்கிறது. இன்னும் என்ன தகுதி வேண்டும் ஒருவருக்கு?
சென்ன்னையிலிருந்து ரெண்டு மூன்று மணிநேரத்தில் காளஹஸ்தி சென்றுவிடலாம். காளத்தீஸ்வரன் ஆலயம், பஞ்சபூதங்களின் ஆலயத்தில் வாயு க்ஷேத்திரம். விளக்கில் தீபம் ஆடிக்கொண்டே இருப்பதை காணலாம். மலைமேல் கண்ணப்பர் ஆலயம் இருக்கிறது. பொன்முகலி ஆறு தண்ணீரில்லாமல் ஓடுகிறது.
No comments:
Post a Comment