Tuesday, July 3, 2018

VIDHURANEEDHI




மாண்டவ்ய ரிஷியும் நீதி தேவனும் J.K. SIVAN

உடலில் உயிர் உள்ளவரை தாகம் என்பது அடங்குவதில்லை. அவ்வப்போது சொம்பு நிறைய ஜலம் குடித்து தாகத்தை தீர்த்துக் கொள்கிறோமே தவிர ஒரு முறை குடித்தவுடன் முற்றிலும் அடங்குவது அல்ல தாகம். மீண்டும் சிறிது நேரம் கழித்து தண்ணீர் தேடும். இது உடல் உபாதைக்கு.

அதே போல உள்ளத்தில் தோன்றும் தாகம் சில நல்ல விஷயங்களை கேட்டால் அப்போதைக்கு திருப்தி அடைந்தாலும் மீண்டும் அவற்றை தேடுகிறது. எத்தனை முறை அப்படி தேடி படித்து, கேட்டு அனுபவித்தும் இன்னும் வேண்டும் என்ற வகையை சேர்ந்தது தான் நமது மஹா பரதமும் ராமாயணமும். என் சின்ன வயதிலிருந்து யார் யாரோ சொல்ல கேட்டிருக்கிறேன். வண்ணப்படங்களாக எத்தனையோ புத்தகங்களில் சிறு வயதிலிருந்து பார்த்திருக்கிறேன், கதைகளாக படித்திருக்கிறேன். சினமா நாடகங்களாக பார்த்திருக்கிறேன். ''ஆஹா'' அந்த தாகம் எனக்கு மட்டும் இல்லை எண்ணற்ற ஹிந்துக்களுக்கு இன்னும் தீரவில்லை. தீராது. ஏன் என்றால் இது அந்த இறைவன், கிருஷ்ணன், நம்மைக் காக்கும் கடவுள், சம்பந்தப் பட்டது.

ஜனமேஜயன் வைசம்பாயன ரிஷியிடம் மஹா பாரதம் கேட்கிறான். கேட்கக் கேட்க ஆர்வமும் அதிசயமும் அதிகரிக்கிறது நமக்கும் அப்படித்தானே? வைசம்பாயனரும் தொடர்கிறார்.

சந்தனுவுக்கும் சத்யவதிக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். சித்ராங்கதன். விசித்திர வீர்யன்.

ஒரு சமயம் கந்தர்வர்களுக்கும் சித்ராங்கதனுக்கும் மூன்று வருட காலம் தொடர்ந்து சரஸ்வதி நதிக்கரையில் குருக்ஷேத்ரத்தில் நடந்த ஒரு யுத்தத்தில் சித்ராங்கதன் கொல்லப்படுகிறான். விசித்திர வீர்யன் ராஜாவாகிறான்.

காசிராஜன் பெண்கள் அம்பை அம்பிகை அம்பாலிகை ஆகியோருக்கு ஸ்வயம்வரம் நடக்கிறது.

பீஷ்மன் அங்கு சென்று அந்த மூவரையும் தனது சகோதரன் விசித்ரவீர்யனுக்கு மணமுடிக்க விரும்பியபோது மற்ற மன்னர்கள் பீஷமனோடு மோதி எவராலும் பீஷ்மனை வெல்ல முடியவில்லை. மூன்று அரச குமாரி
களையும் பீஷ்மனோடு போரிட்டு மீட்கவும் இயலவில்லை.

விசித்திர வீர்யனுக்கு இவர்களோடு கல்யாண ஏற்பாடுகள் நடக்கும்போது முதல் அரசகுமாரி அம்பை, பீஷ்மனிடம் ஒரு கோரிக்கை விடுகிறாள்

''பீஷ்மரே, நான் மனத்தால் வரித்த சௌப தேச அரசனை ஸ்வயம்வரத்தில் மணப்பதை நீங்கள் உங்கள் பலத்தால் தடுத்து என்னை அபகரித்து விட்டீர்கள். எனவே நீங்களே என்னை மணக்கவேண்டும்'' என்கிறாள் அம்பை.

''அம்பா, நான் பிரம்மச்சரிய விரதம் பூண்டவன், எந்த பெண்ணும் என் வாழ்க்கையில் இல்லை . நீ விரும்பிய அரசனையே நீ மணக்க உன்னை விடுக்கிறேன் நீ போகலாம்.'' என்கிறான் பீஷ்மன்.

அம்பையை பீஷ்மன் சௌப அரசன் ஏற்கவில்லை .''எப்போது என்னை வென்று உன்னை பீஷ்மன் சிறைப்பிடித்தானோ, நீ அவனுக்கே சொந்தமானவள் . அவன் தானம் கொடுத்து உன்னை நான் ஏற்க முடியாது. அவனை வெல்ல யாருக்குமே பலம் இல்லை. அம்பா இனி நீ என் மனத்திலோ வாழ்விலோ இடம் இல்லாதவள் போகலாம் '' என்கிறான் அந்த அரசன். இதற்கப்பிறகு நடந்தது பெரிய விஷயம். பின்னால் ஒரு கதையாக வரட்டும்.

மற்ற காசி ராஜன் பெண்கள் அம்பிகை அம்பாலிகை இருவரும் விசித்திர வீர்யன் மனைவியானார்கள். புத்திர பாக்யமின்றி விசித்திர வீர்யன் சிலகாலத்தில் மறைகிறான். சத்யவதி பீஷ்மரையே அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டியபோது தனது பிரம்மச்சரிய விரதத்தை ஞாபகப் படுத்துகிறான் பீஷ்மன்.

சத்யவதி பழசை நினைக்கிறாள். அவளை பராசரர் சந்தித்தது அவர் மூலம் பிறந்த வியாசர் நினைவுக்கு வருகிறது. வியாசரை வேண்டுகிறாள். ''மகனே நீ தான் எனக்கு உதவ வேண்டும். இந்த வம்சம் வளர நீ வழி வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள தாய் சொல்லைத் தட்டமுடியாமல் தனது சக்தி அனுக்ரஹத்தால் அம்பிகைக்கு ஒரு பிள்ளை பிறக்கிறது. ஆனால் பார்வையின்றி . அவனே திருதராஷ்ட்ரன்.

''பார்வையற்றவன் எப்படி நாடாள முடியும்? (இந்த காலத்தில் முடிகிறது!) எனவே வியாசரையே மீண்டும் வேண்ட வெளிறிய நிறத்தோடு அம்பாலிகைக்கு பாண்டு பிறக்கிறான். சத்யவதியின் சொல்லைத் தட்டமுடியாமல் அடுத்ததாக விதுரன் ராணியின் தாதிக்கு மகனாக பிறக்கிறான்.தர்ம தேவதை ஆணி மாண்டவ்யரின் சாபத்தால் பூமியில் தாழ்ந்த குலத்து தாதியின் மகனாக பிறந்து விதுரன் என்கிற நீதிமானாகிறான். திருதராஷ்டிரனின் இளைய சகோதரன்.

ஏற்கனவே சொன்னது ஞாபகம் இருக்காது அல்லவா எனவே ஒரு ரிஷிக்கும் தர்ம தேவதைக்கும் நடந்த விவாதம். சாபம் பற்றி சுருக்கமாக நினைவூட்டுகிறேன்.

மாண்டவ்ய ரிஷியின் ஆஸ்ரம வாசலில் அவர் மௌன த்யானத்தில் ஈடுபட்டிருக்கும்போது சில திருடர்கள் கொள்ளையடித்த பொருள்களோடு அங்கு ஓடி வருகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து ராஜாவின் காவலாளிகள் வேகமாக வருவதைக் கண்டு ரிஷியின் ஆஸ்ரமத்தில் திருடிய பொருள்களைப் போட்டுவிட்டு திருடர்களோ எங்கோ சென்று ஒளிந்துகொள்ள வீரர்கள் மாண்டவ்யரிடம் கேட்கிறார்கள்

''ஹே ரிஷி, இங்கே சில திருடர்கள் வந்தார்களா?' என கேட்க மௌனத்யானத்தில் இருந்த ரிஷி பதில் சொல்லாதிருக்க, வீரர்கள் ரிஷியின் ஆஸ்ரமத்தில் நுழைந்து திருட்டுப்போருள்கள் அங்கே இருப்பதைக் கண்டு கைப்பற்றி திருடர்களையும் பிடித்து ரிஷியோடு சேர்த்து அரசனிடம் கொண்டுசெல்ல, அவன் அனைவரையும் கழுவேற்ற, ரிஷி மட்டும் சாகவில்லை. கழுமரத்திலேயே த்யானம் செய்து கொண்டு தொங்குகிறார். திருடர்களிடமிருந்து நடந்த உண்மை வெளிவருகிறது. ஆச்சர்யத்தில் அனைவரும் அவரை அணுகி வேண்ட, அவரது மௌன ஜபம் கலைகிறது. அரசன் தவறுக்கு வருந்தி கழுமரத்தை வெட்ட, அவர் உடலில் இருந்த கழு ஆணி வெளியே எடுக்க முடியாததால் அதோடு அவர் செல்கிறார். ஆணி மாண்டவ்யர் என்ற பேர் நிலைக்கிறது.

ரிஷி நேரே தர்மதேவதையிடம் செல்கிறார்.ன்று ''நான் செய்த தவறென்ன. எதற்காக எனக்கு இந்த மரண தண்டனை நேர்ந்தது ?

''மாண்டவ்யா, நீ சிறுவயதில் ஒரு சிறு வண்ணத்துப் பூச்சியின் சிறகில் கூரான தர்ப்பைப் புல்லைச் செறுகினாய். அதன் விளைவு நீ அனுபவிக்கிறாய் '' - தர்ம தேவதை

'அப்போது எனக்கு என்ன வயது?.

''பன்னிரண்டு'"

"'தர்மா, ஒரு குழந்தை 14 வயதுக்குள் செய்யும் 'தவறுகள் பாபமாகாது. எனவே என் அறியாமையில் செய்த பிழைக்கு ஒரு பிராமணனுக்கு இந்த தண்டனை கொடுத்த நீ இழி குலத்தில் பிறந்து எல்லோராலும் அவமதிக்கப்படுவாய்''



ஆணிமாண்டவ்யர் சாபத்தால் தர்மன் விதுரனாக பிறந்தான். விதுர நீதி அருமையான நூல். இதைப் பற்றியும் எழுத முயற்சிக்கிறேன். முடிந்த போதெல்லாம் கொஞ்சமல்ல கொஞ்சமாக நேரம் கிடைக்கும்போது எழுத உத்தேசம். இனி அது தொடரும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...