Saturday, June 5, 2021

RASKHAN

 

பலே ரஸ்கான்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

'கண்ணா, கருமை நிற கண்ணா...

நாம்  நமது  இஷ்ட தெய்வத்தை,  மனதாரப்  பாடி,  புகழ்ந்து,  போற்றி  மகிழ்வதில் எந்த ஆச்சர்யமோ அதிசயமோ இல்லை.  எங்கோ பிறந்து சம்பந்தமே இல்லாத  பாரசீக  முஸ்லிம்  மதத்தில் தோன்றி  கிருஷ்ணனைப் பற்றி அறிந்து ஒரு ஸுபி, SUFI   வைணவராக மாறி  முழு நேரமும் கிருஷ்ணன் லீலைகளை நினைந்து லயித்து  கடைசி மூச்சு நிற்கும் வரை பிருந்தாவனத்தில் அவன் வாழ்ந்த இடங்களையே சுற்றி சுற்றி வந்து ரசித்தார் என்பது தான் ஆச்சர்யம்.  தலை வணங்குகிறேன். அவர் தான் சயீத் இப்ராஹிம் என்கிற  ரஸ்கான். அவருடைய பாடல்களை சிலவற்றை திரட்டி, இந்தியிலிருந்து ஆங்கிலத்தில் அர்த்தம் கண்டுபிடித்து அதை தமிழில் தருவது தான் என்னால் முடிந்தது.  இப்படி நான் கஷ்டப்பட்டு  ஆசை ஆசையாக சமைத்த திண்பண்டத்தை  பிரசாதமாக    கிருஷ்ணனுக்கு நைவேத்யமாக்கி உங்களோடு சேர்ந்து  ரசித்து அனுபவிக்கிறேன். ஏற்கனவே முந்தைய பதிவில் ரஸ்கானை  அறிமுகப்படுத்தி அவர் பாடல்கள் சிலவற்றை பகிர்ந்தேனே . இன்று ஒரு சில பாடல்கள்.
 
gunja garain sira morpakha aru cala gayanda ki mo mana bhavai
sanvaro nandakumara sabai brajamandali main brajaraja kahavai
saja samaja sabai sirataja au laja ki bata nahin kahi avai
tahi ahira ki chohariyan chachiya bhari chacha pai naca nacavai

ஆஹா,   அந்த கிருஷ்ணன் நடையை  பீடு நடை  என்பார்கள்,  ஒரு  ஆண்  யானை மிடுக்குடன் அசைந்து நடந்து வருவது போல்  அழகு நடை.    பவழமும்,  முத்தும்  கலந்த  கழுத்து நிறைந்த  ஹாரங்கள்,   சிகையைக் கட்டி முடிந்து அதில் அற்புதமாக ஒரு பெரிய மயிலிறகு அவனுக் கென்றே  அமைந்தது  போல் செருகப் பட்டு காற்றில் ஆட,  கிருஷ்ணா,  உன்னை நினைக்கும் போதே என் மனம் உன்னிடம் வந்து விட்டது.  அவனை,   நந்தகுமாரா,  எங்கள்  ''வ்ரஜ மஹா வீரா''  என்று அவன் சாகசமறிந்தவர்கள்  அன்போடு அழைக்கிறார்கள்.  ஆஹா,   அவனைப்போல  வேறெவரையும் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.  யதுகுல சம்ரக்ஷகன், அவன் திவ்ய ரூபத்தை என்னால்  முழுதுமாக வர்ணிக்க இயலவில்லை.  இருந்தாலும்  என்ன ஆச்சர்யம் போங்கள் , இந்த பிரிந்தாவன இடைப்பெண்கள்   ரகசியம் தெரிந்தவர்கள்.   தங்கள்  உள்ளங்கைகளின்  குழிவில்   சிறிது தயிர்,  வெண்ணை,  வைத்து  அவனிடம் காட்டினால்  போதும்   ஆசையாக அதை அவர்கள் கையில்  இருந்தே  குடிக்க,  உண்ண,   அவர்கள் பின்னே  ஓடிவிடுபவன்.   அவர்களும்  லேசில் கொடுப்பார்களா?

Lovely Syam
mora kirita navina lasai makarakrita kundala lola ki dorani
jho rasakhana ghane ghana main damakai bibi damini capa ke chorani
mari hai jiva to jiva balaya biloka bajaya launana ki korani
kauna subhaya so avata syama bajavata bainu nacavata maurani

கிருஷ்ணன்  ஆடுகிறானா?  அவனது அழகிய  மயிலிறகு  அவனை மயில் போல் ஆட வைக்கிறதா என்பது  கண்டுபிடிக்க முடியாத ஒரு ப்ரம்ம   ரகசியமாக இருக்கிறதே.  ஆடாது அசங்காது வா கண்ணா என்று நமது தென்னாட்டில் ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாடியது அற்புதமான மத்தியமாவதி ராக பாடல், அதில் கிருஷ்ணனின் செவியில் ஆடும்  குண்டலங்களை வர்ணிப்பார்.  ரஸ்கான்  ஊத்துக்காட்டுக்கு முன்பே  அதை எழுதிவிட்டார்.  கிருஷ்ணனின் செவிகளில் ஆடும் மகர குண்டலங்கள்  கிருஷ்ணன் ஆடும்போது எப்படி  அசைகிறது என்று ஒரு அற்புத உதாரணம் கொடுக்கிறார் ரஸ்கான் . 

கருத்த,  இருண்ட ,  கார் மேகங்களிடையே  பளிச்சென்று கண்ணைக் குருடாக்கும்  ஒளிவீசி தாக்கும் இரு மின்னல் கீற்றுக்கள்.  கிருஷ்ணன் கருப்பு தான், அவன் காதில் ஜொலிக்கும்  குண்டலங்கள் சூரிய குட்டிகள்.  அவற்றை  மன்மத பாணங்கள்  என்கிறார்  ரஸ்கான் .  ஆஹா  நம்மை காந்தம் போல் கவரும் தன்மையுள்ளவை என்பதற்கு நல்ல உதாரணம்.  நமது புராணங்கள்,  மன்மதன்,  அவனது கரும்பு வில்,  புஷ்ப பாணம்,   எல்லாமே  ரஸ்கானுக்கு அத்து படி போல்  இருக்கிறது.  அவன் ''பார்வை ஒன்றே போதுமே''  இன்னொரு அற்புத  சொல்லோவியம்.  அவன் கடைக்கண் பார்வையில் நான் அழிந்தே போனேன்,  என்னை மறந்தே  இழந்தே போனேன் என்கிறார்.   என் ஷ்யாம்  வருவதற்கு முன்பே  அவன் பார்வை வந்து என்னை கொள்ளை கொண்டுவிட்டதே. அவன் என் நெஞ்சில் வருவதை  நான் விமரிசையாக  கொண்டாடுகிறேன்.  மயிலிறகோடு கண்ணன் ஆடுவதைப் பார்த்த மயில் கூட்டங்கள் அவனையும்  ஒரு மயிலாக நினைத்து  அவன்   குழலிசைக்கு  தக்க ஜதி , தாளத்தோடு  அந்த ராக த்துக்கு ஏற்ற நடனத்தை  அவனோடு   சேர்ந்து  ஜோடியாக  தாங்களும்  ஆடுகிறது என்கிறார். இதெல்லாம் மனதில் அருள் பார்வையால் பார்க்காமல் எழுத முடியுமா?

His Sweet Smile
maina-manohara baina bajai su saje tana sohata pita pata hai
yaun damakai camakai jhamakai duti damini ki manau syama ghata hai
e sajani brajarajakumara ata cadhi pherata lala bata hai
rasakhani maha madhuri mukha ki musakani karai kulakani kata hai

நண்பர்களே,  மன்மதன் எல்லோரையும் வசியப்படுத்துகிறவன்.   அதில் அவனுக்கு ஈடு இணை இல்லை என்கிறோம்.  ஆனால் அந்த மன்மதன் கிருஷ்ணனின்  குழலோசையில்  மகுடி கேட்ட நாகமாக மயங்கி ஓடிவருகிறான்.  தன்னிச்சையின்றி கவரப்படுகிறான். கிருஷ்ணன் கருப்பு,  அவன் மேல் வெள்ளைப் புழுதி, மார்பிலும் கழுத்திலும்  பளபளக்கும்  பல  வண்ண  ஆபரணங் கள், வெண்ணைத் துளிகள் ஒட்டிக்கொண்டிருக்கும்  உதடுகள், கன்னங்கள், இடுப்பிலே  மஞ்சள் பீதாம்பரம்,  காலிலே சதங்கை ஒலிக்க  பளபள  ஜிலுஜிலுவென்று தலையில் பல வண்ண மயிலிறகு காற்றில் சாமரம் வீச  மேலே சொன்னேனே  அந்த கருமேகத்தை பிளந்து இதோ வந்து ஆடுகிறது  கிருஷ்ணன் எனும்  மின்னல் வடிவம்.   மலை வாயில் விழும்  அஸ்தமன சூரியன் பார்த்ததுண்டா?  மாலை ஆறு மணிக்கு ஆரஞ்சு வண்ண நெருப்பு பந்து  மலையேறும்.  அதைப் போல   கிருஷ்ணன்  ஒரு   கோபியின் வீட்டின் கூரையில் ஏறி நின்று ஆடுகிறான். அவன் கையிலும் ஒரு சிவப்பு பந்து. இப்படி ஒரு தீப்பிழம்பு போல ஜொலிக்கின்றான் இந்த   வ்ரஜ பூமி  ராஜகுமாரன். இதில் எனக்கு எவ்வளவு பேரதிர்ஷ்டம் பாருங்கள்,  அவன்  என்னைப் பார்த்துவிட்டான்.  ரொம்ப தெரிந்தவன் போல  என்னைப் பார்த்து ஒரு க்ஷண கால குட்டிப் புன்னகை.   அவ்வளவு தான்.   இதனால் என்ன ஆயிற்று என்று யோசிக்கவே வேண்டாம்.  நான் எல்லா லோகங்களோடும்  தொடர்பு விட்டு  எங்கோ  எல்லையில்லா   விண்ணில்,  திக்கு திசை இன்றி   ஆனந்தமாக பறந்துகொண்டிருக்கிறேனே.

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...