Saturday, June 5, 2021

PESUM DEIVAM

 

பேசும் தெய்வம் --    நங்கநல்லூர் --    J  K  SIVAN  

29  ரெண்டாவது முறை திருவானைக்கா விஜயம்.

1923ம் வருஷம்  ஏப்ரல் மாதம் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி  அம்மனுக்கு  தாடங்க பிரதிஷ்டை உற்ஸவம் சிறப்பாக கொண்டாட  பெரியோர்களால்,  ஆலய நிர்வாகிகளால் நிச்சயிக்கப்பட்டது.  இதில் முக்கியமான  கலந்து கொள்ளவேண்டியவர் மஹா பெரியவா என்று தீர்மானிக்கப்பட்டதால்  மஹா பெரியவா தனது விஜய யாத்திரை நிகழ்ச்சிகளை தகுந்தபடி  ஏற்பாடு செய்து தக்க நேரத்தில்  திருவானைக்கா வருவதற்கு  தயாரானார்.   அதற்கேற்ப  திருநெல்வேலி ஜில்லா   திக் விஜயம்  சீக்கிரமே  முடிந்தது.  அங்கிருந்து,   சாத்தூர்,   அருப்புக்கோட்டை, மதுரை அடைந்து  திண்டுக்கல்லில் மூன்று நாள்  முகாமிட்டார். 
திண்டுக்கல்லிலிருந்து   முப்பது மைல்  தூரத்தில்   ஒரு குன்று.  சிறுமலை,  வெள்ளி மலை   என்று   பெயர்.  அந்த  மலை ஸ்தலத் துக்கு பரிவாரத்தோடு செல்லாமல் குறிப்பிட்ட சிலருடன் மட்டும் சென்றார்.  கடினமான  நீளமான  மலைப்பாதை   மலை யாத்ரை அது.   வயதானவர்கள் செல்வது முடியாது.   அங்கே  வெள்ளிமலை  என்ற  இடத்தில்  சிவன் கோவில் ஒன்று. மிகப்புராதனமானது    அகஸ்தியர்  வந்து  வழிபட்ட கோவில் என்றால் எத்தனை வருஷங்களுக்கு முன்பு என்று மனக்கண் ணால் மனக்கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.  இது மஹா பெரியவாளுக்கு தெரிந்திருக்கிறது.  சிறுமலை மேல்  ஏறுவதற்கு மணிக்கணக்காக ஆகும்.  அங்கே  சென்று மஹா பெரியவா மனதார   பூஜை செய்தார்.  இன்னொரு  முக்கிய விஷயம்.  சிறந்த  மூலிகை வைத்யர்களைக் கலந்து ஆலோசித்து அங்கே  ஒரு மூலிகை தயாரிப்பு நிலையம் உருவாகச் செய்தார். 
ஆரோக்யமான, அமானுஷ்யமான  அந்த மலைச்சிகர  சூழ்நிலை ரொம்ப பிடித்து விட்டது.  ரெண்டு நாள் அங்கேயே வாசம் செய்தார்.   சிறுமலையில் மஹா பெரியவா  தங்க ஏற்பாடு செய்தவர்  கன்னிவாடி ஜமீன்தார். 
பழனிமலை    சிறுமலையிலிருந்து   60 மைல்  தூரம்.  தண்டாயுதபாணியை தரிசிக்காமல் விடுவாரா மஹா பெரியவா?  அங்கே மூன்று நாள்  வாசம்.   பழனி ஆண்டவனைப் பற்றி பக்கம் பக்கமாக எழுத ஆசை தான். இங்கே இடமில்லை. பிறகு தனியாக அதை வைத்துக் கொள்ளலாம்.அறுபடை வீடுகளில் ஒன்று. திரு ஆவினன்குடி என்று பெயர்.  மாம்பழம் கிடைக் காமல்  ''வெறும் கோவணத்துடன் தண்டு கொண்டு இங்குற்றோர்  ஆண்டியானான்'' . 
 கோவணத்தைத் தவிர கழுத்தில் வெறும்  ருத்ராக்ஷ  மாலை மட்டுமே அந்த சிறுவனுக்கு. சர்வ வியாதி நிவாரணன் . காசிக்கு வீசம் ஒஸ்தி இந்த  பழனி  என்று அருணகிரியாரும்  ஒப்புக்கொண்டிருக்கிறார். 18 சித்தர்களில் ஒருவரான  போகர் பிரதிஷ்டை செய்த   மூலவர்.  பல மூலிகைகளை கொண்டு செய்த  அஷ்டபந்தனம்.
பழனி  ஆண்டவனை தரிசித்தபின்  மஹா பெரியவா திண்டுக்கல், விராலிமலை, இளையாத் தங்குடி, கண்டனூர் , திருமயம், புதுக்கோட்டை, கீரனுர்  வழியாக விஜயாத்ரை சென்று திருவானைக்காவல் அடைந்தார். வழியெல்லாம் பக்தர்கள் பெரியவாளை விடாமல் நிறுத்தி தரிசனம் செய்தார்கள்.
புதுக்கோட்டையில்  ராஜா விஜயரகுநாத துரை பெரிய கோலாகலமான வரவேற்பளித்தார்.  சஹஸ்ர பாத பூஜை  பிக்ஷா வந்தனங்களும்  நடந்தது.  பக்தர்கள் ஒருவார  காலம் புதுக் கோட்டையில் இருந்தருள வேண்டி  மஹா பெரியவா சம்மதித்து   ஊர்வலமும் நடந்தது. புதுக்கோட்டைக்கு அது ரெண்டாவது விஜயம்.  
 மஹா பெரியவா  திருமயத்தில் சத்திரத்தில் தங்கிய போது கடியாப்பட்டி   D N  முத்தையா செட்டியார்  என்பவர்   மஹா பெரியவா பூஜைக்கென்று ஒரு பெரிய தங்கத்தாம்பாளம் காணிக்கையாக அளித்தார்.
திருவானைக்காவல் பற்றி சில வார்த்தை களை தனியாக ஒரு கட்டுரையில் தருகிறேன்.  அங்கே காஞ்சி மடத்தின் கிளை இருக்கிறது.    குழந்தைகளுக்கு உபநயனம் செய்ய  வசதிகள் உண்டு. 
மேட்டூர் அணையைக் கட்டிய  ஸர்  M   விஸ் வேஸ்வரய்யா எனும்  பிரபல  பொறியியல் வல்லுநர் இன்ஜினீயர் பெயர் தெரியுமல்லவா?.  அவர்  1923 திருச்சி பிரசங்கத்தில்  இந்த மடத்தில் தனக்கு  உபநயனம், ப்ரம்மோப தேசம் நடந்ததை  பெருமையாக சொல்லி இருக்கிறார் என்றால் இந்த திருவானைக்கா  கிளை மடம் எவ்வளவு பழமை வாய்ந்தது? . 1908ல் இங்கு வந்தபோது இந்த மடத்தின்  சுவர்கள்  இடிந்து சிதிலமான நிலையில்  இருப்பதை மஹா பெரியவா  கவனித்ததால்  அதை புனருத்தாரணம் செய்ய  ஏற்பாடுகள் செய்தார்.  வேதங்கள் சாஸ்திரங்கள் கற்பிக்க ஒரு பாடசாலை நிறுவ ஆவன செய்தார். அப்போதே அதற்கு 75 ஆயிரம் ரூபாய் செலவாயிற்று.   ஆசிரியர் மாணவர்கள் தங்க இட  வசதியும் செய்யப்பட்டது. 
ஜம்புகேஸ்வரம் என்ற பெயர் கொண்ட திருவானைக்கா, பஞ்ச பூதஸ்தலங்களில்  நீர் க்ஷேத்திரம்.  ஜலஸ்வரூபம் சிவன் இங்கே என்பதால் ஜம்புநாதன்,ஜம்புலிங்கம் என நாமம்.    அம்பாள்  அகிலாண்டேஸ்வரி. 
ஆதிசங்கரர் இங்கே வந்தபோது  ஸ்ரீ சக்ரத்தை  தாடங்கமாக  அம்பாளுக்கு பிரதிஷ்டை செய்ததை தனியாக ஒரு கட்டுரையில்  படித்தீர்கள்.  அவர்  காசியில் அன்ன பூரணிக் கும்  காஞ்சி காமாக்ஷிக்கும் ஸ்ரீ சக்ர  பிரதிஷ்டை செய்து  சாந்த ஸ்வரூபிணிகளாக நமக்கு அருள்  பாலிக்க உத வியவர்.  கர்நாடகாவில்  மூகாம்பிகைக்கும் திருவொற்றியூரில்  திரிபுர சுந்தரிக்கும்   இதே போல்  ஸ்ரீசக்ரப்ரதிஷ்டை செய்யப்பட்டது. 
ஆதி சங்கரர் இன்னொரு சமயோசிதமான  காரியமும் செய்தார். அம்பாளுக்கு நேரே கண்ணில் படும்படியாக  விக்னேஸ்வரரை பிரதிஷ்டை செய்ததால்,  அம்பாளின் பார்வை  அவளுக்குப் பிடித்த மூத்த குமாரன் மேல் முதலில் பட்டு கருணை வெள்ளம்  பொங்கு வதால் உக்ரம்  காணாமல் போனது.  நமக்கு எவ்வளவு  நன்மை செய்திருக்கிறார் ஆதி சங்கரர் ,மற்றும்  அவருக்கு பின்னர் வந்த  அதே அவதாரமான  மஹா பெரியவா என்று லிஸ்ட் எடுத்தால்  முடிவே இல்லை.
தொடரும் 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...