பேசும் தெய்வம் -- நங்கநல்லூர் -- J K SIVAN
30 திருவானைக்காவல் வரலாறு.
திருவானைக்காவல், திருவானைக்கோவில் - எப்படி அழைத்தாலும் அந்த பழம் பெரும் சிவாலயம் திருச்சிக்கு அருகே உள்ளது. எத்தனையோ பேர் நமக்கு முன்னே இந்த ஆலயத்துக்கு விஜயம் செயதிருந்தாலும் நாம் நினைத்து பார்ப்பது சிவபக்தர்கள் அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் , ஆதி சங்கரர், மஹா பெரியவா ஆகியோர் விஜயம் செய்தது பற்றி தான். ஏன் என்றால் அவர்கள் தான் சிறந்த சிவனடியார்கள், சிவனே அவதாரமானவர்கள் கூட.
இக்கோயில் பஞ்சபூத தலங்களில் ஒன்றான “நீருக்கு” உரியது. காவிரி நதியின் வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 60 வது பாடல்பெற்ற சிவ ஸ்தலம்.
இந்த ஆலயத்தின் நாலாவது ப்ரஹார சுவர் கட்டும்போது சிவபெருமானே ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர் களுக்கு விபூதியை கூலியாகக் கொடுத்ததாக ஸ்தல வரலாறு. அந்தந்த வேலைக்காரர்க ளின் உழைப்புக்கேற்ப அவர்களுக்களித்த விபூதி பொற்காசுகளாக மாறியதாக அந்த ஸ்தல புராணம் சொல்கிறது. ஆகவே தான் அந்த மதில் சுவற்றுக்கு ''திரு நீற்றான் மதில்'' என்று இன்னும் பெயர்.
மூலவர் பெயர் ஜம்புகேசுவரர். லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே . எப்போதும் ஜலத்தில் இருக்கிறது. எந்த காலத்திலும் இந்த ஈரம் வற்றவே இல்லை. நான் நேரில் பார்க்க கொடுத்து வைத்த ஒரு பாக்கியசாலி. ஜம்புகேஸ்வரர் ஆலயம் பிரம்மாண்டமான ஒரு கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பு. உயரமான கோயில் மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங் களும் ஐந்து பிரகாரங்களும் உடையது.
அம்பாள் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நாலாம் பிரஹாரத்தில் உள்ளது. தனி சந்நிதி. கிழக்கு பார்த்து ஆளுயரம் நிற்கிறாள். ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவாக ஜல லிங்கம்.
ஆதி காலத்தில் இங்கே நிறைய வெள்ளை நாவல் மரங்கள் காடாக இருந்தது. ஒரு வெண் நாவல் மரத்தடியில் சிவலிங்கம் இருந்தது. கைலாயத்தில் பரமேஸ்வரனுக்கு சேவை செய்த சிவகணங்களான புஷ்பதந்தன், மாலியவான் என்ற இருவரிடையே அதிகமாக சிவ சேவை புரிவது யார் என்ற ஒரு போட்டி. ஒருவரையொருவர் சபித்துக் கொண்டதால், புஷ்பவான் யானையாகவும், மாலியவான் சிலந்தியாகவும் திருவானைக்காவில் பிறந்து சிவனை வழிபட்டார்கள்.
சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் பாதுகாத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை சிவனுக்கு அவமரியாதையாக கருதி அழித்து விட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. அவற்றின் தூய பக்தியை மெச்சி சிவனருளால் யானை, சிவகணங்களுக்கு தலைவனாகவும் சிலந்தி கோச்செங்கட் சோழனாகவும் பிறந்தனர்.
பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமானமாக கொஞ்சம் உயரமாக சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அக்கோயில்கள் யாவும் மாடக்கோயில் என்று அழைக்கப் படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயில். திருவானைக்கா ஆலயம் செல்பவர்கள் அங்கே கோச்செங்கட் சோழன் சந்நிதியை காணலாம். ஆலயம் பெரிய ஐந்து பிரஹாரங்கள் கொண்டது. ஊஞ்சல் மண்டபம், வசந்த மண்டம், நூறு கால் மண்டம், நவராத்திரி மண்டபம், சோமாஸ்கந்தர் மண்டபம் ஆகவே சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தவை.
திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் சிவலிங்கம் காவிரி ஆற்று மண்ணைப் பிசைந்து அகிலாண்டேஸ்வரி படைத்தது. காவிரி ஜலம் அதிகமாகி நீர் லிங்கமாக மாறியது. . நீரால் செய்யப்பட்டதால் சிவலிங்கம் ஜம்புகேஸ்வரர் என பெயர் பெற்றது. அம்பாள் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாகத் தெரியும்படி உள்ளது. இந்தக் காதணிகள் தான் தாடங்கம் .
அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்ரமாக கோபாக்னி யோடு கொடூரமாக இருந்ததால் பக்தர்கள் வழிபட பயந்ததால் அவள் கோபம் தணிய இங்கு வந்த ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்ரத்தைத் தணித்தார் என்று வரலாறு. அம்பாள் உக்ரம் தணிய எதிரே விநாயகர், பின்னால் முருகன். பிள்ளைப்பாசம் கோபத்தை மறைக்காதா?
தினமும் விடிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு அன்னா பிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண் டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங் களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். அம்பாள் சிவனை வழிபடுவதன் வெளிப்பாடு. அந்த நேரம் சென்று காத்திருந்து நான் கண்டு களித்திருக்கிறேன். அம்பாள் சந்நிதியில் பாடி இருக்கிறேன். திருவானைக்கா அப்பர் சம்பந்தர், சுந்தரர், பாடல்களைப் பெற்ற ஸ்தலம். சக்தி பீடங்களில் திருவானைக்கா ஒன்று.
ஜம்புகேஸ்வரர் மூலஸ்தானத்தில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் வழியாக லிங்க தரிசனம். ஒன்பது துளைகள் மனித தேகத்தின் நவ துவாரத்தை குறிக்கும்.
காளமேகம் வரதன் என்கிற பெயரில் படிப்பறிவில்லாதவனாக இருந்த ஒருவன் ஒரு நாள் இரவில் இந்த கோவிலில் படுத்துறங் கும்போது அம்பாள் அதிர்ஷ்ட வசமாக அம்பாளின் தாம்பூல பிரசாதத்தை தனது வாயில் ஏற்றுக்கொண்டு அவள் வரப்ரசாதத்தால் வரதன் பிரபலமான காளமேகப் புலவர் ஆனான். வேறு ஒரு பக்தன் ஸரஸ்வதி கடாக்ஷம் பெற பல காலம் தவமிருந்து அவள் அன்றிரவு அவனுக்கு தனது தாம்பூலத்தை தர வந்தபோது ''சேச்சே எச்சில்.. வேண்டாம் '' என்று இழந்ததை அங்கே படுத்திருந்த எந்த முயற்சியும் செய்யாத முட்டாள் வரதன் பெற்று கவி காளமேகமானான். இதல்லவோ இருட்டு அதிர்ஷ்டம்.
குருட்டு அதிர்ஷ்டம் என்று சொல்லவேண்டாம்.
1846 ல் காஞ்சி காமகோடி பீடாதிபதி அகிலா ண் டேஸ்வரி அம்மன் தாடங்கத்தை ரிப்பேர் செய்தனர். அது காலப்போக்கில் பழுது பட்டது.
1908ல் நகரத்தார் வாழும் ஒரு ஊரான கானாடு காத்தானில் சா.ராம செட்டியார் குடும்பம் வெகுகாலமானதால் பழுது பட்ட அம்பாள் அகிலாண்டேஸ்வரி தாடங்கங்ளை ரிப்பேர் செய்யும் கைங்கர்யம் மேற்கொண்டது. அதுவே பல லக்ஷங்கள் ரூபாய் ஆனது. 1908ல் பிப்ரவரி மதம், தமிழ் வருஷம் பிலவங்க ,தை மாதம். கும்பாபிஷேகம் நடந்தது. சிருங்கேரி யிலிருந்து மஹா சன்னிதானம் ஸ்ரீ நரசிம்ம பாரதி சுவாமி வந்திருந்தார்.
1920ல் மீண்டும் பழுது பார்க்க வேண்டியதாகி விட்டது. நவரத்ன கற்களைக் கொண்ட ஸ்ரீ சக்ரத்தை ஜாக்கிரதையாக தாடங்கங்களில் பொருத்தும் வேலையாயிற்றே. இந்த பொறுப்பை ஏற்றவர்கள் சென்னையில் அப்போதிருந்த பிரபல தங்கநகை வியாபாரிகள் T R டாக்கர் சன்ஸ் என்ற நிறுவனம்.
மஹா பெரியவா திருச்சி வந்தடைந்தபோது மிகப்பெரிய வரவேற்பு பக்தர்களால் கொடுக்கப் பட்டது. திருச்சினாப்பள்ளி முனிசிபாலிடி தலைவர் அப்போது ஸ்ரீ F.G. நடேசய்யர் மிக்க மகிழ்ச்சியோடு பொறுப் பேற்று சிறந்த வரவேற்பளித்தார்.
attached are the rare photo of Maha periyava in 1923 and the great artist SILPI'S rare art painting of Akilandeswari seated before Her.
தொடரும்
No comments:
Post a Comment