சூரி நாகம்மா -- நங்கநல்லூர் J K SIVAN
7. ரமண மந்திரச் சொல்....
சூரி நாகம்மா தெலுங்கில் சொன்னதை தமிழில் கேட்போம்:
ரமணாஸ்ரமம் எப்போதும் புராணகாலத்திய ஹரிவம்சம் நூல் விவரிக்கும் பத்ரிகாஸ்ரமத்தை நினைவு படுத்தியது என்று சொன்னேனே. ஸ்கந்தாஸ்ரமம் மலையிலிருந்து அருவியாக பாயும் நீர் வீழ்ச்சி, பத்திரிகாச்ரமத்தை நினைவூட்டியது. கண்ணுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தந்தது. சந்தியார்க்கிய ஜாலம் என்போமே அதுபோல் சூரிய உதய சமயம், அஸ்தமன சமயம் அந்த நீர் சூர்ய ஒளியில் வர்ணஜாலங்களை வீசியது. காற்றில் மரங்களின் அசைவும், இலைகளின் ஓசையுடன் எண்ணற்ற வித விதமான பறவைகளின்
வெவ்வேறு ஸ்வர குரல் ஒலியும் காதுக்கும் கண்ணுக்கும் அம்ருதம். அவற்றின் ஒலி பல குரல்களில் ரிஷிகுமாரர்கள் வேதம் கற்று ஓதுவது போல் இருந்தது.
சென்னை, பாண்டிச்சேரி, விழுப்புரம் போன்ற பெரிய பட்டணங்களிலிருந்து டாக்டர்கள், இன்ஜினியர்கள், வக்கீல்கள், ஜட்ஜ்கள், வியாபாரிகள், தனவந்தர்கள், பிரமுகர்கள் என்று பல துறைகளிலிருந்தெல்லாம் பக்தர்கள் பகவானைப் பார்க்க வந்துகொண்டே இருந்தார்கள். பகவான் ஆஸ்ரமத்தில் எல்லோரும் ஒன்று. எல்லோரும் தரையில் தான் அவரைச்சுற்றி அமர்வார்கள்.
அருணகிரி என்னும் அண்ணாமலை தான் ஒரு பெரிய நவரத்ன சிம்மாசனம், மேலே வெண்ணிற மேகங்கள் தான் வெண் குடைகள் , மரங்கள் காற்றில் அசைந்து தென்றலை வாரி வீசுவது வெண்சாமரம் வீசுவது போல தோன்ற, பகவான் முடிசூடா மன்னனாக வீற்றிருப்பது கண்கொள்ளா காட்சி. சூரிய ஒளி சந்திர ஒளி தான் தீபாலங்காரம்.
பகவான் அசையாமல் வீற்றிருப்பார், மௌனமாக எல்லோரையும் பார்த்துக் கொண்டே இருப்பார். எப்போவாவது ஒரு புன்சிரிப்பு. சந்திர ஒளி போல் அவர் முகத்தில் ஞான ஒளி. மிருதுவாக அவர் பேசும் சில வார்த்தைகள் அம்ரிதமாக காதில் பாயும். எல்லோரும் சிலையாகி அமர்ந்திருப்பார்கள். தேகம் என்று ஒன்று இருப்பதையே மறந்தவர்க ளாக காண்பார்கள். யார் யாரோ காமிரா வைத்திருப்பவர்கள் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். .
காலை ஒன்பதரை மணிக்கு கீழே ஆஸ்ரமத்தி ல் அன்றைய நிகழ்வுகள், கடிதங்கள், செயதித் தாள் விஷயங்கள், எல்லாம் பகவானுக்கு படித்து சொல்வார்கள். அது ஒரு மஹாராஜா தர்பார் தான். மேகங்கள் கூடியது. காற்று பலமாக வீசவே பக்தர்கள், தொண்டர்கள் பகவானுக்கு ஒரு போர்வை போர்த்தி விட்டார்கள். முகம் மட்டும் தான் தெரிந்தது.
பகவானின் மௌன உபதேசம் அங்கே நடந்தது. இதைத் தான் '''குரோஸ்து மௌன வ்யாக்யா னம்'' என்று சொல்வது வழக்கம். சில நல்லுள்ளங் களில் எழுந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்வ தை ''சின்ன சம்சயா '' என்போம்.
நேரம் ஓடியது. பகல் உணவு நேரம் வந்ததால் ஏற்கனவே தயாராக புளியோதரை, தயிர்சாதம் ரெடியாக செயது வைத்திருந்தார்கள். முதலில் அருணாச்சல மலைக்கு நைவேத்தியம் ஆன பிறகு பக்தர்களுக்கு பரிமாறுவது வழக்கம். பகவானுக்கு எதிராக ஒரு சின்ன மேஜை அதன் மேல் ஒரு சிறிய வாழை இல்லை ஏடு. அதில் தான் மற்றவர்களோடு பகவானுக்கும் பரிமாறினார்கள். எல்லோரும் உணவருந்திய பின் பகவான் அமரும் வழக்கமான சோபா அறையின் ஓரத்தில் இருந்த வராந்தாவில் ஒரு இரும்பு கேட் இடையே கொண்டு வைக்கப் பட்டது. அது வழக்கமாக அவர் அமரும் இடம்.
எல்லோரும் முதலில் சற்று தள்ளி அமர்வார்கள். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக அவர் அருகே நகர்ந்து வந்து உட்காருவார்கள்.
நானும் அலமேலு மாமியும் மற்றும் சிலர் அடுத்த ஒரு சிறிய அறையில் அமர்ந்து ஜன்னல் வழியாக ஸ்வாமிகளைப் பார்த்தபடி அமர்ந்தோம் . அங்கிருந்து பார்த்தால் அவர் தாமரைப் பாதங் கள் நன்றாகத் தெரியும். அது போதுமே.
பகவான் பேசினார். மலைமேல் வாழ்ந்த காலத்தில் நடந்த சம்பவங்களை, குட்டிக் கதைகளாக சொல்வது கேட்க ஸ்வாரஸ்யமாக இருந்தது. அவரது தாய் அழகம்மா அங்கே வந்தது, ஸ்கந்தாஸ்ரமம் கட்டத் தொடங்கியது, குடிக்க நீர் வசதி ஏற்படுத்தியது. கீழேயிருந்து உணவுப் பண்டங்கள், சாமான்கள் மேலே கொண்டுவந்தது, குரங்குகளின் சாம்ராஜ்யம், மயில்களின் நடனங்கள். அவரோடு பழகிய நாகப் பாம்புகள், சிறுத்தைகள் பற்றியெல்லாம் கூறினார்.
அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே புலவர் நாகனார் வந்ததை அறிந்து அவரை வரவேற்றார். ''எப்போ வந்தீர்கள்?''ஸ்வாமிகள் தலை என் பக்கம் திரும்பியது.
''இதோ வந்திருக்கார் பார்த்தியா?''
'ஆமாம்''
சற்று நேரம் மௌனம். பகவான் பழைய நினைவுகளுக்குள் சென்றுவிட்டார். பார்வை எங்கோ வெட்ட வெளியில் நிலைத்தது.
''அங்கே தான் அம்மா நிர்வாணம் அடைந்தாள். வெளியே உட்கார்த்தி வைத்தோம். முகத்தில் மரணக் களை துளியும் இல்லை. ஆழ்ந்த சமாதியில் இருப்பது போல் இருந்தாள் . ஏதோ ஒரு தெய்வீக நடனத்தில் பூர்ண ஒளி கூடியது போல். அதோ அங்கே நீ உட்கார்ந்திருக்கிறாயே அங்கே தான்... ''
''அவரது வார்த்தைகள் மந்திரம் போல் என்னை கட்டிப்போட்டது. வேணுகானம் போல் அவர் குரல் என் செவியில் இறங்கியது. நான் இங்கே எவருக்கும் கிடைக்காத உன்னத ஸ்தலத்தில் நிற்கிறேன். கேட்க கிடைக்காத தேனமுதத்தை செவியில் பருகுகிறேன். என்னிடம் இவ்வளவு பேச்சா? ....
அருமையான தினம் இன்று எனக்கு. கபில ரிஷி தேவயானியை ஆத்ம தரிசனத்துக்கு அழைத்து சென்றார். துருவான் சுனிதையை மோக்ஷ மார்க்கத்துக்கு கூட்டிச்சென்றான். ரமண மகரிஷியால் நான் பவாசகரத்திலிருந்து தப்பி தப்பி மேலே உயர்கிறேன்'என்கிறாள் சூரி நாகம்மா.
தொடரும்
No comments:
Post a Comment