இந்த காரடையான் நோன்பின் தாத்பரியம் மாங்கல்ய பலம். தீர்க்க சுமங்கலியாகத் திகழவேண்டும் என்பது திருமணமான எல்லா பெண்களுக்கும் உள்ள நியாயமான ஆசை. ''தீர்க்க சுமங்கலி பவ:'' இது தானே பெரியோர்கள் ஆசீர்வாதம். அந்த பாக்கியத்தை பெறவே பெண்கள் மேற்கொள்ளும் ஸ்பெஷல் விரதம் இது .
கோவில் என்றால் ஒரு ஸ்தல புராணம் இருக்கும். நோன்பு பண்டிகை என்றால் ஒரு ராக்ஷஸன் கதை இருக்கும். இந்த விரதத்துக்கு பின்னால் ஒரு அற்புதமான கதை. அதை நான் மஹா பாரதம் எழுதும்போது படித்தேன். சாவித்ரி சத்யவான் சரித்ரம் விவரமாக எழுதினேன். அது இருக்கட்டும். இப்போது அதை சுருக்கமாக சொல்கிறேன்.
அஸ்வபதி என்கிற ராஜாவின் பெண், சாவித்ரி. தனக்கு ஏற்ற கணவனைத் தேட முயற்சி செய்து அவள் தந்தை அஸ்வபதி கடைசியில் ஒரு சுயம்வரம் நடத்தினபோது வந்த எந்த ராஜகுமாரனையும், ராஜாவையும் சாவித்திரிக்கு பிடிக்கவில்லை. ''இவள் நமக்கு எட்டாக்கனி'' என்று அந்த ராஜாக்களும் கொண்டு வந்த பையோடு ஊர் திரும்பினார்கள்.
''இது என்னடா வம்பு. எவனையும் என் பெண்ணுக்கு பிடிக்கவில்லையே என்று அஸ்வபதிக்கு பெரிய வருத்தம். தன் பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளை யாராக இருப்பான்?. கவலை அவர் மனதை அரித்தது. யாருமே சரிப்பட்டு வராத நிலையில், சாவித்ரி தனக்கேற்ற மணாளனைத் தானே தேடிக்கொள்ளப் புறப்பட்டாள். அவளுடைய உள்ளுணர்வு அவளை வழி நடத்தியது. அதன்படி அவள் அந்த ராஜ்யத்தின் காட்டுப் பகுதிக்குச் சென்றாள். அங்கே சத்யவான் என்ற ஒரு மரம் வெட்டியைப் பார்க்கிறாள். அவனைப் பார்த்த கணத்திலேயே அவன்தான் தன் கணவன் என்று சாவித்ரி தீர்மானித்துவிட்டாள். அந்த சத்தியவான் சால்வ நாட்டு மன்னனுடைய மகன். எதிரிகள் நாட்டைக் கைப்பற்றியதால் மன்னன், தன் மனைவி, மகன் சத்யவானோடு காட்டுக்குத் தப்பி ஓடிவந்து இங்கேயே வாழ்ந்துகொண்டிருந்தான். அரண்மனைக்குத் திரும்பிய மகள், தான் சத்யவானைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியபோது அஸ்வபதி முதலில் மிகவும் வேதனைப்பட்டாலும் அவன் விதிவசத்தால் இப்போது மரம் வெட்டியே தவிர ஒரு ராஜ பரம்பரையைச் சேர்ந்தவன் என்ற உண்மை தெரிந்து மன நிம்மதி அடைந்தார். சத்தியவானுக்கே சாவித்ரியை திருமணம் முடிக்க முன்வந்தான். ஆனால், இந்தக் கல்யாணத்திற்கு ஓர் இடையூறு வந்தது. அதாவது, சத்யவான் இன்னும் ஒரு வருடம்தான் உயிரோடு இருப்பான் என்று திருமணம் பற்றிப் பேசும்போது அரச குடும்பத்தின் ஆஸ்தான குருவான ஒரு முனிவர் சொல்லிவிட்டுப் போய்விட்டார். எனக்கு தெரிந்து நிறைய கல்யாணங்கள், நல்ல இடத்து சம்பந்தங்கள் சில ஜோசியர்களால் நின்று போகிறது. தடை படுகிறது. ஜோசியர் தப்பா, ஜோசியம் தப்பா என்பது ப்ரம்ம ரகசியம்.
அஸ்வதியின் ஜோசியர் அதுவரை தீர்க்கதரிசனமாக சொன்னவை எல்லாமே பலித்து விட்டதால் அனைவருக்கும், முக்கியமாக மன்னனுக்குக் கலக்கமாக இருந்தது. ஆனாலும் சாவித்ரி தன் முடிவை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை. அஸ்வபதியும் வேறு வழியில்லாமல் அந்தத் திருமணத்துக்கு சம்மதித்தார். திருமணம் நடந்தேறியது. சம்பிரதாயப்படி மனைவி கணவனுடன்தானே தங்கவேண்டும்? ஆகவே, சாவித்ரி, மரம் வெட்டும் கணவனுடன் காட்டுப்பகுதிக்கே போய் வசித்தாள்.
அந்தக் காட்டுப் பகுதியில் அரசகுமாரிக்கு எந்த சௌகரியம் கிடைக்கும்? அதோடு அவள் கணவனுக்கு ஆயுள் இன்னும் ஒரு வருடம்தான் என்ற சங்கடமும் பிற அனைவருக்கும் நாளுக்கு நாள் உறுத்திக்கொண்டே இருந்தது. ஆனால், சாவித்ரியோ தனக்கு எந்தக் குறையும் ஏற்படாது என்பதில் மிகவும் தீர்மானமாக இருந்தாள். எதிர்பார்த்தபடியே ஒரு வருடம் முடிந்ததும் சத்யவான் உயிரைப் பறிக்க யமன் வந்தான்.
பொதுவாக யார் கண்ணிலும் படாமல் வருவதுதான் யமனின் பழக்கம். அவனுக்கு தெரியும். யார் கண்ணிலாவது பட்டுவிட்டால் அவன் முடிவு என்ன ஆகும்? ஆனால், அவன் வருவது சாவித்ரிக்குத் தெரிந்துவிட்டது. யமன் தன் கணவரை தன்னிடமிருந்து நிரந்தரமாகப் பிரிக்கத்தான் வந்திருக்கிறான் என்பது புரிந்ததும் அவள் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள். யமன் சத்யவானுடைய உயிரை எடுத்துக்கொண்டு வானுலகம் போக ஆரம்பித்தபோது, சாவித்ரியும் கூடவே ஓடினாள்.
யமன் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் சாவித்ரி விடாப்பிடியாக தொடர்ந்தாள். சரி, இவளுக்கு ஏதாவது வரம் கொடுத்து இப்போதைக்கு இவளிடமிருந்து தப்பித்துவிடலாம் என்று யமன் கருதினான்.
‘பெண்ணே என் பின்னே வராதே. இந்தா நீ கேட்கும் வரத்தைத் தருகிறேன். ஆனால், உன் கணவனுடைய உயிரை மட்டும் திரும்பக் கேட்காதே’ என்றான்.
‘சரி, யமதர்ம ராஜரே, எனக்கு ஒரே ஒரு ஆசைதான்''.
''அது என்ன? சீக்கிரம் சொல் பெண்ணே. நிறைய பேர் எனக்காக காத்திருக்கிறார்கள் நான் போகவேண்டும்'' என்றான் யமன்.
''என் குழந்தையை என் தந்தையார் தன் மடியில் போட்டுக் கொஞ்சுவதை நான் பார்க்கவேண்டும்,’ என்று கேட்டாள். நல்லவேளை, தன் கடமையில் இவள் குறுக்கே வரவில்லை என்று ‘நிம்மதி’ கொண்ட யமன் அந்த வரத்தைத் தந்தான். அவனுக்கு எத்தனையோ இடம் போகவேண்டும். நிறைய பேரை அன்று பிடிக்கவேண்டும். ஆகவே விட்டால் போதும் என்று அவள் கேட்டதற்கு சரி என்று சொல்லி விட்டான். யோசிக்க நேரமே இல்லை அவனுக்கு.
‘அப்படியென்றால் என் கணவனை எனக்குத் திருப்பித் தா’''
''என்ன உளறுகிறாய்?'' திடுக்கிட்டான் யமன். கடமை உணர்விலேயே தான் ஒன்றி இருந்துவிட்டதில் அவள் கோரிய வரத்தின் பின்விளைவை அவன் எதிர்பார்க்கவில்லை.
அவன் கொடுத்த வரம் பலிக்கவேண்டுமென்றால், அவளுக்குக் குழந்தை பிறக்கவேண்டும்; அப்படி குழந்தை பிறக்க, அவளுடைய கணவன் வேண்டுமே! வேறு வழியில்லாமல் சத்யவானைத் திரும்பக் கொடுத்தான் யமன். சாவித்ரிக்கு இப்படி ஒரு தைரியமும், யமனையே பின்பற்றிப் போகக்கூடிய அருளும் கிடைத்ததற்கு அவள் மேற்கொண்டிருந்த காரடையான் நோன்புதான் காரணம்.
ஆமாம், சத்யவானின் ஆயுள் பற்றிச் சொன்ன அரச குருவிடமே போய், இந்த விதியை மாற்ற இயலாதா என்று மனம் உருகி வேண்டிக் கேட்டாள். உடனே முனிவர் அவளுக்கு காரடையான் நோன்பு பற்றி விவரம் சொல்லி, அதை ஒரு வருடம் அவள் தீவிரமாகக் கடைபிடித்து வந்தாளானால் ஒருவேளை அந்த விதி மாறலாம் என்று சொல்லி ஆசிர்வதித்தார். அந்த விரதத்தை சாவித்ரி முறையாகக் கடைபிடித்துத் தன் மாங்கல்ய பலத்தைக் காப்பாற்றிக்கொண்டாள்.
இந்தப் புராண சம்பவத்திலிருந்துதான் தன் கணவனின் ஆரோக்கியத்துக்கும் ஆயுளுக்கும் எந்தக் குறையும் வரக்கூடாது என்று வேண்டிக்கொண்டு சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தை இந்த வருஷ காரடையான் நோன்பு வரை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற கணவன்மார்களும் நீண்டநாள் சேர்ந்து வாழ்ந்து நல்லபடியாகக் குடும்பத்தை நடத்திச் செல்வார்கள் என்பது ஐதீகம். இந்த விரதத்தை காமாட்சி விரதம் என்றும் சொல்வார்கள். ஏனென்றால் அம்பிகை காமாட்சியும் இப்படி ஒரு விரதம் மேற்கொண்டு சிவபெருமானை வழிபட்டிருக்கிறாள்.
காஞ்சித் தலத்தில், கம்பா நதிக்கரையில் மணலால் ஆன சிவலிங்கம் ஒன்றைப் பிடித்து வைத்து காமாட்சி தியானத்தில் ஆழ்ந்தாள். கூடவே, நதி பெருக்கெடுத்துத் தான் பிடித்துவைத்திருக்கும் லிங்கத்தை அழித்துவிடுமோ என்ற அச்சமும் தோன்றியது. உடனே, காரடையான் நோன்பை மேற்கொண்டாள். அதாவது தெய்வமே மனித ரூபத்தில் இப்படி விரதம் மேற்கொண்டு மனிதர்களுக்கு வழிகாட்டியிருக்கிறது!
அவ்வாறு காமாட்சி அம்மன் மேற்கொண்ட விரத மகிமையால் சிவலிங்கம் காப்பாற்றப் பட்டது. ஆமாம், நதி வெள்ளமாய்ப் பெருகி வந்தபோதும், சிவலிங்கத்தை நெருங்காமல் சென்றுவிட்டது. விரதத்தை முடித்த அவள் முன்னால் சிவபெருமான் தோன்றி அவளைத் திருமணம் செய்துகொண்டார். இதுதான் காமாட்சி விரதம்.
சரி, இந்த விரதத்தை எப்படி மேற்கொள்வது?
காரடையான் நோன்பு அன்று சுமங்கலிப் பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, நெற்றியில் குங்குமத் திலகம் இட்டுக்கொள்ளுங்கள். பிறகு பூஜையறையில், தாம் மேற்கொள்ளும் விரதம் நல்லபடியாக நடந்தேறவேண்டுமென விநாயகரை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஒரு சொம்பை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்துகொண்டு, அதனுள் நல்ல நீரை விட்டு நிரப்பிக்கொள்ளுங்கள்.
ஒரு தேங்காயை எடுத்து, அதற்கு மஞ்சள் பூசி, ஒரு குங்குமப் பொட்டையும் வையுங்கள். சொம்பின் வாய்க்குள் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவே இந்த தேங்காயை குடுமி மேலே பார்த்தபடி சொம்புக்கு கிரீடமாக வையுங்கள். இதுதான் பூஜைக் கலசம். பூஜையறையிலே ஒரு கோலம் போட்டு அதுக்கு மேலே இந்தக் கலசத்தை வைக்கலாம். இப்போது கலசத்துக்குப் பூ போட்டு வணங்குங்கள். கழுத்தில் கட்டிக்கொள்ளத் தோதாக சற்றே தடிமனான கயிறை எடுத்து அதற்கும் மஞ்சள் தடவி தயாராக வைத்துக் கொள்ளுங்கள். சில புரோகிதர்களும் கைவசம் வைத்திருப்பார்கள் நிறைய வீடுகளில் வாத்யார் ஓரிரு நாள் முதலாகவே கொண்டு வந்து தருவார். தக்ஷிணை பெறுவார்.
வாத்யார் வராத தராத வீட்டுக்காரிகள் மஞ்சள் குங்குமம், பூஜா திரவியங்கள் விற்கும் பெட்டிக்கடைகளில், கோவில் வாசலில், இது மஞ்சள் கயிறாகவே கிடைக்கும். . பிறகு, வீட்டில் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் மற்றும் கன்னிப் பெண்கள் எண்ணிக்கைப்படி ஆளுக்கு ஒன்றாக இப்படி மஞ்சள் சரடைத் தயார் செய்துக்கொள்ளலாம். ஒவ்வொரு சரடு நடுவிலேயும் ஒரு பூவை வைத்துக் கட்டிக்கொள்ளுங்கள்.
இந்த விரதத்துக்கு நைவேத்யமாக காரடையைத் தயாரித்து, கூடவே வெண்ணெயையும் வைத்துக் கொள்ளுங்கள். (இந்தக் காரடை மற்றும் வெல்லடையைத் தயாரிக்கும் விதத்தை மாமிகள் யாரிடமாவதோ , பெண்கள் பத்திரிகைகளிலேயோ, கூகிள் சென்றோ தெரிந்து கொள்ள வழி உண்டு. நான் செய்ததில்லை. எனக்கு தெரியாது. இப்படித் தயாரித்த வெல்ல அடை, உப்பு அடை இரண்டையும் ஒரு வாழை இலையில் வைத்து, அடைகளுக்கு மேல் கொஞ்சம் கெட்டியாக வெண்ணை வைத்து அப்படியே அந்த கும்பத்துக்கு முன்னால் படையுங்கள்.
கூடவே, வெற்றிலை-பாக்கு, பழம், பூ, மஞ்சள் சரடு எல்லாவற்றையும் வைத்து கும்பத்தில் ஆவாகனமாயிருக்கும் அம்மனை நோக்கி, ‘உருகாத வெண்ணெயும், ஓரடையும் நான் வைத்தேன். ஒரு நாளும் என் கணவன் எனைப் பிரியாத வரம் தருவாய் தேவி’ என்று மனமுருகச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள். கூடவே உங்களுக்குத் தெரிந்த அம்மன் ஸ்லோகங்கள் எல்லாவற்றையும் சொல்லலாம்.
இப்படி ஸ்லோகம் சொல்லி, நிவேதனம் செய்து, தீபாராதனை காட்டி, பூஜையை முடித்ததும், இந்த கும்பத்துக்கு எல்லாரும் நமஸ்காரம் செய்யுங்கள். மஞ்சள் சரடை எடுத்துக் கழுத்தில் கட்டிக்கொள்ளுங்கள். பிறகு காரடை, வெல்லஅடை பிரசாதத்தை வெண்ணெயோடு சேர்த்து சாப்பிடுங்கள். அடுத்து, உங்கள் வீட்டிற்கு வரக்கூடிய சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கைத் துண்டு, காரடை என்று கொடுத்து உபசாரம் செய்யுங்கள். அவர்களுடைய மன சந்தோஷம் உங்களுடைய மாங்கல்யத்தை மேலும் பலமுள்ளதாக்கும்.
இந்த விரதத்தை ஒட்டி, ‘மாசிக் கயிறு பாசி படியும்’ என்று சொல்வார்கள். அதாவது, மாசி மாதத்தில் வரும் இந்த காரடையான் நோன்பு நாளன்று உங்களுடைய பழைய தாலிச் சரடுக்கு பதிலாகப் புது தாலிச்சரடை மாற்றிக்கொள்ளலாம். மாங்கல்ய பலத்தை அதிகரிக்கக்கூடிய விரதத்தை மேற்கொள்ளும் இந்த நாளைவிட, தாலியை புதுப்பித்து மாற்றிக்கொள்வதற்கு வேறு நல்லநாள் இருக்க முடியுமா என்ன?
விரதம் இன்னும் பூர்த்தியாகிவிடவில்லை. நைவேத்யம் செய்த அடைகளில் சிலதை எடுத்து வைத்து மறு நாள் பேப்பர், பிளாஸ்டிக், தின்பதற்கு வரும் ஒரு பசுமாட்டுக்கு அவற்றைக் கொடுத்து அந்தப் பசுவையே அம்மனாக நினைத்து வழிபடுங்கள். மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் பிறக்கும் போது இந்த விரத பூஜையை வழிபடுவார்கள். காரடையான் நோன்புக்கான ஒரு ஸ்லோகம் இருக்கிறது. அதை எழுதி வைத்துக்கொள்ளலாம். நோன்பு அன்று நம்பிக்கையோடு, திரும்ப சொல்கிறேன், நம்பிக்கையோடு துதித்தால் குடும்ப வாழ்க்கை மிகவும் நிறைவாகவும், சந்தோஷமாகவும் அமையும்.
சந்த்ராபீடாம் சதுரவதனாம் சஞ்சலா
பாங்கலீலாம்
குந்தஸ்மேராம் குசபரநதாம் குந்தளோத்தூத
ப்ருங்காம்
மாராராதே: மதனஸிகினம் மாம்ஸளம்
தீபயந்தீம்
காமாக்ஷீம் தாம் கவிகுலகிராம் கல்பவல்லீ
முபாஸே
''பிறைச் சந்திரனை சிரசில் ஆபரணமாக சூடியவளே, அம்பா, அழகு வதன முடையவளே , மனக் கிலேசம் சஞ்சலம், கொண்டவர் வேதனையை உன் கடைக்கண் பார்வையால் தீர்ப்பவளே, குந்தபுஷ்பம் போல பேரழகியே, அழகிய மனம் கவரும் சரீரத்தைக் கொண்டவளே, மன்மதனை சாம்பலாக்கிய ஈசனுக்கு காமாக்னியை விருத்தி செய்கிறவளே, வாக்தேவி, கவிகளின் வாக்கில் கல்பவல்லியே , காமாக்ஷி , தாயே உன் திருவடிகளுக்கு நமஸ்காரம்''