Monday, October 15, 2018

GNANAPANA


ஞானப்பான 2 J.K SIVAN

சோகம் தந்த ஸ்லோகம்

சோகத்தால் பக்தி விளையும் என்பதற்கு அநேகர் வாழ்க்கை ஆதாரமாக தொன்று தொட்டு இருப்பதை நாம் அறிவோம். அளவு கடந்த பொறுக்கமுடியாத சோகம் கொடுத்து அருகிலே இழுக்கும் யுக்தி அந்த கிருஷ்ணனுக்கு உண்டு. சோகம் வறுமையாலோ, உற்றார் பெற்றாரை இழந்தோ சொத்து சுதந்தரம் எல்லாம் பறிபோயோ கூட இருக்கலாம். அந்த நேரம் மனதுக்கு ஆறுதலாக, ஒரு தைரியம் அளிப்பதாக, எரியும் புண்ணுக்கு ஜில்லென்று வலி போக்கும் களிம்பாக கூட பக்தி பரிமளிக்கும். யாருக்கும் வராத சோகம் வந்தது பூந்தான நம்பூத்ரிக்கு . ஒரே பிள்ளை. வெகுகாலம் தவம் இருந்து பிறந்து அதன் முதல் ஆண்டு நிறைவு விழா நடக்கும்போது அது பிணமானது.

வெகுநாள் கழித்து அவனருளால் பிறந்தபூந்தானத்தின் குழந்தை உன்னி கிருஷ்ணனுக்கு குழந்தைக்கு ஒருவயது. வீட்டின் வாசலில் பந்தலில் சாஸ்த்ரோக்த மந்திர, வைதிக ஸம்ப்ரதாயங்களோடு குழந்தையின் அப்த பூர்த்தி விழா சடங்குக்கான வைதிக காரியங்கள் வெகு ஜோராக நடக்க ஏற்பாடு நடந்து கொண்டு இருந்தது. விடிகாலையிலிருந்தே எல்லோரும் குறுக்கே நெடுக்கே அங்குமிங்குமாக ஏதோ காரியமாக பறந்து கொண்டிருந்தார்கள்.

குழந்தை ஒரு ஒதுக்குப்புற அறையில் தூங்கி கொண்டிருந்தது. யாரோ குளித்துவிட்டு வந்து ஈரத்துணியை குழந்தை கீழே ஓரமாக படுத்திருப்பதை அரை இருட்டில் பார்க்காமல் வீச அது அந்த தூங்கிக் கொண்டிருந்த சிசுவின் முகத்தில் விழுந்தது. அடுத்து அடுத்து வேறு யார் யாரோ வெல்லாம் குளித்து விட்டு வந்து அந்த ஈரத்துணி மேலேயே தங்களது துணிகளையும் போட்டு விட்டார்கள். குழந்தையை மறைத்து அதன் மேல் ஏராளமான துணிகள். துணிக்குவியல் அடியில் உன்னிக்கிருஷ்ணன் மூச்சு திணறி மாண்டான். அவன் கதறல் குரல் வெளியே கேட்க வில்லை. யாரும் உதவ வரவில்லை.

நேரமாயிற்று. வாத்தியார் : ''குழந்தையை கொண்டு வாங்கோ. அன்னப்ராசனம் பண்ணணும் ''

வாத்தியார் சொன்னபடி தாயும் ஓடினாள். அறையில் குழந்தையை காணோம். இங்கே படுக்கப் போட்டிருந்த குழந்தை எங்கே. அங்கே ஒரு பெரிய ஒரு ஈரத்துணி மூட்டை. வேகமாக அதை அகற்றி பார்த்தால் அடியில் இறந்து விரைத்துக் கிடந்த குழந்தை உன்னிகிருஷ்ணன்.

''அப்த பூர்த்தி நடக்கும் நேரத்தில் அந்த ஒருவயது குழந்தை இறந்து விட்டால் பெற்றோர்கள் மற்றோர்கள் மனநிலை எப்படி இருக்கும் ? ஒரே கூச்சல், கதறல், அழுகை, கூக்குரல். வீடே ஸ்தம்பித்து போய்விட்டது.

எல்லோரும் குய்யோ முறையோ என்று அழ அந்த விழாவில் மரண ஓலம். ஒரு மனிதர் மட்டும் கண்களில் அழுது நீர் வற்றி குருவாயூரப்பனை நினைத்து விரக்தியின் உச்சியில் மனம் வாடி அந்த நேரத்திலும் அந்த உன்னிகிருஷ்ணன் மீது அளவு கடந்த பக்தியோடு அவர் வார்த்தைகள் தெறித்து விழுகின்றன.

இந்த பேரிழப்புக்குபிறகு பூந்தானம் உறைந்து போனார். சோகம் அவரை ஆட்கொண்டது. உடல் திடுக்கிட்டது. வியர்த்தது. மூச்சு திணறியது. வாய் பேச முடியவில்லை. கணங்கள் மயங்கியது. ஆனால் பூந்தானம் நம்மைப்போல் இல்லையே.! விரைவிலேயே அவரது சோகம் ஸ்லோகமாக உருவாகியது. குருவாயூர் சென்று அங்கே கிருஷ்ணன் கோவிலில் பாகவதம் படித்து அவனை அணு அணுவாக ரசித்து ருசித்தார். மனதில் அப்போது தான் 'ஞானப்பான', ஞான நீரூற்றாக வளர்ந்து நமக்கு கிடைத்தது.

''ரொம்ப மனசுக்கு சங்கடமாக இருந்தது கேட்க. குழந்தை தவறிப்போய்விட்டானாமே'' யாரோ துக்கம் வீச்சரித்தார்கள்.

'' யார் சொன்னது எனக்கு குழந்தை இல்லை என்று? உங்களுக்கு என்ன பைத்தியமா? அந்த பாதாதி கேசம் மனதை கொள்ளை கொள்ளும் குருவாயூரில் காட்சி அளிக்கும் உண்ணி கிருஷ்ணன் என் மனது நிரம்பி ''தா தை '' என்று என் மனதில் கூத்தாடுகிறானே. அவனும் என் மனதில் சந்தோஷமாக, நானும் அவனால் சந்தோஷமாக இருக்கும்போது வேறு குழந்தைகள் எதற்கய்யா? எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் அவனுக்கு ஈடாகுமா? அவனல்லவோ என் மகன்! என்னுடைய மனசில் தான் அந்த சுட்டிப்பயல் குருவாயூர் உன்னிகிருஷ்ணன் என்னமாக ஆடுகிறான், அப்பப்பா அவன் இருக்கும்போது எனக்கு எதற்கு வேறே குழந்தை?''

பூந்தானத்தின் ஞானப்பான கீதை, உபநிஷத்துகள், பாகவதம் எல்லாமாக கலந்து உருவாகி பொங்கிய ஒரு காவியம். இதில் வாழ்க்கையின் அநித்தியம் அவர் அனுபவித்த சோகத்தில் பிரதிபலிக்கும். படிப்பவர் மனதில் பதியும் . வார்த்தைகள் மலை யாளத்தில் தங்கு தடை இன்றி வெள்ளமாக வெளியே வந்தது. அது தான் ஞானப்பன ജ്ഞാനപ്പാന.

இதை மலையாள தர்ஷனிக காவ்யம் என்பார்கள். கிருஷ்ணனை பற்றிய மலையாள மொழியில் இணையற்ற ஒரு எளிய நடை காவியம். அவருக்கு சமஸ்க்ரிதம் தெரியாது. பக்தி முக்கியமா பாஷை முக்கியமா?. பால கோபாலனாக கிருஷ்ணன் பலமுறை அவர் முன் தோன்றி இருக்கிறான்.

குருவாயூரப்பனிலிருந்து எவரெஸ்ட் உச்சியில் டீ கடை வைத்திருக்கும் நாயர் நண்பன் வரை அனைவர் மனதையும் சுண்டி இழுக்கும் ஞான ஊற்று ஞானப்பான..

நமக்கு மலையாளம் தெரிய வேண்டிய தில்லை. தெரிந்தால் இன்னும் அழகாக ரசிக்கலாம். எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பாரதியை ஆங்கிலத்தில், கம்பனை ஓரியாவில், காளிதாசனை காஷ்மீரி மொழியில் படித்து அனுபவிக்க முடியுமா. அதன் அர்த்தத்தை கூடுமான வரையில் அழகாக ஸ்ரீ PRR போன்ற பண்டிதர்கள் மொழிபெயர்த்து பூந்தானத்
தின் உணர்ச்சியோடு நாமும் கலந்தால் அதுவே குருவாயூரப்பன் அருள் தான்.

பனம் என்பது மலையாளத்தில் ஒரு வித தனிப்பட்ட ராகம். நம் ஊர் காவடி சிந்து, நொண்டிச்சிந்து மாதிரி. அந்த ராகத்தில் வார்த்தைகளை நிரப்பி பூந்தானம் எழுதிய காவியம். அவரே பாடியது. ஞானம் தானே அறிவின் முதிர்ச்சி. ஞானப்பனம் பக்தி, ஞானத்தின் ஒரு அற்புத கலவை. சிலர் பான என்பது ஒரு மண் சட்டி பானையை குறிக்கிறது. ஞானம் நிரம்பிய பானை என்பார்கள். உருண்டையாக இருந்தால் லட்டு, வில்லையாக இருந்தால் மைசூர்பாக். மொத்தத்தில் கடலைமாவு சர்க்கரை கலவை தானே.

ஞானபான ஒரு மலையாள கந்தர்வ கான வடிவில் இருக்கிறது. நேற்று பி.லீலா பாடியதை யூ ட்யூபில் கேட்டு மகிழ்ந்தேன். இனி ஞானப் பான மலையாள ஸ்லோகங்களை படிப்போமா.

இனி நாம் நுழையப்போவது ஒரு அருமையான பக்தி பரவசம் பொங்கும் நீரூற்றுக்குள்.. சுகந்த நறுமணம் வீசும் பன்னீர், பாரிஜாத, மல்லிகை, ஜாதி, ரோஜா புஷ்பங்கள் மென்மையோடு கலந்து வீசும் தென்றலில் குளிக்க போகிறோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...