Thursday, October 25, 2018

nostalgia

ஏழிசை மன்னரை அறிவீர்களா?
என் வயதோ ஐந்து - ஆறு. எங்கோ நடத்திக் கொண்டுபோய் குதிரை வண்டியில் ஏறி எங்கோ இறங்கி இருட்டாக ஒரு பெரிய அறை. நிறைய பேர் வரிசையாக நாற்காலிகள், பெஞ்சுகளில் தரையில் அமர்ந்திருக்கிறார்கள். பெரிசாக ஒரு வெள்ளை திரை. அதில் யார் யாரோ வருகிறார்கள் போகிறார்கள். அடிக்கடி வாய் திறந்த போதெல்லாம் ஒருவர் பாடுகிறார். உரக்க கணீர் குரலில். எனக்கு என்ன புரிந்தது? நான் மெதுவாக குனிந்து நார்காலிகளுக்கு இடையே புகுந்து நகர்கிறேன். பத்து நாற்காலி கீழே கூட புகுந்து நான் செல்ல வில்லை. ஒரு தட்டு தட்டி என்னை பிடித்துக் கொண்டு போய் விட்டார் என் தந்தை.
அவருக்கு அந்த பாடும் ஆளை பிடித்துவிட்டது. பாடும் ஆள் மாயவரம் க்ரிஷ்ணமுர்த்தி தியாகராஜ பாகவதர். 1910-59- ஒரு நாற்பத்து ஒன்பதே வருஷம் வாழ்ந்தாலும் இன்றும் என்றும் மறக்கமுடியாத குரல். MKT என்ற ஒவ்வொருவரின் மனத்திலும் வாயிலும் வாழ்ந்த , அமர மனிதர். தமிழகத்தின் சைகால். 25 வருஷம் முடிசூடா மன்னனாக தமிழ் திரையுலகை ஆண்ட சங்கீத சாம்ராட். எல்லா படங்களுமே பணத்தை அள்ளி தந்தது. ஹரிதாஸ் என்ற படம் மூன்று தீபாவளிகளை பார்த்தும் கூட தியேட்டர்களில் கும்பல் குறையவில்லை. அந்த அளவு இன்னொரு படம் இன்னும் அந்த இடத்தை பிடிக்கவில்லை. நான் நாற்காலி அடியில் பிரயாணம் செய்த போது ஓடிய படம்.
அவரோடு பல படங்களில் இணைந்து நடித்து புகழ் பெற்றவர் தஞ்சாவூர் ரங்கநாயகி ராஜாயீஅம்மாள். அப்படி ஒருவரையும் தெரியாதே என்று யோசிக்க வேண்டியதில்லை. திரையில் அவர் பெயர் டீ.ஆர். ராஜகுமாரி.
அப்படி ஒரு அழகிய காந்த கண்களை திரை உலகம் கண்டதில்லை என்று போற்றப் பட்டவர்.
சில தினங்களுக்கு முன்பு சென்னை ப்ராட்வே தெருவுக்கு போனேன். பேர் தான் அகன்ற தெரு. நடக்கவே இடமில்லை. அந்த அளவுக்கு நெரிசல். வண்டி நடமாட்டம். நடுத்தெரு வியாபாரிகள். ப்ராட்வே என்ற பெயர் கொண்ட திரை அரங்கத்தில் மூன்று வருஷம் ஓடியது.
இந்த அழகிய அலை அலையாக தூக்கி வாரிய கேசம் கழுத்தை மறைத்து இருக்க, காதில் வைர டால் ஒளி வீசும் கடுக்கன்கள். வளைந்த அடர்த்தி புருவம். ஒளிவீசும் காந்த கண்கள். வெற்றிலை பாக்கு கரையேறிய சிவந்த உதடுகள். நெற்றியில் புருவ மத்தியில் ரவுண்டு பெரிய ஜவ்வாது பொட்டு. உயரமான கச்சிதமான உடல், வெள்ளை வெளேரென்று பட்டு வேஷ்டி, பட்டு முழுக்கை சட்டை, அதன் மேல் ஜரிகை அங்கவஸ்திரம்.
ஒரு நிகழ்ச்சியில் தர்ம புர ஆதின மடாலயத்தில் தேவன் ஐந்து நாடுகளில் அறுபது நாள் பிரயாணம் செய்ததை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நான் அங்கே இருந்தது பேச்சை கேட்கவோ தேவார பாடல்களை ரசிக்களோ அல்ல. முடிவில் சுண்டல் கேசரி நிறைய கொடுப்பார்கள் அதை பெற்றுக்கொள்ளவே என்பதால் நான் நிகழ்ச்சி முடிவை ஆவலுடன் எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தபோது MKT MKT என்று குரல்கள் ஒலித்தன. நான் திரும்பி பார்த்தபோது மேலே சொன்ன உருவம் கம்பீரமாக எல்லாரையும் வணங்கி நடந்து வந்து எனக்கு சற்று தூரத்தில் ஜமக்காளத்தில் தரையில் அமர்ந்தது. மேடைக்கு அழைத்தார்கள்.வணங்கி தரையில் அமர்ந்தது. நான் மெதுவாக நகர்ந்து அவர் அருகே சென்று ஒரு காகிதத்தில் அவர் கையெழுத்து கேட்டேன். அப்போதெல்லாம் நான் சினிமா நடிகர்கள் கையெழுத்து வேட்டை ஆடும் சிறுவன். ''எம்.கே. தியாகராஜ பாகவதர்'' என்று தமிழில் கையெழுத்து போட்டு கொடுத்தார். வெகுநாள் என்னிடம் இருந்த அதை எங்கோ கோட்டை விட்டிருக்கிறேன்.
இந்து நேசன் என்ற ஒரு மஞ்சள் பத்திரிக்கை சினிமா பிரபலங்களை கீழ்த்தரமாக விமர்சித்து காலம் ஒட்டியது. MKT மிகச்சிறந்த தெய்வீக பாத்திரங்களை ஏற்று நடித்தவர் அவரைபற்றி மற்றவர்களோடு சேர்த்து அவதூறாக எழுதி வந்தது. பத்திரிகை அதிபர் லட்சுமிகாந்தன் ஒரு நாள்பூந்தமல்லி தெருவில் ஒரு கை ரிக்ஷாவில்ல கத்தியால் குத்தப்பட்டு ஜெனெரல் ஆசில்பத்திரியில் சிகிச்சை பெற்று மரணம் அடைந்த ஒரு வழக்கில் MKT மற்றும் NSK ஆகியோர் கைதானார்கள். சிறை சென்று இந்தியா சுதந்திரமான பிறகு விடுதலை பெற்றார்கள். அதற்குள் காலம் மாறிவிட்டது. வசனம் பாட்டை விழுங்கி பாகவதரை திரை ரசிகர்கள் மறக்க,பல படங்கள் அவரே எடுத்து தோல்வியுற்று, மனம் ஒடிந்து, கண்ணிழந்து காலமானார். வயது 49.
கிருஷ்ணா முகுந்தா இன்றும் கணீரென்று ஒலிக்கிறது. யுத்த காலத்தில் ARP வண்டிகள் மக்களை திடீரென்று பதுங்கி கொள்ளுங்கள் என்று தெருவெல்லாம் ஒலித்துக்கொண்டு வரும். மக்களை பயப்படவேண்டாம் என்று தைரியம் சொல்லும். அதில் MKT பாடல்கள் ஒலிபரப்பி கொண்டு வருவார்கள். மனமே நீ ஈசன் நாமத்தை, தீன கருணாகரன், ஒருநாள் ஒரு பொழுதாகிலும், என்னுடல் தகாந்தி மேல் பாடிய காந்தியைப் போல், பாரதி பாடல்கள், ஆஹா ஒவ்வொன்றுமே தேன் கலந்த தெள்ளமுது.
பாபநாசம் சிவன் பாடல்களை இயற்ற அழகிய ராகத்தில் அற்புத விருந்தளித்தார் MKT திரையுலகத்தில் முதல் சூப்பர் ஸ்டார். பின்னர் பாபநாசம் சிவனை கேட்டார்கள் ''இப்போதெல்லாம் இன்னும் நிறைய எழுதுகிறீர்களா பாடல்களை'' என்று. அப்போது அவர் சொன்ன பதில் ''MKT இன்னும் இருக்கிறாரா??''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...